நடுகலே தெய்வம்!



இந்தப் பேரிடர்க் காலங்களில் செவ்வியல் இலக்கியங்களுடன் பயணிப்பது என்பது ஏதோ ஒரு விடுதலையுணர்வினையே உண்டாக்குகின்றது. குறுந்தொகையில் உள்ள பாடல்களில் ஆகச் சிறந்த ஒன்று என நான் கருதுவது  "காமம் காமம் என்ப" என்று தொடங்கும் மிளைப்பெருங்கந்தனின் பாடல்தான். சிறிய தழையுணவை (அதிமதுரத்தழை) உண்ட யானைக்கு அடங்கியிருந்த மதம் வெளியில் வருவதுபோல எமக்கு என்று (ஊழால் எழுதப்பட்ட) உரியவரை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாம் காணும்போது உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் இயல்பாகவே வெளிப்படும் என்று சொல்கிறார். ( தலைவி- அதிமதுரத்தழை, தலைவன்- யானை, மதம்- காமம்) இது அகப்பாடலிலுள்ள சிறந்த செய்யுள்களில் ஒன்று. இதயம் சார்ந்த மனவெழுச்சிகளையும் கற்பனைத்திறத்தையும் காண இந்த அகப்பாடல்கள் நமக்குதவும். ஆனால் புறப்பாடல்களே நமது பண்பாட்டின் தொடர்ச்சியையும், மரபுகளையும் பெருமளவில் வைத்துள்ளன. அப்படி புறப்பாடல்களை வாசிக்கும்போது கிடைத்த சொல்தான் "நடுகல்" என்பது. 

00

மறப்போர் புரிந்தவர்கள், வடக்கிருந்து மாண்டவர்கள், கற்பிற் சிறந்த மகளிர், அருஞ்செயல் புரிந்தோர். ஆகியோருக்குக் கல் நட்டு கடவுளாகக் கருதிப் பூசை செய்வதை ஆரம்பகாலத்தில் நடுகல் வழிபாடு என்பர். வீரத்தைப் பாராட்டி நடப்படுவதால் இதனை வீரக்கல் என்றும் கூறுவதுண்டு. (கல்வீரம் என்று இலங்கையில் சொல்வார்கள். இந்தப்பெயரில் இங்கு ஊர்கள் உள்ளன. இது இலக்கணப்போலிக்குரியது)

  இந்த நடுகற்கள் பல நமது கோயில்களில் தெய்வமாக வழிபடப்படுகின்றன. அல்லது கோயிலாக்கப்பட்டுள்ளன. அதன் வரலாறு நெடியது. அய்ரோப்பிய தேசங்களில்  இருந்த நடுகல் வழக்கத்தினை Menhir என்று கூறுகிறார்கள். பிரிட்டன் மொழியில்  Men என்றால் கல்  Hir என்றால் உயரமானது என்று பொருள். நெடுங்கல் என்று  இதனைத் தமிழில் வரையறுக்கலாம்.  இதைத்தான் அகநானூற்றின் பாடல்கள் "நட்ட போலும் நடா நெடுங்கல்" என்று குறிப்பிடுகிறன. இந்த நெடுங்கல் முறை படிப்படியாகக் குறுகிச் சிறிதாகிப் பின் பெருங் கோயிலாக வந்த வரலாற்றைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த நடுகல்தான் பழங்குடிப் பண்பாட்டை அறிய ஊற்றுக்கண்ணாக நம்முன் உள்ளது. ஆரம்பத்தில் மறவர், வேடர், பாணர், பறையர் போன்ற மரபில் வந்த வீரர்களுக்கே இந்த நடுகல் நாட்டப்பட்டுள்ளது. பின்புதான் அவை மன்னருக்கும், குறும்புகளுக்கும் என்று விரிவுறுகிறது. இந்த நடுகல் வழக்கம் 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளது.  இலங்கையிலும் இந்த நடுகல் வழக்கம் சுதந்திரத்தின் பின்பான இனப்போரில் அதிகம் பின்பற்றப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்த நடுகல் என்ற வழக்கம் யுத்தத்தில் இறந்த பல இயக்கங்களின் போராளிகளைக் கௌரவிக்க நடப்பட்டது. அதனைத் துயிலும் இல்லங்கள் என்று இங்கு குறிப்பிடுகின்றனர்.

00

நடுகல் வழிமுறைகளைத் தொல்காப்பியர் ஆறு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்று.

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில் கல்லொடு புணர"

அதாவது நடவேண்டிய கல்லை மலையில் கண்டெடுத்தல், தேர்ந்தெடுத்த கல்லைக் கொண்டு வருதல், அந்தக் கல்லில் வீரனின் பெயரையும் சிறப்பையும் பொறித்து நீரில் கழுவுதல், பின்பு அதனை நடவேண்டிய இடத்தில் நட்டு மாலைகளிட்டுச் சிறப்புச் செய்தல், இறுதியாக அவ்வீரனின் புகழையும், பெருமைகளையும் வாழ்த்திப் பாடுதல் என்று அதன் பொருளமையும். இன்றும் நம்மில் யாரேனும் இறந்தால் அவர்களைக் குறித்துப் பாடி அடக்கம் செய்யும் மரபு பின்சொன்ன வகையாகவே உள்ளது. இதைவிட நமது சிறுதெய்வ வழக்கிலும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. 

இந்த நடுகற்களின் ஆரம்பநிலையைச் சங்க காலத்தில் கற்பதுக்கை, கற்றிட்டை என்ற பெயரால் அழைத்தனர். ஒரு வீரன் இறந்ததும் உடலத்தைக் கல்லால் மூடப்பட்ட/ பதுக்கப்பட்ட தன்மையினால்  அதனை உண்ண முடியவில்லை என்று கழுகுகள் வருந்தியமை பற்றிப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பின்வரும் குறிப்புள்ளது. 

"அம்புபட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை திருந்து சிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும் உன்ன மரத்த
துன்னருங் கவலை"

00

இன்னொரு பாடலில் கற்பதுக்கை மீது மயிற்பீலியும் மாலையும் இட்டு அவ்வீரனின் பெயர் பொறித்தமை பற்றிய கூற்று இடம்பெறுகிறது. இது நடுகற்களின் படிப்படியான வளர்ச்சி என்றே கூறவேண்டும். 

"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும்"

நடுகற்கள் இந்தக் காலங்களில்தான் ஒரு வழிபாட்டுக்கு உரியனவாக மாற்றமுறுகின்றன. வாழ்த்திப் பாடல் பாடும் மரபில் இருந்து அந்த வீரனின் இறப்பை நினைந்து வழிபடும் மரபுக்கு மாற்றமடைகிறது.

"கல்லே பரவின் நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

என்பதில் குறிப்பிடுவது நடுகற்கள் வணங்குதற்குரிய தெய்வமாக்கப்பட்டுள்ளதையே.

00

இந்த வெற்று வழிபாட்டு மரபு, நாட்கள் செல்லும்போது நடுகல்லுக்குப் பலி கொடுத்து, நீராட்டி நெய்விளக்கு ஏற்றித் தெய்வம் ஏற்றி வழிபடும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.  இங்கிருந்துதான் கோயிலின் மூலவர் சிலையைக் குளிர்விக்கும் நீராட்டல் காரியத்துக்கான மூலம் பெறப்பட்டுள்ளது.   

"புடைநடு கல்லில் நாட்பலியூட்டி நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்"

மேலும் நடுகல்லை வழிபட்டால் மழைபெய்யும் என்ற நம்பிக்கையும் "தொழாதனை கழிதல் ஓம்புமதி" என்று
 ஏற்றப்படுகிறது.

மரணித்த அதிகமான் நெடுமானஞ்சியைப் பாடும் புறப் பாடல் ஒன்றில் கலத்தில் மதுவும் படைக்கப்பட்டதாக ஒரு விடயம் குறிப்பிடப்படுகிறது. தெய்வத்துக்கு மதுக்கொடையளித்தல் என்பது இன்றும் நமது நாட்டார் சிறுதெய்வ வழக்காறுகளில் உபயோகிக்கப்பட்டு வரும் வழக்காகும்.

"நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ"

பல்லி சொல்லும் வழக்கினை இன்றும் தீர்க்கதரிசனத்தின் முகாந்திரமாகக் கருதுவோர் உள்ளனர். நடுகல் மீதிருந்து ஒரு பல்லி சப்தமிடுகிறது என்றும்,  அதனைக் கேட்டு அரசன் படைகளைத் திருப்பிக்கொண்டு செல்கின்றான் என்ற ஒரு விடயம் அகநானூற்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.  "நிரைநிலை நடுகல் பொருந்தி இமையாது இரைநசை இக் கிடந்த முதுவாய்ப் பல்லி"

00

"நடுகல் காதை" என்று தனியான ஒரு காதை சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிறது. இது சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் எழுப்பி வழிபட்டதை விரிவாகச் சொல்கிறது. நடுகற் கோட்டம் எழுப்புதல் என்ற விடயம் முதலில் சிலம்பதிகாரத்தில் இடம்பெறுகிறது. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. 

00

நடுகற்களுக்குக் கோயில் எடுத்து வழிபட்ட மரபே பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்களாக மாற்றமடைகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் பெரும்படை என்பது இதையே குறிக்கின்றது போலும். நடுகல் முறைமை தனித்து ஒருபுறமாக இருந்தாலும் பள்ளிப்படைகளுக்கு மூலாதாரம் இந்த நடுகற்கள் என்பதே வரலாற்று உண்மை.

பள்ளிப்படை என்பது நடுகற்கள் மீது கோயில் எழுப்பப்படும் மரபாகும். இந்தக் கோயில்கள் மீது பின்வந்தகாலங்களில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து அவை சிவாலயங்களாக மாற்றப்பட்டன. ( பூநகரியின் மேற்கில் உள்ள மண்ணித்தலை சிவன் கோயில் கூட அவ்வகையான ஒன்று என்ற நம்பிக்கை எனக்குள்ளது )

நம்மரபில் முதலாவது பள்ளிப்படைக் கோயில் என்று அறியப்படுவது திருப்புறம்பியப் போரில் மாண்ட பிருதிவிபதி என்ற பல்லவ அரசனின் மகனான இராசாதித்த மஹாதேவன்  எடுப்பித்த கோயிலாகும். இதைவிட எழுத்து ஆதாரமாக முதல் பள்ளிப்படைக் கோயில் என்று நமக்குக் கிடைப்பது ஆதித்த சோழனின் பள்ளிப்படைக் கோயிலான கோதண்ட ராமேசுவரமாகும். ஆதித்தனுக்கு இன்னொரு பெயர் கோதண்டராமன். இப்பள்ளிப்படையை எடுப்பித்த ஆதித்தனின் மகனான பராந்தகனின் கல்வெட்டில்
"....பேராற்றூர் சபையோமும் நகரத்தோமும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் ஶ்ரீ கோதண்டராமீஸ்வராகிய ஆதித்தேஸ்வரத்து ஆள்வார்க்கு..." என்ற குறிப்பு அதில் உள்ளது.

பராந்தகனுக்குப் பின்பு ராஜராஜ சோழன் தனது பாட்டனுக்கு சோழச்சுரம் என்ற பள்ளிப்படைக் கோயிலை எடுப்பித்துள்ளதாக அறியமுடிகிறது. அதற்கு லகுலீசப் பண்டிதர்களை மேற்பார்வைக்கு விடுகின்றார் ராஜ ராஜன். இங்குள்ள முக்கிய விடயம் யாதெனில் தமிழ் வரலாற்றில் கண்டு பிடிக்கப்பட்ட மிகத்தொன்மையான லிங்கம் குடிமல்லம் சிவலிங்கமாகும். இது கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது. இந்த லிங்கம் லகுலீச பாசுபதருக்கு உரியது என்பது தொல்லியலாளரின் கருத்து. பாசுபதர் யாரென்று ஒரு குழப்பம் உங்களுக்கு ஏற்படும். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட பாசுபதர், கபாலிகர், காளாமுகர், மாவிரதிகள் என்ற நான்கு குழுக்கள் தமிழகத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவரே இந்த லகுலீச பாசுபதர் (காளாமுகர்). லகுலீச பாசுபதரின் கொள்கைப்படியே தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது என்பது ஆய்வு மூலம் கிடைக்கும் உண்மை. இந்த லகுலீசப் பாசுபதரே இடைக்காலச் சோழருக்கு சைவாசிரியர்கள். தொடக்ககாலக் காளாமுகர்கள் சிவகணங்களைக் குளிரச் செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த நடுகலில் கூட கல்லை நீரால்  குளிர்விக்கும் மரபு இருந்துள்ளது. ராஜ ராஜன் பள்ளிப்படைக் கோயில்களுக்கு லகுலீசரை நியமிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கும். குறிப்பாக பிற்கால வட்டெழுத்தால் ஆன நடுகல் பற்றிய ஆய்வினை மேற்கொள்பவர்கள் லகுலீசப் பாசுபதம் பற்றிய அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

00

நடுகல்லாகத் தோன்றி பின்பு நடுகற்பந்தலாக இருந்து காலங்காலமாக திரிபுற்று பள்ளிப்படை என்னும் சிவாலயங்களாக மாற்றமுற்றன இந்தப் பண்பாட்டின் மூலங்கள். 

00

நமது பகுதிகளில் சொற்பகால வரலாறு உள்ள  வீரக்கல்/நடுகல்/நெடுங்கல் க்கு உரிய படங்கள்.

01- கல்வீரங்குளம் நடுகல்.
02- வெடுக்குநாரி நெடுங்கல்.
02- மண்ணித்தலை பள்ளிப்படை.




.

Comments

Popular Posts