யூமா வாசுகியின் மஞ்சள் வெயில்.
பாடசாலைக் காலங்களில் பெண்களுடன் பேசுவதற்கு மிகக் கூச்சப்பட்ட ஒருவனாகவே நீண்டகாலமாக இருந்து வந்தேன். பின்னர் பல்கலைக்கழகம் சென்ற காலப்பகுதியில் பெண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான வெளி உருவானது. இதற்கான காரணம் எனது மாவட்டத்திலிருந்து நான் பல்கலைக்கழகம் சென்ற இடம் கிட்டத்தட்ட நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அச்ச உணர்வுகள் அற்றுப் பெண்களுடன் பழகும் இயல்பான குணம் மேலோங்கிக்கொண்டது. ஆனால் அவ்வாறு பேசும் பெண்களுடன் எந்த அந்நியோன்யமான உரையாடல்களையும் நான் மேற்கொண்டதில்லை. குறிப்பாக ஒரு சிங்களப் பெண் மிக நேசமான மொழியால் ஓரிரு வார்த்தைகள் என்னுடன் பேசிப் பழகுவார். அப்போது சிங்கள மொழிப் பரிட்சயம் எனக்கு இல்லை என்பதால் தெரிந்த ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பேன். சில காரணங்களுக்காகப் பல்கலைக் கழகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். வெளியேறிய பின்னர் சிங்களப் பெண் பல தடவைகள் தொடர்புகொண்டு பல்கலைக் கழகத்தில் இணையுமாறு வற்புறுத்துவார்.
மிகக் குழப்பமான மனநிலையுடன் நான் அங்கிருந்து வெளியேறி மிகத் தெளிவாகவே இலக்கிய வாசிப்பைத் தேர்ந்தெடுத்தேன். நீண்டகாலம் தொடர்ந்து வாசித்தேன். யாரிடமும் எந்தப் புத்தகத்தையும் இரவல் வாங்கக்கூடாது என்று இப்போதுவரை அதே முறையைப் பின்பற்றுகிறேன். புத்தக வாசிப்பின் ஆரம்ப காலங்களில் மிக விரக்தியான ஒரு மனநிலையில் இருந்தே என்னைத் தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறேன். இப்படி இலக்கியப் புத்தகம் வாசிக்கும் போது சொல்வார்கள் இலக்கியம் சோறு போடாது என்று. எல்லாம் அறிந்துதான் வாசிக்கின்றேன் என்ற பதிலை அவர்களுக்கு வழங்கினேன். இந்தத் தீவிர இலக்கிய வாசிப்பில் நான் ஆரம்பத்தில் கண்டடைந்தது சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதை நூலான "தொலைவிலிருக்கும் கவிதைகள்" என்ற தொகுப்பு. என்னை ஆரம்ப காலங்களில் கவிதைக்கு ரசிகனாகவே வைத்திருந்தேன். இதில்தான் சுரா அவர்கள் தன்னுடைய ஆரம்பகால மொழிபெயர்ப்புப் பெயர்ப் பிழைகள் பற்றிக் கூறியிருந்தார்.
அந்தச் சிங்களப் பெண்ணின் பாசாங்கற்ற மொழிக் கீற்றுக்களும், எனது தீவிர இலக்கிய வாசிப்பும் யூமாவாசுகியின் மஞ்சள் வெயில் நாவலை வாசிக்கும் போது கொஞ்சம் தடுமாறிப் பழைய ஞாபகங்களை மீட்டிக்கொள்கிறது.
பெண்களுடன் சரியாகப் பேசத்தெரியாத ஒருவன் ஒருதலையாகக் காதலிக்கிறான். அவனுடைய ஆற்றாமைகளும் இயலாமைகளும் காதல் அக இம்சைகளும் மிகத் தீவிரமாக முன்வைக்கப்பட்ட ஒரு படைப்புத்தான் "மஞ்சள் வெயில்". இது யூமா வாசுகியின் உண்மைக் கதையைச் சற்றுக் கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன். ஏனென்றால் ஹவுசிங் யுனிட் காவலராக இப்படைப்பில் வருகிற பாலகிருஸ்ணனுக்கே இந்நூலை யூமாவாசுகி சமர்ப்பணம் செய்துள்ளார். மஞ்சள் வெயில் படைப்பை நாவல், கடிதம் என்ற எந்த வகைப்பாட்டிலும் வைக்கலாம்.
கவிஞனாகவும் ஓவியனாகவும் உள்ள கதிரவன் வாரப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றுகிறான். அதற்கு ரசிகையான ஜீவிதாவுடன் நண்பன் ஒருவன் அறிமுகம் செய்ததன் மூலமாகத் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பால் அவள் மீது இயல்பாகவே கதிரவன் காதல் கொள்கிறான். இந்தக் காதலை அவன் சொல்வதற்கான எத்தணிப்புக்களை எவ்வளவோ அகத்துயரங்களுடன் கதையாக முன்வைக்கிறான். பல தருணங்களில் அதை ஜீவிதாவுக்குச் சொல்வதைத் தவிர்த்துக்கொள்கிறான். சில நேரங்களில் தனது தகுதியை அளவிடுகிறான். பிறகு ஒரு தருணத்தில் மொத்தமாகச் சொல்லி விடுகிறான். ஜீவிதா மறுக்கவே மிகவுடைந்து போகிறான் கதிரவன். அவனது காதல் ஒருதலையாகவே தோல்வியடைகின்றது. அதனைப் பற்றி ஜீவிதாவுக்கு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையான நிகழ்ச்சிகளாக வர்ணித்து ஒனு கடிதத்துக்கான உள்ளடக்கங்களும் கவிதைக்கான உணர்வு வெளிப்பாடும் கலந்து எழுதப்பட்ட நாவல்தான் 'மஞ்சள் வெயில்.' இப்படைப்பின் முடிவு வரைக்கும் பெண்களைப் பற்றிய நல்லபிப்பிராயமும் சிறுவயதில் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்ட கதைகளை நினைத்துப் பெண்கள் மீது அச்சம் கொள்வது போன்ற உணர்வையும் யூமா வாசுகி வெளிப்படுத்துகிறார். எந்த இடத்திலும் வன்முறையை விரும்பாத ஒருவராகவே தன்னைப் படைப்பு நெடுகிலும் கொண்டுசெல்கிறார். சூஃபி இஸ்லாமியப் பாடகனின் பாடல்களில் லயிப்பவனாகவும் தன்னை வைத்திருக்கிறார்.
"யானையின் கண்கள் சிறியதாக இருக்கிறதேயென்று அலட்சியமாக நினைத்துவிடாதே. அந்தக் கண்களுக்கு பாவம் செய்தவர்களை உடனடியாக அடையாளம் தெரிந்துவிடும். மிகப்பெரிய வலிமையான காட்டு யானைபோன்ற ஆளுமையுடையவர்களாய் எப்போதுமிருக்கிறார்கள் பெண்கள். அவர்களின் கண்களுக்கு முன்னால் நடுங்கி ஒளிகிறேன். என் கேவலங்கள், என் அற்பத்தனங்கள், என் இழிவுகள் அத்தனையும் என்னைப் பார்த்த உடனே புரிந்துகொள்கிறார்கள். சாதாரண ஒரு வார்த்தையில், உதட்டசைவில், கண்களின் பாவனையில் என்னை அடியோடு புரட்டிப்போட இயலுகிறது அவர்களுக்கு. ஆயினும் மன்னித்து இங்கே ஒரு மனிதனாக உலவுவதற்கு அனுமதித்து விட்டிருக்கிறார்கள்."
யூமாவாசுகியின் கவிதைகளுக்கான வாசகனாக ஆரம்ப காலங்களில் என்னை வைத்திருந்தேன். இப்போது அவருடைய புனைகதைகளையும் மொழிபெயர்ப்புக்களையும் வாசிக்கும் ஆர்வத்தை மஞ்சள் வெயில் உருவாக்கியது. வாசிக்கும் அத்தியாயத்தின் ஒவ்வொரு இடத்திலும் நெடுங் கவிதைக்கான தன்மை பல துண்டுகளாகப் பிரிந்து வாசகனை ஈர்த்துவிடுகிறது. இந்த ஈர்ப்பு படைப்பின் ரசனைக்கான கருவியாகத் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாடு அப்படைப்பாளி உருவாக்கிய தனித்துவம் என்றே கூறவேண்டும்.
"உங்களைப் பலமுறை பார்த்தேன். என் குடிலின் மீது தீப்பற்றி எரிந்தபடி சுழலும் புயல் போலிருந்தது உங்களின் வருகை, தோற்றம். உடனடியாகப் பல நான்களாகப் பிரிந்தேன். ஒருவன் வெறிகொண்டு கூரைக் கீற்றுக்களைப் பிரித்து வீச, மற்றொருவன் சுவர்களை நீரால் நனைக்கிறான். பிறிதொருவன் வீட்டுப் பொருட்களை காப்பாற்ற முயல்கிறான். மற்றொருவன் சுவர்களை நீரால் நனைக்கிறான். பிறிதொருவன் வீட்டுப் பொருட்களை காப்பாற்ற முயல்கிறான் மிகத்துரிதமாக. நிகழ்வுகளை மீட்கப் பாடுபடுகிறான் தீயினால் கசிந்து கொண்டிருக்கும் வேறொருவன். ஒருவன் வந்தான் யார் உள்ளே சீக்கிரம் வெளியே வந்துவிடுங்கள் என்றலறுகிறான். உள்ளே நான் "இதுநாள்வரை சேகரித்த அத்தனையும் போயிற்றே" என்று வேகிறேன்."
யூமா வாசுகியின் கவிதைகளிலுள்ள குழந்தமை மஞ்சள் வெயிலில் இருக்கிறது. காதலைத் தூரமாகத் தொலைத்தவர்களுக்காக எழுதப்பட்ட படைப்பா இது என்று யாராவது கேட்டால். உண்மையில் இது இலக்கியக் காதலர்களுக்கான படைப்பு என்றுதான் சொல்லமுடியும்.
அஞ்சில் ஆந்தை என்கிற சங்கக் கவிஞரின் கவிதையொன்றை இறுதியாகப் பதிவிடவேண்டும். "நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன்." மஞ்சள் வெயில் கதிரவனுக்கும் இதற்கும் தொடர்பில்லை. ஆனால் மஞ்சள் வெயிலை வாசித்தவர்களுக்கு இத்தொடர்பு புரியும்.
00
Comments
Post a Comment