கொற்றன் இசைத்தது


பேரிலக்கியங்களைக் கற்றல் என்பது அனைவருக்கும் வாய்த்த ஒன்றன்று. அதனைக் கற்று ஆய்ந்தறிதல் என்பது அதனினும் அரிதெனலாம். பழந்தமிழ் இலக்கியங்களின் சொற்செழிப்புத்தான் அதனை எனக்குள் தொடர்ந்து தேடவைக்கிறது. உயர்தரம் கற்றுமுடித்த பின்பு பேரிலக்கியங்கள் புரியவில்லை என்றாலும் அதன் சொற்செறிவுக்காகத் திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. திருக்குறளில் இருந்த பல சொற்றொடர்கள் அவ்வளவுக்கு நயமானவை. "உருள்பெருந்தேர்" என்றொரு சொல்லை வள்ளுவர் பிரயோகித்திருப்பார். இந்தச் சொல் எவ்வளவு உயர்தரமான கற்பனையும் நுண்ணுணர்வும் கலந்து உதித்திருக்க வேண்டும்.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து"

அறிவுக்கும் கற்பனைக்கும் எவ்வளவு அணுக்கமான குறள். ஒரு சிறிய மைனாவின் எச்சத்தால் ஆலும், அரசும் உருவாகிறது. நம்மில் பலருக்கு அது ஒரு பறவையினம். அவ்வளவுதான். ஆனால் அதன் செயற்பாடுகள் பூமிக்கு பரிபூரணம் அளிப்பவை. பெரும் பிரம்மாண்டங்களை உண்டாக்குவன.  நல்ல இலக்கியங்களும் அப்படித்தான். படைப்பாளி பூமிக்கு நெருக்கமானவன். படைப்பாளி ஒரு பறவை போன்றவன். அவனை அச்சாணி என்றால் வாசகனின் மனதில் உண்டாகும் தேடல்களும் கற்பனைகளும் உருள்பெருந்தேர் எனலாம். அவனால் உண்டாக்கப்படும் பெருந்தேர்களும், பெருவிருட்சங்களும் காலத்தைத் தூக்கி நிறுத்தக்கூடியன. நமக்கு முன் நாம் வாசிக்காமல் வைத்திருக்கும் நம் பேரிலக்கியங்களும், செவ்வியல் பாடல்களும் அவ்வகையினவே!.

குறுந்தொகையில் கொற்றன் எழுதிய பாலைநிலத்துப் பிரிவாற்றாமை பற்றிய பாடலை அறிந்திருப்பீர்கள். அந்த செவ்வியல் பாடல் நான் நீண்டநாட்களுக்கு முன்பு கற்ற ஞாபகம் இன்று வந்தது. அந்த ஞாபகத்துக்குக் காரணம் காதலர்கள் பிரிந்திருத்தல் என்ற ஒற்றைக் நிமித்தமே. இந்த நாட்கள் மிகத்தனிமையான நாழிகையாலும், ஏகப்பட்ட நினைவுகளாலும் எழுதப்பட்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும்.

"விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம் கைந்நூல் யாவாம்.
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்.
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி.
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் தம் இன்று இமைப்புவரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே"

சினிமாப்பாடல்களிலோ கர்நாடக சங்கீத இசைப்பாடல்களிலோ பாடலின் வரி நமது செவிகளில் வந்தமர முன்பு அதற்குரிய முன்னிசையை ஆகச்சிறந்த இசையமைப்பாளர்கள் சிறப்பாகத் தந்துவிடுவார்கள் அல்லவா?. உதாரணமாக இளையராஜாவின் "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" என்ற பாடலின் தொடக்கம் கொண்டுவரும் மனித ஒலிகளற்ற ஆத்மவிலாசம்.

https://youtu.be/4x3o9jK6Mms

தமிழில் பலநூறு பாடல்கள் வந்தாலும் ஒருசில பாடல்களின் பூர்வீகம் மற்றும் இசைநுட்பம் என்பன இசையமைப்பாளர்களின் மேதாவிலாசத்தைப் பொறுத்தே அமையும். பக்தி இலக்கிய காலத்தில் கொணரப்பட்ட பண்சேர்க்கும் மரபு இன்று ஒரு நிறுவனமாக, தளமாக இயங்குகின்றது. பழந்தமிழ் பாடல்களின் பொருள் தொடங்க முன்பு துறை பற்றி வரையப்படும் கோடுகளும் அப்படியானதே.  கொற்றன் ஆரம்பத்தில் "விடர்முகை அடுக்கத்து விறல் கெழுசூலி" என்று பாலைநிலத்துக் கடவுளான கொற்றவையை விழித்து ஒரு நாட்டார் பாடல் போல பாடுகிறான். அதன் மொழி புனையப்பட்ட விதத்தைப் பாருங்கள். பாடலின் முழுப் பொருள் நம் மனதைக் குடையமுன்பு தொடக்க வரிகளிலுள்ள சந்தமும் மொழிவீச்சும் நம்மை வியக்கச்செய்கிறது. ஒருசில நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் சங்க இலக்கியங்களை வாய்மொழிப்பாடல்கள் என்றே குறிப்பிடுகின்றனர். இந்தப் பாடலின் தன்மை அப்படியான ஒன்றேயாகும்.

கொற்றவையின் வசிப்பிடம் குகை என்று கூறும் புலவர்,
கொற்றவைத் தெய்வத்தின் நம்பிக்கையாக வழங்கப்படும் பலி செலுத்தல், காப்புக்கட்டுதல், சகுனம் பார்த்தல், குறிகேட்டல்,  நினைத்து வணங்குதல் முதலிய நம்பிக்கைகளைக் குறிப்பிடுகிறார். பாடலின் தொடக்கம் சந்தங்களை முதன்மைப்படுத்த, அடுத்துவரும் வரிகள் பொருளை முதன்மைப்படுத்துகின்றது. கிட்டத்தட்ட ஒரு இசைப்பாடலின் வரிக்கு முந்தைய இசைத்துணுக்குப்போல. நாட்டார் பாடல்களில் வரிகள் தொடங்க முன்பு ஏகாரம் ஓகாரம் முதலிய ஓசைகள் எழும். அது ஒலியால் வனைவது. கொற்றன் வனைந்தது மொழியின் சொற்களால். அதனால்தான் சொல்லால் அமைந்த வீடு என்று மொழியைச் சொல்வார்கள்.

சங்க இலக்கியங்களைக் ரசனையின் துணைகொண்டு அனுபவத்தின் ஆற்றல் கொண்டு கையாளுதல் அப்பாடல்கள் பற்றிய கருத்தினையும் காட்சியையும் இன்னொரு இடத்துக்குக் கூட்டிச்செல்லும். 

Comments

Popular Posts