பத்துலட்சம் காலடிகள்: அரபிக் கடலின் தூய காற்று


ஜெயமோகன்

முதலில் சொல்வது இந்தக் கதையின் ஆசிரியர் ஜெயமோகனை இந்துமத அடிப்படைவாதி என்றும் முன்முடிவுடன் பணியாற்றும் மதவாதி என்றும் சொல்கின்ற திராவிட மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் இதர தரப்புக்கும்  இந்தக் கதையின் மூலம் தான் ஒரு நடுநிலமையான எழுத்தாளர் என்பதுடன் மரபார்ந்த மதப் பிரிவுகளை மதிக்கும் படைப்பாளி என்றும் ஜெயமோகன் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் கதைகளின் அசுரன் என்றும் தன்னை நிறுவியுள்ளார். இந்தக் கதையினை ஜெயமோகன் கடந்த காலங்களில் எழுதிய சிறந்த கதைகளில் ஒன்றாகப் பரிந்துரைக்க முடியும். ஏற்கனவே ஜெயமோகன் எழுதிய திசைகளின் நடுவே, படுகை, கடைசி முகம், முடிவின்மைக்கு அப்பால், மாடன் மோட்சம் உள்ளிட்ட பல கதைகளுக்கு மிகப்பெரும் ரசிகன் நான். அந்தக் கதைகள் எப்போதும் மறந்துவிடும் வகையில் நினைவுகளைச் செதுக்கவில்லை.

ஒரு குற்றவியல் சம்பவத்துக்குள்ளும் அந்தக் கதையின் வெளியிலும் எத்தனை ரசனை சார்ந்த காட்சிகள். ஒரு இந்துப் பிராமணன் கொல்லப்படுகிறான், அதற்கு இஸ்லாமிய சமூகப் பிரிவைச் சார்ந்த மாப்பிளைகள்தான் காரணம் என்று கிறிஸ்த்தவ ஒளசெப்பன் என்கிற பொலிஸ்காரர் ஒருவர் சந்தேகப்படுகிறார். அந்தச் சந்தேகம் இறுதியில் என்னவாகிறது என்றும் அது தொடர்பான பரஸ்பர உரையாடல்களும் கதைவிளக்கமும்தான் பத்துலட்சம் காலடிகள்.
தூண்டில், சுற்றுவலை, மடிவலை இந்த மூன்றும் ஒரு ஏரியில் மீனைப் பிடிக்கும் யுக்திகள். அதே யுக்திதான் இந்தக் கதையின் ஆசிரியர் நமக்கு இந்தக் கதையின் முழுமையைப் புரிந்து கொள்ள முன்வைக்கும் வியூகம்.

இந்தக்கட்டுரை கதையை நேர்த்தியுடன் கூறமுனையும் ஒன்றல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். ராதாமணி என்கிற திருமணமான பெண்ணின் பின்னாற்சென்று முகமது ஹாஷிம் என்கிற அவளைவிட நான்கு வயது குறைந்த இளைஞன் திருமணம் செய்யக் கோருகிறான். அவள் மறுத்துவிடுகிறாள். இந்தக்கதையைக் கிருஷ்ணன் என்கிற இளைஞன் அறிந்து ஹாஷிமை மிரட்டிப் பணம் பறிக்க முயல்கிறான். அவ்வேளை ஹாஷிமின் தந்தை கிருஷ்ணனுக்கு நான்கு இலட்சம் பணம் கொடுத்து அவனை அனுப்பிவிடுகிறார். அவன் அப்பணம் கிடைத்த ஆசையில் வெளியூர் ஓடுகிறான். அங்கு மரணமாகிறான். அந்த மரணம் தொடர்பாக அப்துல்லாவிடம் பொலிஸ்காரர் விசாரிக்கிறார். அப்பொழுது அதற்கு அப்துல்லா இப்படிக் கூறுகிறார்.

"பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது. ஆகவேதான் நான் எவருக்குமே சும்மா பணத்தை கொடுப்பதில்லை. கல்வியோ மருத்துவமோ கொடுப்பேன். திருமணம் செய்துவைப்பேன். பணம் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பது ஒருவனை சாத்தானிடம் தள்ளிவிடுவது"

பணம் என்பதை எத்தனை தூய்மையானது என்று நினைக்கிறார்கள். அது எவ்வகையில் கிடைக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.  கண்ணீரும் வியர்வையும் இரத்தமும் இணைந்த வழிகளில் தான் பணம் கிடைக்கவேண்டும். இல்லாது போனால் அதனைச் சாத்தான் பற்றிக்கொள்வான். அதுதான் கிருஷ்ணன் மாண்டுபோனான். சாத்தான் மதம் கடந்த ஒன்று. நாம் மதங்களைப் பின்பற்றுவது எமது நம்பிக்கைகளுக்காக. ஆனால் அதன் தூய்மையற்ற தன்மையில் சாத்தான் உறைந்துகொள்ளும்.

தமிழ்நாட்டில் மரைக்காயர், ராவூத்தர், லெப்பை போன்று கேரளத்திலும் பல இஸ்லாமிய உபபிரிவுகள் உள்ளன. இதனைச் சாதி என்றும் கூறலாம். கேரளத்தில் மாப்பிளை என்ற இஸ்லாமியப் பிரிவு பிரபலமானது. இந்தப் பூர்வ இஸ்லாமியர்கள் அடிப்படை வாதங்களுக்கு ஆட்படும்விதம் குறைவாகவும் பொதுவாக இவர்களுக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையே குறிப்பாக இந்துக்களுக்குமிடையே  நல்லதொரு உறவு நிலவுகிறது.  கதையின் ஒரு பகுதியில் இப்படிவரும்.

"அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு"

ஒரு மாப்பிளை மீது எத்தனை பிம்பங்கள். அவரை அரேபிய செய்யத் என்பதா? இல்லை இஸ்லாமிய சித்தன் என்பதா? இல்லை முஸ்லிம் மாவீரன் என்பதா? எத்தனை பிம்பங்கள் அதற்குள். இசையில் பெரும் சாதனை புரிந்தவரை இஸ்லாத்தில் உஸ்தாத் என்பார்கள். மேற்சொன்ன பெயர்களும் அவ்வகையனவே. முற்றுமுழுதாக அப்துல்லாவை மரபார்ந்த நேர்மையாளன் என்பதையே கதை நெடுகிலும் கூறிக்கடக்கிறது. இதுபோன்ற இஸ்லாமியர்களை, இக்கதையில் வருவது போன்ற நபர்களை நிஜத்தில் சந்திப்பது மிக அரிது. இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மதங்களிலும் அதுதான் நிலைப்பாடு.


பெண்கள் பற்றி அண்மைய காலங்களில் எழுத்தாளர்கள் பலரால் வரையப்படும் பிம்பங்கள் செயற்கையானவை. அவர்கள் மீது வலிந்து கழிவிரக்கத்தைக் கொட்டுவன. அதில் எவ்வகையிலாயினும் நேர்த்தி இருப்பதில்லை. வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் எஞ்சும். பெண்கள் பற்றி வெளிப்படையான கருத்துக்களைக் கூறும் எழுத்தாளர்களில் ஜெயமோகன் முக்கியமானவர். அதனாலேயெ பல பெண்ணிய வாதிகளின் வசைக்கும் உள்ளாகியுள்ளார். அது ஒருபுறம் போகட்டும். இக்கதையில் ஒரு அழகான பெண் என்பவள் எப்படி உருவாகியிருப்பாள். அவளுக்குஉ உண்டாகும் ஹிம்சைகள் என்ன என்று கூறுகிறார். ஒருகட்டத்தில் கதையினைத் திடுக்கிட்டு மரபார்ந்த மாப்பிளைகள் மீது சந்தேகப் பொடியினைத் தூவ பின்வரும் வசனங்களைக் கையாள்வார். ஆனால் அடுத்துவரும் சம்பவங்கள்தான் அந்தத் திடுக்கிடலை இல்லாமற் செய்யும். 


"நடுத்தரச் சூழலில், ஏழைக்குடும்பத்தில் சிலசமயம் பேரழகிகள் பிறந்துவிடுவார்கள். நம்பவேமுடியாத அளவுக்கு பேரழகிகள். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே அமையமுடியாது. அவர்கள் மிகமிக ஆற்றல் கொண்ட எவருக்காவது ஆசைமனைவியாகவேண்டும், அவனுடைய சந்தேகத்தையும் சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து மடியவேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கானவர்களால் வேட்டையாடப்பட்டு சீரழியவேண்டும். முச்சந்தியில் கிடக்கும் செத்த எலிபோல. எல்லா காக்காயும் கொத்திக்கிழிக்கும்.

அவளை பேரழகி என்று எப்படிச் சொல்கிறேன்? இதோபார், இந்த மேற்குக் கடற்கரை என்பது இனக்கலவையின் சோதனைச்சாலை. உலகமெங்கும் வெவ்வேறு இனங்கள் கலந்த இடங்களில்தான் பேரழகிகள் உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலி. அது ஆசிய ஐரோப்பிய இனங்களின் கலவை நிகழ்ந்த நிலம். லத்தீன் அமெரிக்கா இன்னொரு உதாரணம். அரேபியா அதற்கும் முன்பே வெள்ளை ஆரிய இனமும் காப்டிக் கறுப்பினமும் கலந்து உருவானது. காக்டெயிலே இனியது என்று பிரெஞ்சுக்காரன் சும்மாவா சொல்கிறான். அவன்கள் ரசிகன்கள்"

பத்தேமாரி, ஆறன்முளா கண்ணாடி என்றால் என்னவென்று தமிழ் வாசகர்களுக்குப் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும். பத்தேமாரி என்பது மிக வைரமான நிறை கூடிய ஒரு நாட்டுப்படகு. இதனை கேரளத்தில் உபயோகிப்பார்கள். இதற்கு ஆரம்பத்தில் அயனி மரத்தை உபயோகித்தார்கள். பின்னர் தேக்கு மரங்களை உபயோகித்ததாகக் கதையில் கூறப்பட்டுள்ளது. அடுத்து ஆறன்முளா கண்ணாடிகள் என்பது கையால் செய்யப்பட்ட மிக வைரமான கைவினைப் பொருள். இது இரண்டும் மாப்பிளா சமூகத்தின் உறுதித்தன்மைக்கு ஒரு குறியீடாகவே கதையாசிரியர் அமைத்துள்ளார் என்று கருதமுடிகிறது. ஆனால் இவை தற்போது கலைப்பொருட்களாகவே எஞ்சியுள்ளன என்பதுவும் சிந்திக்கத்தக்கது.


மற்ற சமூகங்களால் மதிக்கத்தக வகையில் வாழும் ஒரு இனக்குழுவில் ஒருவன் செய்யும் தவறு அந்தச் சமூகத்தின் தலைவனையும் சமூகத்தையும் தலைகுனியச் செய்துவிடுமல்லவா? ராதாமணி என்ற பெண்ணைத் தொந்தரவு செய்த மகனைத் தந்தை அப்துல்லா அரேபியக்கடலில் கட்டி போட்டு கொலைசெய்துவிடுகிறார். கடலும் கடற்காற்றும்  தூய்மையான ஒன்றல்லவா?. அது மாப்பிளையில் ஒருவன் செய்த தவறை தீய்த்துவிடும் அல்லவா? இந்தத் தவறு தொடங்கினால் நிறுத்த முடியாது. என் காலத்தில் அது தொடங்காது என்று உறுதியாக சாஹிப் கூறுகிறார்.

"அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்"

பத்துலட்சம் காலடிகள் என்பது பத்து என்ற எண்ணிலிருந்து ஆயிரத்துக்குச் சென்று லட்சத்தை அடைவது. அது ஒரு பலத்தைக் குறிப்பது. ஒரு எண் பிழைத்தால் கணக்குத் தவறாகிவிடும். அப்படித்தான் இனங்களின், மதங்களின் கௌரவமும். அதனை கேரளத்தின் கப்பற்பட்டறைப் பணியாளர்களான மாப்பிளைக் கலாசிகளின் பத்தேமாரி படகு மீட்புக்களுடன் இணைத்து கதை நிறைவுறுகிறது. மாப்பிளா சமூகத்தின் விளிம்புநிலை மக்களான கலாசிகள் இந்தக் கதையில் அச்சமூகத்தின் உயர்குடி சாஹிப்புக்களை ஒப்பிட மிகச் சிறந்த முறையில் கதையமைக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாகக் கூறமுடியும் இந்த ஆண்டில் வெளியான சிறந்த கதை என்று இதைக்கூறமுடியும். ஒரு சிறந்த திரைக்கதையுள்ள படத்தை அருமையான பின்னணி இசையுடன் வாசிப்பது போன்ற சப்தங்களை பத்துலட்சம் காலடிகள் உங்களுக்கு வழங்கும். அனைத்து மதங்களும் இந்தக்கதையில் கரும்புச் சக்கைபோல ஆக்கப்பட்டுள்ளது. புத்தர் கடலைக் காணாதது ஆகட்டும் விஷ்ணு மற்றும் மார்த்தோமா பற்றிய  கருத்துக்களாகட்டும் அனைத்தும் மதங்களைச் சாடியதாகவே காணலாம்.

மேலும் இந்தக் கதையில் இணைக்கப்பட்ட உண்மைச்சம்பவங்கள் மிகவும் பிரமிக்க வைக்கின்றன. கேரளத்தில் 1988 ஜுலை 9 ஆம் திகதி பெருமான் புகையிர விபத்தும் அந்த விபத்துப் பற்றிய மேலதிக கற்பனைகள் அனைத்தும் எழுத்தாளரையும் அவரது படைப்புலகையும் பிரமிக்க வைக்கிறது.

பத்துஇலட்சம் காலடிகள் அரபிக்கடலின் தூயகாற்று என்றே வரையறுக்கலாம். அந்தக்காற்று ஒருபோதும் எல்லைமீறாத ஒன்றாக மாப்பிளைகளின் மனதுக்குள் புகுந்து வீசிய புனித உப்பு என்றே வரையறுக்க வேண்டும். 

பத்தேமாரி படகு

பெருமான் புகையிரத விபத்து நினைவிடம்

ஆறன்முளா கண்ணாடி

Comments

Popular Posts