தேவதச்சன் என்னும் மாயக்காரன்

ஒரு தத்துவத்துக்குள் ஆழம் செல்ல வேண்டுமானால் தன்னை இழக்க வேண்டும். தான் தற்போது தாங்கி நிற்கும்  நிலைகளைக் களையவேண்டும். இவற்றிலிருந்து ஒரு அறிவுப் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தத் தத்துவம் பற்றிய தேடலின் தீர்வு நமக்குக் கிடைக்கும். நம் காலத்தின் ஆன்மீகத் தேடல் ஞானி என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களைக் கூறலாம். இந்து ஞான மரபின் மூன்று அடுக்குகளான சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, தூய தத்துவ வாதம் என்பவற்றில் மூன்றாவது வகையைச் சார்ந்தவர் ஜக்கி வாசுதேவ். யோகம் மற்றும் தியானம் மூலம் தன் தேடலைத் தொடங்கியவர். அவருடைய "குருவைத்தேடி", "ஆன்மீக உரையாடல்கள்" பற்றிய கலந்துரையாடல்கள் மிக ஆழமானவை. பிரமிப்பூட்டுவன.
தேவதச்சன்

இன்றைய நாளில் எனக்குப் பிடித்தமான கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில்  "என் மனச்சுமையின்" என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. தத்துவம் போல ஆரம்பத்தில் இருந்தது. பின்பு புரிந்துகொள்ளும்படியானது.

"என்
மனச்சுமையின் ஆழத்தில்
சில கற்கள்
கிருஷ்ணபகவானின் எலும்புகள் என்பர் சிலர்.
குரோமக்னான் பொம்பளையின் முட்டுத்துணி என்பாரும் உளர்.
பார்த்துக்கொண்டிருக்கையில்
தலை,
ஆழத்தில் உருள உருள
அந்தமட்டுக்கும்
சீப்பு வாங்கும்
செலவு மிச்சம் எனக்கு"

மனச்சுனையின் உள்ளாளத்தில் சில கற்கள். அவை தத்துவ தரிசனங்களா? வரலாற்றுப் புதிர்களா? என்ற சிந்தனையில் காலம் ஓய்வின்றி ஓடுகிறது.  இதுதான் அந்தக் கவிதையின் உட்பொருள். இதற்கு அவர் உண்டாக்கிய மறைபொருட்கள் கவிஞரின் உலகளாவிய தத்துவ, வரலாற்று ஆழத்தை மட்டுமல்ல கவிதையில் அதனைக் கோர்த்து வாசகனுக்குப் புதிர்போடும் வித்தையையும் பருண்மையாகக் காட்டுகிறது. 

கிருஷ்ணரின் எலும்புகள் பூரி ஜெகன்னாத கோயிலில் உள்ளதாக ஐதீகங்கள் உள்ளன. அதே போல குரோமக்னான் என்பது வரலாற்றுக்கு முற்பட்டகால ஐரோப்பிய மனிதன் ஆவான். முட்டுத்துணி என்பது பெண்களின் Sanitary napkin ஆகும். குரோமக்னான் காலம் என்பது கிட்டத்தட்ட இருபதாயிரம் ஆண்டுகளைத் தாண்டியுள்ளதாகும். இக்காலத்தில்தான் மஹாபாரதக் கதையும் நிகழ்ந்துள்ளதாக நம்பிக்கைகள் உள்ளன.

மன ஊற்றின் ஆழத்தில் ஒரு பக்கம் தத்துவங்களும் மறுபக்கம் வரலாறும் நிலைகொள்கிறது. நமது சிறுவயதில் காகத்தின் கதை படித்திருப்போம் அல்லவா? அதாவது காகம் குடத்தில் கற்களைப் போட தண்ணீர் மேலே வரும். தாகத்திலுள்ள காகம் அதனை அருந்திச் செல்லும். அந்தக் கதை படிக்கும் போது கற்கள் எப்போது நிறையும் என்ற தவிப்பு அப்பராயத்தில் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். காகம் நீரைக் குடிக்க எத்தனை நேரம் ஆகியிருக்கும். ஒருமணி நேரம் வருமா?.  மனச்சுனையில் உள்ள கற்களும் இந்தக் காகத்தின் கதைதான். அந்தக் கற்கள் வெறும் கற்கள் அல்ல. வரலாற்றையும், தத்துவத்தையும் தோண்டி உருட்டுவது.

"சீப்பு வாங்கும் செலவு மிச்சம்" என்பது மேற்சொன்ன விடயங்களில் ஆழ்ந்தவனுக்கு நேரம் எப்படிச் செலவாகும். ஆய்வுகளிலும், கற்றலிலும்,  தேடலிலும் தான் அல்லவா?.  இந்தக் கவிதை மட்டுமல்ல தேவதச்சனின் அநேக கவிதைகள் பல நூறு உள்ளாந்த தத்துவப் பிளவுகள் கொண்டவை. அழகான ரசனை மிக்கவை. பிரமிப்பால் எம்மை திக்கூட்டுவன. தேவதச்சன் நம் காலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் அழகியல் தத்துவக் கவிஞர். அவரது கவிதைகள் அனைவருக்கும் புரியாத பொக்கிஷம். தேவதச்சனின் கவிதைகளைப் புரிந்தது போலப் பாசாங்கு செய்பவர்களை இணைய யுகத்தில் நான் காண்கிறேன். அந்தப் பாசாங்கு அவர்களுக்குள் உலாவரும் கொஞ்ச இலக்கியத்தையும் கொல்லும் விசச்சுனை எனவும் கூறலாம். 

Comments

Popular Posts