இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு: ராமச்சந்திர குஹா.

ராமச்சந்திர குஹா எழுதிய இந்திய வரலாற்றாய்வு நூல். அநேக இடதுசாரிகளால் இந்துத்துவச் சார்பு நூல் என்று பச்சையாகவும், பொய்யாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் இந்நூலை பிராந்தியத்தின் பூகோள அரசியல் அறிவைப் பெறுவதற்காகவும் காந்திக்குப் பிற்பட்ட இந்திய தேசத்தின் வரலாற்றை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ளவும் வாசிக்கலாம். நூலாசிரியர் தனது நூன்முத்தில் எழுதியிருப்பார் இது உலக வரலாற்றில் ஆறில் ஒரு பகுதி வரலாற்றைக் கூறுகிறது என்று. இந்நூலைத் தர்க்க பூர்வமாகவும் வரலாற்று ஆய்வு நோக்கிலும் நிராகரிக்க முடியாதவர்கள் கூறும் வார்த்தை இது ஒரு இந்துத்துவ நூல் என்று.
இந்தியா பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது என்பதை மிகப் பெரிய வரலாறாக நூற்றுக்கு மேற்பட்ட நூல்களில் எழுதியவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னரான இந்திய யூனியன் ஒன்றிணைவை நேர்மையான முறையில் யாரும் பதிவு செய்யவில்லை. இங்கு இந்திய யூனியன் என்று குறிப்பிட்டது அய்நூற்றுக்கும் மேற்பட்ட பழம்பெரும் இந்தியச் சமஸ்தானங்களையும் தேசியத்துக்குள் இணைத்ததையும் பற்றியாகும். இவற்றை சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு எப்படி தேசம் முழுமையும் அலைந்து ஒரே தேசமாக அமைத்தார்கள். அவற்றின் முன்னிருந்த பிரிவினைகளை அகற்ற எவ்வளவு அர்ப்பணிப்பைப் பட்டேல் செய்தார் என்று வாசிக்கும் போது  இயல்பாகவே அவர் மிகச் சரியான ஆளுமை மிக்க அரசியல் அதிகாரி என்ற எண்ணம் நம்மீது ஏற்பட்டு விடுகிறது.
1.ஜீனகத்.
2.திருவிதாங்கூர்.
3.ஜோத்பூர்.
4.ஹைதராபாத் நிசாம்.
5.போபால்.
6.ஜம்மு காஷ்மீர்.
இந்தச் சக்தி மிக்க ஆறு சமஸ்தானங்களும் இந்திய தேசிய ஒருமைக்குள் வர மறுத்து விடுகின்றன. இவற்றை பட்டேல் தலைமையிலான மந்திரி குழுவும் பணிக்கர், மற்றும் வி.பி. மேனன் முதலிய ராஜதந்திரிகளும் முயன்று இந்தியாவுடன் சேர்த்து விடுகின்றனர். குறிப்பாக ஹைதராபாத் நிஜாம்களின் மீது ராணுவ நடவடிக்கையைச் செய்த பிறகே இந்த இணைப்புச் சாத்தியமாகிறது. இப்போது உள்ள இந்தியா கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னர் பிரிவினைகள் சூழ்ந்ததாகவே இருந்துள்ளது. இவற்றை அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் இல்லாமல் செய்தே இந்திய தேசியத்தைக் கட்டமைத்துள்ளனர். இங்குள்ள  இடதுசாரிகள் தேசியம் என்பது கற்பிதம் என்று தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளனர்.  ஆனால் அதனை உதறித்தள்ளிக் கொண்டே இந்தியத் தேசியம் நிரந்தரமாகச் சிதறாமல் உள்ளது. அதன் காரணமாக இடதுசாரிகள் இந்நூலை மறுப்பதில் ஆச்சரியமில்லை.
இதன் முதற்பாகம் மட்டுமே இதுவரை வாசிக்க முடிந்தது. இரண்டாம் பாகம் மேலும் பல வரலாறுகளையும், அறிதல்களையும் தந்து செல்லும். இந்திய வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகத் துணைக்கண்டத்துடன் சாய்ந்துள்ள அனைவரும் வாசிக்கவேண்டிய மிக முக்கியமான நூல் இது. இது போன்ற வரலாற்று நூல்களை உருவாக்க குஹாவுக்கு எத்தனை ஆண்டுகள் சென்றது என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் இந்த நம்பகமான ஆய்வுக்கு தன் வாழ்வில் ஆறில் ஒரு பங்கைச் செலவழித்திருப்பார் என்று நம்பலாம். மிக முக்கியமான இதன் தமிழ் மொழிபெயர்ப்பு பி.ஆர் சாரதியினுடையது. மிகச் சரளமான நடையிலுள்ளது. இந்திய வரலாறு பற்றியும் சமகாலப் பிரச்சனைகளின்  வரலாற்றுத் தொடர்புகள் பற்றி  அறிந்துகொள்ளக் கட்டாயம் வாசிக்கப்படவேண்டிய நூல்களில் இதனை ஒன்றாக வரையறுக்க முடியும். இதனை முழுமையாக வாசிக்காதவர்கள்தான் இந்நூலை இந்துத்துவ நூல் என்று புலம்புகின்றனர்.
புத்தகத்திலிருந்து ஒரு பகுதி:
"காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்று எப்போதும் விரும்பியவர் நேரு. மாறாக படேல் ஒரு சமயம் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் மனம் செப்டம்பர் 13ம் திகதியன்றுபாகிஸ்தான் ஜூனகத் சமஸ்தான இணைப்பை ஏற்றபோது மாறிவிட்டது. முஸ்லிம் அரசர் ஆளும் இந்துப் பெரும்பான்மை சமஸ்தான இணைப்பை பாகிஸ்தான் ஏற்கலாம் என்றால் இந்து அரசர் ஆளும் முஸ்லிம் பெரும்பான்மை சமஸ்தானத்தில் ஏன் சர்தார் நாட்டம் கொள்ளக்கூடாது"
-பக்கம் 96.

Comments

Popular Posts