முடிவிலி



எனக்குத் தாமரைக் குளங்களைக் கண்டால் ஒரு பழக்கம் உண்டு. ஆழம் இல்லாத கரைகளால் தாமரைப் பூக்களைப் பிடுங்கி மணந்து பார்த்து விட்டு அருகில் உள்ள புத்தரின் உருவச் சிலைக்கு முன் வைத்து அழகு பார்ப்பது. நான் இதுவரைக்கும் பிடுங்கிய தாமரைகள் அனைத்தையும் மணந்து வாசத்தை முகராமல் விட்டது இல்லை. இதைக்கண்டு தாமரை இலைகளே தான்  நாணுவது போல நீரினுள் சென்று முகம் பார்க்கும். ஒரு குளத்தங்கரையில் சென்று சித்திரைக் காற்றை இதமாகச் சுவாசித்துக் கொண்டு இருந்தேன். பூப்படைந்த இளம் பெண் போல அந்தக் குளம் கிடந்தது.வெள்ளைத் தாமரைகள் குளம் முழுக்க பரவி இருந்தன.அது கன்னிப் பெண்ணின் யோனி போல தூய்மையாகக் காற்றில் ஆடி கவர்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தது. 

இன்றைக்கு நான் ஒரு தாமரைப் பூவையும் பிடுங்கவில்லை. இலைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் குளத்தில் எங்கு தேடினாலும் சிகப்புத் தாமரையைக் காண முடியவில்லை .எனக்கு அது ஆசுவாசமாக இருந்தது .நான் இப்போது குளித்து ஆகவேண்டும். என் நினைவுகள் குளிப்பதற்கு தற்காலிகத் தடை போட்டன.

துவாரகாவுக்கு வெள்ளைத் தாமரைதான் பிடிக்கும் என்று கனவில் அறிந்திருந்தேன். ஒருநாள் இளங்காலை வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தாள் .அவளை அதிகமாக சாறியுடன் தான் கண்டிருக்கிறேன்.

சாறியில் மெலிதாகத் தெரியும் பெண்கள் வேறு உடைகளில் உடம்பாகத் தெரிவார்கள் .எனக்கு இவளது உடம்பில் தோற்றம் பற்றி உணர நீண்ட நாட்கள் சென்றிருந்தன .

அன்றைய இளங்காலையில் அவளைக் கண்டதும் ஒரு பாடலை நினைத்துக் கொண்டேன்."திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை" என்று சங்ககாலப் பாடல் ஒன்று உள்ளது. அவளது முகம் மலரும் போது எனக்குத் தாமரைதான் நினைவுக்கு வந்தது. நான் அவளைத் தாமரைப்பூ ஆகவே வரித்துக் கொண்டேன் .பெண்கள் சொப்பனங்களை உருவாக்கும் புதிய பிரபஞ்சத்தைச் சேர்ந்தவர்கள். எக்கணமும் நாம் அவர்களைச் சார்ந்து தான் இருக்க வேண்டும். 

பெண்களுக்கு நடுவுநிலமை எப்போதும் பிடிக்காது. அவர்கள் பார்வைகளால் உருவாகும் ஒளி பிறிதொரு பிரபஞ்சத்தை உருவாக்கி விடுகின்றது.

சென்று பேசுவது பெண்களுக்குப் பிடிக்காது அதுவும் நூற்றிதழ்த் தாமரை கொண்ட துவாரகாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. எனக்குப் பேச வேண்டும் என்ற அவா எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை ஆனால் அவளுடன் ஏதோ ஒரு பரஸ்பர உணர்வினைத் தொடர்வது எனக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே பட்டது. 

அது என் ஜீவிதத்தைக் காக்கும் காயகல்பமாகவும் இருக்கலாம். பெண்கள் புதிய பிரபஞ்சத்தை சேர்ந்தவர்கள், பிறிதொரு பிரபஞ்சத்தை உருவாக்குபவர்கள் என்றால், ஆண்கள் அந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிகாரம் அல்லவா? அதனின் பிரளயமும் ஆண்கள் தானே?

எனக்குக் குழப்பமாக இருந்தது.ஏதாவது குழப்பம் இருந்தால்  யாராவது எழுதிய சுயசரிதையை வாசிப்பது உண்டு. நினைவோடை கூட எனக்கு உவப்பானதே!. சென்ற ஆண்டு கொழும்பு சென்று வந்த நண்பன் எனக்குச் சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தான் .அதில் உ.வே.சா எழுதிய "என் சரித்திரம்" இருந்தது.

"உ.வே.சா நான் கேட்கேல்லடா" என்றேன்.

"தெரியும்,நீ ஜெயமோகன்ட பைத்தியம் எண்டு அவண்ட புத்தகமும் வாங்கிக் கிடக்கு, இது உதிரியா வாங்கினான்" என்றான்.

எதற்கு ஜெயமோகனை அவன்
ஒருமையில் திட்டுகிறான் என்று கேட்கவில்லை. கண்டு கொள்ளாமல் விட்டேன். அதற்கான காரணமும் எனக்குத் தெரியும். கேட்டால் அவன் இதைவிட அசிங்கமாக ஏதேனும் கூறுவான் என்று காந்தீயம் பற்றினேன். 

"சரிடா காசு ஏதும் வேணுமா?"என்றேன் 

"இந்த சொறி பூனா கதைக்கு ஒரு குறைச்சலும் இல்ல ,போய் வேலய பாருடா கொட்ட" என்றான் .

முன்னால் நான்கு வளையம் போட்ட காரில்தான் சுமன் வந்திருந்தான். சுமனுக்கு நான் என்றால் மிகவும் பிடிக்கும்.

"வாற கிழமை நான் ஜேர்மனி போறன்டா"என்றான்.

எனக்கு அந்தரமாக இருந்தது. யாராவது நெருக்கமானவர்கள் நம்மை விட்டுத் தூரம் போகும் போது, அடிவயிற்றிலும் ,இடப்பக்க நெஞ்சிலும் ஒரு புழுக்கம் ஏற்பட்டு தொண்டைத் தண்ணீர் வற்றிவிடும். தொண்டை வழி நெஞ்சைக் கடந்து வயிற்றைச் சென்றடையும் தண்ணீர் கொதிப்பைப் பரப்புகிறது என்று நினைப்பதுண்டு.

"ம்ம்"என்றேன். 

புத்தகங்களின் நடுப்பக்கத்தில் விரலை விட்டுக் கொண்டு எஸ்.பொ எழுதிய நினைவோடையில் ஆழ்ந்தேன். பின்பு அவன் சென்றதும், தாமரைப் பூ ஞாபகம் என் முன்னால் வந்து நின்றது. இம் முறை தாமரைப் பூவை விஞ்சி துவாரகாவும் அதற்குள் வந்தாள். அவளது வரவில் ஒரு உக்கிரம் தெரிந்தது. "அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உன்னைத்தான் சிறு வெம்மையானேன்" உனது சிறு வெம்மை எனக்கு இப்போது பரிமாறியுள்ளது. துவாரகா என்றால் வெம்மை கொண்டவள் என்றொரு அர்த்தம் உண்டு.

இது எப்படி நடந்தது துவாரகா?
நான் உன்னால் வெம்மையாகிறேன்  ஸ்கலிதம் பரவி உறைகிறது சுவாமி அறையில். என்னால் மறுநாள் சீராக நிற்கக் கூட முடியவில்லை துடைப்பான் எடுத்து , ஈரத்துள் அமுக்கித் தரையைத் துடைத்து விட்டேன் .வீட்டில் யாருமற்ற நேரங்களில் நடந்து கொண்டிருந்த இந்த அசம்பாவிதம் தொடரானது. என்னால் ஒரு எல்லைக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உன்னை நாளைக்குக் காண வேண்டும். என்னுள் பரவும் வெறியைச் சொல்ல வேண்டும். இந்த வெறியை அணைக்க எனக்கொரு மார்கழியைத் தேட வேண்டும். நான் உன்னுடன் மார்கழி நந்நீராட வேண்டும். உன் துணையை எதிர்பார்க்கிறேன் துவாரகா. நீ என்னை ஏற்றுக் கொள்வாயா? மனதார நினைத்து விட்டு யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகத்தை எடுத்துக் கண்ணெதிரே வைத்ததும் தூக்கம் வந்து விட்டது. கனவு முழுக்கத் துவாரகா நனைந்து இருந்தாள்.
                         ***     ***
விடிய முழுக்க வீட்டு அறையில் விந்து வாசம். எதிரே அனுமர் பார்த்துக் கொண்டிருந்தார். கூடவே கங்கையைத் தலையில் கொண்ட சிவனும் இருந்ததால் எனக்கும் சங்கடம் வரவில்லை. என் தலைமாட்டில் ஒரு பளிங்குப் புத்தர் சிலை எப்போதும் இருக்கும் .விடிந்ததும் அதன் மண்டையைத் தடவி விட்டு எழுப்புவேன். இன்று பளிங்கின் கரங்களில் எனது விரல்கள் பட்டு, கூசியது. நான் எழுந்து கொண்டேன். சென்ற மாதம் தம்புள்ளையின் புத்த சைன்ஜங்களைப் பார்க்கச் சென்ற போது இதை வாங்கி வந்தேன்.

பைக்கை ஸ்ரார்ட் செய்து சிலதூரம் சென்றேன் .துவாரகா வரும் வழியின் எதிரில் பைக்கை நிறுத்தி விட்டு ஓரமாக நின்றேன். எதிரில் ஒரு கொன்றை மரம் நின்றது. பூமி எப்போதாவது தானே மஞ்சளைப் போர்த்திக் கொள்கிறது. எப்போதும்  கறுப்பும் சிவப்பும் நீலமும் நமக்கு பூமியின் காட்சியாகிறது. நான் கொன்றை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் .அதில் இலைகளே தெரியவில்லை. வேசை மஞ்சள் புடவை கட்டினது போல , பெண் தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செய்யப் போகும் பெண்கள் சூடிக்கொள்ளும் மஞ்சளுடை போல , கவர்ச்சியும் ,தெய்வீகமும் ஒருசேர இருந்தது. கீழே ஏராளம் மஞ்சள் இணர்கள் வீழ்ந்து கிடந்தன. அவை நடைபாதையில் மிதிபட்டன. மேலே கை எட்டும் தூரத்தில் இருந்த கொத்தை ஒருவன் சிறு பிள்ளையிடம் பிடுங்கிக் கொடுத்தான். அந்தப் பிள்ளை அந்தக் கொத்தை ஒவ்வொரு இணராகப் பின் இதழாகப் பிரித்து நிலத்தில் போட்டது . அந்த இணர்களும் ,இதழ்களும் என் வீட்டறையில் இருந்த விந்தினை ஞாபகமூட்டி மூட்டுவரை வலிக்கச் செய்தன. உடலம் உடனடியாகவே ஒரு யாகத்தைக் கோருகிறது. என் தீயுடலில் முளைத்திருக்கிறாய். எனக்கொரு பேனாவும் பேப்பரும் தேவையாக இருந்தது. எனக்குள் அநாமதேயமாக ஒரு நீளமான ஈட்டி இறங்கிக்கொண்டே இருக்கிறது. வக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடியும் குறைந்தும் என் துருப்பிடித்த நியாய முட்களை அசைத்துப் பார்க்கிறது. 

 "துவாரகா
இம்மாதம் பொழியும்
கண்ணாடி மழையை
நாம் மழையென்று
அழைக்க வேண்டாம்

இந்நாட்களின் சாரல் காற்றால் 
வரும் கூதல் குளிரையும் நாம்
வேறு பெயர் கொண்டழைப்போம்.

இப்போது என்னில் உருவாகிக்
கொண்டிருக்கும் கனத்த மௌனங்களை 
பரஸ்பர தேடல் என்றழைக்கிறேன்.

துவாரகா
இம்மாதம் பூத்திருக்கும் 
கொன்றைகளை நாம் என்ன 
பெயர் கொண்டழைப்பது
மஞ்சள் என்றா?
நீ என்றா?
மிடரும் சொட்டுத் தண்ணீர்
என் தொண்டையை நனைக்கிறது
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் அகக் கண்களால் மழையில் 
நனையும் கொன்றையின்
அகவிதழ்களை.....
ஆனால் நீ வரவேயில்லை...."

நான் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் ,ஒரு பாறை ,சிறிய அருவி நிசப்தமாகப் பாயும் பறங்கி ஆற்றின் தீரங்களுக்குச் சென்றேன். மல்லாந்து பாறையில் படுத்தேன்.காதைத் துணியால் அன்னை குடைவது போல மருதமரத்தி்ன் இடுக்குகளால் இயற்கை நீர் ஊற்று பாய்ந்து கொண்டு இருந்தது.அந்தச் சத்தங்கள் எனக்குத் தூக்கத்தைக் கொணர்ந்தன. பகல் கனவில் துவாரகாவின் கண்கள் தாமரையில் சொட்டிய நீர்போல அங்குமிங்கும் ஆடியது. பெரிய மார்பகங்கள் சாறியின் பிளவுஸ் துணிகளைப் புடைத்து நின்றன. அது அடிபட்ட நாகத்தைத் தப்பிக்க விடாமல் அடித்துக் கொல்ல முனையும் பழக்கப்பட்ட கொலைஞனின் வெறிபோல இருந்தது. அந்த வெறி என்னை நோக்கி வந்தது. படார் என்ற சத்தத்துடன் பெரும் கெப்பு ஒன்று ஆற்றில் வீழ்ந்தது. ஏற்கனவே நனைந்திருந்த எனது காற்சட்டை ஆற்று நீர் பட்டு மேலும் தொப்பலானது. மேலே பாய்ந்த மந்தி அதனை வீழ்த்தியிருக்க வேண்டும் .எழுந்து அசதியுடன் வீடு சென்றேன்.

இரவு தூக்கமே வரவில்லை. கனவு மட்டும் வந்திருந்தது. இந்த அலைச்சல் நிரந்தரமானதா என்று அவதிக்குள்ளானேன். அதில் துவாரகா வெள்ளைத் தாமரையுடன் ஒரு காரில் ஏறிச் சென்றாள். நான் உடனே விழித்தேன். எப்படி அவள் சொல்ல முடியும். என்னிடம் கார் இருக்கவில்லை. அவளுக்கு உலகம் சுற்றிக்காட்ட இந்த பைக் போதாதா. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டயரி எனக்கு அதைத்தானே சொன்னது. தோற்றுப் போனவன் சே. அவனை மோட்டார் சைக்கிள் விஷயத்தில் வென்றவன் என்றே சொல்வேன். என் ஒவ்வொரு பயணத்திலும் சே இருப்பதுண்டு. சேயின் உள்ளிருந்த வன்முறைக்கு ஈடாக அவனுக்குள் ஒரு படைப்பு யுக்தி இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவன் தென்னமரிக்காவுக்குள் ஒரு சுற்றுப்பயணம் செய்திருக்கிறான். ரசனைக்காரன் அவன். நான் துவாரகாவை நினைத்து நினைத்து நொந்தேன். விடியற்காலை குயில் தன் பங்குக்குப் பாடிக்கொண்டிருந்தது. ஏதோ அமிர்தவர்ஷினி ராகம் என்று நினைத்திருந்தேன்.சிறு தூறல் வேறு வெளியில் . கார் ஹோர்ன் சத்தம் கேட்டது சுமனாகத்தான் இருக்கவேணும்.

  "டேய் ,எனக்கு நாளன்டைக்கு பிளைட். நான் இண்டைக்கு கொழும்பு போறன்" என்றான்.

எனக்கு மனதில் ஒரு தனிமையுணர்வு ஏற்பட்டது. வெறுமையின் இன்னொரு அறைதான் இந்தத் தனிமை. இதற்கு பைத்தியம் என்றொரு வீடும் உள்ளது. ஏற்கனவே நான் தனித்திருப்பவன் தான். ஆனாலும் ஒரு தற்காலிக பைத்திய உணர்வு என்னுள்.

 "ம்ம்"என்றேன் .

அவனால் எனது மன அலையில் ஊடுருவ முடியவில்லை. காருக்குள் சென்று பின் ஜன்னலைத் திறந்தான். எனக்கு கனவு கண்ணைக் கெடுத்தது போல் இருந்தது. அதில் துவாரகா போல் ஒரு உருவம். போல் அல்ல துவாரகா தான். திகைப்பைக் காட்டாமல் நின்றிருந்தேன்.

"இவதாண்டா நான் கலியாணம் பண்ணப் போறவா, எப்படியும் இரண்டு மாசம் யாழ்ப்பாணத்துல அம்மா வீட்ட நிற்பா"என்றான்.

எனக்கு மட்டுமல்ல என்போன்ற காதல் சாபம் கொண்ட லும்பன்களுக்கு "ம்" என்பது தேசிய பாஷை. நான் "ம்" என்றேன்.அந்த ம் இல் இணையை இழந்த குருவியின் துயர்பாடல் இருந்தது. வாடிய தாமரையைக் குழந்தையின் கையில் கொடுக்கும் போது குழந்தைக்கு உண்டாகும் ஏமாற்றம் இருந்தது. தமிழ் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை எத்தனை வயது என்றாலும் அந்த மாப்பிள்ளைக்கு யோனி கொடுக்கத் தயாராகவே இருந்தனர். அதுவும் கல்யாணம் என்ற பெயரில். ஆனால் சுமன் என் நண்பன். அழகானவன். இனித்தான் வெளியூர் போகப் போகிறான். இது அவர்களது உண்மைக் காதல் என்று மனம் இன்னொரு நியாயத்தை முன்வைத்தது. அந்த நியாயம் எனது லௌகீகத்தைப் பூஜ்ஜியம் ஆக்கியது. சிலநாட்கள் என்னால் அதிலிருந்து மீள்வது அசாதாரடமாக இருந்தது. யாருக்கும் சொல்லாமல் யேசுதாஸ் பாடல்களைக் கேட்டுக் கேட்டுக் கரைந்து போனேன். நான்கு நாளைக்குள் காடு நாவலை படித்தும் முடித்திருந்தேன். 

இப்போது நான் குளத்தில் குளித்து நீண்ட தூக்கம் கொள்ள வேண்டும். அதற்குத்தான் வந்திருக்கிறேன். குளக்கரையில் இருந்து துலுசின் பக்கத்தில் ஏறி நின்று தாமரைகள் சூழ இடைவெளி விட்டு இருந்த பள்ளத்தில் குதித்தேன். அப்படிக் குதிப்பது எனது சிறுவயதுப் பழக்கம். நீராடி என் துயரங்களை இங்கே இன்று ஒறுக்க வேண்டும் என்ற ஓர்மை இருந்தது. குதித்து தாமரைக் கொடிகளை விலக்கிக் கொண்டே குளத்தின் ஆழத்துக்குச் சென்றேன் .தண்ணீரில் நீந்திக் கொண்டே  தூரத்தில் ஓர் நீர்க்காகம் தாமரைகள் படர்ந்து இருந்த இலைகளுக்கு மேலால் நடந்து சென்று மீண்டும் நீரில் மூழ்கியது. தாமரைப் பூக்கள் விரிந்து விரிந்து சிவத்துத் தெரிந்தன. அது வெள்ளைத் தாமரைகள் கொண்ட குளம்தான். ஆனால் குளத்தின் ஆழமான பக்கத்தில் சிவப்புத் தாமரைகள் இருந்தன. காலால் அடித்துக்கொண்டே போனேன். கால்கள் தாமரைக் கொடியில் சிக்கியது போல் இருந்தது. என் துயரங்களை ஒதுக்க வேண்டும் எண்றெண்ணிக் கொடிகளைக் கைகளால் எடுத்தேன். போன வருடம்தான் இந்தக் குளத்தில் நீராடிய ஊர் பொடியன் ஒருவன் தாமரைக்கொடி சிக்கி உயிர்துறந்திருந்தான். வருடாவருடம் பலி எடுக்கும் குளம் என்ற நம்பிக்கையும் இருந்தது. மூச்சுத் திணறியது. மீண்டும் மீண்டும் முயன்றேன். என் வயிற்றுக்கு கீழ் உள்ள நீருக்கால் நீர்க்காகம் நீந்திச் சென்றது. அது இம்முறை சிவந்த தாமரைகள் மீதமர்ந்தது. நான் மேலும் தண்ணீரின் கீழ் ஆழத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். மூன்றுமுறை மேலே வந்துபார்த்தேன். இளவெயில் மட்டும் ஜொலித்துக்கொண்டு இருந்தது. துவாரகா வெள்ளைத் தாமரை ஒன்றை எடுத்து புத்தனின் பளிங்குக் கரங்கள் முட்டாதபடி வைத்துக் கொண்டிருந்தாள். கண்களை மூடினேன். நீர்க்காகம், வெண்டாமரை, துவாரகா, என வந்துகொண்டே இருந்தது. ஸ்கலிதம் நீருடன் சேர்ந்தது. குஞ்சுமீன்கள் அள்ளித் தின்றன. நினைவுடன் நீர்கலந்தது..

சுயாந்தன். 18/05/2020.

Comments

  1. அருமையாக இருக்கின்றது எழுத்தாடல் மிகசிறப்பு

    ReplyDelete

Post a Comment

Popular Posts