ஆழி!!!
நீங்கள் நீலக் கடலின், ஈரமான கரையில், மிருதுவான பாதம் வரண்ட மணலில் குத்த நின்றிருந்தீர்கள் என்றால், உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் பேரலை உங்கள் காதல் ஞாபகங்களை உள்ளங்கையின் பின்புறத்தில் உப்புத் தெளித்து நினைவுகளாகக் கிளறிவிட்டுச் செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா. உப்பு மட்டுமல்ல அது சார்ந்திருக்கும் கடலும் உணர்வை ஊட்டக்கூடியதுதான். மஹாத்மா காந்தி உப்புச்சத்தியாகிரகத்தில் இறங்கி மக்களின் உணர்வுகளை தீண்டி அவர்களையும் போராட்டத்தில் இறக்கிவிட்டார் அல்லவா. உப்பு உணர்வுகளைக் கிளறும் என்றால், கடல் ஞாபகங்களை நினைக்க வைத்துவிடும். ஒரு ஆரத்தழுவிய மகிழ்ச்சியையும், கோரமான மனக்கவலையையும் நமக்களிக்கும். அலை உங்கள் பாதங்களை எட்டும் தொலைவில் நின்றுபார்க்கும்போது கடல் நம்மை அழைப்பது போல தோன்றும். இந்தப் பிரபஞ்சம் மிகப்பெரியது என்றும் நமக்குணர்த்தும். மிக அழகான கடலை நான் பல்வேறு திசைகளில் இருந்து காண்பதுண்டு.
இங்கிருந்து மேற்குத் திசையிலுள்ள தாழ்வுப்பாடு சென்றால் அங்கு கடல் தெற்காக இருக்கும். அப்படியே கிழக்குத் திசையிலுள்ள திருமலை சென்றால் அங்கோ கடல் வடக்காக இருக்கும். நான்கு திசைகளிலும் நான் கடலைப் பார்த்துள்ளேன். கடல் என்பது நிம்மதிக்கான பேரிரைச்சல். அதன் அலைகள் தூய்மையான அமிழ்தம் ஏந்தி நம்மை அணைத்துவிடுகிறது. நாம் கடலை நேசிக்கும்மட்டும் அலை நம்மை அணைத்தபடிதானிருக்கும். இந்த சுத்தமான பைத்தியக்காரத்தனங்களில் லயித்திருப்பது என்றென்றும் தொடரும் ஒன்றுதான்.
(Mannar )
கடல் பற்றிச் சுகுமாரன் எழுதிய கவிதை ஒன்று உள்ளது. கடல் நீரின் முழுமையாக இருப்பதனால்
கடலைப் பற்றிய வர்ணனைகள் எவையும் முழுமையற்றது என்கிறார். கூடவே மானிடனாகப் பிறத்தலின் மேன்மையைக் கூற மனிதனில்லாத சமுத்திரம் முழுமையற்ற தண்ணீர் என்றும் குறிப்பிடுகிறார்.
"கடலைப் பற்றிய எந்த வர்ணனையும் முழுமையானது அல்ல.
ஏனெனில் கடல் நீரின் முழுமை.
சுயம் மறந்த புணர்ச்சி பற்றிச்
சொல்ல முடியாதது போலவே கடலைப் பற்றியும் பேச முடிவதில்லை.
உப்புச் சாரத்துடன் எப்போதாவதுதான் வார்த்தைக்குள் வந்து புரள்கிறது கடல்.
கடல் பற்றிப் பேசும்போது
கடல் சார்ந்தும் பேசுகிறோம்.
கடலின் பச்சோந்தி நிறங்கள்
அதன் தொலைவெளி நெருக்கம்
கட்டுமரங்களைக் கிளுகிளுக்க வைக்கும்.
அதன் நகைச்சுவை உணர்வு
அலைகளின் ஓயாத ஆலாபனை
பௌர்ணமிக் கோபங்கள்
அதன் திரவ கர்ப்பத்துக்குள் உயிர்க்கும் ஜீவன்கள்
கவிச்சை பரவிய அதிகாலைகள்
அதன் நீர்மையைச் சிறைப்பிடிக்க
விரிந்து ஏமாறும் வலைகள்
குப்பத்துப் பெண்ணின் இயல்பான சிறுநீர்க்கழிப்பு
துளிக்கடலைச் சேமித்து கரையில் மல்லாந்த சிப்பிகள்
கடலின் செய்தியை மணலில் எழுதும் நண்டுகள்
நுரையைக் கோதும் கடற்காக்கைகள் என்று
கடல்சார்ந்த வார்த்தைகள் ஏராளம்.
நீர் வானத்தில்
நிமிர்கிற சூரியனைப் பார்க்கப் போனேன்.
ஆளற்ற கடற்கரையில்
ஆரஞ்சு விடியல்.
காற்று பெருக்கிய மணற்கரை
நுரை சுருளும் அலை விளிம்பு
இரண்டுக்கும் இடையில்
அழியாமல் இருந்தன எவருடையதோ காலடிகள்
மனிதரில்லாத சமுத்திரம்
முழுமையற்ற தண்ணீர்"
-சுகுமாரன். 1997.
எவ்வளவு அழகான கவிதை. கடலைப்பற்றிய தன்னுணர்வும் அனுபவ நினைவுகளும் இல்லாமல் இப்படி எழுதமுடியுமா. சுயம் மறந்த புணர்ச்சி பற்றி யாராவது பேசுவதுண்டா. அப்படியான பரவசத்தை அளிப்பதுதான் கடல். அதனை வார்த்தைகளில் கூறமுடியாது.
(Trinco Clicks)
/கவிச்சை பரவிய அதிகாலைகள்
அதன் நீர்மையைச் சிறைப்பிடிக்க
விரிந்து ஏமாறும் வலைகள்/ இதன் படிமம் எத்தகையது. கடலின் வாடை என்பதே அதன் மீன் மணம்தான். அதன் திரவத்தன்மையை வலைகள் பிடிக்க முயல்கின்றனவாம். வழக்கமான கவிதைகள் மீனையும் வலையையும் தான் பிரதானப்படுத்திக் கூறும். வலையில் மீன் சிக்கியது வாசகனின் கவிதானுபவம் தீர்ந்தது. அவ்வளவுதான். இந்தக்கவிதை அதனின் நின்று மாறுபட்டது. வாசிப்பவனைக் கடலின் மீது கேள்விகள் கேட்கக் கூடியது.
கடல் ஆசுவாசம் அளிக்கக்கூடியது. ஆத்மார்த்தமான ஞாபகங்களை நினைவுகளுடன் உரையாட விடக்கூடியது. கடல் தீராத ஒரு பயணத்தை பூமியின் மீது நிகழ்த்துகிறது. நாம் கடலின் விளிம்பில் நின்று கடலின் ஒட்டுமொத்த ஆலாபனைகளையும் பாடுகின்றோம்.
மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete