இடைவெளி
"சனியனே...." என்று சொல்லிக் கொண்டு அலுமினிய டம்ளரைத் தூக்கி எறிந்தான். அவன் இருந்த வீட்டின் தென் பகுதியில் மட்டும் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் ஒன்று கேள்விக்குறி போல புடைத்து நின்றது . வருடத்தில் இரண்டு முறை மா காய்த்து விடும் . அதன் பழங்களை மொத்த மரத்தின் விலைக்கு வாங்க என்று சிங்கள வியாபாரிகள் வந்து விடுவர். தமிழர்களிடம் வியாபாரம் செய்வதை விட சிங்களவங்களிடம் செய்தால் லாபம் கிடைக்கும். என்ன ஒன்று துரோகி என்ற பட்டம் வெகுமானம். அது அடுத்த சீசன் வருவதற்குள் மறைந்து விடும். ஆகவே அவன் வெகுமானத்தை விடவும் வருமானத்தை அதிகம் நம்பினான்.
வைகாசியில் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை மரத்தில் வைத்தே உண்பது போல ஒரு டேஸ்ட் கிடையாது. அவனுக்கு இதில் வாடிக்கை இல்லை. ஆனால் இவனிடம் அடிக்கடி டம்ளர் அடிவாங்கித் தப்பிக் கொள்ளும் அந்த சீவாத்மாவுக்கு வைகாசி பிறந்ததும் குண்டியில் அடித்த புழுகு வந்து விடும். மாமரத்தில் இருந்து வீட்டுக்கு வயரால் ஆன பாலம் ஒன்றுள்ளது . கறுப்புப் பாலம் . மின்சார வயர்கள் இங்கு கறுப்பினால் மூடியிருக்கும் அப்படி இருந்ததால் இரவில் அந்த வயர்களின் ஊடாக ஏற்படும் லீக்குகளை வயர் உரசல்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆகவே மின்சார வழி நடக்கும் ஒழுக்கு விபத்துக்கள் தவிர்க்கப்படும். அந்த வயர்தான் வீட்டுக்கும் மரத்துக்கும் அணில் வந்து செல்லும் பாலம். இந்த உறவுப்பாலம் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த உறவில் அவனுக்கு வெறுப்பு இருந்தது . உறவு என்றால் எப்போதாவது வந்து வீட்டில் சமைத்துப் போடப்பட்ட உணவுகளைக் கேட்டுக் கேள்வியுடன் தின்ன வேண்டும். "இந்த தேவடியாள் அணில் வீட்டையே நாசம் பண்ணிடுது". என்று தனியே கத்துவான். பயறு அவித்து வைத்தால் வீட்டின் மேல் இடுக்கால் வந்து அவித்து ஆறிக் கிடக்கும் பயற்றங் களி மீது குண்டியை வைத்து நாசம் பண்ணி ஓடிவிடும். அவன் குளித்ததும் குளிக்காததுமாக ஜலத்துடன் எதையாவது தூக்கி எறிவான். அவன் அணிலுக்கு வைத்துள்ள பெயர் தேவடியாள். இந்தப் பெயருக்கு அர்த்தம் என்ன என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும். வீட்டுக்குள் வந்து கறிச்சட்டிகளை யார் புரட்டினாலும் எழாத சப்தம் இந்த தேவடியாள் ஆராயும் போது வந்து விடுகிறது. மாதத்தில் பதினைந்துநாள் வீட்டில் இருப்பான். அந் நாட்களில் தான் சமையலும் நடக்கும். மீதி நாட்கள் நாடோடியாகத்தான் அலைவான் . தாயும்,தகப்பனும்,தமையனும் பெரிய நாட்டில் இருக்கிறதால அவனுக்கு பொறுப்பெண்டு ஏதுமில்ல. மாசத்தில் பதினைந்து நாட்களும் அவனுக்கு தேவடியாளுடனும் ,டம்ளருடனும் பொழுது போய்விடும். மழைக்காலம் வந்தால் வீட்டில் இருப்பான். அப்போது துன்பம் இரட்டிப்பாகும்.
தனிமை போல ஒரு நண்பன் எமக்குக் கிடைக்க முடியாது. அதற்குள் ஏகப்பட்ட சிம்ஹாசனங்கள் , சுவப்னங்கள் , மவுனமேளங்கள்,மோகனத்தின் பரிஹாசங்கள் விரவியுள்ளன. மையலுறும் போது காதிலோ ,கழுத்திலோ காகத்தின் எச்சம் வீழ்ந்தால் எப்படி இருக்கும். அவனுக்கு வீட்டில் நடப்பது இதுதான். இதனைக் கழுவித் துடைக்க விரும்பி முதலில் பயற்றங் களியில் புருடான் போட்டு வைத்தான். பின்பு எலிப் பொறியில் தேங்காய்ச் சொட்டு , இடையில் ஒருநாள் மேற்கூண்டு செய்து தானாகவே வீழவும் வைத்தான். எப்போதும் டம்ளரை வைத்தும் எறிந்து கொண்டிருப்பான். மூன்று நான்கு வருடங்கள் வீட்டைப் படித்த அணில் இவனைப் படித்திருக்கிறது கிஞ்சித்தம் அதில் வாய் கூட வைக்கவில்லை. உடலம் எதிலும் சிக்கவில்லை.
அவன் போய்ப் பார்க்கும் போது குண்டியைத் தூக்கி வாலால் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு பாலத்தின் வழியாக மாவில் ஏறிவிடும். மார்கழி வந்திருந்தது. கோடையின் வெம்மையில் இருந்து பூமி தன் உடைகளை சரி செய்யும் மாதம். பூமியின் மார்பகங்கள் பெரிதாகி இருந்தன. பசுக்கள் அதனை உண்டு மகிழ்ந்தன. மார்கழி ஓயாத அலைபோல வீசிக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் பின்னால் இருந்த குளம் ஆதிக்குளிரை அள்ளி வீசிக்கொண்டு இருந்தது. அவனுக்கு ஒரு சிந்தனை வந்தது . அணிலின் கூட்டை அழித்து விட்டால் ,அதற்குப் பாலங்கள் தேவையில்லை அகதியாக ஓடி ஒழிந்து விடும் என்று. அந்த மரத்தை வெட்டாமல் அவன் விடக் காரணமும் இருந்தது . அவனது தாத்தா வைத்த மரம். மரத்தில் அவர் நினைவுகள் இருந்தன. அந்த நினைவுகள் அவனை இயக்கும் எந்திரம் என்று நம்பினான் . அவனுக்கு ஆகம விதிகளிலும் ,அதர்வண வேதத்தின் மந்திரங்களிலும் நம்பிக்கை இருந்தது என்பதை விடப் பயம் இருந்தது. இதனை எண்ணி அவன் கொஞ்சம் பதை பதைத்திருந்தான்.
நாடோடியாக அவன் இலங்கையின் நாலா பாகமும் சுற்றி வருவான். கடல் என்றால் மிகவும் பிடித்தம் என்பதால் கடற்கரை வழியாகவே தனது முதல் பயணத்தை ஆரம்பித்தான். இன்றும் கடலின் வாழ்வு அவனை அலைக்கழிக்காத சிற்றின்பம் போலவே இருந்தது. அவனுக்கு ஒரு காதலியும் இருந்தாள். அவள் தாழ்வுப்பாடு கடலோர கிராமத்தில் ஒரு சம்மாட்டியின் மகள். ஒருநாள் கடலில் சோழி பொறுக்கிக்கொண்டிருக்கும் போது அவளைக் கண்டிருந்தான். தூரத்தில் இருந்து கண்களை மாற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான். கடலால் தூக்கி வைத்த கைக் குழந்தைகளை அரவனைப்பது போல சிற்பி ஓடுகளையும் ,சோழிகளையும், பளிங்குக் கற்களையும் அடுக்கிக் கொண்டே எல்லாப் பக்கமும் பார்த்து விட்டு அதனைத் தன்னுடைய கைப்பையில் இட்டுக் கொண்டாள். அவன் பார்த்ததை அவள் கண்டிருக்கவில்லை. கடல் அன்னையிடம் இருந்து களவு எடுத்தவள் போல பதுங்கிப் பதுங்கி அவனைக் கடந்து போனாள். அவளது பிருஷ்டம் மறையும் வரைக்கும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் மாலை மேற்கில் ஏறிவிட்டிருந்தது. அவளைக் கண்டதில் இருந்து தாழ்வுப்பாட்டில் நேவிக்காரன்களின் முகாமுக்கு அருகில் இருந்த வாடி ஒன்றை அரை வாடகைக்கு வாங்கி அவள் கடலுக்கு வருவதையும் போவதையும் பார்த்தபடியிருந்தான். அதில் அவனுக்கு ஒரு சந்தோசம் மேவியிருந்தது.
இம்முறை அவளிடம் தன் காதலைச் சொல்லவென்றே ஒரு இரவல் கவிதையும் எழுதிவந்தான். அவன் வருவதற்கு முதல் நாள், அதற்கு முதல் நாளெல்லாம் டம்ளருக்கு வேலை குறைந்து இருந்தது. மார்கழியில் மின்சாரம் இங்கு தடைப்படும். மின்சாரம் இ்ல்லாத ஒருநாள் பார்த்து அந்தக் கரிய வயர்களைச் சீவி விட்டு அதன் மேல் கறுப்பு நிறப் பூச்சினைப் பூசியிருந்தான். கள்ளுக்காரன் பனையின் கோம்பைகளைச் சீவிவிடுவது போல. அந்தப் பாலம் ஒரு புதைகுழி போல இருந்தது. இரவு மழையும் பெய்திருக்கவில்லை. அந்தப் பூச்சின் சுவடு அணிலுக்குப் போய்ச் சேராத வகையில் ரயர் நூல் எரித்து அதன் பொடிகள் மேலோட்டமாக தூவப்பட்டு இருந்தன. அணில் ஒரு சப்தமிடும். அந்தச் சப்தம் தம் இனத்தைக் காப்பாற்றும் அபாய ஒலி. இந்தப் பாலத்தின் முடிவுக்கு வந்த கணமே "விர்ர்ர்...."என்ற சப்தத்துடன் அடங்கி வயர்கள் தீயில் குளித்தன. தூரத்தில் இன்னுமொரு அணிலின் அபாய ஒலி ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவன் தேவதச்சனின் இரவல் கவிதையை அவளிடம் கொடுத்தான். அதனை அவன் கொணர்ந்ததில் உள்நோக்கம் இருக்கவில்லை. "எப்படியாவது அவளிடம் நான் சேரவேண்டும்" என்ற வெளிப்படையான எண்ணமே இருந்தது.
"உலகிலேயே குட்டியான அணில் ஒன்றை உனக்கெனக் கொண்டு வந்தேன்.
பல கிளைகளிலிருந்து வாழ்வைப் பார்க்க உனக்குச் சொல்லிக் கொடுக்குமென்று,
துவாரங்களின் ரகசியத்தை உன்னிடம் பேசுமென்று,
கிளைக்குக் கிளை தாவும் இடைவெளி
பற்றி உன்னிடம் கூறுமென்று,
உன் பாராமுகம் கண்டு திடுக்கிட்டு கீழே விழுந்தது.
பூமியைத் துளைத்துக் கொண்டு சென்று விட்டது
அந்தப் பக்கம்.
நீ என்றுமே செல்லமுடியாத அந்தப் பக்கம்.
"உன்னை நான் அந்தப் பக்கத்துக்கும் கூட்டிச் செல்வேன். அங்கும் நீ சோழி பொறுக்கலாம். யாரைப்பார்த்தும் வெட்கப்படாமல் கைப்பை நிரப்பலாம்" என்று மனதில் எண்ணினான்.
அவள் நிசப்தமாகவே இருந்து அதனை வாசித்துவிட்டு "எங்கட வீட்டில அணில் பண்ணையே வச்சிருக்கோம்" என்று கூறிக் கொண்டு அந்தக் கடிதத்தை வாங்கியபடி அணில் குட்டி போல வேகமாக நடந்து சென்றாள். அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் மாலை மேற்கில் ஏறவேயில்லை.
சுயாந்தன். 21/05/2020
Comments
Post a Comment