ஜெயமோகன்.

'ஜெயமோகனின் அவதூறுகள்' என்ற தலைப்பில் முப்பது கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை இடதுசாரிக் கும்பல்கள் வெளியிடவுள்ளனர். அதற்கு ஒரு பாராட்டை இவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஆனால் வழக்கம் போல இந்நூலையும் ஜெயமோகன் கண்டுகொள்ள மாட்டார். ஏனென்றால் இதில் பாதிப்பேர் ஜெயமோகனை முழுமையாகப் படிக்காமல் விளாசி எடுக்கப் போகிறார்கள். இவற்றுக்கு எதிர்வினையாற்றி ஜெயமோகன் தனது காலத்தை வீணடிக்க மாட்டார். இவர்களில் பலபேரின் முந்தைய கட்டுரைகளை வாசிக்கும் போது இதனை உணர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக தமிழ் அறிவுச் சூழலில் ஜெமோவின் எழுத்துப் பாதிப்பு அதிகமாகத் தொடங்கியுள்ளது. அதனை இப்படியான நூல்களை வெளியிட்டு ஈடுகட்ட நினைக்கிறார்கள். நான் கருதுவது சரியாக இருந்தால் ஜெமோ மீது பின்வரும் முத்திரைகளை அந்தக் கட்டுரை நூல் குத்திக்கொண்டு வரும். 
1. இந்துத்துவ மதவாதி.
2. RSS பாசிஸ்ட்.
3. தலித் விரோதி.
4. சாதி வெறியர்.
5. தமிழீழம் மற்றும் புலி எதிர்ப்பாளர்.
6. தமிழின விரோதி.
7. இனவாத மலையாளி நாயர்.
8. இஸ்லாமிய எதிர்ப்பாளர்.
9. மார்க்சிய-கம்யூனிச-இடதுசாரி எதிர்ப்பாளர்.
10. மரபுவாதி.
11. பிற்போக்குவாதி.
12. இந்தியத் தேசியவாதி.
13. காந்திய- அம்பேத்காரிய விரோதி.
14. கிறிஸ்த்தவ விரோதி.
15. ஈவேரா வரலாற்றைத் திரிப்பவர்.
16. தமிழிலக்கிய மரபுகளை மாற்றுபவர்.
இத்தனை முத்திரைகளை எப்படிக் குத்துவார்கள் என்பதில்தான் சுவாரசியமே அடங்கியுள்ளது. தர்க்கபூர்வமான நியாயங்கள் இல்லாமலும் தரவுப் பிழைகளையும் முன்வைத்தே இவர்கள் இதனைச் செய்வார்கள். ஜெமோ மீது எதிர்வினையாற்றிய பல அறிவுஜீவிகளை வாசித்துள்ளேன். அநேகமானவர்கள் அவர் மீது உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தத்தக்க வசைகளையே பொழிவர். எவ்வித நியாயமும், வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் கண்டமேனிக்கு வசைபாடுவார்கள். உதாரணமாக "எனது இந்தியா" என்ற ஜெமோவின் கட்டுரைக்கு அ.மார்க்ஸ் எழுதிய எதிர்வினையில் பாதிக்கு மேல் தரவுப்பிழைகளால் ஆனது.  ஆனால் இவையனைத்தையும் அவ்வளவு லாவகமாக ஜெமோ கடந்து சென்றுவிடுவார். குறிப்பாக எஸ்.வி. ராஜதுரைதான் வசைபாடுவதை முதலில் தொடங்கி வைத்தவர் என்று நினைக்கிறேன். இது பிற்பாடு அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்திரன் என்று கோட்பாட்டு மட்டத்தில் பரவத் தொடங்கியது. இன்று வரையும் கூவுகிறார்கள். ஆனால் ஒன்றுமே வேலைக்கு ஆவதாகத் தெரியவில்லை. ஜெமோவை எதிர்த்தவர்களில் பாதிப்பேர் ஜெமோவின் எழுத்தைப் புரிந்துகொண்டு தர்க்கபூர்வமாக எழுதி இயங்கி வருகின்றனர்.
ஆனால் இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான விடயம் இவை அத்தனையையும் எதிர்கொண்டு, மான நஷ்ட வழக்குகளையும் சந்தித்துக் கொண்டு ஜெமோ தன்னை அறிவு மட்டத்தில் கட்டமைத்துள்ள விதம் இன்றும் பிரமிக்க வைக்கிறது. உண்மையில் அந்த லெஜன்டைப் பற்றிப் பேசவும் வசைபாடவும் ஒரு தகுதி தேவை என்றே தோன்றுகிறது. அந்தத் தகுதி இப்படி வெறுப்புடன் உரையாடுபவர்களிடம் இருக்கும் என்று தோன்றவில்லை.

Comments

Popular Posts