கே.ஜே.ஜேசுதாஸ் எனக்கு மட்டுமா கான கந்தர்வன்?


ஒன்பதாம் தரம் கற்றுக்கொண்டிருந்த போது காந்தார பஞ்சமத்தில் உள்ள சொற்றுணை வேதியன் பாடலைப் பாடுமாறு எனக்கு என்னுடைய சங்கீத ஆசிரியை ஒரு கட்டளை போட்டார். உண்மையில் எனக்குப் பாடல்களை ராகம் சேர்த்துப் பாடுவது என்பது சுத்தமாக வாராத ஒன்றுதான். எத்தனை தடவை முயன்றாலும் தொடையில் உள்ளங்கையை வலமும் புறமும் தட்டிப் பாடுவது என்பது என் இயல்புக்கு மீறிய வெளிப்பாடுதான். என்னால் அந்நேரத்தில் அந்தப் பாடலைப் பாடியிருக்க முடியவில்லை. அத்துடன் என்னுடன் சேர்த்து ஒன்பது நண்பர்கள் இருந்தார்கள் அவர்களில் ஏழுபேர் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள். ஒருவர் மட்டும் அந்த ராகத்தில் சரியாகப் பாடிவிட்டார் என்று நினைக்கிறேன். ஆசிரியர் அவனை மாத்திரம் சங்கீத வகுப்பில் இருக்குமாறு கூறிவிட்டு என்னையும் ஏனைய நண்பர்களையும் ஆசிரியர் வேறு பாடத்தைத் தெரிவு செய்து கற்குமாறு அனுப்பிவிட்டார். உண்மையில் மரபார்ந்த சங்கீதத்தின் அடிப்படையை  என்னால் அப்போது கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கவலை அவ்வப்போது இருந்து வந்தது. ஆனால் அந்த மரபார்ந்த சங்கீதத்தைக் கற்றவர்களால் தற்போதைய நவீன இசையில் லயிக்க முடியவில்லை என்ற விடயத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதாவது ஆகமக் கோயிலுக்குள் சுடலைமாடனின் பலிக்கு இடம் இல்லாதது போல. இதற்கு உதாரணமே என்னுடைய ஒன்பதாம் வகுப்பில் அந்த தேவாரத்தைப் பாடி ஆசிரியையிடம் பாராட்டு வாங்கிய மாணவர்தான். அவரை அண்மையில் கண்டபோது யேசுதாஸ் பாடல்கள் ரேடியோவில் போய்க்கொண்டிருந்தது. அதைப்பற்றி ரேடியோவில் ரசனை விளக்கம் போனது. அப்போது அவர்கூறியது சங்கீதம் ஒரு விசர்க்கூத்து என்பதுதான். மரபார்ந்த கட்டாயத்தன்மை எந்த அளவுக்கு ஒருவனை மன அளவிலும் இரசனைமுறையிலும்  இம்சைப்படுத்தும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.


யேசுதாஸ் நான் உயர்தரம் கற்கும் காலங்களில் ஒரு ஆதர்சக் குரலோன். அப்போது இணையம் தனது வரவைப் பதிவு செய்திருந்த போதும் பெருமளவில் எமது கைகளில் சேர்ந்திருக்கவில்லை. கேட்டால் ரேடியோவில் அல்லது பஸ்களில். அதுவும் இரண்டுமே அற்ப சந்தோசம் போல நிமிடங்களில் தொனி மாறிவிடும். முதல்காதலில் இருக்கும் முரட்டு நம்பிக்கைகள், முழுமையான குழப்பங்கள் போல யேசுதாஸ் குரலை அடையாளம் காண்பதில் எனக்கு பெரும் குழப்பங்கள் இருந்தன. ஒன்று பி.ஜெயச்சந்திரன், அருண்மொழி, உன்னிமேனன், மதுபாலகிருஷ்ணன், ஜி.வேணுகோபால் முதலானவர்களின் குரலுக்கும் யேசுதாஸின் குரலுக்கும் பெரும் தொடர்பு இருந்தது. இது ஆனால் அந்த குரலுக்கான ஆத்மபந்தம் யேசுதாஸிடம் மட்டுமே இருந்தது. கொஞ்சம் பி.ஜெயசந்திரனும் அதற்குத் தகுதியானவர்தான். "பொன் மானே கோபம் ஏனோ" என்ற உன்னி மேனன் பாடிய முதல் தமிழ்ப்பாடல் யேசுதாஸின் குரலை ஞாபகப்படுத்தக்கூடியது. "யேசுதாஸின் கஸ்தூரி மானே கல்யாண தேனே" பாடலைக் கேட்டால் இது புரியும்.

சிலப்பதிகாரத்தை நமது தமிழ் ஆய்வாளர்கள் இசைத்தமிழ்க்களஞ்சியம் என்று சொல்வார்கள். தற்போது ஆலாபனை என்று கூறப்படும் மரபார்ந்த சங்கீதம் அல்லாத ஆலாபித்து எழுப்பும் ஓசைகளைப் பற்றி ஆளத்தி என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. "நீளத்தால் ஏழும் நிதானத்தால் நின்றியங்க ஆளத்தி யாம் என்றறி" என்பது அந்த வரி. அதாவது ஸ, ரி, க என்ற முனகல் அற்ற விதம். இதனை நீங்கள் யேசுதாஸின் பல பாடல்களில் காணலாம். "பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்" என்ற பாடலின் தொடக்கத்தை ரசித்து இருக்கிறீர்களா?. "ஹே...ஹே... ஓ...ஓ... லாலலா...." என்று இரண்டு தடவைகள் பாடுவார். அத்துடன் அந்த ஓகார ஆலாபனையுடன் இசை சங்கமமாகும். இந்தப்பாடல் சற்றுத் துள்ளலான கோணத்தில் போனாலும் நமக்கு பெரும் வெளியை உண்டாக்கித் தரும். நான் பொதுவாக இசையை ரசிக்கும்போது முற்றிலும் காட்சிகளைத் தவிர்த்து விடுவேன். அது இசையை ரசிக்கப் பெரும் தடையாகவே இருக்கும். இந்தப் பாடலில் நான்தான் அதன் ராகம் தாளமும் என்று ஒரு வரி வரும். இசையில் திளைப்பவன், இசையைப் படைப்பவன் உண்டாக்கும் படைப்புஞானம் அது.

00

யேசுதாஸின் தமிழ்ப் பாடலில் இன்றுவரை என்னால் தவிர்க்க முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்களில்  கல்யாண தேன்நிலா, ராஜ ராஜ சோழன் நான், பூவே செம்பூவே, கண்ணே கலைமானே ஆகியவை முதன்மையானவை. அத்துடன் மலையாளத்தில் ஒரு பாடல் உண்டு. ராவின் நிலாக்காயல் என்று. கல்யாணத் தேன்நிலாவில் கைமணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். மிகச் சாதாரணமாகப் பாடிக்கொண்டே போவார். ஒரு கட்டத்தில் நீதானே வான்நிலா என்று சொல்லும்போது இசை கேட்டலின் நயம் நம்மை உறைய வைக்கும். தியானத்தில் உள்ள ஒருவனுக்கு இந்தப் பாடலைக் கேட்கத்தூண்டினால் தியானம் மேலும் நீட்சியாகும் என்பது என் அபிப்பிராயம். ராஜ ராஜ சோழன் என்பவன் தமிழரின் பெருமைக்குரிய அடையாளம். அவனைக் காதல் சின்னமாக பாடலில் உருவகப்படுத்த வேண்டும். அதனைப் பாட யேசுதாஸைவிட வேறு யாருக்கு வாய்க்கும். இதுவே ராஜ ராஜன் பெருமை பாட என்றால் எஸ்.பி.பி தான் தேர்வு. பாடலைத் தொடங்கும்போதே ஒரு கலவரமற்ற கலாபம் பாடல் மீது தொற்றிக்கொள்கிறது. இன்றும் கூட இந்தப் பாடலைப் பாடும் பலர் தம்மை சோழனாகவே பாவித்துப் பாடுவர். அதுவும் காதல் சோழனாக. அரசனை தனது ஆத்மார்த்தமான குரல்களால் காதல்சின்னம் ஆக்கிவிடுகிறார் யேசுதாஸ். அவரது குரலேறும் வரையுக்கும் தான் அந்தப் பாடு பொருள்கள் தமது நிலையில் இருக்கின்றன. யேசுதாஸ் ஒரு நதிபோல எனக்குத் தெரிவார் தனது மென்மையியைந்த குரலால் சங்கமிக்கும் தருணங்களில்.

00

1978 ஆம் ஆண்டு கவிஞர் சுகுமாரன் யேசுதாஸ் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அதுபற்றித் தெளிபடுத்தியுள்ளேன். இது யேசுதாஸ் பற்றிக் கவிஞரின் அபிப்பிராயம்.

சுகுமாரனின் இசைதரும் படிமங்கள்

00

யேசுதாஸ் பாடிய என் தந்தையின் காலத்துப் பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்". அதுபோல என் தாத்தனாரின் காலத்துப்பாடல்தான் "அதிசய ராகம் ஆனந்த ராகம்" இவை இரண்டும் எனக்குள் இப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். மோட்டார் சைக்கிளில் ஒருமுறை அடம்பன் வழியாக வெள்ளாங்குளம் செல்லும்போது அதிசயராகம் பாடலை நான்கு ஐந்து தடவைகளுக்கு மேல் பாடியிருப்பேன். காந்தார பஞ்சமத்தில் பாடல் பாட முடியாமல் சங்கீத வகுப்பில் இருந்து துரத்தப்பட்ட வேட்கைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்த வெளியேறல் எனக்குள் சங்கீதம் பற்றிய பெரும் ரசனை நயங்களைக் காட்டித்தந்துள்ளது. சில புறக்கணிப்புகள் எங்களை வலுப்படுத்தும். கலையைக் கற்றுத்தரும் நபர்தான் புறக்கணித்தாரே ஒழிய அந்தக் கலை தன்னைப் புணரச்சொல்லியும் அதற்கான விதவிதமான யுக்திகளையும் எனக்கு அள்ளித் தருகிறது.

அமிர்தவர்ஷினி ராகம் பற்றி எனக்கு ஒரு நண்பர் சொன்னார். இந்தராகத்தில் பாடினால் வருணன் இரங்கி மழையைத் தருவார் என்று. அதாவது மழைக்குரிய ராகம் என்று சொல்வார்கள். பொதுவாகக் காதலில் உண்டாகும் கூடல் கூட ஒரு இடைவிடாத மழைதான். இந்த ராகத்தில் யேசுதாஸ் ஒரு பாடல் பாடியுள்ளார். தூங்காத விழிகள் ரெண்டு என்ற பாடல் அது. "மாமர இலைமேலே மார்கழிப் பனிபோல" என கரடுமுரடு இல்லாமல் ஒரு வரிவரும். அதனை இரண்டு தடவைகள் பாடியிருப்பார். கூர்ந்து கேட்டால் அந்த இரண்டுக்கும் இடையில் குரல் தழுவல் இருப்பதை நீங்கள் அறியலாம். பெயல்கால்மழை நீர் எப்படிப்பொழியும். தன் காலை ஊன்றியல்லவா. அதுதான் இந்த ராகத்தில் யேசுதாஸ் தந்த கூதலின்பம்.

யேசுதாஸ் பாடிய மிகநல்ல பாடல்களில் ஒன்று "சொர்க்கத்தின் வாசற்படி". இந்தப் பாடலைக் கேட்கும்போதே ஒரு வரி உங்களை வருடும் 'மோகத்தில் நான்படிக்கும் மாணிக்க வாசகமே' என்று. மிகச்சிறந்த குரல் வெளிப்பாடு என்றே இதை நான் கருதுகிறேன். உத்தரகோசமங்கை பற்றி நீத்தல் விண்ணப்பம் படிக்கும் மாணிக்கவாசகரின் உணர்வு எத்தகையது. இந்தக் காதற் பாடலில் யேசுதாஸ் வரையும் சித்திரம் எத்தகையது. ஒரு தாலாட்டின் நெடி தெரியும் அல்லவா?. அதுதான் அவரைக் கான கந்தர்வன் ஆக்கியது.
அவரது ஆயிரக்கணக்கான  பாடல்களுடன் நமது தரிசனங்கள் நின்று உரையாடும். இசையமைப்பாளர் தமது மேதாபிமானத்தை  வெளிப்படுத்தும்போது யேசுதாஸ் போன்றவர்கள் தமது ரசனையின் தரத்தை அதற்குள் இருந்து நமக்கு அளித்துக்கொண்டு இருந்தனர். இன்றும் ஒலிகளற்ற பாடலில்கூட (Instrumental) அவரது ஆலாபனை கேட்கிறதோ என்ற வியப்பை உங்களுக்கு அளிக்கிறதல்லவா?. அதுதான் அவர் எனக்கு மட்டுமேயான கானகந்தர்வன் அல்ல என்பதற்கான குறியீடு.   கறுப்புச் சாயம் பூசப்பட்ட தாடி, குழந்தமைச் சிரிப்பு, சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடும்போது வருகின்ற சாஸ்திரிய மேதாவித்தனம் யாவையும் எனது பிரியத்துக்குரியவை. அவை நின்று ஜீவிதம் காணட்டும். 

00

யேசுதாஸின் சில பாடல்கள் கீழே உள்ளது.


தென்றல் வந்து என்னைத் தொடும்

ராஜ ராஜ சோழன் நான்

கல்யாண தேன்நிலா

தூங்காத விழிகள் ரெண்டு

பூவே செம்பூவே

சொர்க்கத்தின் வாசற்படி

என் இனிய பொன் நிலாவே

Comments

Popular Posts