படைப்பும் மரபும்: பின்தொடரும் நிழல்கள்.


படைப்பாளிகள் தனிப்பட்ட மனத்தாக்கங்களால் உண்டாகும் விளைவுகளைத் தமது எழுத்துக்களைக் கொண்டு எம்மிடையே கடத்தி விடுகின்றனர். கடத்தப்படும் விடயங்கள் நல்ல வாசகனிடம் சும்மா இருப்பதில்லை. அதனைக் கொண்டு பரிசோதனை செய்வதும், விமர்சனம் செய்வதும் என்று அவனது எல்லைகள் விரியத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் நவ படைப்புக்கள் மீதுள்ள விமர்சனத்துக்கான அணுகுமுறையாக கருக்களையும் பொருட்களையும் செவ்வியலில் இருந்து எடுக்க விளைகிறான். உண்மையில் எனது மரபு மீதும், செவ்வியல் மீதும் ஒரு ஆய்வினை நிகழ்த்தவும் மேற்கொண்டு செல்லவும் பெரும் உதவியாக அமைந்தவை நாவல்களும் கதைகளும்தான்.

குறிப்பாக எனது பாடசாலை நாட்களில் நான் ஒரு பெரும் நாவலை வாசித்திருந்தேன்.  இதுதான் எனது முதல் வாசிப்பு என்று சொல்வேன். செ.கணேசலிங்கன் எழுதிய நீண்டபயணம் என்பதுதான் அது. அந்த நாவலை வாசித்து முடிக்க ஒரு கிழமைக்கு மேல் எடுத்தது. யாழ்ப்பாணத்தின் சாதியம் பற்றிய நாவல் அது. வெள்ளாளருக்கும்- பள்ளர், பறையருக்கும் இடையில் நடைபெறும் சாதியப் பிரச்சனைகளை வெளிக்காட்டியிருந்தது. இப்போதும் அதன் காட்சிகள் எனது கண்ணுக்குள் நிற்கின்றன. இந்நாவலில் வரும் இரவுக்காட்சிகள் மற்றும் பனை பற்றியும் செல்லத்துரையனின் காதல் காட்சிகளும் மறக்க முடியாதவை. இந்நாவலை மார்க்சிய அறிவுஜீவிகள் எடுத்துக்கொண்டு சாதி ஒழிப்பு என்ற கோசத்தை முன்வைத்தனர். நிச்சயமாகச் சாதி ஒழிப்பு என்பது ஒரு மாயை. அல்லது அரசியல் கண்துடைப்பு வித்தை என்றே கூறவேண்டும். சாதி என்பதை இனக்குழும அடிப்படையிலேயே நாம் அணுக வேண்டும். அதை விடுத்து பூர்விக நாட்டாரியல் முறைமைகளைக் களைந்து விட்டு சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது ஒருபோதும் நடவாத ஒன்று. தமது இனக்குழுமங்களைக் கற்ற சமுதாயமாக மாற்றுதல், அதிகாரங்களை நோக்கிக் கொண்டு செல்லல். இதுவே தீர்வாக அமையும். அறிவுபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தலும் தகும். இதனை விடுத்து வெள்ளாளரும் பிராமணரும் சேர்ந்து  தமது நிலத்தைப் பிடுங்கிவிட்டனர், தம்மைக் கல்வி கற்க விடவில்லை போன்ற கோஷங்கள் தற்போதைய சீர்திருத்தங்களுக்கு ஒவ்வாத ஒன்று. இது வெறுமனே சாதிய காழ்ப்புணர்வுகளையே கொண்டுவரச்செய்யும். எனக்கு மிக ஆழமான நம்பிக்கை ஒன்று உள்ளது. என் மண்மீதும் மரபுமீதும் மதம்மீதும்  ஆங்கிலமூளையைக் கொண்டு உருவாக்கப்படும் ஆய்வுகளும் விமர்சனங்களும் ஒருபோதும் சமூகவியல் தீர்வினைத்தராது. இதுவரை அப்படி எந்தமாற்றமும் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்ததில்லை. பல கம்யூனிச, மார்க்சிய அறிஞர்களின் வீட்டுப் பிள்ளைகள் (குறிப்பாகப் பெண்கள்) இன்றும் தம்மால் அழகியல் ரீதியிலோ ரசனை ரீதியிலோ ஒரு அனுபவத்தை அணுகமுடியவில்லை என்று உள்ளங்காய்கின்றனர். சாங்கியம் முதல் யோகம் வரைக்கும் எம்மிடம் சித்தாந்தங்களும் தரிசனங்களும் உள்ளன. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் வெளிநாட்டுச் சித்தாந்தங்கள் பல முடிவிலி போல இங்கு கட்டாயப்படுத்திப் புகுத்தப்படுகின்றதை இன்றைய சந்ததி சிந்தனையாளர்கள் பலர் உணரத்தொடங்கியுள்ளனர்.

00

இந்தக் கட்டுரை உண்மையில் முழுதாக சாதிய விடயங்கள் பற்றிய உரையாடல் அல்ல. நாம் மறந்து போன நமது செவ்வியலினை இப்போது மீளவடிவமைக்கும் படைப்புக்கள் பற்றியது. குறிப்பாக ஜெயமோகனின் சில கதைகள் பற்றியது.  இது ஜெயமோகனின் மேலதிகக் கதைகளின் உள்ளிணைப்புக்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மு. தளையசிங்கம் என்றொரு எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருந்தார். அதுபோல க. அயோத்திதாசர் என்றொரு பண்டிதர் வாழ்ந்து மறைந்துள்ளார். முன்னவர் இலங்கையர். பின்னவர் தமிழ்நாட்டவர். ஆனால் பண்டிதர் தாசர் பஞ்சசீலம் பெற்றுப் பௌத்தரானது இலங்கையிலுள்ள விகாரையொன்றில்தான். இந்த இருவரும் தமது மரபு எது என்பதை ஆரம்பத்தில் புரிந்து கொள்கின்றனர். பின்னர் அவற்றுக்கான தீர்வுகளை விரிவாக எழுதுகின்றனர். நீங்கள் தளையசிங்கத்தின் சிந்தனைகளை வாசிக்கும்போது ஒரு உண்மை உங்களுக்குத் தெரியவரும். அதாவது இலங்கையர் என்ற தேசிய பிரக்ஞையும் தமிழ்-சிங்கள இனங்கள் பற்றிய பரஸ்பர புரிந்துணர்வும் அத்துடன் கம்யூனிச சித்தாந்தம் நமக்குத் தீர்வளிக்காது என்ற முனைப்பும்தான். அதுபோல அயோத்திதாசர் ஆய்வுகளில் அவர் தெளிவாக தன்னைப் பறையர் என்று வரையறுத்து தமிழ்ப் பௌத்தம் சேர்தல் என்ற சிந்தனையை வலியுறுத்துகிறார். அதற்காக அவர் ஆங்கில ஆட்சியை மெச்சுவதை ஏற்கமுடியாது. ஆனால் தாசர் தனது மரபுதான் தனக்குத் தீர்வுதரும் என்று தெளிவான கருத்தைத் தனது ஆய்வுகளில் முன்வைக்கின்றார். இந்த இருவரையும் அறிந்துகொள்ள மு.தளையசிங்கம் படைப்புகள் என்ற நூலும், ஞான அலாய்சியஸ் வெளியிட்ட அயோத்திதாசர் சிந்தனைகள் நூலும் உங்களுக்கு உதவும். அத்துடன் க. அயோத்திதாசர் ஆய்வுகள் என்றொரு நூலை ராஜ் கௌதமனும் வெளியிட்டுள்ளார். இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

00

சரி ஜெயமோகன் கதைக்கு வருவோம். அவரது யட்சி, திருமுகப்பில், இரு கலைஞர்கள் என்ற கதைகளை சில காலங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். அவை ஊமைச்செந்நாய் என்ற அவரது தொகுப்பில் இருந்தன. இந்தக் கதைகள்தான் நான் ஜெயமோகனைப் பற்றிய படைப்பு உலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியது என்று சொல்வேன். இதன் பின்னர்தான் படுகை, போதி, திசைகளின் நடுவே, கடைசி முகம், காடேற்றம், நதி உள்ளிட்ட பல கதைகளுக்குள் சென்றிருந்தேன். இந்தக் கதைகள் பல ஒரு சாகச நினைவை நமக்குள் உருவகிப்பது போலத் தோன்றும். இன்னொரு புறம் யோசித்தால் சுத்த இலக்கியத்தன்மை மிக்க தத்துவார்த்த தரிசனக் கதைகள் என்று தோன்றும்.

( திருவட்டாறு ஆதிகேசவன் கோயில்.
படங்கள்- இணையம்.)






திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலைப் பற்றி நான் நம்மாழ்வார் பாடிய திருமொழியில் வாசித்த அனுபவம் உண்டு. சைவர்களுக்கு எப்படி மாணிக்கவாசகரோ வைணவர்களுக்கு நம்மாழ்வார். நாஞ்சில் நாடன் கூட ஒரு கட்டுரையில் கூறுவார் தமிழை ஆழ்வார்களிடம் இருந்து கற்க வேண்டும் என்று. அதிலும் நம்மாழ்வாரின் பக்தித் தரிசனம் மிகச்செறிவான நயம்மிக்கது. திருமுகப்பில் என்ற கதையில் ஜெயமோகன் "அவர் அன்று கண்டதை பத்துவருடம் கழித்துத்தான் நான் கண்டேன்" என்று முடிப்பார். திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலில் படுத்திருக்கும் விஷ்ணுவைப் பார்த்துவிட்டுச் சென்ற காளி சரண் என்ற மேற்கிந்தியத் தீவுக்காரர் ஆதிகேசவனின் தத்துவத்தில் மூழ்கியிருந்தார் போலும். அவர் அன்று கண்டது என்பது என்ன என்று சொல்லாமல் விடுகிறார் ஜெயமோகன். அதாவது அது வாசகர் தெரிவு. அதற்கு நாம் பல தரிசனங்களை முன்வைக்கலாம்.  அண்மையில் நம்மாழ்வார் ஆதிகேசவன் கோயிலைப்பற்றிப் பாடிய பின்வரும் பாடல் ஒன்றை வாசித்திருந்தேன். அப்பொழுதுதான் இந்தக் கதையின் ஞாபகமும் வந்தது.

"வாட்டாற்றான் அடி வணங்கி
மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே"

அந்த கதையில் வரும் அறிதல் அல்லது காட்சியை இந்தப் பாடலில் நாம் காணமுடிகிறது அல்லவா?. "மா ஞாலம் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே" என்பதை காளிசரண் கண்டுகொண்ட தரிசனமாக நாம் கண்டுகொள்ள முடியும். அத்துடன் கடவுளைக் கறுப்பு நிறமாகச் சித்தரிப்பது நாட்டார் தெய்வ வழிபாட்டின் நடைமுறை. ஆனால் விஷ்ணு இதில் மிகக் கரியனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். "இதுதான் கடவுள், மனிதர்களின் கடவுள்" என்றும் காளிசரண் பிரமித்துச் சொல்கிறார். இது நம்மையும் நம் மரபையும் பிணைத்து வைக்கிறதல்லவா?. மனிதர்களின் கடவுள் என்பது எவ்வளவு உயரிய எண்ணம்.  தொகை மதங்களின் பன்மைத்துவத்தில் மனிதர்களின் கடவுள் என்பது மிக மிக அழுத்தமான அடையாளமாகும்.
கடவுளைக் கரியனாக உருவகிக்கும் இந்துஞான மரபின் மற்றொரு படிமம் இது. அதனால்தான் வெளியில் நிற்பவனுக்கு அது உலகளாவிய மனிதனுக்கான கடவுள் என்று உணர வைத்துள்ளது.

00
ஜெயமோகன்

"இட்டகவேலி நீலியும் மேலங்கோடு யட்சியும்" ஜெயமோகனின் குலதெய்வங்கள் என்று அடிக்கடி கூறுவார். அதனால்தான் என்னவோ தனது கொற்றவை புனைவிலும் "நீலி சொன்னது" என்றும் பல்வேறு கதைகளிலும் நீலியையும் யட்சியையும் ஒரு கதைப்பொருளாக அமைத்திருப்பார். யட்சி கதை ஜெயமோகன் சாகசப் பாணியில் எழுதிய ஒரு கதை. அதாவது தாய்- மகன் - பேத்தி என்ற மூன்று பேரின் உறவுத் தொடர்ச்சியில் தாய்- பேத்தி இருவருக்கும் இடையில் யட்சி பொதுவான குறியீடாகிறது. அதாவது அந்த குலதெய்வம் இவர்களைப் பின்தொடர்கிறது என்றல்லவா இந்த மரபைப் புரிந்து கொள்ளலாம்?. செயற்கையான முறையில்தான் தாய் தனக்கு யட்சி கதைகள் சொன்னாள் என்று மகன் நினைக்கிறான் (ஊகம்). ஆனால் தனது மகள் பைக்கில் சிறுகூந்தல் தீபரப்பிச் செல்கிறது என்று கதைசொல்லியாக உணர்வது அவருக்குள் யட்சி பற்றிய நம்பிக்கைகளைப் பரப்புகிறதோ என்று நமக்கு தோன்ற வைக்கிறது. ஆனால் முக்கியமான விடயம் யாதெனில் இங்கு ஈ.எம்.எஸ் என்ற கம்யூனிச அரசியல்வாதி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அவரது பிம்பம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. ஆனால் பாருங்கள் நீலி, யட்சி பற்றிய பிம்பங்களை அவர்களால் அப்புறப்படுத்தவே முடியவில்லை. இது மரபார்ந்த விவகாரம் அல்லவா?.

இதுபோல்தான் இரு கலைஞர்கள் என்ற கதையும்.நாம் அழுவதைக் காண ஒரு நண்பனும், அதனை நிறுத்த ஒரு குருவும் தேவை. இந்தக்கதை எனக்கு ஞாபகப்படுத்துவது ஜெயகாந்தன்- இளையராஜா- ரமணர். ஆனால் சில இடைத்தொடர்புகள்தான் உள்ளன. இந்தக்கதை எழுத்தாளனுக்கும் இசையமைப்பாளனுக்கும் இடையில் உள்ள தியானம் தொடர்பான அறிநிலை என்றே வரையறுக்கின்றேன்.

00

க. அயோத்திதாசர் தமக்குரிய மீட்சி என்று பௌத்தத்தைத் தெரிவு செய்து அந்த மரபுகளையே மிக ஆழமாகப் பேசினார். அதுபோலத்தான் மு.தளையசிங்கமும். அவரும் கம்யூனிசத்தை விட்டொழிதலே இந்த சமூகம் விடுதலைபெறச் சிறந்த வழி என்று மரபில் இருந்து நவீனம் நோக்கிச் சிந்தித்தார். நாம் ஜெயமோகனின் படைப்புக்களில் இந்த அபாரமான முகத்தைக் காணலாம். அவை மரபுக்கும், நவீனத்துக்கும் பாதை வகுப்பன. இயல்பற்ற அல்லது செயற்கைத்தன்மையினை உதறிவிடுவன.

00


Comments

Popular Posts