எழுத்துச் சீர்திருத்தமும் ஈவேராவும்: திரிபுகள்.

னை, னா, லை, னோ, னா இந்த எழுத்துச் சீர்திருத்தங்களைத் தமிழில் கொணர்ந்தது ஈ.வே.ராமசாமி என்று பெரியாரிஸ்டுகள் இன்று கூச்சலிடுகின்றனர். முடிந்தால் இவற்றை விட்டு எழுதிக்காட்டுங்கள் என்று  சவால் வேறு விடுகிறார்கள். இவர்களது போதாமையை நினைத்துப் பரிதாபப்படமட்டுமே முடியும்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் பல காலமாக நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக வீரமாமுனிவர் நிகழ்த்திய எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமானது. ஆனால் தமிழறிவு இல்லாத ராமசாமி உண்மையில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்தாரா என்றால் இல்லை என்பதே எனது பதில்.
ணை, ளை, னை, ணா, றா, னா இவற்றை முதல் முதலில் எழுதிக் காட்டியது சொ.முருகப்பா என்கிற ஒரு தமிழ் இதழாசிரியர். அதன் பின்பே இந்தச் சீர்திருத்தத்தை முருகப்பாவிடமிருந்து கொப்பி செய்து ஈவேரா தனது குடியரசிலும், விடுதலையிலும் எழுதத் தொடங்குகிறார். செல்வ வளம் மிக்கவரான ஈவேரா தொடர்ந்து இதழ் நடாத்துகிறார். ஆரம்பத்தில் இதனை எழுதிக்காட்டிய சொ. முருகப்பா வரலாற்றில் இன்று மறக்கப்பட்டுள்ளார். 1930-1931 இந்த இடைவெளியில்தான் சொ.முருகப்பா அந்தச் சீர்திருத்த முறைமையைத் தன்னுடைய குமரன் இதழ்மூலம் கொண்டுவந்தார். ஆனால் ஈவேரா 1935 இன் பிறகுதான் இதனை அறிமுகப்படுத்துகிறார். ஈவேரா தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்று பெரியாரிஸ்டுகளால் செய்யப்படும் வரலாற்றுத் திரிபு எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் சீர்திருத்த வரலாற்றைப் பார்த்தால் தெரியும் சாதியத்துக்கு எதிராக ஆரம்பத்தில் போராடிய எம்.சி. ராஜா மற்றும் இரட்டைமலை ஸ்ரீநிவாசன் முதலானவர்கள் இன்று வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டுள்ளனர். கூச்சலுடன் மேலெழுந்த ஈவேரா மட்டுமே சாதி எதிர்ப்பின் பிதாமகன் என்று முத்திரை குத்துகின்றனர். அதே போன்றுதான் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இவர்களது திரிபுக் கருத்தும்.
ஈ.வே. ராமசாமி தமிழறிவு அற்ற சமூகச் சீர்திருத்தவாதி. அவரை அனைத்துக்குமான மேதாவி என்று வரையறுப்பது முட்டாள்த்தனம். போக்கிரித்தனம். இதற்குள் புரையோடிக்கிடக்கும் கேவலமான அரசியல் ஆதாயம் தமிழர்களைத் தற்குறிகளாக்கியபடிதான் இருக்கும். உண்மையான வரலாறுகள் இப்படித்தான் மறக்கடிக்கப்படும். இன்றைய இணைய காலத்தில் ராமசாமியை ஒரு அய்க்கோன் (Icon) ஆக ஆக்கித் திரியும் மூடர்களைப் பற்றி எனக்கொரு கவலையும் இல்லை. ஆனால் தமிழ் வரலாற்றின் முன்னோடிகளை ஈவேரா என்ற ஒரேயொரு அரசியல் முன்மாதிரியைக் கொண்டு மறக்கடிப்பதுதான் கொடுமையானது.
நல்ல உதாரணம் ஒன்று உண்டு. அண்மையில் ஒரு நண்பர் பேசும்போது கூறினார் பண்டார வன்னியன் என்கிற தமிழரசனின் சிலையைப் பார்த்துச் சிங்களப் போலிஸ்காரர் ஒருவர் கூறினாராம் பண்டார வன்னியன் ஒரு சிங்கள அரசர் என்று. ஏனென்றால் "பண்டார" என்பது இங்குள்ள சிங்களவர்களின் பெயர்களில் காணக்கூடிய ஒன்று. அந்த போலிஸ்காரருக்கு பண்டார வன்னியன் ஒரு தமிழ்ப் போர் வீரன், வன்னியின் கடைசித் தமிழ் அரசன் என்ற வரலாறு தெரியாமல் போனதில் சிறிய பெயர் அடையாளமே குறுக்காக நின்றுள்ளது. அந்த போலிஸ்காரரைப் போலத்தான் ஈ.வே. ராமசாமியைப் பின்தொடர்ந்து கூச்சல் போடுபவர்களின் அறியாமையும்.
வரலாறு தொடர்ந்து திரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது.  இந்த பெரியாரிஸ்டுகள் திரித்த வரலாற்றைவிட, கேவலப்படுத்திய தமிழ் மரபைவிட வேறு யாருமே இங்கு செய்யமாட்டார்கள். சொ.முருகப்பா கம்பராமாயணத்தை மிக உவந்து ஏற்றுப் பொருள் விளக்கம் எழுதி பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். ஆனால் ராமசாமி என்ன செய்தால் கம்பராமாயணத்தை எரித்துத் தமிழர்களின் மதச்சார்பின்மையின் அறிவுக்கருவூலமான திருக்குறளைக் காறி உமிழ்ந்தார்.
என்னைக் கேட்டால் ராமசாமி ஒரு பொருட்படுத்த வேண்டிய தமிழறிஞர், எழுத்துச் சீர்திருத்தவாதி என்று சொல்லமாட்டேன். ஒரு சாதாரணமான சமூகசேவகர். ஜனநாயகத்தை விரும்பியவர். அவ்வளவுதான். அதற்கும் அவர் மட்டுமே முன்னோடி இல்லை.

Comments

Popular Posts