கறுப்பு


கறுப்பு நிறம் இன்றைய நாட்களில் ஒடுக்கப்பட்டவர்களின் நிறமாகவும், புரட்சி செய்பவர்களின் வண்ணமாகவும் சினிமாக்களிலும், அரசியல் கட்சிகளாலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை வரலாற்றின் துணைகொண்டு ஆராய முற்பட்டபோது கிடைத்தது அது கடவுளையும், அறத்தையும் குறிக்கும் நிறம் என்றுதான். கறுப்பு என்பதற்கு மிகநீண்ட வரலாறு உண்டு.  "Colour is what we see or more important what we think we see" என்று ஆங்கிலக் கலைக்களஞ்சியம் ஒன்று குறிப்பிட்டுச் சொல்கிறது. இதனை இந்த நெடுநீளக் கட்டுரை எழுதும்போது இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும்.

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அவை சங்ககாலத்தில் சினத்தைக் குறிக்கப் பயன்பட்டன. "நிற்கறுப்பதோர் அருங்கடி முனையள்" எனவும், "நீ சிவந்திறுத்த நீரழி பாக்கம்" என்றும் சொல்லதிகாரம் விளக்கம் உரைமூலம் கூறப்படுகிறது.

பழிவாங்கும் வேட்கை கொண்ட ஒருவனை கறுவியம் கொண்டவன் என்று நமது பகுதிகளில் குறிப்பிடுவார்கள். 
"கறுவுகொள் நெஞ்சம்" என்று திருமுருகாற்றுப்படையில் ஒரு பாடலுண்டு. இதேபோல அப்பாவியான ஒருவரைக் குறிக்க வெள்ளந்தி என்று விழிக்கும் வழக்கம் இப்போதும் உள்ளது. இதன் நுண்பொருளை வள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அறியாமை என்ற பொருளில்தான் அநேகமாக வருகின்றது.

"அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு"

வெளிறு என்பது அறிவாற்றல் மந்தமான தன்மையைக் குறிக்கும்.

துயரத்தில் வாடுவோரை முகம் கறுத்துள்ளது என்று தற்காலங்களில் கூறும் வழக்கம் இலக்கியச் சான்றுகளுடன் நமக்கு அறியக் கிடைப்பது சிலப்பதிகாரத்தில்தான். பெண்களின் சோக முகங்களைக் குறிக்க "மாமை", "பசலை" போன்ற வழக்கங்களே சங்ககாலத்தில் இருந்தன.
இந்திர விழவூரெடுத்த காதையில்
 "கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்"   என்பதில் கண்ணகியின் துயரத்தை தீர்க்கமாக கருங்கணுடன் ஒப்பிக்கிறார். இளங்கோ கருமை என்பதை கருங்கைக் கொல்லர், கருங்கை வினைஞர் (பள்ளர், பறையர்) என்று தொழிலால் நிறம் மாறியவர்களைக் குறிக்கவே பயன்படுத்தினார். இங்கு கருங்கை என்பது கொல்வதைக் குறிக்கும். கண்ணகியின் கருங்கண் குறிப்பதும் அதுதான். சிலப்பதிகாரத்தில் செம்மை என்ற நிறம் சகல காதைகளிலும் இடம்பெற்று இருக்கும். ஆனால் கருமை பற்றி ஆறு காதைகளில் இடம்பெறாது. ஒரு கட்டத்தில் இளங்கோ அரசர் நிறம் சிவப்பு என்ற விடயத்தையும் செய்யுளில் குறிப்பிடுவார்.

00

சமண, ஆசீவக மதங்கள் கறுப்பு என்பதைத் துஷ்ட சக்தி என்றே கருதி வந்தனர். எல்லா உயிர்களுக்கும் ஆறுநிலை உண்டென்று கூறும் ஆசிவகம். அதனை அபிஜாதி என்று ஆறு நிறங்களுடன் வைத்து வகைப்படுத்துகிறது.

கருமை (black kanha)
நீலம் (blue nila)
செம்மை (red lohita)
பச்சை (green halidda)
வெண்மை (white sukka)
அதிவெண்மை (supremely white, parama sukka)

இதில் எல்லாவற்றுக்கும் மேலான பிறப்பாகக் இவர்கள் கருதுவது பரம் சுஹா என்கிற அதிவெண்மையையாகும் (  supremely white, parama sukka) இதையே மணிமேகலை இவ்வாறு குறிப்பிடுகிறது.
 திருக்குறள் சமண நூல் என்றும் ஆசீவக நூல் என்றும் பல அறிஞர்களால் வரையறுக்கப்படுகிறது. ஆனால் திருக்குறளில் வெளிறு என்ற ரீதியில்தான் வெள்ளை நிறம் நேரெதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

 "கரும்பிறப்பும் கருநீலப்பிறப்பும்
பசும்பிறப்பும் செம்பிறப்பும்
பொன்பிறப்பும் வெண்பிறப்பும்
என்றிவ்வாறு பிறப்பினு மேவிப்
பண்புறு வரிசையிற் பாற் பட்டுப் பிறந்தோர் கழிவெண் பிறப்பிற் கலந்து வீட்டணைகுவர்"

கறுப்பு என்பது அவைதீக மதங்களில் தீயசக்தி என்ற நோக்கில்தான் அணுகப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் வைதீக மதங்கள் கறுப்பு இறைவனின் நிறம் என்ற கருத்தினை அடுத்து வந்த பக்தி இலக்கியங்களில் விளக்கியுள்ளன. அல்லது எதிர்வினை புரிகின்றன.

00

சினத்தையும், சோகத்தையும் குறிக்கும் கறுப்பு என்ற நிறம் பக்தி இலக்கிய காலத்தில் தெய்வத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது. குறிப்பாக ஆழ்வார்கள் இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் பலவற்றில் நீலமும் கறுப்பும் ஒன்றானவை என்ற கருத்தும், இறைவனை கருநீல நன்மேனி வண்ணன், கருங்கடல் வண்ணன், புயல் கரு நிறத்தினன் என்று அறுபத்தேழு இடங்களில் பயன்படுத்துகிறார். திருவாய்மொழியை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறியும் உண்மை யாதெனில் நம்மாழ்வார் நிறங்களை இறைவனுடன் வைத்துப் படிக்கும்போது கருமை மீதுள்ள அழுத்தம் அதிகமானது. இதனைக் கம்பனின் பாடல்களில் சிறப்பாகக் காணலாம்.

திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் விசேடமாக பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் முதலியவற்றில் இறைவன் கருமையானவன் என்ற கருத்தே அழுத்தமாகப் பதிக்கப்படுகிறது. கருவரை வண்ணன், கருமேனியுடையம்மான், கரியான் ஒரு காளை, கருநீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தான்,  கருநிறத்தென் துணையே, கருமுகில் நிறத்தனன் என்று பல பாசுரங்களின் பல இடங்களில் கறுப்பாகக் கடவுள் விழிக்கப்படுகிறார். 

திருவாசகத்தில் கறுப்பு என்பது சிறு அடையாளமாகவே குறிப்பிடப்படுகிறது. சிவனைச் செம்பிரான், செம்பெருமான் என்றே குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். அதுபோலத்தான் பெரியபுராணமும் அதிற்கூட கடவுளை எவ்விடத்திலும் கரியவன் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் கருமை பற்றிய சாதகமான வாதங்களே சைவர்களால் மேற்கொள்ளப்பட்டன.

கருமை பற்றிக் கூற வந்த கம்பன் கறுப்பினை ஒப்பற்ற நிறம் என்று  கூறுகிறார். தனி என்ற சொல்லாட்சியைத் தனது பத்தாயிரம் பாடல்களில் கம்பன் எங்கும் பாவித்திருக்க மாட்டார். இதைத்தவிர.
"உடைக் கருந் தனிநிறம் ஒளித்துக் கொண்டவன்"
என்பார். இது ஆழ்வார்களிடமிருந்து கம்பரடைந்த தரிசனம் என்றே கருதலாம்.
"ஆர அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ" என்று நீதியின் நிறம் கறுப்பு என்பதையும் கூறுகிறார். இது 12 ஆம் நூற்றாண்டு வரையும் எந்தவொரு இலக்கியத்திலும் குறிப்பிடப்படாத அரிய கருத்து. கறுப்பின் மீது கம்பன் கொண்ட அபிப்பிராயம் இது எனலாம்.   "காளியே அனைய காலன்" என்றுள்ள கம்பரின் பாடலில் காளியைப் போல இயமனும் கரிய நிறத்தவர் என்கிறார். இதேபோல "காளி போன்றனன் இராவணன்" என்றும் ஒரு இடத்தில் கூறுகிறார். கம்பர் தனது காப்பியத்தில் கறுப்பு என்பதை காவிய நாயகன்- வில்லன்- மரபுக்கடவுள் என்று அநேகமான இடங்களில் அறிமுகஞ்செய்கிறார். இந்தக் காளி பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியத்தின் தொடக்கத்திலேயே இடம்பெறுகிறது. ஆனால் அந்தச் சங்கநூல்கள் காளி கறுத்தவள் என்று குறிப்பிடவில்லை. இதுதான் கம்பனின் செவ்வியல் புனைவு மீதுள்ள தார்மீக முன்னத்தி ஏர் எனலாம்.

கறுப்பு என்ற நிறத்தின் மீதான நேர்எதிர் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் ஏற்பட சில காரணங்கள் உண்டு.
சோழரின் வீழ்ச்சி, விஜயநகர ஆட்சியும் இஸ்லாமியப் படையெடுப்பும், ஆங்கிலேயரின் ஆட்சி. இவை சில நாட்டாரியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கறுப்பு என்பது இன்றைய நாட்களில் கேலிக்குரிய நிறமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்டார் பாடல்களை எடுத்துப் பார்த்தால் அந்த உண்மை தெரியும். சிலபாடல்கள் கறுப்பு என்ற நிறத்தை வெறுக்காமல் எள்ளலாக்கவும் படுகிறது.

"கறுப்பு கறுப்புண்ணு
கண்டதுண்டு வையகத்தில்
இந்தக் கறுப்புப்போல்
எவ்வுலகும் கண்டதில்லை"

 மரபுகளை அறியாதவர்கள் கறுப்பை மரபெதிர்ப்பின் குறியீடாக்கி மரபினை எதிர்க்கும் அவலம் இன்று நிகழ்த்தப்படுகிறது. காட்டுத்தேன் போன்ற பெண்களின் நிறங்கள் செயற்கைமுறையில் வெளிற்றலுக்கு உள்ளாக்கப்படுகிறது. அது வள்ளுவர் சொல்லும் அறிவின்மையின் ஒப்புரவு என்றே தெரிகிறது.

எந்நிறமும் அற்ற நிலைதான் கருமை. அதாவது in the way, black is not a color. It is the absence of all night. என்று Knowledge Book என்ற நூலில் ஒரு அறிஞர் குறிப்பிடுகிறார். கறுப்பு தத்துவம் சார்ந்தது.  நான் கறுப்பினை எப்போதும் விசுவசிக்கின்றேன்.

ஏனென்றால்,
கறுப்பு என் கடவுளின் நிறம்.
கறுப்பு என் மரபின் நிறம்.
கறுப்பு என் அறத்தின் நிறம்.

00

Comments