பூர்வ வன்னியின் சுவடுகள்: ஒரு பயணம்.
மலையின் வாசல் |
வன்னிப் பகுதிக்குள் சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள ஒரு நூலின் அடிக்குறிப்புகள் எனக்கு அதிகம் உதவுகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை அவர்களது ஆளுகைக்குள் இருந்தபோது நிர்வாகத்தை இலகுபடுத்த மாகாண ஆளுநர்களை நியமித்தனர். அவர்களுக்குக் கீழ் அரசாங்க அதிபர் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டது. 1889 ஆம் ஆண்டு ஜே.பி.லூயிஸ் அவர்கள் வன்னியில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது ஆர்வம் காரணமாக "Manual Of Vanni Districts" என்ற நூல் 1895 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இதன் தமிழாக்கம் தற்போது கிடைக்கின்றது. இந்த நூலை மூலமாகக் கொண்டு பல படைப்பாளிகள் தமது படைப்புக்களில் இதில் தரப்பட்ட தரவுகளை உட்சேர்த்துள்ளனர். குறிப்பாக ஷோபா சக்தி தனது Box கதைகளில் சேர்த்த வன்னியிலுள்ள மர வகைகள் இந்த நூலில் இருந்து பெறப்பட்டவையாகும்.
"வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு" என்ற நூல் நமது வரலாற்று நிலம் பற்றி எழுதப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம் என்றே கூறவேண்டும். யாழ்ப்பாண வைபவ மாலை உள்ளிட்ட நூல்களில் வன்னி பற்றிய குறிப்புகள் உண்டே ஒழிய தனியான ஆய்வுகள் இடம்பெறவில்லை. ஆனால் இந்நூல் வன்னியின் புவியியல், சமூகம், விவசாயம் பற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட குறிப்புகளை விளக்கமாக அளித்துள்ளது.
நமது பிறப்புச் சான்றிதழில் பிறந்த இடம், மாவட்டம், பிரிவு என்பன மேற்கோட்டில் கேட்கப்படும் அதில் பிரிவு என இன்றும் வகைப்படுத்தப்படுவது ஆங்கிலேயர் ஆரம்பத்தில் வகுத்திருந்த பத்து பற்றுக்களையேயாகும்.
1. கிழக்கு மூலை வடக்கு.
2. கிழக்கு மூலை தெற்கு.
3. நடுச்செட்டிகுளம்.
4. சின்னச் செட்டிகுளம் கிழக்கு.
5. சின்னச் செட்டிகுளம் மேற்கு.
6. மேற்குமூலை.
7. பனங்காமம்.
8. உடையாவூர்.
9. மேல்பற்று தெற்கு.
10. மேல்பற்று கிழக்கு.
வன்னி என்பது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய
மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப்பரப்பு.
இவற்றை முழுமையாகக் காணவேண்டும் என்ற தீராத ஆசை எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. மாரிகாலத்தில் இவ்விடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த பின்பும்கூட வசந்தகாலத்தில் கொன்றை பூக்கும் காலத்தில் ஒரு பயணம் செல்லவேண்டும் என்ற பேராசை வந்தடைந்துவிடும். இந்தக் கொன்றை மலர் எனக்கு எப்போதும் பிரியத்துக்குரியவை.
வன்னி வெப்ப வலயத்துக்கு உட்பட்ட நிலம். ஒரு பெண் நிறத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அவள் காட்டுத்தேன் போன்ற நிறம் பொதிந்திருக்க வேண்டும் என்று கூறிவிடுவேன். இங்குள்ள பூக்கும் கொன்றையைப் பார்த்து நான் பிரமிப்பதுண்டு. இவை எனக்குள் ஒரு பிம்பத்தைச் சாற்றியுள்ளன. அது காட்டுத்தேன் போலவும் இருக்கலாம் அல்லது கொன்றை என்றால் இதுதான் என்ற அடையாளமாகவும் இருக்கலாம்.
கபிலர் "தூங்கிணர் கொன்றை" என்று இதைக் கூறுவார். இந்த வசந்தகாலத்தில் கொன்றைப்பூக்கள் கீழ்நோக்கித் தொங்கி வாசத்தையும் மலர்ச்சியையும் பிரசவிக்கும்.
அண்மையில் ஒரு நீண்ட பயணத்தை வன்னியின் மத்திய காட்டுப் பகுதியில் மேற்கொண்டிருந்தேன். அங்குள்ள முல்லை நிலத்தின் நடுக்காட்டில் பெரும் மலை ஒன்று உள்ளதாகவும் அங்கு செல்வது இலகுவல்ல என்ற கதைகள் ஊராரிடம் பரவியிருந்தது. இங்கு மாலையானால் கரடி, யானை, சிறுத்தை முதலியவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பதனால் காலையில் சென்று மாலைக்கு முன்பு திரும்பவேண்டிய கட்டாயம் எனது உயிருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிள் ஒற்றையடிப்பாதை வரைக்கும் செல்லும் என்றாலும் அங்கிருந்து கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரம் பாதைகளற்ற காட்டில் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை பெரும் ஆலமரம் ஒன்றின் கீழ் நிறுத்திவிட்டு அந்தப் பெருங்காட்டின் ஊடாக மலையைத்தேடி நடக்கத் தொடங்கினேன்.
மிகச்செழித்த புற்கள் தரையில் கிடந்து காலை வருடியது. இங்கு நாகத்தின் வரவு அதிகம் இருந்தது. அவை தமது செட்டையைக் கழற்றி வைத்து விட்டு மேய்ச்சலுக்குச் சென்றிருக்க வேண்டும். அல்லது இணைதேடி அலைந்திருக்க வேண்டும். ஜெயமோகனின் காமரூபிணி என்ற கதை எனக்கு ஞாபகம் வந்தது. அதனை நினைக்குந்தோறும் காட்டில் பயணிப்பது அச்சத்தை உண்டாக்கிவிடும். நாகம் பற்றிய அந்தச் சித்திரம் மிக அற்புதமான ஒன்று என்றே நினைக்கின்றேன். படுக்கும்போது சிறு தவளைக்குட்டி உடம்பில் பாய்ந்தால்கூட நாகம் என்ற பயம் வந்தெழும்பி விடுவதுண்டு.
""நாகம் எப்போதும் தாழைமரப் படர்ப்புக்குள்தான் முட்டையிடும் என்பார்கள். அங்குதான் எப்போதும் ஈரமுலராத சதுப்பும் தாழைமடல்சருகு குவிந்த செத்தைகளின் மெதுப்பும் இருக்கும்.சின்னஞ்சிறு சோழிமுத்துக்கள் போன்ற முட்டைகள் விரியும்போது உளுந்துப்பப்படத்தை தேங்காயெண்ணையில் பொரிக்கும் வாசனை வரும். விரியன் என்றால் வசூரி முத்துக்கள் உடைந்து சீழ் வரும் வாசனை. கருக்குழந்தையின் கைவிரல்கள் போன்ற நாகக்குஞ்சுகள் துடித்து நெளிந்து சதுப்புச்செத்தைகளுக்குள் ஒளிந்துகொள்ளும். அங்கே பெருகிவளரும் புழுக்களையும் மின்மினிகளையும் உண்டு வளரும். வளரும் அவசரத்தில் அவை உறங்குவதேயில்லை. இரண்டுவாரங்களில் அவை நீண்டு தடித்து பெரிய சர்ப்பங்களாக ஆகித் தங்கள் பாதைகளை தாங்களே கண்டுகொள்கின்றன. பசியே நாக்காகி நெளிவதுபோன்ற சர்ப்பக்குஞ்சுகளுக்கு எப்போதும் கோபம். தீண்டுமெதையும் அக்கணமே அவை கொத்தும். கொத்தப்பட்ட உயிருக்குப் பின்னர் நேரமில்லை. யாரும் மிதித்து அரைத்துவிடக்கூடிய புழுக்களானதனால்தான் இந்த விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது போலும். பாக்டீரியாக்களுக்கு இன்னும் விஷம். வைரஸுக்கு மேலும் பலமடங்கு விஷம்""
அங்கிருந்த அநேகமான மரங்கள் வீரை மரங்கள்தான். அழகு குறைந்த இந்த மரங்களை விறகுக்கு மட்டுமே இங்குள்ளவர்கள் பாவிப்பதுண்டு. இந்தக் காட்டினால் கடக்கும் போது இங்கிருந்த பாலையும் முதிரையும் வியாபாரிகளால் அறுத்து விற்கப்பட்டு இருந்தது. அதன் அடிமரம் மட்டும் சுவடுகளாக எஞ்சி இருந்தது. காடு சோர்வினை அளிக்கும்போது மனிதன் அங்கு அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட கதிரை போலானது அந்த அடிமரம். அங்கிருந்து கொணர்ந்த நீரை அருந்திவிட்டு இன்னும் சில மைல்கள் நடந்து சென்றேன்.
ஒரு மலையில் மரங்கள் முளைத்து நின்றன. அதைச்சூழ செங்கற்களால் கட்டப்பட்ட அரண்போல வடிவம் இருந்தது. அந்தச் செங்கற்களுக்கு உள்ளாக பெருங்கிளுவை மரங்கள் முளைத்து நின்றன. எப்படியும் நூறு ஆண்டுகள் தாண்டிய மரங்கள் என்றே கூறமுடியும். இந்தக் கிளுவையை வடபகுதி மக்கள் வேலிக்கு நெருக்கமாகக் கட்டி வைத்திருப்பர். இது ஒரு சிற்றரசன் வாழ்ந்த இடமாகவே இருக்கவேண்டும். சந்திரவட்டக்கல், கல்லால் ஆன அரியாசனம் என்பன இருந்தன. அத்துடன் நீர் தேங்கி நிற்கக் கூடிய வகையில் மலையின் சில பகுதிகளில் சிறுகுட்டை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் குளியலுக்கு ஏற்ற சிறு குட்டையும் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைநிலத்தில் விளையும் தானியங்களின் உறையினை நீக்க பாறைகளில் தானியங்களைப் போட்டு மர உலக்கையால் குற்றுவார்களாம். பாறைகள் நிறைந்த கிராமப்பகுதிகளில் பாறைக்குழிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். உதாரணமாக வெடுக்குநாறிமலையைக் கூறலாம். "வட்ட வட்டப் பாறையிலே வரகரிசி தீட்டையிலே" என்று இதனையே நாட்டார் பாடல்கள் விதந்து கூறுகின்றன. இந்தச் சுவடுகளை இந்த மலையின் கீழ்ப்பாகத்தில் நீங்கள் காணமுடியும். மேலும் கருங்கல்லால் பதிக்கப்பட்ட பண்டைய மடப்பள்ளிகள் போன்ற இடமும் இங்குள்ளது. இது சிற்றரசரின் கூடாரமாக இருந்து பிற்காலங்களில் புதையல் தோண்டுபவர்களால் பலிகொடுக்கப் பாவிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தையும ஊட்டுகிறது.
இங்கு சென்ற அனுபவம் எனக்குள் அச்சத்தையும் ஒருவித பரவசத்தையும் ஏற்படுத்தியது. உயிர் இங்கிருந்து வீடுசெல்லவும், மனம் இங்குள்ள குகையில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்ற விந்தையையும் எனக்குள் நிகழ்த்தியது. இது யாருமற்ற காடு. மூதாதையர்கள் இங்கு புணர்ந்த இடம். அவர்களின் மூச்சு காடு முழுமைக்கும் வியாபித்துள்ளது. அந்தச் சரித்திரம் மீதுதான் நான் நிற்கிறேன். பெயல்கால் மழை பெய்யென்று பெய்யும்போது வான்மிருகங்கள் தலைகோதும் குகை இது. அதனை நான் உற்சாகமாகக் கொண்டாடவேண்டும். கபிலரின் சங்கப்பாடல் ஒன்று உள்ளது. நான் இதனை ஒவ்வொரு மழையின் போதும் அல்லது புதிய நிலம் சேரும்போதும் நினைத்துக் கொள்வேன்.
"பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ? ஓங்கல் வெற்ப.
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே"
மழையின் கால்கள் மறைத்து மண் தெரியாமல் ஆகிவிட்டு இருந்தது என்றும், சூரியன் மறைந்தால் இவ்வூர் வெளியில் தெரியாது எனவும் பாடி அப்படியான ஊருக்கு எப்படி வந்தீர் என்று தலைவி தலைவனின் வரவைக் கண்டு வியப்பாள். இந்த மலையில் நின்றுகொண்டு கபிலன் எப்படி மழையைப் பெயல்கால் என்று கூறி மழையின் மொத்த முத்தங்களையும் தனக்குள் அள்ளிக் கொண்டான் என்றெண்ணினேன். அத்துடன் ஆயிரம் கால்கொண்டு பொழியும் மழை அந்த நிலத்தை மறைத்ததாம். எவ்வளவு உயரிய கற்பனை. அவன் நான் நிற்கும் மலையின் விளிம்பில் நின்று பாடியுள்ளான். இந்தக்காடும் மலையும் எனக்குத் தலைவி என்றால் நான் தலைவன்தானே. இந்தக்காட்டுக்கு எப்படி வந்தேன் என்று இம்மரங்கள் என்னிடம் கேட்கும் வரையும் நான் கபிலனை வியப்பேன்.
00
( இந்த இடத்துக்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். முதல் தடவை செல்லும்போது எழுதிய குறிப்பு இது.
1889 ஆம் ஆண்டில் வன்னியில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஜே.பி.லூயிஸ் என்பவர் குறிப்பேடுகளாக எழுதிய வரலாற்றுக்குறிப்புக்கள் வன்னிப் பிரதேசத்தின் தொன்மம் பற்றிய ஆராய்ச்சிக்குப் பேருதவியாக இருப்பதுடன், வன்னியின் மக்கள், சாதி, மதம், தொழில்கள் என்று அனைத்தையும் வரையறுத்து "Manual Of the Vanni Districts" என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்நூலின் குறிப்புக்களில் மிக அரிதாகவே வன்னியின் தொன்மப் பகுதிகள் பற்றிய விடயங்கள் தவறவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு லூயிஸின் குறிப்புக்களில் தவறவிடப்பட்ட தொல்பொருள் பகுதிக்கு இன்று செல்ல நேர்ந்தது. கரடிகளும், சிறுத்தைகளும், யானைகளும், மரைகளும், மான்களும் தமது அடையாளத்தைக் காலடியாக மண்ணில் விட்டுச்சென்ற பெருங்காட்டின் அமைவிடம். மக்களின் வாழ்விடத்தில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள இப்பகுதியை முதலியார் கல்லு மலை என்றழைக்கின்றனர்.
பெரியபுளியங்குளம், மகாகச்சட்கோடி, எறுப்பொத்தானை ஆகிய பகுதிகளில் மலைப்பாறைகளை மையமாகக் கொண்டு உருவான சிற்றரசுகளும் அதன் மேலுள்ள பிராமி எழுத்துக்களும் பலநூற்றாண்டுகள் பழமை கொண்டவை என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. முதலியார்கல்லுமலையில் ஒரு சிற்றரசு இருந்தமைக்கான சான்றுகள் அதிகம் இருக்கின்றபோதும் பிராமி எழுத்துக்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. இதன் அமைவிடத்தையும், செங்கற்களையும் கருங்கற்களையும் கொண்டு கட்டப்பட்டுள்ள குகையினைக் காணும்போது இது ஒரு சிற்றரசனின் ஸ்தலமாகவே இருந்துள்ளது. கர்ணபரம்பரைக் கதைகளின் வாயிலாகவும், ஏனைய தரவுகள் ஊடாகவும் பார்க்கும்போது அறுநூறு ஆண்டுகளுக்குக் குறையாத பழமை வாய்ந்த ஒரு நிலமாகவே இதனைக் கணிக்கலாம்.
சந்திரவட்டக்கல், மடைப்பள்ளிகள், அரியாசனங்கள், முதுகிளுவைகள், பாறை அச்சுக்கள், பழைய செங்கற்கள், நாக அடையாளங்கள், பெருங்கள்ளிகள் என்று அனைத்தும் திறக்காத காட்டின் பிள்ளைகள் போல் சிதறிக்கிடக்கும் இந்நிலத்தின், இப் புராதனத்தின் கற்பினைச் சிதைக்காத வகையில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல கதவுகள் திறக்கக்கூடும்.
"மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே"
குறுந்தொகையில் மருதநிலத்துக்கு இப்படியொரு பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப்பாடலின் இயற்கை வர்ணனைகளை மீட்டும் இடமாகக் கூட இம்மலையைக் காணலாம். வரலாற்றை ரசனைக்கும் அதிக இடம் கொடுத்து விடுவதே அதனை இலகுவில் கற்றுக்கொள்ள வழிசெய்யும்)
Comments
Post a Comment