இடம்பெயர்ந்த கடல் 01

கவிதை பாதி திறந்த கதவு என்று கவிதையைப் பற்றிச் சொல்வார்கள் இல்லையா? நான் தற்போதும் விரும்பிக் கற்கும் அநேக கவிதைகள் மேற்குறித்த ஜென் வசனத்துக்கு ஈடுகொடுக்கும் ரசனைகளை உள்ளடக்கியவையே. க.மோகனரங்கனின் கவிதை எழில் பாதிதிறந்து கட்டப்பட்டவைதான். அவற்றின் பாதிக்குள் இருப்பது சங்க இலக்கியத்தின் உறங்காநூறுகள். மீகாமம் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்தே மோகனரங்கனை மொத்தமாக வாசிக்கத் தொடங்கினேன். பின்பு அவருடைய உறங்காப்பத்து என்ற நெடுங்கவிதையை ஒரு சிற்றிதழில் படிக்க நேர்ந்தது. அதன் மொழியே நவீனத்துவமாகவும், செவ்வியல் சாயலாகவும் இருந்தது எனக்குள் இவ்விரண்டின் ரசனையைக் "கூட்டிச்சவட்டி" மீதூரக் கொண்டு சேர்த்தது.  

"இடம் பெயர்ந்த கடல்" என்ற க.மோகனரங்கனின் கவிதைத் தொகுப்பில் 73 கவிதைகள் உள்ளன. ஏற்கனவே "மீகாமம்" என்ற பெயரில் வெளியான இவரின் தொகுப்பும் சிறந்த கவிதைகளை உள்ளடக்கியிருந்தது. தமிழுக்கு கதி என்று கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களையும் தமிழாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் கூடவே சிலப்பதிகாரமும் அவ்வகையானது என்று க.கைலாசபதி அடியும் முடியும் என்ற கட்டுரைத்தொகுப்பில் வலியுறுத்தியிருந்தார். வள்ளுவர் உபயோகித்த பல சொல்லாட்சிகள் தமிழுக்கு அறிவுபூர்வமான கவர்ச்சியையும் உரையாடலையும் வளர்த்துத் தரக்கூடியவை. அதில் வள்ளுவர் உபயோகித்த "உருள்பெருந்தேர்" என்ற சொல் ஏற்படுத்திய பிரமிப்பு இன்றுகூட விட்டுமாயவில்லை. இந்தச் சொல்லை கவிஞர் கலாப்ரியா தனது வாழ்வியல் அனுபவங்களைக் கூறும் தன் நூலுக்குத் தலைப்பாக்கி இருப்பார். 

சங்க இலக்கியங்களிலும் ஏனைய செவ்வியல் இலக்கிய மரபிலும் அதிக புலமை கொண்ட மோகனரங்கனின் அநேகமான கவிதைகளில் அதன் குரல் ஒலிப்பதைக் காணலாம். இடம் பெயர்ந்த கடல் என்ற தொகுப்பிலுள்ள அம்பதுக்கும் அதிகமான கவிதைகள் இவ்வகையினவே. "ஏமப்புணை" என்ற சொல்லாட்சியை வள்ளுவர் தனது வெகுளாமை என்ற அதிகாரத்தில் அதனை ஒரு பாதுகாப்புத் தெப்பம் என்ற பொருளில் கையாண்டிருந்தார். அதாவது மிகப்பெரிய கப்பல்கள் கவிழும்போது தற்காலிக பாதுகாப்புக்காகச் சமகாலத்தில் உபயோகிக்கப்படும் Safety Boat என்று கூறலாம். ஏமப்புணை மற்றும் உருள்பெருந்தேர் ஆகிய இரண்டு சொற்களும் வள்ளுவர் போன்ற அதிஞானியால் மிக நுணுக்கமான பொருள்பெற உபயோகிக்கப்பட்டு இருந்தது. இதனை நவீன கவிஞர்கள் தமது பாடுபொருளின் கருவை வெளிப்படுத்த உபயோகிக்கும் முறை செவ்வியலை மீள்வாசிப்புக்கும் மீள்பொருள்கொள்ளவும் தூண்டும். மோகனரங்கன் இத்தொகுப்பில் எழுதிய உறங்காப்பத்து என்ற நெடுங்கவிதை மத்திடைப்பட்ட தயிராய் புத்தியில் திரிபட்டு நினைவுகளைப் பரந்து கெடுக்கக்கூடியது. 

மோகனரங்கன் ஏமப்புணை என்று தனது கவிதையில் குறிப்பிடும் பௌதிகப் பகுதிகள் இவைதான். 

"நடுக்கடல்
தனிப்படகு
தூரத்தீவு
நகராத பொழுது
புத்தி மத்தியில்
பொத்தலிட 
அப்பால் 
மிதக்கிறது
ஆகாயம்
அகண்ட பால்வீதி
அனந்த கோடி நட்சத்திரங்கள்".
கடற்கரை அம்மன்-திருகோணமலை

இத்தொகுப்பில் இடம்பெறும் பரிசில் பாடல் என்ற ஒரு கவிதை எப்படி சங்ககாலத்துடன் தொடர்புறும்படியும் சங்கத்திணை நூல்களுடன் கவிஞருக்குள்ள ஆழமான தொடர்பையும் காட்டுகிறது என்பதைத் தொடக்கத்தில் குறிப்பிட்டாகவேண்டும். பரிசில் என்பது சங்ககாலத்தில் புலவர்கள் அரசர்களையும் சிற்றரசரையும் புகழ்ந்து பாடிப் பரிசுபெறும் ஒரு முறையாகும். இந்த வெளிப்படைக்குள் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன. 
1. பரிசில் வாழ்க்கையை மேற்கொள்ளும் புலவர்கள் பிறருக்குத் தீங்கு செய்யாத வெள்ளந்திகள்.
2. பரிசில்கள் என்பது இன்னார் வழங்குவது (பகைவன்) என்பது இலக்கணமரபு. 
மோகனரங்கனின் கவிதையிலும் இந்த இன்னாரை ஒறுத்தல் என்கிற ஆழ்போக்கு நிலவுவதை நாம் காணலாம். "வசீகரத்தின் பயங்கரத்தையும்
அன்பின் குரூரத்தையும் பரஸ்பரம் அறியாதவர்களல்ல நாம்" என்பது சங்கம் தொட்டு இன்று வரையும் கவிஞர்களும் எழுத்தச்சர்களும் எதிர்கொள்ளும் பாரிய சமூக இடர். அண்மையில் கூட எழுத்தாளர் சோ. தர்மனை காவல்நிலைய Writer என்று புரிந்துகொண்ட காவலர்கள் பற்றி அங்கதமாகத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். மோகனரங்கன் குறிப்பிடும் நாம் என்பது அநேக படைப்பாளிகள் எதிர்கொள்ளும் சவால்தான். அதனை அவர்கள் பரிசில் பாடல் என்று கூறாமல் வேறெப்படிச் சொல்லமுடியும். 

"அன்பைச் சொல்ல
அநேகமிருக்கிறது வழிகள்
மலர்களைத் தருவது
மரபும் கூட
வாழ்த்துச் சொல்லி
வந்த அட்டைகளுக்கும்
வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்ட
வெகுமதிப் பொருட்களுக்கும்
நடுவே
தானென பூத்து வீசுமுன்
முகத்தினை கசங்கச் செய்வதல்ல
என் விழைவும்
மேலும்
வசீகரத்தின் பயங்கரத்தையும்
அன்பின் குரூரத்தையும்
பரஸ்பரம் அறியாதவர்களல்ல நாம் உப்பின் கரிந்த நீர் பரவிய
என் தோட்டச் சிறுவெளியில்
கருகி உதிர்ந்தவை போக
எஞ்சிக் கிளைத்தது
இம் முட்கள் மட்டுமே
முனை முறிந்துவிடாமல்
காத்துவை
அடிக்கடி நகம் கடிக்குமுனக்கு
எப்போதாவதென் முகம் கிழிக்க
உதவும்"
கடல்-முல்லைத்தீவு

தாயுமானவர் பாடல்களுக்குத் தமிழ்ப் பக்திமரபில் தனியான இடமுண்டு. அவை திருமூலரின் தத்துவத்தையும் திருவாசகத்தின் பேரன்பையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டவை என்றே கூறவேண்டும். 
"பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவன் தன்னந் தனியனே" என்ற தாயுமானவரின் பாடல் எனக்குள் மேற்சொன்ன இரண்டு செவ்வியல் உதாரணங்களையும் ஞாபகப்படுத்துவன. அதன் பின்பு வெவ்வேறு நவீன கவிஞர்களால் அந்தத் தொடர்ச்சி கையாளப்படுகிறது. அப்படியான ஒருவருள் க.மோகனரங்கனின் பல கவிதைகளை உதாரணம் ஆக்கலாம். 

"உன் மறுதலிப்பின்
நிர்தாட்சண்யத்தில்
நிலம் விழுந்து சுருள
ஊண் விலக்கி
உறக்கம் தொலைத்து
உடலின் திரை விடுத்து
நரம்புகளின் நுனி தோறும்
விசம் தேடிச்சாவேன்
மறுகி மரித்த பின்னும் எஞ்சும்
காலமற்றதொரு வெளியில் நீயும்
யாரும் காண நின்றொளிரும்
என் மண்டையில் ஊரும் மாணிக்கம்."

அன்பின் பக்கச்சார்பு எந்தளவுக்குக் கொண்டு செல்லும். என்ன செய்யும். அது ஒரே சமயத்தில் மரணத்தையும் நித்திய வாழ்வையும் வாரி வழங்கும் அல்லவா? அந்தப் பக்கச்சார்பை நிர்தாட்சண்யம் என்ற ஒற்றைச்சொல்லால் மண்டையில் அறைந்து சொல்லும் வகைமை மோகனரங்கனுடையது. இதுபோன்ற தத்துவச் சரடு காலமற்ற வெளியில் சஞ்சரிப்பது கவிஞனின் ஆழ்புலமையினால் ஆனதொன்றல்லவா?? 

க.மோகனரங்கன்




Comments

Popular Posts