கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
போகன் சங்கரின் பன்னிரு கதைகள் உள்ளடங்கிய தொகுப்பு இது. அனுபவங்களைக் கற்பனையால் இழுத்து நீட்டித்து எழுதியவை போல உணரமுடிகிறது. கதையின் பல இடங்கள் உவமை, அனுபவம் உள்ளிட்ட உத்தியாலும் கதை நேர்த்தியாலும் திகைப்புறச் செய்கிறது.

ஆழமான மனித உறவுகளும் அதன் வழியான தனிமனித உரையாடல்களும் அன்றாடத்தின் தூற்றல்களும் சித்திரமாக்கப்படுவது இன்றைய கதைகளின் பொதுச்சித்திரம். இத்தொகுப்பினை வாசிக்கும்போது போகன் சங்கர் அவற்றில் இருந்து கவித்துவமாக முன்னேறியுள்ளார் என்பதை ஒவ்வொரு நுணுக்கமான வாசகனும் கண்டடைவான். 

தன்னிரக்கம், உறவுச் சிக்கல்கள், தனிமனித மன அழுத்தங்கள், குடும்பம், மத்தியதர வாழ்க்கை, காமம், கலைஞனின் தாகம்,  விளிம்புநிலை மாந்தர்கள் என்று இத்தொகுதியின் பல கதைகளை ஏதோ இரண்டுமூன்று வகைக்குள் அடக்கலாம். 

படுதா என்ற கதை மலையாளப் பெண்ணைக் காதலிக்கும் தமிழன் ஒருவனைப் பற்றியது. அவனுக்கு இசை, இயற்கை, பெண்மை, தேடல் எல்லாமே பிடித்திருக்கிறது. ஆனால் அவனால் அதன் நுண்ணிய பாகங்களுக்குச் செல்லமுடியவில்லை. அதன் வலி பீறிட்டு எழுகிறது. காமம் என்ற அகவுணர்வில் அவன் அவளுடன் சரியாக லயிக்கவில்லை. அவள் அவனை விட்டு நீங்க இதனையே ஒரு காரணம் என்று பின்பு உணர்கிறான்.  அவள் இளையராயாவின் தொடக்ககாலப் பாடல் ஒன்றின் திடீர் ரசிகை ஆகிறாள். அதனை நினைத்து இவன் பின்னர் அழுது ஒரு நினைவோடையை எழுப்புகிறான். 

நடிகன் என்ற கதை எனக்குள் ஒரு தவிப்பை உண்டாக்கியது. மற்றக் கதைகளில் இருந்து இதன் மன ஆழங்கள் வாசகனைக் துயருறச் செய்யக் கூடியது. ஒரு சினிமா நடிகனால் தனது குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. அவனது மகன் நோயினால் இறந்து போகிறான். மனைவி சினிமாவை விட்டுவருமாறு தொடர்ந்து நச்சரிக்கிறாள். அவனால் அதிலிருந்து நீங்கமுடியவில்லை. ஒயு கட்டத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்படும் அவன் படுக்கையில் இருந்து இறந்துவிடுகிறான். அவன் அருகிலேயே மனைவி படுத்துச் சுருண்டு கிடக்கிறாள். அவன் குடும்பத்தில் வெறுக்கப்படும் ஒவ்வொரு கலைஞனின் குறியீடாகவே வருகிறான். இத்தொகுப்பிலுள்ள முழுக்கதைகளும் கேரள தமிழ்நாடு எல்லைகளை ஒட்டியே நடைபெறுகிறது. 

பாஸிங் ஷோ என்ற கதை பெண்ணுக்குள் உண்டாகும் கலைரீதியான ஒரு பாலியல் கவர்ச்சியை விபரிக்கின்றது. இதனை இரண்டு தலைமுறையாக போகன் எடுத்துச் சொல்கிறார். மிக நுட்பமான ஒரு கதை. மனச்சிதறல் ஏற்பட்டால் கதையின் பக்கங்கள் புரியாத அளவில் எழுதியுள்ளார்.   மஞ்சுளா என்பவளின் தாயை வைத்து பெரியப்பா ஓவியம் வரைகிறார். அதனைத் தந்தை விரும்புகிறார் இல்லை. ஓவியர் இறந்துவிடுகிறார். அதற்கு சொந்த அண்ணன் இறந்தது சரி என்பதுபோல ஒரு விளக்கம் தந்தை கொடுக்கிறார். பின்பு தன்னைப்போல கலையை ரசிக்காத ஒருத்தனை மஞ்சுளாவுக்குக் கட்டி வைக்கிறார்.. மஞ்சுளாவின் காதலன் வந்து கேட்டும் மஞ்சுளா போக மறுக்கிறாள். சிலகாலங்களில் அவள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஹரி என்ற ஓவியன் குடியிருக்கிறான். மஞ்சுளாவின் கணவன் அவனது கலையை வெறுக்க மஞ்சுளா அவன் மீது பரிவு காட்டுகிறாள். தன்னை அவன் ஓவியமாக வரைந்தால் நன்றாய் இருக்கும் என்று அவனில் ஒரு கவர்ச்சியைக் காண்கிறாள். ஆனால் ஓவியனது தோழி வந்து விடுகிறாள். மஞ்சுளா சலிப்பால் உறைந்து போகிறாள்.  இந்தக் கதையில் நாம் காணும் முக்கியமான விடயம் யாதெனின், ஒரு கலைஞனைப் புறக்கணிக்கும் பெண் தன் ரசனைக்கு ஒத்துவராத ஒருவனுடன் குடும்பம் நடத்துகிறாள். பின்பு அதே ரசனையில் தன்னைவிட வயது குறைந்த ஒருவனைக் காணும்போது அந்த ரசனையில் வீழ்கிறாள். அல்லது தன்னைத் தகவமைக்கின்றாள். இன்றைய முறைதவறிய உறவுகளை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்கிறார். நாம் கலையை எந்தவகையான ஆயுதமாகவும் உபயோகிக்கலாம் என்பதை இக்கதையின் அழுத்தமான பாகங்கள் காட்டுகின்றன. 

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் கதையில் ஒரு உவமை வரும். நான் அதை வாசித்து அதிர்ந்துவிட்டேன். "பொண்ணுங்களைத் திருப்திப்படுத்தறது கஷ்டம். ஓட்டையுள்ள குடம் என்னைக்கு நிறையும்" என்பது போல் இருக்கும். கிருஷ்ணனின் உருவங்களை மிக அழகாகக் கோலமிடும் உம்மிணி என்ற அழகான பெண்ணை வைத்து   பகடியும், ட்ரஜடியும் கலந்து உருவான ஒரு கதை. பணிக்கர் என்ற இந்துத்துவரும், கிறிஸ்த்தவ போதகர் பால்ராஜீம் வேறு சிலரும் உம்மிணி பற்றிப் பேசுகிறார்கள். தங்களில் யார் கிருஷ்ணன் என்றும் அவளை அடைவது யார் என்றும் ஏங்கியபடி இருந்தார்கள். ஒரு சமயத்தில் மனநிலை சரியில்லாத ஒருவனுடன் உம்மிணி கணவனைவிட்டு ஓடிவிடுகிறாள். அவளது பிணம் ஆற்றில் கரையொதுங்குகிறது. இவர்கள் திகைத்துப்போய் அவளும் சாதாரணபெண்தான். அவள் மீது வீணாகக் காவியச்சுவையை ஏற்றியுள்ளோம் என்று இலகுவாகக் கடக்கிறார்கள். இந்தக் கதை பகடியால் ஆனது. போகன் ஒரு பகடிக்காரர் என்பது அவரது போகப்புத்தகம் வாசிக்கும்போதும் அவரைப்பற்றி வேறு சிலர் எழுதிய கட்டுரைகள் கொண்டும் அறியமுடிகிறது. இக்கதையில் இறுதியில் போதகர் சொல்கிறார் அந்த மனநிலை சரியில்லாத நபரின் பெயர் கிருஷ்ணன் ஆகவே இருக்கும் என்று. உம்மிணி இறந்ததை நினைப்பதா? இவர்களது மத அக்கப்போரை நினைப்பதா என்று எண்ணும் வகையில் இக்கதையை எள்ளல் தொணியில் எழுதியுள்ளார். 

மீட்பு கதை இரண்டு குழந்தைகளை இழந்த கிறிஸ்த்தவ பெற்றோர் பற்றிய மிக உருக்கமான கதை. அந்தப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குப் பிடித்தமான பட்டாம்பூச்சிப் பூங்கா ஒன்றை ஆரம்பித்து அங்கிருந்த பட்டாம்பூச்சிகளில் தமது பிள்ளைகளைக் காண்கிறார்கள். அவற்றுடன் தமது பிள்ளைகளைப் பற்றி நிகழ்காலத்தில் பேசுகிறார்கள்.  இது அமானுஷ்யம் கலந்த ஒரு கதை. Fantasy என்றும் கூறமுடியும். இக்கதையில் செம்புலிங்கம் பற்றி ஒயு கதை வருகிறது. நான் செம்புலிங்கம் பற்றி ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய நாட்டாரியல் திருடர்கள் பற்றிய குறிப்பு ஒன்றில் வாசித்திருந்தேன். அதில் செம்புலிங்கம் வலிந்து திருடன் ஆக்கப்பட்ட நல்லவன் என்று ஒரு கருத்தை ஆ.சி எழுதியுள்ளார். இக்கதையில் செம்புலிங்கத்தைக் காப்பாற்றிய மலைக்குச் சென்று காப்பாற்றப்பட்டு வந்த பிலிப்பும் பியூலாவும் உன்னதத்தின் குறியீடாகவே அமைகிறார்கள். இக்கதையில் ஏராளமான மத உருவகங்களும் இறைவன் மீதான அலட்சியங்களும் நிறைந்து வருகின்றன.  இழப்பின் மீதான ஒவ்வொரு பாடல்களையும் நாம் இசைத்து பின் அதனைக் கடக்க வேண்டும்.
தமது பிள்ளைகளின் இறப்பை அவர்கள் எங்ஙனம் மனதுக்குள் மடைமாற்றம் செய்துகொள்கிறார்கள். இக்கதை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அண்மையில் போகன் சங்கர் உடைவு என்றொரு பேய்க் கதை எழுதியிருந்தார். ஆடியில் கரைந்த மனிதன் என்ற அமானுஷ்யக் கதை எனக்கு அதனையே ஞாபகப்படுத்துகிறது. மகனையும் தம்பியையும் அழைப்பதில் இக்கதைசொல்லிக்கு குழப்பம் வருகிறது. சிலநாட்களில் இவனது தம்பிக்குள் உன்னி கிருஷ்ணன் என்ற நபர் உள்நுழைந்ததாக நம்புகிறான். இறுதியில் தட்டப்படும் தனது வீட்டுக்கு வெளியில் அமானுஷ்யம் உள்ளது என்பதை அறிந்து அவன் அக்கதவைத் திறக்கப் போகிறான். அதற்குக் காரணம் பன்முகத்தை அழித்தஉ ஒற்றைத்தன்மையை உருவாக்கவே என்று கதைசொல்லப்படுகிறது. அதாவது தன் மகன் மகனாகவும், தன் தம்பி தம்பியாகவும் இருக்க இவ்விடத்தில் தன்னைப் பலியாக்கல் என்பது போல. இது போகனால் எழுதப்பட்ட ஆரம்பகால அமானுஷ்யக் கதை. அவர் தற்போது எழுதிய கதை இதைவிடவும் சிறப்பாகவுள்ளது. 

யாமினி அம்மா என்ற கதை கணவனை இழந்த பெண் பின்பு மகளையும் இழந்து யாருமற்று நிராதரவாக நிற்கிறாள். அவளை ஒருவன் தாங்கி அணைத்துக் கொள்கிறான். அந்த அணைப்புக்கு அவளது மகளின் இழப்பு அவளுக்குத் தேவைப்பட்டுள்ளது. அது திட்டமிடப்படாத எதேச்சையான ஒன்றுதான். ஆனால் அவனோ அந்தப் பிள்ளை இருக்கும்போதே அவளுடன் நெருங்க முயல்கிறான். தனது அன்பினை உருவாக்குகிறான். ஆனால் அவள் புறக்கணிக்கிறாள். மிக நெருடலான ஒரு உணர்வை இக்கதையில் நாம் அடையலாம். எத்தனை புறக்கணிப்பும் அத்தனை நிரந்தரமான ஒன்றல்ல. இழப்புக்கள் நம்மை உருக்கிவிடும் என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.  

நடிகன் என்ற கதையைப் பற்றிக் கூறியிருந்தேன். அதே போன்ற கதை சொல்லும் style சுரமானி கதையிலுள்ளது. நடிகன் கதை சினிமாவுக்குச் சென்று அழிந்த ஒரு கலைஞனைப் பற்றியது என்றால் இக்கதை கவிதை எழுதி அழிந்தவனைப் பற்றியது. இரண்டிலும் கலை அவனவனைக் கைவிட்டதைப் பற்றியும் அவனவனின் குடும்பம் புறக்கணித்தது பற்றியும் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. உதிரியாக சுரமானி கதையில் ஒரு கலையை (கவிதை) அவனது மனைவி காறி உமிழ்ந்து கிழித்து எறிகிறாள். எவ்வளவு துயரமான சம்பவம் அது. இது ஒவ்வொரு கலைஞனின் பொது நியதி. கோட்பாட்டு ஆய்வுகள், அரசியல் கவிதைகள் என்பன அங்கங்கு பகடியாக்கப்படுகின்றன. கதையின் தொடக்கத்திலேயே "தமிழவனைத் தவிர தலைநோவு தராது இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் எழுதக்கூடியவர் யார்" என்றே பகடியாக்கி ஆரம்பிக்கிறார் போகன். இக்கதையில் மிக அருமையான கவிதை ஒன்று உள்ளது. 
"மயிரடர்ந்த
மிருகத்தின் 
ராட்சதக் கைகளில்
இருந்தது
சிறிய பூ
கம்பீரமாய்.....
வைத்திருந்த மிருகம்தான் 
பதற்றத்துடன் இருந்தது"
இதனை நாம் அரசியல், கலை என்று யாவற்றுடனும் பொருத்திப் பார்க்கலாம். 

பொதி, நிறமற்ற வானவில் ஆகிய இரு கதைகளும் bully கள் பற்றியது. சட்டாம்பிகளால் பாதிக்கப்பட்டவர்களால் என்ன செய்யமுடியும். ஒரு சட்டாம்பியாக மாற முயற்சிக்கலாம். அல்லது அதிலிருந்து விலகி ஓடலாம். பொதி என்ற கதை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு மனிதன் பொது விருந்தொன்றில் தாசியைக் கண்டடைகிறான். தன்னைப்பற்றியும் தாசியின் கதையைப் பற்றியதுமான கதை. அந்த இரண்டின் புள்ளி சட்டாம்பிகள்தான். இதிலிருந்து மாறுபட்ட மிக நல்ல ஒரு கதை நிறமற்ற  வானவில். வகுப்பில் முதலிடம் பெறும் அகங்காரம் கொண்ட மாணவன் ஒருவனுக்கு கண் தெரியாமல் போகிறது. அவன் மட்டம்தட்டியவனே அவனுக்கு உதவுகிறான். பின்பு ஒருநாள் ரயிலில் காணும் ஒருவனை அவனா என்று கேட்கிறான். இந்தக் கதை டால்ஸ்டாயின் "Happy families are all alike; every unhappy family is 
unhappy in its own way" என்ற கருத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை சம்பந்தமில்லாத இடத்தில் போகன் மேற்கோள்மூலம் குறிப்பிடுகிறார்.

இந்தக் கதைகள் நமக்கு எந்த வகையான அளவுகோலுடன் எம்முடன் பயணிக்கின்றன என்பதை நாம் சற்று அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக லௌகீக வாழ்வின் மீது பற்றுக் கொண்ட ஒருவனின் கருத்துக்களாகவும், குடும்பம் என்பது குழந்தைகளாலும் குழந்தமைகளாலும் பெண்களாலும் நிரம்பிய ஒன்றென்று திருப்தியாக நம்பும் ஒருவனால்தான் இப்படியான கதைகளை எழுதமுடியும்.  அந்தத் திருப்தியின் முடிவில் ஏகப்பட்ட வேதனைகள் உள்ளன. அலுவலகம், அதிகரிகள், கலைத்தாகம், புறக்கணிப்புக்கள் என்று இன்னோரன்ன. இவற்றைத் தாண்டியே நாம் பயணிக்க வேண்டும். 

என்னைப் பொறுத்த வரையில் இக்கதைகள் லௌகீகத்தின் பற்றினால் உருவானவை. அவற்றில் உள்ள அழகியல் தன்மைகள் எந்த மத உருவகத்துக்கும் பொருந்துபவை. அதனால் அதனை பகடியாக்கவும், சீரியசாக்கவும் போகனால் முடிந்துள்ளது.   

Comments

Popular Posts