இலங்கையின் இலக்கிய வாசகர்கள்

கடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ம.நவீன் எழுதிய பயணக்கட்டுரையைப் படிக்க முடிந்தது. இதனை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகுறிப்பும் அவருடைய இணையத்தில் பதிவேற்றம் பெற்றிருந்தது.
இலங்கையில் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்களா என்று இந்த இருவரும் சந்தேகம் கொள்வதான பாணியில் கட்டுரையும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. ஜெயமோகன் தனது குறிப்பில் அதனைச் சாரமாக்கியுள்ளார். இதனை இவர்கள் மிகத் தாமதமாகக் கண்டறிந்துள்ளனர் என்றே நினைக்கின்றேன். ஒரு மாதத்துக்கு முன்பாகவே இங்குள்ள ஒரு இலக்கிய- பண்பாட்டு மன்றத்தைப் பற்றி இதே தொனியில் மூன்று பதிவுகள் எனது புளக்கரில் எழுதியிருந்தேன். அதன் சாரம் இதுதான் "நவீன இலக்கியத்தை அண்மித்திராத அரைவேக்காடுகள்" என்று.  அப்போது அதற்கான எதிர்வினைகள் இரண்டு கிழமையாக வந்துகொண்டே இருந்தன. சிலர் தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தனர் இப்படி எழுதுவதைத் தவிர்த்திருக்கலாமே. அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று. நான் உறுதியாக மறுத்திருந்தேன்.  அப்போதுதான் உங்களையே தெரியும் என்ற தொனியில் பலர் நக்கல்படப் பேசியிருந்தனர்.
இதையே சற்றுத் தாமதமாக ஒட்டுமொத்த இலங்கைக்கும் சேர்த்து வெளியிலிருந்து  தற்போது மூவர் எழுதியுள்ளனர். உண்மையைச் சொன்னால் இலக்கிய வாசகர்கள் இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக இல்லையென்று கூறமுடியாது. இங்கே இலக்கியம் வாசிப்பதாக விளம்பரப்படுத்தித் திரிபவர்களால் இலக்கியத்தின் ஆழத்தையும் நுணுக்கத்தையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு கவிதையை, நல்ல கதையை, நாவலை நுணுக்கமாகப் புரிந்து அதுபற்றி  எழுதவோ உரையாடவோ முடிவதில்லை. நவீன இலக்கியம் எது, சாதா இலக்கியம் எது என்ற பிரிவினை தெரியாத "வெள்ளந்தி" வாசகர்கள் நிரம்பி வழியும் பூமி இது. இங்கே அசோகமித்திரனும் வைரமுத்துவும் ஒரே தட்டில் வைத்தே அநேகரால் அளவிடப்படுவார்கள். அந்தளவுக்கு கிறுக்குக் கூழ்முட்டைகள் இலக்கிய வாசகர்கள் என்ற பெயரில் இங்கே இருக்கிறார்கள்.
வெறுமனே முகநூலில் கவர் போட்டோக்களையும், புத்தகத்துடன் செல்பிகளையும் போட மட்டுமே பழக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி வெளியிலிருந்து எஸ்.பொ, மு.பொ, கா.சிவத்தம்பி அளவில் வாசக சிகாமணிகள் இருப்பார்கள் என்று நம்பி வந்து பலர் ஏமாந்துள்ளனர் என்றே கூறவேண்டும்.
நான் எந்த ஒரு இலக்கிய இயக்கங்களுடனும் உறுப்பினராக இயங்குவதைக் கடந்த காலங்களில் தவிர்த்துக்கொண்டே வந்துள்ளேன். யார் அழைத்தாலும் அதற்குள் இணைந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் அநேகரின் வெள்ளந்தித் தனம்தான். இலக்கியத்தில் வெள்ளந்திகளாக இருந்தால் இப்படித்தான் மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பயணம் வந்து திரும்பிச் செல்லும் எழுத்தாளர்கள் காறித்துப்பிவிட்டுச் செல்வார்கள். இங்கு காறாரான விமர்சனங்கள்கூட ஒருசிலரால் எழுதப்படுகின்றன. படைப்புகள் அண்மைக் காலங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
இவற்றை வெளிப்படையாக இங்கு  ஒருவன் எழுதிக் கொண்டிருக்கும்போது  எதிர்வினை என்ற பெயரில் அவனுக்குத் துரோகியாகப் பட்டம் சூட்டவே பலர் விரும்புகின்றனர்.
சரி இங்கே ஏன் இலக்கிய வாசகர்கள் குறைவாக உள்ளனர்.
1. (நவீன) இலக்கியத்தைப் போஷிக்கும் பதிப்பகங்கள் இல்லாமை.
2. இலக்கிய மன்றம் என்ற பெயரில் நடாத்தப்படும் கேளிக்கைப் பண்பாட்டு உளறல்களும் பட்டி மன்றங்களும்.
3. எழுத்தும் வாசிப்பும் சோறு போடாது என்ற நம்பிக்கை வலுவாக வேரூன்றியுள்ளமை.
4. விமர்சனங்களை விமர்சனங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க மனநிலை இங்குள்ள தமிழ்த் தற்குறிகளிடம் இன்னும் வந்து சேரவில்லை.
5. தீவிர இலக்கிய இதழ்களைப் பற்றிய கவனம் இங்குள்ள அநேக "வெள்ளந்தி" வாசகர்களிடம் இல்லாமை.
6. பொருளாதாரத்தை நோக்கி விரையவேண்டிய சமூகக் கௌரவம் பலருக்குச் சுமத்தப்பட்டுள்ளது.
7. நவீன- சாதா இலக்கியம் என்ற பிரிப்பு நிகழ்வதை ஏற்காத தன்மை.
8. இலக்கியத்திலும் பிரதேசவாதம் வலுவேறத் தொடங்கியுள்ளமையால் காழ்ப்புணர்வுதான் மீதமாகியுள்ளது.
9. தமிழக நூல்கள் மட்டுமே இலக்கியம் என்று சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்கப்பட்டுள்ளமை. அதனால் அவற்றை வாங்குவதிலுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள்.
10. இங்குள்ள நூலகங்கள் தமிழகம் போலல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நல்ல நூல்களை பெறலாம். அப்படி இருந்தாலும் அவற்றில் ஒன்றைத்தான் நூறுபேர் கைமாற்ற வேண்டிவரும்.
இப்படி ஏராளமான பின்னணிக் காரணங்கள் உள்ளன. இவற்றை மீறி இலக்கிய இயக்கம் சாராத ஏராளம் வாசகர்களும் படைப்பூக்கம் கொண்டவர்களும் இலங்கையில் ஆங்காங்கே உள்ளனர். கூடவே உழன்ற ஒருசிலரின் வெத்துப் பேச்சுக்களை நம்பிவிட்டு பொத்தாம் பொதுவாக இலங்கையில் வாசகர்களே இல்லை என்ற அடிப்படையில் எழுதுவது  ஏற்கக் கூடிய ஒன்றல்ல. அதே நேரம் இங்கே இலக்கிய வாசகர்கள் நிரம்பி வழிகிறார்கள் என்றும் கூறவரவில்லை. இங்கு இலக்கிய வாசகர்களைவிட இலக்கியம் பேசுபவனைக் கேலிசெய்யத்தான் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். இவற்றைப் கொண்டு இலங்கை வாசகபரப்பை அணுகுங்கள்.
ஜெயமோகனுடைய பதிவு வெறுமனே  ஏகாரத் தொனியில் ஏளனம் செய்ததல்ல. அதன் உண்மைகளை ஏற்கப்படாமையில் உறுதிபெறுகிறது.
00

Comments

Popular Posts