சந்தோஷ் சிவன்: ஒளிச்சித்திரங்களின் பெருந்தச்சன்.
திரைச்சித்திரங்களில் சிறந்த காட்சி பிம்பங்கள் என்பது இலக்கியங்களில் கவிதை போன்றது. கண்ணுக்குப் புலனாகும் இலக்கியம் என்றும் பட ஒளியாக்கத்தைக் கூறலாம். காட்சிக்கலையில் செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அதன் உண்மையனுபவம் சிதறும். அந்தக் காட்சிகளை ரசிப்பவன் அதனுள் லயிக்கமுடியாமல் போகும். காட்சியமைப்புக்கள் சிந்தனையைப் பாதிக்கமுன்னரே மனதைத் தாக்கிவிடுகிறது. ஆகவே சிறந்த ஒளிப்பதிவாளனின் ஒளிப்பதிவு நுட்பம் என்பது இயல்பாக உள்ள அனுபவத் திறமைகளையும் நாம் கற்றுக்கொண்ட பயிற்சியின் மூலமும் உருவாக்கப்படுகின்றது.
சந்தோஷ் சிவன் |
{ பெருந்தச்சன் காட்சிகள் }
தளபதியில் ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சி வரும். அதில் ரஜனி திரையின் வலதுபக்கம் சென்று தனது முகத்தின் முழுமையை நீண்டநேரம் காட்டிவிட்டு பின்னர் இடதுபக்கம் சென்று பின்னர் முழுமையாக முகத்தைக் கர்வமாகக் காட்டி அறிமுகமாவார். அப்பொழுது மழை பொழிந்து கொண்டிருக்கும். அதுவரை ரஜினிகாந் நடித்த படங்களில் அப்படி ஒரு ஒளிக்கோணத்தில் அறிமுகமாகவில்லை என்றே கூறவேண்டும். தளபதியில் வரும் காதற்காட்சியமைப்புக்கள் திரைப்படத்தின் காதல் வசனங்களைவிட அதிகம் பேசப்பட்டன. சாமுராய் வீரனாக ரஜினிகாந் பாடலில் வரும்போது அந்தக் கொடிகள் எத்திசை பறக்கின்றதோ அத்திசையில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தோரணையாக ரஜினி காதலிசைப்பார். அதில் சந்தோஷ் சிவனின் நுட்பம் வெளிப்படும். ஏற்றம் இறக்கம் என்றுதான் அந்தப் பாடலின் காட்சிகள் ஓடும். அத்திரைப்படத்தில் ஷோபனா ஒரு காதல் விடயத்தில் முடிவெடுக்கவியலாத பிராமணப் பெண்ணாக நடித்தார். யமுனை ஆற்றிலே என்ற பாடலும் சரி. கண்ணன் என்ற சொல் இடம்பெற்றதும் ரஜினி தெப்பக்குளம் அருகில் உயரமான சூரிய ஒளியுடன் காதல்புரிவார். தளபதி திரைப்படத்தின் பிம்பங்கள் தொன்னூறுகளில் வெளியான சகிக்கமுடியாத தமிழ்ப் படக்காட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு பேசப்பட்டது. இன்றும் பேசப்படுகிறது.
{ தளபதி காட்சிகள் }
இருவர் படம் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர் பற்றிய புனைவுக் கதை என்பதனாலும் அதன் வரலாற்றுப் புரிதல் இயக்குநருக்கு மட்டுமன்றி ஒளிப்பதிவாளருக்கும் இன்றியமையாத ஒன்றாயிருந்தது. பிரகாஷ்ராஜ், மோகன்லால் இருவரும் தத்தமது கதாபாத்திரத்தில் சிறப்பான பங்குபற்றலைச் செய்திருந்தனர். கதர் வேட்டியிலுள்ள அரசியல்வாதிகளைப் பற்றிய படம் என்பதனால் அவர்களது நுண்ணிய அசைவுகள் கூட காட்சிக்குள் கொண்டுவரவேண்டிய தேவையிருந்தது. இருவரில் மோகன்லால், கௌதமி தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அதில் கால்மேல் கால்போட்டிருக்க பின்னால் இருந்து ஒளிக்கீற்றுக்கள் சிதறும். கை ஒன்றை தியேட்டர் சீட்டில் ஆனந்தன் (மோகன்லால்) வைப்பார். அந்தக் காட்சிகள் இயல்பான ஒளிப்பதிவினை மீறியவை என்பது கமராவின் நுண் கோணங்களைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
மணிகண்டனுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்த ராவணன் திரைப்படம் அற்புதமான காட்சிகளை உள்ளடக்கியது. காடு,மலை, சிற்றோடை, அருவி என்று இயற்கையின் பல பாகங்கள் படத்தில் திறம்பட அமைந்திருக்கும். அதிரப்பள்ளி அருவியையும் அதனை அண்டிய காட்டையும் அவ்வளவு அழகியலாகச் சித்தரிப்பார். படுத்துள்ள விஷ்ணு சித்திரம் குறியீட்டு யுக்தி வாய்ந்தது.
மணிரத்னம் இயக்கிய தில்ஷே படத்தில் மனிஷா கொய்ராலாவைப் பின்தொடரும் ஷாருக் அதில் பாலைப்புழுதி பறக்க அவளைத் தொடர்வார். ஒரு கட்டத்தில் அவளுக்குத் தண்ணீர் விடாய்க்கும். பொதுவான கமெராக்காரன் அதற்குரிய காட்சிகளை நேர் எதிராகவே கையாளுவான். இதில் அவள் நீரருந்தும் போது ஷாருக் அவளைப் பார்ப்பதை மனிஷாவின் கையிடுக்கிற்கால் காட்டியிருந்தார்.
அண்மைய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் வரைக்கும் சந்தோஷ் சிவன் தனது கெமரா கொண்டு பிரமிப்பையே உண்டாக்கி வருகிறார்.
நவரச, ரோஜா, காலாபாணி, இந்திரா உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவையும் சந்தோஷ்சிவன் நமக்களித்துள்ளார். சினிமா என்பது கூட்டுமுயற்சி என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கூட்டுமுயற்சியில் தனித்து தெரிபவனே சிறந்த கலைஞன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் சந்தோஷ் சிவனின் பல ஒளிச்சித்திரங்கள் அவரது நீண்டகால அனுபவங்களால் உயிர்த்திருப்பவை.
Comments
Post a Comment