போகன் சங்கரின் உத்தரகோசமங்கை

( போகன் )
         
"என் உயரங்களின் மேல் 
ஊர்வலம் வருபவர்களே
எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்கள் வெளுத்த தெய்வத்தை
ஒருநாள் கறுத்த சேற்றில்
அடித்துக் கீழே போடுவேன்"

(கே.சச்சிதானந்தன்-மலையாளம்)

நாம் இயற்கையை விட்டு மிகத்தூரம் வந்துவிட்டோம் என்பதை எமது அன்றாடங்கள் நிரூபிக்கின்றது. மரங்களை வெட்டித் தேவையைத் தீர்க்க மட்டுமே வைத்திருக்கிறோம் என்ற எண்ணப்பாடு தொடர்ந்து நமது சந்நதிகளுக்கு விதைக்கப்படுகிறது. அதுவும் தமிழர்கள் சூழ்ந்த பகுதிகளில் அதற்கான கருத்தியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கிலங்கையிலுள்ள மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஒருவர் அரச மரத்தின் கிளைகள் வீதிப்பக்கத்துக்குத் தடையாக உள்ளது என்று அதன் சிலபகுதிகளை வெட்டிநீக்க அனுமதியளித்துள்ளார். இதனைக் கேள்வியுற்ற அப்பகுதிக்குப் பொறுப்பான பௌத்தகுரு ஒருவர் அப்பிரதேச செயலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்தார். இந்தத் தாக்குதல் முயற்சி பின்பு கற்றவர்களிடமும் நிர்வாக சேவையில் உள்ளவர்களிடமும் பாரிய விமர்சனத்தை உண்டாக்கியது.
தான்தோன்றி மருது

அரச மரம் என்பது புத்தபகவான் ஞானமுற்ற போதி மரம் என்று கூறப்படுவதுடன்,  பௌத்தர்களால் பல காலங்களாக அந்தமரம் ஒரு தொன்ம அடையாளமாகவும், புனித தெய்வமரமாகவும் பேணப்பட்டுவருகின்றது. ருவான்வெலிசாயாவிலுள்ள பழமையான அரசமரத்தின் ஓரிரு கிளைகள் சாய்ந்து விட்டது என்று அதனைத் தங்கமுலாம் பூசிய செயற்கை ஏணிக்கைகளால் இன்றும் தாங்கச் செய்துள்ளனர். அந்தளவுக்கு அரசமரம் என்ற தொன்மம் வழிபடப்படுகிறது.   இது ஒவ்வொரு மதங்களுக்கும் அவரவர் வரலாற்று முக்கியத்துவங்களுக்கு ஏற்ப உண்டாக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இக்கட்டுரையில் மதமோ, இனமோ முக்கியத்துவமில்லை. இங்கு கவிதைதான் முக்கியமானது. பின்வரும் கவிதையை ஆழத்திலிருந்து புரிந்து கொள்வதற்காக வழங்கப்பட்ட முற்கதைச் சுருக்கம்தான் மேற்படி கருத்துக்கள்.

போகன் சங்கரின் கவிதைத் தொகுப்பொன்றைச் சென்ற வருடம் வாசித்திருந்தேன். அதன் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்தது. நம்மாழ்வார் பாடிய "நல்நலப் புள்ளினங்காள்" என்ற கழிவிரக்கப் பாடலை நிகர்த்த தலைப்பு அது. "நெடுஞ்சாலையை மேயும் புள்" என்பது அத்தொகுப்பின் தலைப்பு. பறவைகளும் ஏனைய சிறு விலங்கினங்களும் தற்போது நெடுஞ்சாலைக்கு வருவதையே நிறுத்தி விட்டனவே, பின்னர் எங்ஙனம் இது நிகழும் என்ற நெருடல் எனக்குள் இருந்தது.

"நெடுச்சாலையை மேயும் 
புள் ஒன்றை 
இயற்கை தயாரித்துக்கொண்டிருந்தது.

கர்ப்பக்குழிக்குள் 
எட்டிப்பார்க்கும்
கருவியை மனிதன்
தயாரிக்கிறான்.

உருபெருக்கியின் அலகுக்குள்
குனிந்து பார்க்கும்
குழந்தையின் தலையை 
ஒரு புள்ளி எனக்கொண்டு

வரைய ஆரம்பிக்கிறான் 
பெருச்சித்திரக்காரன்

ஒரு யானைக்குப் புல்டோசரின்
பற்களைக் கொடுக்கலாமா 
என்று யோசிக்கிற கவிதை வேலையாள்.

இன்று
தாமதமாக எழுந்திருந்தான்"

நெடுஞ்சாலை புள்

இயற்கை, மனிதன், ஓவியன், கவிஞன் என்ற நான்கு புள்ளியில் இயற்கையைத் தவிர அனைத்தும் செயற்கைத் தன்மையையே போசிக்கின்றன அல்லவா? நம் பெண்கள் சுகப்பிரசவத்தைக் கண்டு பல பத்தாண்டுகளாகின்றன. ஓவியங்கள் பல Fantasy என்ற வகையறாக்குள் அடக்கப்படுகின்றன. மேலும் கவிதை எழுதும் நபர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் Ultra என்ற கூடாரத்தைச் சுமந்து கொண்டு ஏதோ எழுதி அதனைக் கவிதை என்கின்றார்கள். ஆனால் இயற்கை என்பது எப்போதும் நாம் மரங்களை அழித்து உண்டாக்கிய கார்ப்பெட் நிலங்களில் தனது வேரை இடவே முனைகிறது. தனது எச்சங்களால் மரங்களை உண்டாக்கவே விளைகிறது.  நெடுஞ்சாலையை உருவாக்க நாம் எத்தனை காடுகளை அழித்தாலும் நெடுச்சாலையை மேயும்  புள் ஒன்றை  இயற்கை தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம் தொடர்ந்து அவற்றை வேட்டையாடி அவற்றின் வாழ்விடங்களையும் அழிக்கக்கடவோமானோம்!!!. 

வன்னிநிலச் செவ்வல்லிComments