அனாகதம் விழியற்றது: போகன் சங்கர் கவிதைகள்.
போகன் சங்கர் |
"ஒரேயொரு பிரார்த்தனைதான்
குச்சியைக் காட்டியதும்
குழையும் மிருகமென
இவன் முன் நான் நிற்பதை
என் குழந்தைகள்
ஒருபோதும் பார்க்கக்கூடாது.
அப்போ நீ ராஜா இல்லியாப்பா?
என்றவர்கள்
ஒருபோதும் என்னைக் கேட்டிடக்கூடாது"
உண்மையில் இந்த அதிகாரம், பணம் உள்ளவர்கள் தம்மை எதிர்த்துக் கேட்காமல் இருக்க முனையும் நபர்களையே வதைக்க முனைவார்கள். எஜமானால் பழக்கப்பட்ட நாய்க்கு ஒரு தடியை எடுத்தால் எப்படி குழைந்து வாலைச்சுருட்டிக் காலை நக்குமோ அதுபோல மனிதர்கள் தமது அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது. இவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளத்தான் போகன் அந்தத் தனிவளையில் தான் இருப்பதாக எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். போகன் தனது கவிதையில் குறிப்பிடும் அநேக படிமங்கள் மனிதனால் மனிதனுக்கு உண்டாக்கப்படும் உடல் மற்றும் உளவியல் இம்சைகளையும் அதனால் உண்டாக்கப்படும் புறக்கணிப்புக்கள் பற்றியதுமே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள சுதந்திரங்களும் அதிகாரமும் அளவு கணக்கற்றவை. எப்படி என்றால் இந்த நாட்டின் தலைமைக் குடிமகனான ஜனாதிபதி அந்தப் பிக்குகளின் காலில் வீழ்ந்து வணங்கும் அளவுக்கு அவர்களது அதிகாரம் எல்லைகளற்ற ஒன்று. இலங்கையிலுள்ள பௌத்தர்களது ஆன்மீகம் என்பது முற்றிலும் வித்தியாசமானது. அவர்கள் தமது கிராமங்களில் ஒவ்வொரு பிக்குவின் வார்த்தைகளைக் கேட்டே நற்செயல்களை மேற்கொள்வர். இது நிச்சயமாகத் தேவையான ஒன்றுதான். இந்தப் பிக்குகளை நாம் ஞானிகள் என்றும் கூறலாம். அவர்கள் சிறிய மீன்களைப் பிடிப்பதற்கு ஏற்ற மடிவலைகளை உண்டாக்கி வைத்துள்ளனர். அதனை காலங்களுக்கு ஏற்ப சுருக்கியும் விரித்தும் ஆன்மீக தரிசனங்களை மக்களுக்கு ஊட்டுகின்றனர். கூடவே தற்காலிக இரையென அரசியல் உணர்வையும் பற்றவைக்கின்றனர். ஆனால் தமது வட்டம் எது என்பது பற்றிய பிரக்ஞை அவர்களிடம் உண்டு. இந்தக் கவிதை எனக்கு ஞாபகமூட்டுவது எமது பாரம்பரிய பௌத்த தரிசன மரபுகளையும் வட்டங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் பௌத்த பிக்குகளையும்தான்.
"எல்லா பறவைகளையும்
ஒரு வட்டத்திலிருந்து வரைந்துவிடலாம்.
கவலை வேண்டாம்
அவை பறந்துபோக முற்பட்டால்
எல்லா பறவைகளையும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடலாம்
அவற்றுக்கு இரையென
ஒரு பெரிய வட்டத்தை தற்காலிகமாக வரைந்தளித்தால் போதும்.
சுருக்கவும் விரிக்கவும் தோதான மடிவலைகள் போன்ற வட்டங்களை உருவாக்கிவைத்துக் கொள்ளுங்கள்.
ஞானி என்பவன் வட்டங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவன்"
வன்முறை ஒரு கட்டத்துக்கு மேல் சலித்துக்கொள்ளும் இயல்பு கொண்டது என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஒரு நபர்மீது நாம் வைத்திருக்கும் வஞ்சம் தீர குறைந்தபட்சம் அவரை மனதால் காயப்படுத்தி விடுகிறோம். அதிகபட்சம் மரணத்தையும் அளிக்கிறோம். இதில் ஏதோ ஒரு தளத்தில் நமது வன்முறை மனம் அமைதி கொள்கிறது என்பதுதான் உண்மை.
"அவர்கள் மூடிய புண்களை எல்லாம் கத்தியால் திறக்கிறார்கள்.
எப்போதும் மூடவியலாத புதிய புண்ணைக் கூர்முனை கண்டபோது
ஒரு பெரிய அமைதி அங்கு வெடித்தது"
ஒருவரைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டே அதில் நம்மனம் இச்சையுறும். இது இங்கு தொடர்ந்து நடைபெறும் சம்பவம். அதுவே அந்நபர் மரணத்தை அடைந்தால் நாம் என்ன செய்வோம். ஏனைய பழியுணர்வுகளையும் விட்டு விட்டு அமைதியடைவோம் அல்லவா?
இது மனிதனில் உண்டாக்கப்படும் உளவியல் சிக்கல். இந்த நீட்டிப்பு தான் இன்று நம்மிடையே பரவும் வன்முறைக்குக் காரணம்.
காத்திருப்பு என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப்புரிந்து வைத்துள்ளோம். பொதுவாகக் காத்திருப்பு என்பதே காதலுக்கான காத்திருப்பு என்பதுதான் நம் புதுக் கவிஞர்களும் சினிமா பாடலாசிரியர்களும் நமக்களித்துள்ள பிம்பம் எனலாம். ஏன் நமது சங்க இலக்கியங்கள்கூட தலைவனுக்காகத் தலைவி காத்திருத்தலும் பிரிவு நிமித்தமும் பலநூறு பாடல்களால் விளக்கப்பட்டுள்ளது. அது அக்காலத்துக்குரிய மரபார்ந்த வெளிப்பாடு. போகன் சங்கர் கவிதைகள் அந்த மரபுகளைப் பின்பற்றாதவை என்றே நினைக்கின்றேன். அவர் காதலிக்காக காத்திருப்பதற்கான எந்த முஸ்தீபுகளையும் கவிதையில் உண்டாக்கவில்லை. நகரத்து வாழ்க்கையின் மீது ஒரு சன்னதநிலையைத் தன்னுள் வைத்துள்ளார். வேலை தேடியோ, வேறு ஏதோ காரணங்களுக்காகக் காத்திருக்கும் நேரங்களில் "இறங்குகிறது கண்கள் பழுத்த ராட்சத வல்லூறு ஒன்று" என்று சொல்கிறார். அதாவது அந்தத் தருணங்கள் மிகுந்த சினத்தை உண்டாக்கி விடுகிறது. நகர வாழ்க்கையின் சினங்களை ஆத்மாநாம் தனது கவிதைகளில் நேரடி பொருளில் எழுதியுள்ளார். நான் வாசித்த வரையில் ஆத்மாநாமின் உளச்சிக்கல்கள் போலவும் பிறரின் புறக்கணிப்பில் இருந்து மீண்டெழுவது போன்ற நிலைப்பாடுகளையும் போகன் தனது கவிதைகளில் புதிய கற்பனைகளுடன் எழுதுகிறார். போகன் எழுதும் அந்த நோக்கு இந்தியஞானத்தின் புள்ளிகளைத் தொட்டு வருவது. உள்ள அழுந்தப்பதியும் தத்துவச் சரடுகளையும் முகத்தால் தாக்கும் லட்சணமும் கொண்டது என்றே கூறமுடியும்.
"அனாகதம் விழியற்றது
அது அந்தரத்தில் அலைகிறது
ஒரு குருட்டு நாய்க்குட்டியைப்போல எல்லாக் கால்களையும் முகர்ந்து பார்க்கிறது எல்லார் மடிகளிலும் ஏறுகிறது.
எல்லாக் கைகளும் தன் காதுமடல்களின் பின்னால்
தடவிக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. குருடானவைகளுக்கே உரிய வெளிச்சம் மீதான நம்பிக்கையுடன் திறநத கிண்ணம் போன்ற முகத்துடன் நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனத்தின் முன் ஓடிச்சென்று சிக்கிக் கூழாகும் வரை அது புன்னகைத்துக் கொண்டே இருக்கிறது"
இந்தக் கவிதை என் மனதைப் பெரிதும் பாதித்த ஒன்று. அன்புக்கு யாரை எப்படி மதிப்பிட வேண்டும் என்ற வரையறை கிடையாது. அல்லது தெரியாது. அதைத்தான் அனாகதம் என்று சொல்கிறார் கவிஞர். அனாகதம் என்பது மூலாதாரம் முதல் துரியம் வரை உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்று. இந்த அனாகதம் அன்பையும் படைப்பாற்றலையும் குறிப்பிடும் குறியீடு. பிரியம் யாரிடம் சென்று சேர வேண்டுமோ அவ்விடம் சேர்ந்தால் மட்டுமே அதன் முழுமை நோக்கம் நிறைவுபெறும். இல்லாத பட்சத்தில் அது சிக்கிக் கூழாகி நாசமுற்றுத்தான் போகும். ஆனால் பாருங்கள் கவிஞர் அப்போதும் அது புன்னகைத்துக் கொண்டே இருக்கும் என்று சொல்கிறார். உலகளாவிய அன்பு அல்லவா இங்கு உண்டாக்கப்படுகிறது. ஆனால் அது தகுதியான இடத்தில் சென்று சேர வேண்டும். விழியற்ற அன்பு குருட்டு நாய்க்குட்டி போன்றது. அந்த அன்பு ஒருபோதும் தனக்கான தகுதியை இட்டுநிரப்பி விடாது. தன்னைப் போலியாகக் குளிரவைக்கும் நபர்களிடமே சென்றுமயங்கும். நான் ஏற்கனவே கூறினேன் அல்லவா போகன் சங்கர் கவிதைகள் இந்தியஞான மரபின் உள்ளார்ந்த வெளிப்பாடு என்று.
நான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வெளி முற்றத்தில் இருந்து கொண்டு நிலவைக் காண்பதுண்டு. அது தென்னை ஓலைகளுக்கால் அசைந்து அசைந்து தன் வரவை வானில் பதிவு செய்யும். இது ஒவ்வொரு பௌர்ணமியிலும் எனக்கு புதிய பரவசத்தையே உண்டாக்கிவைக்கும். சிலசமயம் ராத்திரி பறவைகள் அந்த நிலவு இடுக்கால் பறந்து செல்லும். அந்த நிலவு ஒளி நீடிக்கும் இடம் மட்டுமே பிறிதின் பிம்பங்கள் தெரியும். ஏனையவை அந்தகாரம்தான். இப்படி ஒரு தரிசனத்தைக் கவிதையில் வாசித்தால் எப்படி இருக்கும். இது நிலவைப் பற்றிய சூன்யமான கவிதைகளை நிறுத்துமாறும், வீணான பிம்பங்கள் சலித்துவிட்டது என்று கூறுவது போல உங்களுக்குத் தோன்றவில்லையா?
"சன்னலில்
அலறும் பிரகாசத்துடன்
மிதக்கும்
இந்த நிலவின் குறுக்கே
ஒரு மரக்கிளையை வரைந்தால்
எல்லாம் சரியாகிவிடுமா"
00
நாம் அனைவரும் அறிந்த நவீன கவிஞர் நகுலன். குறைந்த சொற்களுக்குள் கவிதைகளை அடக்கி வெளியிடுபவர். தத்துவச் சாயல்களும் கொண்ட கவிதைகள் அவை. கவிதை தோன்றுவதற்கு மணிமுள் நேரம் போதும் என்றும் அதனை வரையறுத்தார். "அபூர்வமான இந்த மழை நாளில் எதுவும் எவ்விதமும் இருந்தால்தான் என்ன?" இது போகனின் ஒரு துண்டு வரி. இதே போல நகுலன் "யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்." என்ற கவிதையை இங்கு ஞாபகமூட்ட வேண்டும். போகனின் கவிதைகளில் ஜென் பௌத்தத்தின் செல்வாக்கு அதிகம் உள்ளது. அவர் அதனை மறைபொருளாக வைத்து பத்துக்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார் என்று நினைக்கின்றேன்.
முதலில் ஆத்மாநாம் அவர்களின் உளச்சிக்கல்கள் போகனின் கவிதையிலும் எதிரொலிக்கின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா?. போகனிடம் இருப்பது எள்ளல் கலந்த புறக்கணிப்பின் வலி. ஆத்மாநாமிடம் இருந்தது உருக்கமான துயரம் கலந்த வேதனை. இரண்டாவது மீண்டுவரமுடியாத அளவுக்கு தனிமனிதனின் உணர்வுகளை ஆபத்துநோக்கித் தள்ளும். அது தற்கொலையின் ஊக்குவிப்பு என்றும் கூறலாம். ஆனால் போகன் சங்கர் கவிதைகள் நாம் ஒரு சுயபரிசோதனைக்கு செல்லலாம் என்று சொல்கிறது.
"நான் உன் கடவுளாய் இருந்தேன்
என்பதை ஒருபோதும்
இனி நீ அறியமாட்டாய்
இதைவிட உனக்கு
சிறந்த வரம் வேறு எதுவாக இருக்க முடியும்?"
00
இந்த ஆன்மா மீதும் உடல் மீதும் நமக்கு உண்டாகியிருக்கும் இயல்பான பிடிப்பு எப்படி நம்மை இயங்க வைக்கிறது. அது ஒவ்வொரு இடத்திலும் நமக்கான நாம் என்று நம்முள் போதையேற்றுகிறது அல்லவா?. நாம் இல்லாத இடம் வெறுமை என்ற உணர்வு பிறரை உணர வைக்கும் என்பதைவிட நாம் இல்லாத இடம் நமக்குக் கிலியை உண்டாக்குகிறது என்பது எவ்வளவு வியப்பாக உள்ளது. இது நீங்கள் உணர்ந்து இராத தருணங்கள். இந்தக் கவிதையின் பின்புதான் நான் யோசித்துக் கொள்கிறேன். அது யட்சி கதையில் மரத்தில் அமர்ந்திருக்கும் நெடுங்கூந்தல் நீலிபோல (யட்சி)
அச்சத்தை உண்டாக்குகிறது.
"இந்த அறைக்கு வெளியே
எங்கேயும் நான் இல்லை
என்பது மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்துகிறது"
00
அமானுஷ்யங்களைத் தன் கவிதைகளுக்குள் விதைப்பது போகன் சங்கரின் மற்றுமொரு கெட்டித்தனம். இது சலிப்பை உண்டாக்கும் Fantasy அல்ல. ஜெயமோகனின் பல கதைகளில் இந்த அமானுஷ்யம் வந்து செல்லும். அதே போன்ற நெடி இங்குள்ளது. அதை அமானுஷ்யம் என்பதைவிட அனுபவத்தின் அதிதீவிரம் என்றும் கூறலாம். ஒரு கடலை நாம் நீண்ட நேரம் பார்க்கும்போது அதன் கருநீலம், பெரும் வெளி என்பன ஒன்று சேர்ந்து நம்மை மிரட்டிவிடக்கூடியது அல்லவா?. இதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். அந்தக்கடலின் பேருருவை வர்ணிப்பதுடன் நின்றுவிடாமல் அந்தக் கடலுக்குப் பழக்கப்பட்ட நீர்ப்பறவைகளும் கடலுக்கு அஞ்சின என்று ஒரு கவிதையில் எழுதியுள்ளார் போகன். இது அசாதாரணமான ஒரு வெளிப்பாடு.
"கடல் கருணையேயின்றி
கூச்சலாக
அலட்சியமாக
ஆபாசமான பேருருவுடன் கிடக்கிறது
அழிமுகம் வரை கொதிப்புடன் வந்த நதி பின்வாங்க முயல்வதை
இரண்டு நீர்ப் பறவைகள்
ஈரக் கண்களுடன் பார்க்கின்றன பின் ஓலம்போன்ற ஒலியுடன் எழுந்து பின்னோக்கிப் பறந்தன"
பறந்து சென்ற பறவைகள் வேறொரு கடலைச் சேர்ந்திருக்குமா? இல்லை பிறிதொரு நதியின் கொதிப்பில் மூழ்கித் தம் கண்களை ஈரமாகவே வைத்திருக்குமா?. இப்படி விடுபடாமல் பல கேள்விகள் நமக்குள் எழுகிறது அல்லவா?. அதுதான் போகன் சங்கர் உண்டாக்கி வைத்திருக்கும் பிரமாண்டம்.
00
தொடர்புடைய முன்னைய இடுகைகள்.
போகன் சங்கர் கவிதைகள் 01
போகன் சங்கர் கவிதைகள் 02
எனது கட்டுரைகள் பற்றி ஜெயமோகன்
https://m.jeyamohan.in/108748#.Wva6R7WgfIU
போகன் சங்கர் கவிதைகள் 3
Sirappu anna
ReplyDelete