ஈராறு கால்கொண்டெழும் புரவி

இக்கதையின் வரையறை என்பது வரையறையற்ற சித்தமரபின் வெளிப்பாடுதான். நமது தமிழ்ச்சித்த மரபின் தொடர்ச்சி  திருமூலருடன் ஆரம்பமாகிறது. திருமூலரை முதற்சித்தர் என்றும் கூறலாம். சித்த மரபு கலகத்துக்கு இடம் கொடுப்பது. கலகமே வாழ்வாய் ஆனது. சோழரின் வீழ்ச்சியுடன் மகத்தான வளர்ச்சி கண்ட சித்த மரபு விஜயநகர நாயக்கர்களின் வருகையுடன் வீழ்ச்சியுற்றது. அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆனது. சித்தர்கள் நிறுவனமயத்துக்கு எதிரானவர்கள். அவர்களது அந்தக் குரல் இன்றுவரை நம்முடைய கிராமங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

                              ஜெயமோகன்

ஈராறு கால் கொண்டெழும் புரவி என்ற இந்த குறுநாவலை நம் தமிழ் மரபார்ந்த தத்துவத்தின் துணையுடன் புரிந்து கொள்ள முனைவது ஆரோக்கியமான வாசிப்பாக அமையும். சாத்தான்பிள்ளை, ஞானமுத்தன், அய்யாவு நாடார் என்ற மூன்று கதா பாத்திரங்களில் சாத்தான் குட்டிப் பிள்ளை வலிந்து அடைய முனையும் ஞானத்துக்கும் மற்றையவர்கள் இலகுவில் பெற்ற அறிவுக்கும் இடையில் வலுவான உரையாடலை கதாசிரியர் நிகழ்த்துகிறார். தன்னகங்காரம் மன எழுச்சியில் உண்டாக்கும் விளைவுகள்தான் கதை.  

பூமி நீராலானது. அதனால்தான் வள்ளுவர் பசும்புல் காண்பதரிது என்றார். சாத்தான் குட்டிப்பிள்ளை அதனை உணர நீண்ட காலம் செல்கிறது. அதே நேரம் அவருக்கு அந்த ஞானம் உண்டாக ஒரு குரு தேவைப்படுகிறார். இயல்பாகவே நமக்குள் இருக்கும் ஒன்றுதான் இந்த நீர்நோட்டமிடல் என்று ஆரம்பத்தில் தவறாக உணர்கிறார். பின்பு அய்யாவுநாடார் காலில் வீழ்ந்து அதனைக் கற்றுக் கொள்கிறார். பல மாதங்கள் ஆன பின்பே பௌதிகப்பொருள் அவரது ஆன்ம அறிவுடன் சங்கமிக்கிறது. ஆன்மீகத்தில் ஐக்கியம் உண்டாகப் பல வருடங்கள் செல்கிறது. பிள்ளையின் வேலைக்காரன் ஞானமுத்தன் இந்த நீர்நோட்டம் என்ற கலையை இலகுவில் கண்டடைகிறான். அவனுக்குள் அந்தத் தரிசனம் மிகக் குறுகிய காலத்தில் வந்ததும் அவன் குறித்த துறையில் ஜாம்பவானாகத் திகழ்கிறான். 

சாத்தான் குட்டிப்பிள்ளைக்கு தனது இறந்த மனைவியின் நினைப்பு நெடுகலும் வந்து செல்கிறது. அந்த நினைப்பு அவரைச் சஞ்சலப்படுத்திவிடுகிறது. அவர் செல்ல எத்தணிக்கும் நிலையை நோக்கி ஒரு முட்டுக்கட்டையை அந்த நினைவு போடுகிறது. இறுதிவரை அவரால் அதிலிருந்து விலகமுடியவில்லை. மரணத்தறுவாயிலும் அதனை நினைத்துக்கொள்கிறார். 

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சடைமுடிச்சாமியாரை மலையில் காண்கிறார் பிள்ளை. இங்குதான் பிள்ளையின் அறிதல் தீவிரம் பெறுகிறது. அந்த அறிதலில் அகங்காரம் கூடிக்கொள்கிறது. பிள்ளை ஏட்டுக்கல்வியைக் கற்று இருந்தாலும் அவரால் அந்த ஏட்டுக் கல்வி ஒன்றே தத்துவத்தையும் உலக உண்மைநிலையையும் அறிய போதாமல் இருக்கிறது. கதையில் பிள்ளையின் குருக்களான அய்யாவு நாடாரும் சடைமுடிச்சாமியாரும் ஏட்டுக்கல்வியை அறியாதவர்கள். அதுபோலத்தான் வேலைக்காரன் ஞானமுத்தனும். ஞானமுத்தன் சீக்கிரமாகவே நீரோட்டநிலைகளைக் கண்டடைகிறான். ஆனால் பிள்ளை மரணம் வரைக்கும் தேடுகிறார். அலைகிறார். 

நீரோட்டங்கள் பற்றிய ஞானம் கிடைத்ததும் அந்த நீருக்கு முன் நீரடியால் பாய்ந்தது நெருப்புநதி என்கிற உலோகம் என சொல்கிறார். இது அவர் ஆரம்பத்தில் கற்ற ரசவாதத்தை இதற்குள் கலந்ததால் ஏற்பட்ட குழப்பநிலை என்றே கருதமுடிகிறது. இதனை விளக்க திருமந்திரப் பாடலை நாம் இங்கு முன்வைக்கலாம்.
"கலந்தது நீர்  அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர்  அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே"

இதில் வெள்ளை என்பது நீரைக் குறிக்கிறது. அதன் குணங்கள்தான் பூமியை இயக்குகிறது என்பது சித்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை சடைமுடிச் சாமியிடம் இருந்து பிள்ளைக்குப் பரவுகிறது. அதனால்தான் பிள்ளை சடைமுடிச் சாமி விட்ட இடத்தில் இருந்து ஞானத்தேடலை வேறொரு திசையில் தொடங்குகிறார். பிள்ளை தனக்குரி அனைத்தையும் விட்டு மலையேறி அங்கொரு சிறுவீடு கட்டுகிறார். வீடு கட்டமுதல் மாங்கொட்டையை நீரீரம் உள்ள இடத்தில் தோண்டி நடுகிறார். முதுமை பற்றுகிறது மாமரம் வளர்ந்து நிற்கிறது. ஆனால் காய்க்கவில்லை. பிள்ளை பற்றிப் பல கதைகள் ஊருக்குள் பரவுகிறது அவரைச் சாமியார் என்று பலர் வந்து சந்திக்கின்றனர். சித்தரான நாட்களிலும் நாகம்மை நினைவு பற்றிக்கொள்கிறது. ஞானமுத்தனின் வீடு செல்கிறார். அங்கே மரணிக்கிறார் பிள்ளை. அதன்பின் ஞானமுத்தன் அந்த மாமரத்தின் கீழ் இவரது உடல் சாம்பலை புதைக்கிறான். மறுவருடம் குலை குலையாக மாங்கனி காய்க்கிறது அம்மரத்தில். மக்கள் அதை உண்டு மகிழ்கின்றனர்.   

ஜெயமோகனின் சிறு கதைகளில் (குறுநாவல்) அதிக தத்துவங்கள் நிரம்பிய ஒன்றாக இதைச் சொல்லமுடியும். 

ஈர்ஆறு கால்கொண்டுஎழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

என்பார் திருமூலர். அதாவது  யோககுருவின் ஆசியுடன் நமது உடல் மற்றும் உள்ளம் என்பவற்றின் மீது படியும் மனக்கருத்துக்களை நீக்க உள்ளத்தால் தியானம் செய்ய வேண்டும். அப்படிச்செய்தால் யாவுமே கைகூடும். இங்கு புரவி என்பது நம் மனத்தின் மாபெரும் குறியீடு. 

ஜெயமோகன் உண்டாக்கிய கதையில் திருமூலர் குறிப்பிடும் கும்பகம் வந்து செல்கிறது. அதாவது ஏறுதல், ஆறுதல், ஊருதல் என்ற மூன்று நிலைகளாகும். முதல்நிலை ரசவாதம் கற்றுக்கொண்டது. இரண்டாம்நிலை அய்யாவுநாடாரிடம் கற்ற நீரூற்று ஞானம். மூன்றாம் நிலைதான் சடைமுனிச் சித்தரைச் சேரல். இது ஊருதல் எனப்படும். இவையனைத்தும் இணைந்து நம் அகத்தில் பன்னிரு கால்கொண்டு நம்மை நடக்கவைக்கும். அது சித்தர்கள் நம்பிக்கை. அதாவது இறந்தும் இறவா நிலை. அந்த காய்க்கும் மாங்கனி அந்த ஈராறு கால்கொண்டெழுந்த புரவியின் குறியீடு ஆகுமோ?. இல்லை பிள்ளைதான் அதன் குறியீடோ?

இந்தக்கதையில் ஜெயமோகன் தனது ஞானத் தேடல்களை வாசகர்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். கட்டுடைக்கிறோம் என்ற பெயரில் ஆங்கிலத் தத்துவங்களை வலிந்து திணிப்போருக்கு மத்தியில் நம் மரபார்ந்த அறிவுக்கருவூலங்களை கதையில் கொணர்வது எவ்வளவு கடினமான காரியம்.  அந்தக் கடினங்கள் இக்கதையை பூரணமாக வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்ளலாம். 

அகங்காரம் என்பது மன எழுச்சிக்கும் மன வீழ்ச்சிக்கும் காரணமான ஒன்று. அது பரஸ்பர எல்லையில் தனது கால்களை விரித்தெழுகிறது. 

Comments

Popular Posts