அயோத்திதாசர்

க. அயோத்திதாசப் பண்டிதர் புத்தரின் உலகளாவிய சிந்தனைகளைக் கூறும்போது ஆப்ராஹாமிய மதங்கள் பற்றியும் கடுமையான விமர்சனங்களையே முன்வைத்துள்ளார். புத்தர் தன்னை எந்த இடத்திலும் கிறிஸ்த்துவைப்போலக் கடவுளின் மகன் என்றோ, நபிகளைப் போலக் கடவுளின் தூதுவர் என்றோ சொன்னதில்லை. மனிதன் தனது மீட்சியை, சுய விடுதலையை, வெற்றியை அவனே செய்தாக வேண்டும். யாராலும் இன்னொருவனைப் பரிசுத்தப்படுத்த முடியாது. இந்தக் கருத்துக்களையே அயோத்திதாசரின் சம காலத்தவரான P. இலட்சுமி நரசு தனது Religion Of the Modern Buddhist என்ற ஆங்கில நூலிலும் எழுதியுள்ளார்.

அயோத்திதாசப் பண்டிதர் சித்தர்களைப் பௌத்த தருமத்தின் ஒரு பகுதியினராகவே கருதினார். அதற்காகத் திருமூலர் உள்ளிட்ட தமிழ் கலகக்காரர்களின்  சிந்தனைகள் பலவற்றை தனது எழுத்தில் கொண்டுவந்தார். ஈ.வே.ராமசாமி போன்று மரபுகளை அறுத்து விட்டு சீர்திருத்தத்தை முன்வைக்கலாம் என்று கிளம்பியவர் அல்ல தாசர். அவர் மரபில் இருந்தே நவீனத்துக்கான தீர்வுகளைத் தேடினார். திருக்குறள் தொடங்கி சீவகசிந்தாமணி, திருமந்திரம் வரை ஆராய்ந்தார்.

19 ஆம் நூற்றாண்டைப் பௌத்த மறுமலர்ச்சிக் காலம் என்று கூறப் பிரதான காரணமானவர் அயோத்திதாசப் பண்டிதர். இவருக்குத் துணையாக கேணல் ஒல்கொட், அநாகரிக தர்மபாலா, லட்சுமி நரசு உள்ளிட்டோர் இருந்துள்ளனர். 1898 இல் அயோத்திதாசர் மாளிகாகந்த என்று முன்னர் அழைக்கப்பட்ட வித்தியோதயா பிரிவேனாவில் ஹிக்கடுவ ஶ்ரீ சுமங்கல மஹாநாயக்கரிடம் பஞ்சசீலம் பெற்றுப் பௌத்தரானார். அயோத்திதாசரைப் பௌத்தராக மாற்ற உதவியாக இருந்தவர் கேணல் ஹென்றி ஸ்ரீரீல் ஒல்கொட். இவரது பெயரில் இன்று கொழும்பில் ஒரு தெரு உள்ளது. அயோத்திதாசர் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய சிந்தனைகளை தமிழ் மரபில் இருந்து தோண்டியெடுத்து விதைத்தார் என்றால்,  ஒல்கொட்  அவர்களே மேலைநாடுகளில் பௌத்தம் பற்றிய சிந்தனைகள் அறிவுப்புலத்தில் பரவக்காரணமாகவும் இருந்தார். அயோத்திதாசர் பஞ்சசீலம் பெற்ற பிரிவேனா இன்று ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.

ஞான. அலாய்சியஸ் தொகுத்து வெளியிட்டுள்ள அயோத்திதாசரின் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை. விவாதிக்கப்பட வேண்டியவை. மேலும் பண்டிதர் பற்றி ராஜ் கௌதமன் வெளியிட்டுள்ள க.அயோத்திதாசர் ஆய்வுகள் தாசரின் மொழிநடையைப் பின்பற்றி எழுதப்பட்ட அற்புதமான பகுப்புக்கட்டுரைகள் கொண்டது. சீர்திருத்தம் என்பதை அறிவுப் புலத்தில் இருந்து விதைத்ததால்தான் அவர் ஶ்ரீலஶ்ரீ அயோத்திதாசப் பண்டிதர்; முதற்சிந்தனையாளர்.

Pic 1: H.S.Olcott With Ven.Hikkaduwe Sumangala Thero.

Pic 2: Reformer Ayyothee Thassar.

Pic 3: Tamil Scholar Raj Gowthaman About Thassar's Researches.




Comments

Popular Posts