மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு.
மௌனியின் படைப்புலகம் பற்றிய மதிப்பீடுகளைப் பலர் முன்வைத்துள்ளனர். பலர் மிகையாகவும் ஒருசிலர் நியாயமாகவும். இதில் புதுமைப்பித்தன், பிரமிள், சு.வேணுகோபால் வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், ஜெயமோகன், ரமேஷ் பிரேம், முதலியவர்களின் மதிப்பீடுகள் முக்கியமானவை. முதல் மூவரும் மௌனியின் படைப்புலகினைப் பாராட்டியதுடன் சில அடைமொழிகளாலும் அவருக்கு முக்கியத்துவம் காட்டினர். மௌனி பற்றிய பின்வந்த நால்வரது கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஒரு நியாயப்பாட்டிலிருந்து கூறியவை. மௌனி நிராகரிக்க முடியாத எழுத்தாளர் ஆனால் திருமூலர் போன்ற அடைமொழிகள் மிகையானவை என்பது பின்வந்தவர்களின் கருத்து. இதற்கான ஆதாரங்களை அவர்கள் மௌனியின் 24 கதைகளிலிருந்தும் எடுத்துக்காட்டியுள்ளனர். மௌனியின் மொத்தப் படைப்புலகமும் இந்த இருபத்துநான்கு கதைகளுக்குள்தான் அடங்குகிறது. அதில் பிரபஞ்சகானம், அழியாச்சுடர், மாறுதல் போன்றவை முக்கியமானவை. இவற்றின் முக்கியத்துவத்துக்குக் காரணம் மௌனி தனது படைப்பூக்கத்தை கவிதையிலிருந்து கதைக்குத் தாவி எழுதியதுதான். இம்மூன்று கதைகளையும் வாசிப்பவர்கள் அதனை நன்றாகவே உணரமுடியும்.
மனதின் அக எழுச்சிகளைக் கூறிய மௌனி அவற்றைத் தனது பிராமண வாழ்வின் புறநிகழ்வுகளுடன் பிணைத்துவிட்டிருப்பார். பிரபஞ்ச கானம் கதையில் பாடல் பாடி உயிர் துறப்பது, அழியாச்சுடரில் கோயிலில் வைத்துத் தனது காதலைச் சொல்லும்போது கோயிலின் தூண்கள் விக்கிரகங்களின் மாறுகை போன்ற அமானுஷ்யங்கள் மற்றும் மாறுதல் கதையில் வருகின்ற சுமங்கலிபூஜை. இவற்றை வெறுமனே அக எழுச்சி மட்டும் என்று சுருக்கமுடியாது. அதன் பிரமாணங்கள் கொஞ்சம் நீளமானவை. இம்மூன்று கதைகளைப்போலவே அவரது அநேக கதைகளின் தார்ப்பரியமும் தளமும் பிராமண நிலைதான். இது ஒரு படைப்பாளியின் ஆழ்மன வெளிப்பாடு. புதுமைப்பித்தனை வெள்ளாளராக அடையாளம் காட்ட அவரது கதைகள் எப்படி உதவுகின்றதோ கி.ரா கதைகளிலிருந்து அவரை நாயக்கர் என்று இனக்குழும வெளிப்படுத்துபவராக எப்படி அறியமுடிகிறதோ அதே குழும நிலையை மௌனியின் கதைகள் காட்டுகின்றன. இதில் உற்பத்தியாகும் ஆழ்மன வெளிப்பாடு படைப்பெழுச்சியின் மிக உயரிய பாகங்களுடன் தொடர்புகொள்ளுகின்றது. அதுதான் கதையிலுள்ள கவித்துவங்கள்.
மௌனி மீதான அநேகமானவர்களின் மீள்பார்வை மேற்சொன்னவர்களின் கட்டுரைகளுடன்தான் முன்னகர்கின்றது. புதுமைப்பித்தனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையிலான இந்நீண்ட காலப்பகுதியில் இவ்விருவரின் மௌனி பற்றிய பார்வை எவ்வளவு ஆரோக்கிய விவாதங்களை நடாத்தவைக்கின்றது. மௌனியை ஒரு தேவ உயிராகக் கருதிய புதுமைப் பித்தனின் கட்டுரையை ஓரளவு தகர்த்தது திலீப்குமாரின் கட்டுரை. அதனை மிக ஆழமான ஒப்பீடுகளுடன் தகர்த்தெறிந்தது ஜெயமோகனின் விமர்சனப்பார்வை என்றால் மிகையல்ல.
இந்த விமர்சனத் தகர்ப்புக்களைக் கல்வியியல் மட்டங்களில் செய்யமுடியாது. ஏனெனில் அங்கு ஒரு அடக்கமுடைமையான விமர்சனப் பார்வை அதற்கு அனுமதிப்பதில்லை. அதுவே தீவிர இலக்கியத்தின் பொதுவெளியில் இதன் சாத்தியங்கள் அதிகம். மௌனியின் உண்மையான இலக்கிய இடம் எதுவென்று தகர்த்தெறிந்து உண்மையை நிலைநாட்டியது போன்ற கட்டுரைகள் ஏனைய சில முன்னோடிகள் மீதும் உண்டாக்கப்படவேண்டும்.
-சுயாந்தன்.
திண்ணையில் பிரசுரமானது.
http://puthu.thinnai.com/?p=36747
Comments
Post a Comment