RSS மற்றும் இலங்கைத் தமிழர்கள்.

"ஆர்.எஸ்.எஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஓர் அமைப்பு. அதன் ஆற்றலை இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பயன்படுத்த முடியும். அதற்கு எதிராக மதவெறியைத் தூண்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தங்கள் நடவடிக்கை மூலம் நிரூபிப்பது அவர்கள் பொறுப்பு.  கட்டுப்பாடும் சாதி வேறுபாடு பார்க்காத தன்மையும் ஆர்.எஸ்.எஸ் உடைய சிறப்பம்சங்களாகும்."
-மஹாத்மா காந்தி.
To Members Of the R.S.S
Harijan, 28-September-1947.
====
ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத் தேசியவாத இயக்கம் பற்றி காந்தி தனது பத்திரிகை மூலம் 1947 இல் எழுதிய கட்டுரையில் இருந்த பகுதிகள் அவை. 1933-1947 வரை காந்தி வெளியிட்டு வந்த ஹரிஜான் என்ற பத்திரிகை மூலமாக இக் கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். 1948 இல் அதே இயக்கத்தின் கடும்போக்காளர் ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதே நேரம் தான் காந்தியைப் படுகொலை செய்யக் காரணம் இஸ்லாமிய-இந்து கலவரங்களில் காந்தி முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொண்டது என்று நாதுராம் கோட்ஷேவால் நியாயம் கற்பிக்கப்பட்டது. காந்தி கூறியது போல இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் முதன்முதல் பலியானவர் காந்திதான்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ் இன் மதச் சீர்திருத்தங்களும், சமூக நல உதவிகளும், மதமாற்றத் தடுப்புக்களும், தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுவதும் இன்றுவரை தொடர்ந்து வரும் ஒன்றாகும். ஆனால் அவர்களிடமுள்ள மிகப் பெரிய தவறு மாற்று மதங்கள் மீது பல இடங்களில் பிரயோகிக்கப்படும் வன்முறையாகும். அந்த வன்முறைக்கு மாற்று மத அடிப்படைவாத இயக்கங்களின் பங்கு சிறு அளவு என்றால் இவர்கள் அதனைப் பல மடங்காக ஆக்குகின்றனர்.
பொதுவாக இங்குள்ள தமிழ் பேசும் அநேக இந்துக்களிடம் RSS என்றால் ஒட்டுமொத்தமாகவே இந்து அடிப்படைவாத இயக்கம் என்ற மாயை திராவிட,  இடதுசாரிய மற்றும் இஸ்லாமிய அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இங்குள்ள மிஸனரிகள், ஜமாத்கள், ஜமியத்துல் உலமாக்கள் மற்றும் மாற்றுமத அடிப்படைவாத இயக்கங்கள் பற்றி இந்த இடதுசாரிகளும் வாய் திறக்க மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படியான தருணங்களில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அங்கு மய்யம் கொள்கிறது. அநேக தருணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவையை அவ்விட மக்கள் உணர்ந்தவர்களாகவும் மாறிப் போய்விடுகின்றனர். இதற்காகவே காத்திருந்து சரியான தருணத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொழிற்படுகிறது.
குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்துக்களின் நிலங்களை முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அதிகாரம் மூலம் அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த காணி அபகரிப்பு வடக்கு வரை நீளத்தொடங்கியுள்ளது. அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தன்னுடைய நேர்காணலில் சொன்னார் தான் காளிகோயிலை உடைத்து முஸ்லிம்களுக்குக் காணி வாங்கிக் கொடுத்ததாக. அப்படி அதில் கோயில் இருந்திருந்தால் முஸ்லிம்களால் அங்கு இயங்கியிருக்க முடியாது என்பதையும் தவறாது கூறிச்சென்றார்.
இவற்றை இங்கு நாம் வெளிப்படையாகப் பேச முடியாது. இந்தியாவின் வடகிழக்கில் நடந்த கிறிஸ்த்துவ இஸ்லாமிய மதமாற்றங்களையும் பிரிவினைவாத இயக்கங்கள் பற்றியும் பேசுகின்ற ஒரு இந்தியர் மீது எப்படி அடிப்படைவாத மற்றும் பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்படுமோ அதுபோலத்தான் இங்கும் இந்த விடயத்தைப் பேசும் போது இதே மாதிரியான முத்திரைகள் எம்மீது குத்தப்படுகின்றன. நீ ஒரு இந்து மதவாதி. தமிழ் இனவாதி. சிங்கள பௌத்தக் கைக்கூலி என்று பல அறிவு மட்டங்களிலிருந்து இந்தத் தாக்குதல் எம்மீது தொடுக்கப்படும்.
"என்வழிக்கு வா, இல்லையென்றால் உன்வழி காலி" என்ற வெறுப்புக் கோஷங்களை இங்குள்ள அநேக இஸ்லாமியக் குழுக்கள் பிரச்சாரங்கள் செய்து வருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாமியர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகிய பலர் தங்களுடைய ஆட்சேபங்களைச் சொல்லிக் கேட்டுள்ளேன். இதை வாசிக்கும் தருணத்தில் பலர் தங்களுக்குள் கூறுவர் உண்மையைத்தான் எழுதியுள்ளேன் என்று. அவர்கள் தங்களைக் "காஃபிர்" என்ற வன்பதங்கொண்டு அழைப்பர் என்று பலர் வேதனையுடன் கூறியுள்ளனர். இதில் வேதனைப்பட என்ன இருக்கப் போகிறது. இந்த அடிப்படைவாதம் ஒவ்வொரு மசூதிகளிலும் கற்பிக்கப்படுகிறது. மாற்றுச் சமூகம் மீது அத்துமீற வேண்டும் என்ற கொள்கை இவர்களால் மதம் மூலம் கற்பிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பிய பல இஸ்லாமியர்கள் வாழத்தான் செய்கிறார்கள். இதுவே அரசியல் அதிகாரம் கையில் கிடைத்ததும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மாற்றுச் சமூகம் மீது வெறுப்பரசியல் கட்டவிழ்க்கப்படுகிறது. சிங்களவர்கள்  தமிழர்கள் மீது இனவெறியைப் பிரயோகிப்பதை நிறுத்திவிட்டனர். அதற்குப் பதிலாக இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகார ரீதியில் தமிழர்மீது அடையாள அழிப்பைச் செய்யக் களமிறங்கியுள்ளது. இதற்கான எதிர்வினையாகத் தமிழ் அடையாளத்துடன் கலந்த  ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களை பலர் இயல்பாகவே விரும்புகின்றனர். பலர் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கூறுகின்றனர்.
இவர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இத்தேசத்தைத் துண்டாடி தனிநாடு கேட்காத வகையில் இந்து தேசியத்தை இலங்கையில் உருவாக்கலாம். முக்கியமாக இந்துச் சமூகத்தில் காலம் காலமாக இருந்துவரும் சாதிப் பகுபாடுகள் மற்றும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திலுள்ள பிரதேச வாதங்கள் இல்லாத ஒரு முன்னகர்வையும் மாற்று மதங்கள் மீது வன்முறைகள் இல்லாமல் மேற்கொள்வார்களானால் இவர்களுக்கு அநேகமான ஆதரவை மக்கள் வழங்குவர். அவற்றுக்கான களப்பணிகளைச் செய்வதில் தீவிரமான அர்ப்பணிப்பு இருக்கவேண்டும்.
பி.கு: இந்து மதச் சடங்குகளைத் தீவிரமாகப் பின்பற்றாத மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவனின் பதிவு.

Comments

Popular Posts