இணைவு: சில புரிதல்கள்

                  வேலுத்தம்பி தளவாய்.

ஜெயமோகனின் இணைவு கதை வரலாற்றில் இருந்து இன்றைய காலத்தின் உண்மைகளை அணுகக் கூடியது. அவர் தொடராக எழுதிக்கொண்டிருக்கும் கதைகளில் இது ஒரு உச்சம் என்றே கூறவேண்டும். இந்தக் கதையினை விரிவாகப் புரிந்து கொள்ள பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதிய  "சேரர் வரலாறும் கேரளமும்" மற்றும் இரண்டு மேனன்கள் எழுதிய கேரள வரலாற்று நூல்கள் பெரிதும் உதவக்கூடியது. மார்த்தாண்ட வர்மாவுக்கு முன் (1750) கேரளத்தில் நிரந்தர ராணுவமே இருக்கவில்லை என்பதாகும். பின்னர்தான் அது நாயர்களின் துணையுடன் பெரும்படையாக ஆக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நாயர்களில் ஆண்களே இல்லாமல் போய்விடுகிறார்கள் என்பது நானறிந்த வரலாறு. அதற்கு ஆண்களின் யுத்த வக்கிரமே காரணம். அது இன்று உலகம் பூராகவும் நடைபெறும் ஒன்று. நான் வசிக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற  அசம்பாவிதங்களை இதில் வரும் உரையாடல்களுடன் பொருத்திப் பார்க்கிறேன். 

வேலுத்தம்பி தளவாய் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஏழாண்டுகள் படைத்தளபதியாக இருந்தவர். ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பாளராக இருந்து பின் அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்பவராக மாறுகிறார். அதனால் ஆங்கில அரசு வேலுத்தம்பியைப் பிடிக்க ஆட்கள் அனுப்பித் தேடுகிறது. அவர் ஆங்கிலேயர் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்று தனது தம்பி பத்மநாபன் கைகளால் உயிர் துறப்பார். பின்பு பத்மநாபன் கைதுசெய்யப்பட்டு கேணல் சேமர்ஸ் என்பவரின் கட்டுப்பாட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். பத்மநாபனுக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்படுகிறது. அது தொடர்பாக பத்மநாபனுடன் பேசுவதற்கு டொக்டர் பெயின்ஸ் வருகிறார். இதனை வரலாற்றை நீட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டுக் கதைகள் இதில் கூறப்படுகிறது. கதையின் முதல்படத்தில் உள்ளது வேலுத்தம்பி தளவாய். இவர் ஒரு நாயர் சமூகத்தவர். நாயர்கள் யுத்த வீரர்கள் என்பதும் அவர்கள் போருடன் பிறந்தவர்கள் என்பதுவும் கேரள வரலாற்று ஆய்வாளர்களின் முடிபு. 

கேணல் சேமர்ஸ் உடன் டொக்டர் 
பெயின்ஸ் மேற்கொண்ட உரையாடல்தான் கதையின் உச்சம் எனலாம். இக்கதையை இலங்கையின் கடந்தகால யுத்த நினைவுகளுடன் அல்லது வீரவழிபாட்டு உணர்ச்சிப் பெருக்குகளுடன் வைத்துப் பார்க்கக் கூடியது. இங்கும் ஏராளமான மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைகள் இருந்தனர். 

இதுனை நான் கதை என்று மட்டும் அணுகாமல் வரலாறு எமக்களிக்கும் படிப்பினை என்றே கருதுகிறேன். இதிலுள்ள அரசியல் உரையாடல் பகுதிகள் பழுத்த சித்தாந்தங்களை முன்வைக்கின்றது. பின்தொடரும் நிழலின் குரல் நாவலும் காந்தி பியாரிலாலுடன் உரையாடும் போது கூறிய ஒரு கருத்தும் ஞாபகம் வருகிறது. அதாவது, "உள்முரண்பாடுகள் கொண்ட ஒரு சமூகம் ஆயுதம் எடுத்தால் எதிரிக்காக அல்ல அந்த முரண்பாடுகளுக்காகவே அது ஆயுதத்தைக் கையாளும். அவர்களையே அது அழித்துக்கொள்ளும்" என்பதாகும். இந்தக் கதையை நான் காந்திய வழியிலும் அணுகுகிறேன். 

கதையில் கேணலுக்கும் டொக்டருக்கும் இடையில் நடந்த சில உரையாடல்பகுதிகள் கீழுள்ளன:

00

"அறிவில்லாத கும்பல் அறிவில்லாதவர்களையே தலைவர்களாக ஏற்கிறதா? உணர்ச்சிவெறி கொண்ட கூட்டம் உணர்ச்சியை தூண்டுபவனைத்தான் தலைவன் என்று ஏற்குமா? இவர்களின் மனதிலுள்ள வன்முறைதான் ஒரு வன்முறையாளனை வீரவழிபாடு செய்ய தூண்டுகிறதா?"

00

"அவர்களின் தலைவர்களுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை… அவர்கள் நவீன உலகை புரிந்து கொள்ளவில்லை.
சற்றேனும் வரலாற்றுப் புரிதல் இருந்தால் எங்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டிருப்பார்கள். அதைவிட தங்கள் நட்புசக்திகளை பகைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். முடிந்தவரை ஒருங்கு திரண்டிருப்பார்கள்… இப்படி தனிக்குழுவாக, தனிநபர் வீரத்தை நம்பி செயல்பட்டிருக்க மாட்டார்கள். இது கூட்டுத்தற்கொலை அன்றி வேறல்ல.அதை வீரம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்"

00

"இதில் தாளவே முடியாத ஓர் அபத்தம் உள்ளது. இது ஏன் தாளமுடியாதது என்றால் உலகமெங்கும் இதுதான் நடைபெறுகிறது. உலகமெங்கும். ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும். இதேபோல கண்மூடித்தனமான கூட்டம். இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை".

00

இவர்கள் அனைவருமே ஒரே வார்ப்புதான். இவர்கள் சந்தேகப்படுவதும் அஞ்சுவதும் சகோதரர்களைத்தான். இவர்கள் அனைவர் கையிலும் சகோதரக்கொலையின் பாவரத்தம். உடனிருந்த தோழர்களைக் கொன்று கொன்று காலப்போக்கில் மனப்பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். எவர்வேண்டுமென்றாலும் தன்னை கொல்லக்கூடும் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆகவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கொல்கிறார்கள். மேலும் மேலும் கொலை.  ஆகவே அவர்களைச் சுற்றி திறமையான எவருமே இல்லாத நிலை உருவாகிறது. வெறும் துதிபாடிகளும் சேவகர்களும் நிறைகிறார்கள். ஒருதலைவனின் அறிவு என்பது கூட்டான அறிவாகவே இருக்கமுடியும். அதை இழப்பவன் எத்தனை மாமனிதன் என்றாலும் போதுமான அறிவுடையவன் அல்ல.

00

இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு சரித்திர புருஷர்களாக அவர்களை உணரச்செய்வது அந்தச் சமூகத்தில் இருக்கும் வீரவழிபாடு. வீரவழிபாடு சென்ற யுகத்திற்குரியது. பழங்குடிகளின் மனநிலை அது. பிரிட்டிஷாருக்கு விஸ்கௌண்ட் நெல்சனுக்கு பின் எவர் மீதும் வீரவழிபாடு இல்லை. நம்மில் வீரம் உண்டு, வீரர்கள் உண்டு, ஆனால் நமக்கு இன்று வீரம் என்பது கடமைதான். நம் வீரர்கள் எல்லாருமே கடமைவீரர்களே ஒழிய மானுடதெய்வங்கள் அல்ல. எந்த வீரரும் பிரிட்டிஷ் சட்டத்துக்கும் நெறிக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. 

00

கதையின் சுட்டி. 

https://m.jeyamohan.in/131640/#.XsIYTsvhWDb

Comments

Popular Posts