தனிமையின் குறிப்புகள் 01

தனிமை சில சமயங்களில்  பயங்கரத்தை உண்டாக்கும் குரூரம் மிக்கது. அந்தக் குரூரம் அமானுஷ்யமாக நமக்குள் இயங்கிக் கொண்டே தனிமையை உற்சாகப்படுத்தும். மொத்தத்தில் குரூரமும், பயங்கரமும் உற்சாகம் என்ற வஸ்தில் சங்கமிக்கிறது. அமானுஷ்யம் நம்மை  இயக்குகிறது.  இவற்றிலிருந்து நமக்குள் சாதகத்தின் பிரம்மாண்ட எண்ணச் சித்திரமாய் இருக்கும் குரு எம்மை வழிநடாத்தும்.  தேவதேவனின் ஒரு கவிதை எனக்கு இந்த ஞாபகத்தை உண்டாக்கிவிடுகிறது.
தேவதேவன்
தனியான ஒரு இயற்கைப் பிரதேசத்தில்  அருவிகளின் ஓசை கேட்டமர்ந்திருக்க நான் விரும்புவேன். இங்குதான் கதவமும் இல்லை, சாளரமும் இல்லை. நம் இமையிதழ்களைத் திறந்தும் மூடியும் எதையும் காணலாம். எதையும் புரியலாம். கபிலவஸ்துவில் போதியின் கீழ் சித்தார்த்தன் எதைக் கேட்டிருப்பான்?. அருவியின் அருகில் சென்றமர்ந்து அந்த மணல் தூய்மையாக அரிக்கப்பட்டு புது ஊற்று ஒன்று உருவாவதன் ஓசையைக் கேட்டிருப்பானா? . அவன் தனது தரிசனங்களை அடையும் தருவாயில் எத்தனை புலிகளின் இரைக் கண்களைக் கண்டிருப்பான். எனக்கு இந்தக் காட்டு அருவியின் நடுவில் ஒளி பாயாத கருங்குன்றில் ஏறியமரும்போது இந்தச் சிந்தனைகள் தோன்றும். ஒரு சூன்யத்தில் வந்து நிற்பேன். மீண்டும் மறுநாள் காலை இந்த ஞாபகம். விழிமூடிய இமைப்பரப்பின் தரிசனம் மிக அபூர்வமானது. அதனை அடைவதற்கு நமக்கு ஒரு மணற்குன்று (குரு) தேவை.  நமக்கு ஒரு புலியும் (எண்ணச்சிதறல்) தேவை. அப்போதுதான் தனிமை இன்னொரு தரிசனத்தை நோக்கி நகரும்.

வன்னிக்கானகத்தில் ஓரிடம்


தேவதேவனின் கவிதை:

"என் தனிமையைப் போக்கும்
ஒரு மணற்குன்று.
விழிமூடிய இமைப் பரப்பு.
நான் போய் அமர்ந்திருந்தேன்:
இமைப்பரப்பைக் குனிந்து
முத்தமிடும் இதழ்வேளை.

முத்தமிட்டதை முத்தமிட்டது விலகி நின்று பார்க்கையில்
மெல்ல இமை தூக்கிற்று
ஒரு சுரங்கக் கதவைப்போல் அந்த விழி
உள்ளே: ஒரு மலைப் பிரதேசத்தின்
கிடுகிடு பள்ளத்தாக்கின் அடியில் ஓர் ஓடை
அந்த ஓடையினின்று
என்னை ஈர்க்கும் ஒரு வாசனை
சரிந்து உருண்டு விழுந்துவிடாதபடி
அதீதமான ஓர் ஆர்வம் உந்த
நுண்ணுணர்வு துலங்க வெகு பத்திரமாக
கிடுகிடுவென வந்து சேர்ந்துவிட்டேன்.

வந்து சேர்ந்த பின்னும்
குளிராய் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு தயக்கம் 
இன்னும் நான் கடக்க வேண்டிய தூரமாயிற்று
எங்கே அந்த வழி?

மூக்கு நுனியால் சோதித்து நிச்சயித்துக்கொண்டு
காட்டின் ஒளி நிழலை மீட்டியபடி
தேக்குமரச் சருகுகள் அதை உச்சரிக்க
தனது இரையை நோக்கி
தனது இயல்பான பசியின் கம்பீரம் துலங்க
நெருங்கிக்கொண்டிருந்தது ஒரு புலி

ஓடையின் பளிங்கு நீரில் அதன் முகத்தைக்
கண்ட மாத்திரத்தில்
அலறி அடித்துக் கிடுகிடுவென ஏறி
ஓட்டமாய் ஓடித் தப்பி
வெகுதூரம் வந்து திரும்பிப் பார்த்தேன்.

தூரத்தே நின்று என்னை அழைத்து
என் தனிமையைப் போக்கிய ஒரு மணற்குன்று
விழி மூடிய அந்த இமைப்பரப்பு."

Comments