தெய்வீகனின் கதை உண்டாக்கிய தீனம்.

தெய்வீகன் எழுதிய "அவனை எனக்குத் தெரியாது" என்ற சிறுகதை எங்கள் வாழ்வுக்கு மிக நெருக்கமானது. புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் தொன்னூற்று ஒன்பது விழுக்காடு கதைகள் இலங்கையின் யுத்த வடுக்களை மட்டுமே உகுப்பன. தெய்வீகன் வெறுமனே அவ்வாறு கழிவிரக்கம் கோரி தனது கதைகளை விற்பவர் அல்ல என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.  தெய்வீகனின் வேறு சில கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் அவரது கதைகளில் இருந்து இது பெரும் மாறுபாடுகள் உடையது என்றே நினைக்கிறேன்.

இந்தக்கதையின் அய்ந்து புள்ளிகள் என நான் கருதுவது.
1. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த அருட்குமரனின் குடும்பமும் தாயின் வேதனையும்.
2. பாலமோட்டையில் (தாயகம்) போராளியாக இருந்த நாட்களும் நண்பன் பாலனின் நினைவுகளும்.
3. வைஷாலி உடனான உறவும் மனக்கோட்டமும்.
4. மரணதண்டனை வழங்கும் ஆயுதக்காரனாக மாற்றமுற்ற தருணம்.
5. மேற்சொன்ன நான்கையும் திரட்டிய தமிழ் நிலம் மீதான பிரார்த்தனையும், குற்றவுணர்வும். 
ப.தெய்வீகன்
கதைசொல்லியின் மொழி குற்றவுணர்ச்சிக்கும் வாழ்தல் என்ற நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடைப்பட்டது. அதனால்தான்,  "ஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது" என்று ஒரு கட்டத்தில் கேட்டேவிடுகிறார்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் வழக்கம் மிக அச்சத்தை ஊட்டக்கூடியது. 2015 ஆம் ஆண்டளவில் மயூரன் சுகுமாரன் என்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலிய தமிழ்ப் பிரஜைக்கு அங்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. உலகத் தமிழர்கள் அதனை மிகவும் துயரத்துடன் அணுகியிருந்தனர். அந்த மயூரன்தான் கதையின் அருட்குமரன். கதைசொல்லி மரணதண்டனையை நிறைவேற்றும் ஒன்பது பேரில் ஒருவன். அவன் இலங்கையின் போராளியாக இருந்து பாலன் என்ற தன் நண்பனின் மரணத்தைப் பாலமோட்டை முன்னரங்கில் கண்டு அதிருப்தியுற்று நாட்டை விட்டு வந்தவன். அருட்குமரனைச் சுட்ட பின்பு தாய் திட்டி அழும்போதுதான் தெரிகிறது தான் சுட்டது ஒரு தமிழனை என்று. ஏற்கனவே ஒரு நைஜீரியாக் காரனைச் சுடும்போது வாராத வேதனை இப்போது உண்டாகிறது. “என் நிலமே என் நிலமே என்னைச் சபிக்காதே” என்று பிரார்த்திக்கிறான். அது கதையாசிரியர் தெய்வீகன் தன்நிலம் மீதான கரைதல் என்றே தெரிகிறது. 

கதையின் இடைப்பகுதிகள் சராசரி ஆடவனுக்கு தான் அலைந்து திரியும் காலங்களில் உண்டாகும் அரவணைப்பினால் ஏற்பட்ட நேசத்தைச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் தன் நண்பனின் நினைவை மறக்கடிக்கும் வகையில் வைஷாலி மீது நினைவு ஏறுகிறதையும் கதை சொல்கிறது. 

கதையை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு அய்ந்து காரணங்கள் என்னிடமுண்டு.

1. கதை வழக்கமான யுத்தகால நினைவுக்குள் மாத்திரம் நின்று கழிவிரக்கம் கோரவில்லை.
2. துப்பாக்கி (ஆயுதம்) மீதான காதலும் அதன் மீதான வெறுப்பும் விவாதம் போல சொல்லப்படுகிறது.
3. தமிழ் நிலம் மீதான பிடிப்பு மற்றும் தமிழ்த் தாயின் கதறல் தீனம் போல ஒலிக்கவைக்கப்படுகிறது.
4. நம் தீராத நினைவுகளை இடித்துத்தள்ளும் மெல்லிய இழைதான் காதல் என்பது வரையப்பட்டுள்ளது.
5. எழுத்தாளர் தெய்வீகனின் சிறப்பான உரைநடையும் கற்பனை ஆற்றலும்.

இந்தக் கதையை வாசிக்கும்போது நான் ஒரு விடயத்தை எதிர்பார்த்தேன். ஆனால் இக்கதையில் இடம்பெறவில்லை. இந்த தண்டனை ஏற்கனவே நடந்த ஒரு சம்பவத்தின் திரட்டுத்தான். ஆனால் அங்கு சுடுபட்டவனின் குடும்ப நிலை சொல்லப்படுகிறது.  சுட்டவன் தன்பக்கத்தைக் கூறுகிறான். இருந்தும் சுடுபட்டவன் மனநிலை என்ன என்பதும் அவனது மரண தருணங்கள் எத்தகையது என்பதும் கூறப்படவில்லை. இது ஒரு தன்நிலை கூறும் புனைவு என்பதனால் கூறாமல் விட்டாரா தெய்வீகன்? 

அண்மையில்தான் ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதை வாசித்த பிரமிப்பில் இருந்தேன். இன்று தெய்வீகனின் "அவனை எனக்குத் தெரியாது" என்ற கதை ஒரு தீனத்தை உருவாக்கிவிடுகிறது. நாளை பாலமோட்டைக்குப் பணிநிமித்தம் செல்லும்போதும் எனக்குப் பாலனின் ஞாபகம் அல்லவா வந்துசெல்லப்போகிறது.

ப. தெய்வீகனின் கதை சுட்டி:

அவனை எனக்குத் தெரியாது

Comments

Popular Posts