கொன்றையுடன் நகர்தல்!

போகஸ்வெவ

மஞ்சளையும் கொஞ்சம் பச்சைத் திண்மங்களையும் அரைத்து மாலையாக்கி கிளைகள் முழுவதும் தொங்கவிட்டிருக்கிறது எங்களூர் கொன்றைமரங்கள். இளவேனில் காலம் எமக்களித்த காண் இன்பம் இந்த மஞ்சள் மரங்களே. கொன்றை மரம் ஆதியோகியின் இஸ்ட மரம் என்ற நம்பிக்கை நமது இந்துச் சமூகத்தில் உள்ளது. அத்துடன் அதன் பூக்களும் சிவனுக்குப் படைப்பதுண்டு. சுந்தரர் தனது பதிகத்தில் இப்படிக்கூறுவார்.
"மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை அணிந்தவனே" இந்த மிளிர்கொன்றை என்பதனை எத்தனை ஆழமான அர்த்தங்களினின்று நாம் காண்பது. ஒளிர்தல், பெருமை ஆகிய அர்த்தங்கள் மிளிர்தல் என்பதற்குண்டு. மாணிக்கவாசகர் கூறுவார் "மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்று. மிளிர்கின்ற மெய்சுடரும்,  மிளிர் கொன்றையும் Shining என்ற அர்த்தம் படுகிறதல்லவா?.  சரக்கொன்றை முதல் சூரத்துக் கொன்றை வரை முப்பத்தைந்து வகைக் கொன்றைகள் நம்நிலத்திலுள்ளது. இந்தக் கொன்றைகள் மிளிரும் இந்த மாதமும் இனிவரும் நான்கு மாதங்களும் நம்மை மஞ்சள் வாசனையுடன் நகரவைக்கும்.

வவுனியா


தேவதேவனின் கவிதையொன்று.

எல்லாம் எவ்வளவு அருமை.

நுரைத்துவரும் சிற்றலைபோல
வரிசையாய் நாலைந்து சிறுவர்கள்
ஒருபெண்
எடையில்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தாள்
ஒரு காரணமும் இல்லாமல்
தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது
கொன்றை
ஒரு துரும்பும் நோகாதபடி
உலவிக்கொண்டிருந்தது காற்று
பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும்
இலைகள் தான் தொட்டதனால்தான்
உதிந்ததென்றிருக்கக் கூடாதென்ற
எச்சரிக்கை நேர்ந்து
அப்படி ஒரு மென்மையை
அடைந்திருந்தது காற்று
மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை
தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து
குழுமி நின்று
தாங்கித் தாங்கித் தாங்கித்
அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்
மெல்ல மெல்ல மெல்ல
பூமியில் கொண்டு சேர்த்தது

குளிக்கும் மஞ்சள்

இனிவரும் நாட்களில் பைக்கில் திறந்தவெளியில் பிரயாணிக்க இருக்கும் ஒவ்வொருவரும் காற்றில் நுகரும் வாசனை கொன்றையினுடையதாயிருக்கும்.  கொன்றையுடன் நகர்தல் என்பது அனைவருக்கும் கைவராத ஒன்றுதான். 

Comments

Popular Posts