எஸ்.பொ: ஆண்மை.
எஸ்.பொ எழுதிய "ஆண்மை 13" கதையைப் படித்ததும் ஞாபகம் வருவது இந்தப் பெண்ணிய வாதிகளின் வெற்றுப் பிரச்சாரங்கள்தான். தமது பிரச்சாரங்களுக்காக எவ்வளவு மோசமான எழுத்தை எழுதிவிட்டுப் பெண்ணியம் என்ற முகாம் அடைத்து அதனைப் "பெண்ணியப் படைப்பு" என்று புகழாரம் வேறு சூட்டுகின்றனர். அந்தப் படைப்புக்களில் சூனியமான ஒரு பக்க கருத்தோதுகைதான் மிதந்து காணப்படும். இதுவே பெண்ணியம் சாராது, பெண்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள் பற்றியும் கூறிவரும் எத்தனையோ படைப்புக்கள் இருபக்கத் தீர்வுகளைச் சொன்னவை. அதிலிருந்த நுண் பார்வை இவர்களிடம் இருந்து வருமா?. இல்லவே இல்லை.
இவர்கள் தமது அகப் பிரச்சனைகளைக் கூறுகிறோம் என்று எதையெதையோ செய்து உளறுவதைப் பார்த்தால் அந்தப் படைப்பின் கிட்டவும் செல்லமுடியாத துர்வாடை மிக்கவைதான் இந்தப் பெண்ணியப் படைப்புக்கள் என்றே தோன்றுகிறது. இந்தப் படைப்புக்களின் மீதனேகருக்கு எந்தக் கரிசனமும் இருந்ததில்லை.
பெண்ணின் ஆளுமையைப் பற்றிய, யாழ்ப்பாண மனிதனின் மாறுகை பற்றிய மிக அழகான சித்தரிப்புத்தான் ஆண்மை என்ற கதை. கா.சிவத்தம்பி தன்னுடைய "யாழ்ப்பாணம் கருத்துநிலை" என்ற ஆய்வுநூலில் யாழ்ப்பாண மனிதன் மாறவேண்டியவன்; அவன் தன் ஆதிக்க மனோபாவத்திலிருந்து மாறி வருகிறான் என்று ஓரிடத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கதை அவருடைய கருத்தையே ஞாபகப்படுத்துகிறது. வெறும் சமுதாயக் கூடு என்று பாராமல் இக்கதையில் பெண்ணியம், யாழ் சமூகம், அந்தஸ்து என்று தேர்ந்த எழுத்தமைப்பாக எஸ்.பொ சித்திரமாக்கியுள்ளார். அதற்கான சொல்வழக்கு, மிகையற்ற அதேநேரம் யாழ் வழக்கிலமைந்தது.
இரண்டு சந்ததிகளின் இருவேறுபட்ட சமுக மாற்றம்தான் "ஆண்மை 13" என்ற கதை. இதில் பெண் பாத்திரத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் சிறப்பும், நுண்ணோக்கானது. மிக மேலான எண்ணங்கொண்டது. இப்படியான கதைகளுக்கு முன்னால் பெண்ணிய வாதிகள் சித்தரிக்கும் உலகம் எடுபடாது போய்விடுகிறது. அதனால்தான் பல வாசகர்களும், எழுத்தாளர்களும் பெண்ணிய எழுத்துக்களைக் கடந்தோடுகின்றனர். ஆண்மை போன்ற எழுத்துக்களில் பார்வையைப் பதிக்கின்றனர்.
கதையில் ஆணின் பிற்போக்கு ஆண்மை தோற்றுப் பெண்ணின் சிந்தனையாளுமை ஆண்மையாக மாற்றமுறுகிறது. இந்த மாற்றத்தை ஈழத்துப் படைப்புகளில் கொணர்ந்தவர் எஸ்.பொ என்றுகூடக் கருதலாம். இது போன்ற நவகருத்துக்களைப் பெண்ணிய இலக்கியங்களில் எதிர்பார்க்கமுடியுமா?. இங்கு பெண்ணிய எழுத்துக்களுடன் எஸ்.பொ வின் படைப்பை ஒப்பிடக் காரணம் பெண்ணியம் கூறும் போலித் தீர்வுகள் மீள் நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்றுதான். மற்றபடி பெண்ணிய எழுத்துக்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்படி அங்கு ஒரு உருப்படியான நியாயத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது இன்னுமொரு காரணம்.
Comments
Post a Comment