பயணக் குறிப்புகள்: திரியாய்.

திரியாய் மலை மேற்கு
பலசமயம் பயணத்தைவிடப் பயணத்தின் தொடக்கமே முக்கியமானது என்று சொல்வார்கள். அவ்வப்போது அலுப்புத்தட்டும்போது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவதுதான் எனது வாடிக்கையாக இருக்கும். அது எந்தத் திசை என்று எதுவுமே தீர்மானிப்பதில்லை. இங்கு யுத்தம் முடிந்த பிற்பாடு தீவின் எப்பகுதிக்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. தனிநாடு கோரியவர்களுக்கும், வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களுக்கும் (Asylum Seekers) அந்த யுத்த நிறைவு சித்தாந்த ரீதியிலும் சுயநலப் பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவுதான். என்றாலும் இலக்கியரீதியில் சுதந்திரமாகச் செயற்பட முனைவோருக்கும், அறிவு ஜீவிகளுக்கும், தீவின் நாலாபாகங்களுக்கும் உத்வேகப் பயணம் மேற்கொள்வோருக்கும், இதர தரப்பினருக்கும் இது ஒரு அப்பாற்பட்ட நிகழ்வுதான். உண்மையில் தமிழைத் தாங்க, தமிழின் படைப்பூக்கத்தை நிலைப்படுத்த ஆயுதத்தை ஏந்திய போராளிகள்தான் வேண்டும், அவர்களே காவலர்கள் என்ற  நிலைப்பாடு தமிழின் Creative Thinkers க்கு  அவமானகரமான ஒரு சிந்தனையாகும்.
திரியாய் சைலம்

இலங்கைக்குக் குறுக்காக ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது அமைதி நிலவும் காலங்களில் சாத்தியமான ஒன்றாகும். அதன் தரிசனமே வேறானது. ஒரு வெளியை நோக்கி நகர்கிறோம் என்ற உள்ளக்கிடக்கை எம்மை வழிநடாத்திக் கொண்டிருக்கும். அது மலைகளையும் காடுகளையும் சதிராடும் மேடுகளையும் எமக்குக் காட்டித்தரும். அந்த மந்திர நினைவுகளால் நாம் மூழ்கடிக்கப்பட்டோமா? ஏனைய கவனங்கள் சிதறி பயணத்தின் சுவடுகளில் நாம் நனைகிறோமா என்பதுதான் அந்த வெளி நமக்களிக்கும் தரிசனம். அப்படியான தரிசனம் தொடர்ந்து நம்மை நினைவில் நிறுத்தியிருக்கும்.




ஒருமுறை திருகோணமலையின் வடபகுதி எல்லையிலுள்ள திரியாய் பகுதிக்குச் சென்றிருந்தோம். வவுனியாவில் இருந்து அந்த இடம் கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர் தொலைவானது.
இலங்கையின் அநேக இடங்களுக்குச் சென்ற அனுபவம் உண்டு. எனினும் திருமலை என்பது "தொலைவிலிருக்கும் மிக அழகான கவிதை" என்றே நான் சொல்வேன்.  அந்தளவுக்கு வஞ்சகமின்றி இயற்கை தனது தழும்புகளைப் பதித்துள்ளது.  எத்தனை செயற்கை மருந்துகளால் பின்னப்பட்டும் அத்தழும்புகள் மறைந்துபோனதில்லை. அப்படி ஒரு அழகான தழும்புதான் திரியாய். "தெய்வத்தச்சனைப் புகழ்துமோ" என்று இலங்கை பற்றிய வர்ணனையில் கம்பர் வியப்பார். அப்படி ஒரு தீவுக்குள் அழகான இடம் இது.
சிங்கள-தமிழ் எல்லைப்புறக் கிராமம் ஆகையினால் இங்கு இனக்கலவரங்களால் பல பாதிப்புக்கள் நிகழ்ந்தேறியுள்ளது. அந்த வடுக்கள் காலத்தால் மறைந்து போகும் நிலையில் தற்போது உள்ளதுடன், அங்குள்ள பல இடங்களில் அரசினால் குடியேற்றங்களும் வீட்டுத்திட்டமும் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.



திரியாய் கிராமத்தின் அடிப்புறமாக ஒரு பௌத்த சைலம் ஒன்றுள்ளது. அந்த மலை கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ஞ படிகளால் ஆனது. அந்த மலையின் உயரம் எப்படியும் நானூறு அடிக்கு மேலிருக்கும். அதனைக் கால்கள் கடுக்க ஏறியதும் அங்குள்ள காட்சிகள் அற்புதமானவை. புத்தர் நான்கு திசைகளையும் நோக்கித் தனது தரிசனத்தைக் காட்டுகிறார். அப்படியே அந்தப் புத்தரைத் தாண்டிச்சென்று  கிழக்குத் திசையில் இருந்து அம்மலையினைத் தாண்டிய காடுகளையும் வானத்தையும் பார்க்கும் போது ஒருவித உள்ளுணர்வினால் மெய்யும் உயிரும் சிலிர்ப்புற்றனவோ என்று எண்ணத் தோன்றியது. அந்த மலையில் இருந்து பார்க்கும்போது பல பட்சிகள் தமது துணையுடன் ஏதோ ராகத்தைச் சுமந்தபடி சென்றன. அவை என்னைப் பார்த்திருக்குமா என்ற ஒரு சந்தேகம் எழவே திடீரென ஒரு வசனம் ஞாபகம் வந்தது. இந்த வசனத்தை இந்தியப் பறவையியலாளரும், பறவைகள் நிபுணருமான சலீம் அலி கூறியிருந்தார். "எந்தப் பறவையும் உன்னைப் பார்க்கவில்லை என்று எண்ணாதே!, நீ பார்க்கும் முன்னரே அது உன்னைப் பார்த்திருக்கும்". எவ்வளவு அனுபவம் மிக்க வசனம்.  இவரைப் பட்சிராஜன் என்றும் சொல்வார்கள். அண்மையில் வெளியான 2.0 திரைப்படத்தில் வரும் அந்தப் பட்சிராஜன் சலீம் அலியின் Inspiration ஆல் பிறந்ததாகும். திரியாய்க்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் பறவைகள் ஊர்வலம் வீதியெங்கும் நீடித்தது.



ஊர்தேடு படலத்தில் இலங்கையைப் பற்றிக் கம்பர் இப்படிச் சொல்வார். இந்தப்பாடல் அனுமன் இலங்கையை வியப்பது போல சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.

"பொன் கொண்டு இழைத்த மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டு அமைத்த வெயிலைக் கொடு சமைத்த
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்"

எதைக் கொண்டு அமைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி அருமையான இடம் திரியாய் ஸ்தலம். "மரம் அடங்கலும் கற்பகம்" என்று கூறுவார் அல்லவா கம்பர். மிக வயதான பாற்கிழுவை சூழப்பெற்று ஒரு திரவிய நிலம்போல அந்த இடத்தை உணர்ந்திருந்தேன். அந்த நினைவுகள் வீடு சேர்ந்த பிற்பாடும் அங்கு சென்றுணர்ந்த ஏகாந்த இருப்பை அள்ளி வீசுகிறது. பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான் என்று ஒரு கவிஞர் கூறிய வசனம் உண்டு. உண்மையில் வீடு சேர்ந்த பிற்பாடும் பயணத்தின் நினைவுகள் நம்மைத் தாழவிடுவதில்லை. மீண்டுவரும் அலைகள் போலவும் மீளமுடியாத ஆழ்கடல்போலவும் நமக்குள் ஒரு பிணைப்பை உண்டாக்கிவிடுகிறது. அந்தப் பிணைப்பு நமது அடுத்த பயணத்துக்கான தயார்ப்படுத்தலை அதீதப்படுத்துகிறது.




எனது  மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு பத்து கிலோமீட்டர் வேகம் அதிகரிக்கும்போதும் வீடு சேர்ந்தபின்பும்  "புவனிமுழுதாளீரோ நன்னலப் புள்ளினங்காள்" என்ற நம்மாழ்வார் பாடல்தான் மனதுக்குள் வந்தது.


Comments

Popular Posts