ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் மழை


"வெளியெங்கும் பொழிவை நிறுத்திவிட்டு
வெப்பம் துளிர்க்கும் அவளுடலை  அணைத்துக்கொண்டு கட்டிலில் படுத்துறங்குகிறது மழை"

கவிதைகள் முழுத்தொகுப்பு.

மழை என்ற ஒற்றைச் சொல் எத்தனை தித்திப்பாக உள்ளது என்று யாரேனும் உணர்ந்திருக்கிறீர்களா? மழை என்ற உணர்வு எத்தனை விகாசம் கொண்டது என்றாவது அதன் உணர்விலிருந்து லயித்திருக்கிறீர்களா?
மழைபெய்து மண்ணின் இரண்டாம்படை குளிர்ந்ததும் கூதை காற்று வீசும் அல்லவா?, அந்த நேரத்து உணர்வு ஒவ்வொரு ரசிகனையும் கவிஞனாக்கி விடும். அவ்வாறு எழுதப்படும் அனைத்துமே கவிதைகளல்ல. ஜெ.பிரான்சிஸ் கிருபா மழை பற்றி எழுதிய அநேக கவிதைகள் ஒரு கழிவிரக்கத்தின் வெளிப்பாடாகவோ, சுயநலமற்ற தன்மையின் பாடலாகவோதான் இருந்துள்ளது.

"துளியில் துவங்கி துளியில் முடிக்கும் எளிய கலையை களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள் மழைத்தேவதை"

மழையை எளியகலையாகப் பார்க்கும் இந்தத் தரிசனம்தான் ஒவ்வொரு கவிதானுபவனும் கவிஞனிடமிருந்து வேண்டுவது. அந்தக் கலை மழைபோல் ஓய்வின்றி இயங்கக் கூடியதாக இருக்கவேண்டும். "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று இளங்கோவடிகள் மழையைப் போற்றும் கரிசனை நவீன கவிஞனும் மழையைத் தேவதையாகப் பார்க்கும் ஆத்மார்த்த லயத்தில் வந்தமர்ந்துள்ளது.

எந்த யாசகனும் புரவலனை மழையெனவே காண்பான். அடிவயிறு ஒட்டி ஒவ்வொரு வேளை உணவுக்கும் தவமிருக்கும் அவனுக்கு அடுத்த கணமே கிடைக்கும் யாசகம் மாமழையெனவே அமையும்.

"யாசகன் முடிவில்
முடிவுறாது யாசகம்
மரணத்துக்கப்பாலும்
மல்லாந்து கிடக்கும்
அநாதையாய் கைக்குவளை
பிச்சைப் பாத்திரத்திலும்
பெய்யும் மழை"

எவ்வளவு துயரமான ஒரு வரி. மரணம் யாசகனை ஈடேற்றிவிடும். ஆனால் அவனது பற்றுக்கள் அவனது குறியீடுகளை விட்டகலுவதில்லை. எந்த யாசகனுக்கும் முடிவு இதுதான். அவன் பாத்திரத்தில் மழை மட்டுமே பெய்யும். "மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்" என்று மழையை சீத்தலைச் சாத்தனார் புகழுவார். மழையின் சுரப்பு உயிர்களை வாழவைக்கும். அது யாசகர்களின் பிச்சைப் பாத்திரங்களைக் மரணத்தின் பின்பும் கவிய வைக்கும். பிரான்சிஸ் கிருபா தன்னுடைய வாழ்க்கைக் காலத்தை இப்பொழுது ஒரு யாசகன் போல கழிக்கிறார் என்பது எவ்வளவு துயரமான விடயம். இக்கவிதைதான் இன்றைய பிரான்சிஸ் கிருபாவின் நிலைப்பாடும்கூட.

மழை என்ற ஒற்றைச் சொல்லைக் கவிதைக்குள் அதிகம் பிரயோகித்த நவீன கவிஞர் பிரான்சிஸ் கிருபா என்றே நினைக்கிறேன். கவிதை எனக்குள் நிகழ்வதால் இதைத் தடுத்து நிறுத்த முடியாமையினால் எழுதுகிறேன் என்று கூறுவார்.

"மழை பெய்யும் போதெல்லாம்
நிலைகுலையும் ஒரு மனிதன்
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவான் சின்னஞ்சிறு மழையோடு............
அதோ வெள்ளத்தில் படகுபோல ஒரு துளி கூட நனையாமல்
பெரும் மழையின் பெரும் இடைவெளியில் ஆடிவருகிறது அவன் வீடு"

ஜெ.பிரான்சிஸ் கிருபா 1974 ஆம் ஆண்டு பிறந்திருந்தார். இவய் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய பேசாமல் தமிழ்ச்சமூகம் மறந்து போன கவிஞர். மெசியாவின் காயங்கள், நிழலின்றி ஏதுமற்றவன், வலியோடு முறியும் மின்னல்கள், மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் போன்ற கவிதைத் தொகுப்புக்களை எழுதியுள்ளார். இவற்றுள் பல காதலையும் ஒயு விதமான ஆத்மார்த்த எண்ணத்தையும் மனதுக்குள் பிரசவிப்பவை. கன்னி என்னும் இவருடைய நாவல் இன்றும் பலரால் பேசப்படுகிறது.

"பொழியுமொரு மழையை
நதியாகத் தொகுத்து ஓடவிட்டாய்.
மழை ஓய்ந்தபின்னும்
ஓடிக்கொண்டிருக்கிறது நதி"

இது பிரான்சிஸ் கிருபா தனக்காகத் தானே எழுதியது என்றும் கூறலாம். அவரது கவிதைகள் நதிபோல ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர் அதற்குக் காரணமான மழையாக எங்கோ ஓய்வுகொள்கிறார்.


Comments

Popular Posts