சம்பத்தின் இடைவெளியும் விமர்சனங்களும்.

சாரு நிவேதிதா "பழுப்பு நிறப் பக்கங்கள்" என்ற கட்டுரைத் தொகுப்பு (1) நூலில் பதினாறு தமிழ் எழுத்தாளர்களையும்,  எஸ்.ராமகிருஷ்ணன் "கதாவிலாசம்" என்ற புத்தகத்தில் அய்ம்பது வரையான தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதியுள்ளனர்.

இந்த இரண்டு நூல்களையும் ஒரே நேரத்தில் வாசித்துப் பார்த்ததில் இரண்டுபேரும் சில எழுத்தாளர்கள் மீது சரியான ஒப்பீடுகளை வைக்கின்றனர். குறிப்பாக எம்.வி. வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், அசோகமித்திரன், எஸ்.சம்பத். இவர்கள் பற்றிய இருவரது மதிப்பீடுகளும் முக்கியமானவை. இந்நூல்கள் இரண்டையும் விமர்சனமாகக் கருத முடியாது. பாராட்டிக் கூறிய மதிப்புரைகள் என்றே சொல்லவேண்டும். ஆனாலும் அவற்றின் விடய உள்ளடக்கம் கருதி முக்கியமானவை.

இதில் எழுத்தாளர்கள் மீதான சாரு நிவேதிதாவின் ஒப்பீடு உலக இலக்கிய கர்த்தாக்களுடனும், படைப்புக்களுடனும் அமைகின்றது. எஸ்.ராமகிருஷ்ணனுடைய பார்வை, இவர்களை நிறைவாக வாசித்த ஒரு வாசகனின் மனநிலையிலிருந்தும் எழுதப்பட்டுள்ளது. சாருவின் கட்டுரைகள் எழுத்தாளரைப் பற்றிய பரந்த அறிமுகங்களையும், எஸ்.ராவின் கட்டுரை அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் மீதான பன்முகப் பார்வையையும் மட்டுமே விசாலமாகத் தருகிறது. இரண்டுமே ரசனை அணுகுமுறையினால் ஆன கட்டுரைகள்தான்.

எஸ். சம்பத் எழுதிய இடைவெளி நாவல்தான் தமிழின் முதல் இருத்தலிய நாவலாகும். (இக்குறுநாவலின் திருத்தப்படாத பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது) இவ்விருவரின் கருத்துக்களை ஒரு விமர்சனமாகக் கருத முடியாது, என்றாலும் இடைவெளி நாவலின் முக்கியத்துவம் பற்றிய அவரவர் அனுபவப் பதிவெனக் கூறலாம். இவற்றைச் சம்பத்தின் "இடைவெளி" என்ற நாவலிலுள்ள கருத்துடன் ஒப்பிடலாம். இந்நாவல் பற்றிய இருவரது மதிப்பீடுகளின் சுருக்கமும், நாவலின் மிக முக்கியமான கருத்தும் கீழே;

A. "சரித்திரத்தின் முக்கியத்துவத்தை எந்தச் சமுதாயமும் என்றுமே உணர்ந்ததில்லை. மனித சமுதாயத்தின் இழப்பே, பெரிய அபத்தமே இதில்தான் அடங்கியுள்ளது. இந்த விசயத்தில் அதற்கு எப்போதுமே திராணி இல்லாமலிருப்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஆம்! மனித குலத்தின் பூரண இழப்பே சரித்திரத்தின் உண்மைகளை, தன்மைகளை உள்வாங்கிக் கொள்ளாமல் போவதில்தான்! தனிமனித அளவில் சார்த்ரே, காஃப்கா போன்று எந்த நிலையிலும் உலகத்தின் அபத்தத் தன்மையைக் காணலாம். ஆனால் சமுதாயத்தின் மனித குலத்தின் அபத்தம் சரித்திரத் தன்மைகளை உள்கொள்ளாமல் போனதில்தான் தோற்றம் கொள்கிறது"
-இடைவெளி (எஸ்.சம்பத்)

1. "எஸ்.சம்பத் ஆங்கிலத்துக்குப் போனால் அநேகமாக ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille), கேத்தி ஆக்கர் போன்றவர்களின் எழுத்தைவிடவும் அதிகம் கொண்டாடப்படுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவர்களின் எழுத்தில் ஒருவித இருண்மையும், நம்பிக்கையின்மையும் இருக்கும். ஆனால் சம்பத் காமத்தைக் கடவுளோடு இணைக்கிறார். இருப்பை (being) இருப்பின்மையோடு (nothingness) இணைக்கிறார். பிண்டத்தின் (body) இசைவெறியை அண்டத்தின் (universe) லயத்தோடு இணைக்கிறார்."
-சாரு நிவேதிதா.

2. "காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்!"
-எஸ்.ராமகிருஷ்ணன்.

எஸ்.சம்பத்தின் இடைவெளி என்ற நாவல் பலருக்கும் அறிமுகமில்லாத ஒரு படைப்பு. இவ்வாறு பலராலும் கண்டுகொள்ளப்படாத எழுத்தாளர்களைப் பற்றிச் சமகாலத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகள் எழுதிய குறிப்புகள் விமர்சனமாக இல்லாது விட்டாலும், அவற்றிலுள்ள மதிப்புரைகளின் முக்கியத்துவம் கருதி வாசிக்கப்படவேண்டியவை. இந்த இரண்டு நூல்களும் ஓரளவுக்கு இலக்கிய முன்னோடிகள் பற்றிய அறிமுகத்தைத் தந்துசென்றவை. அந்த முன்னோடிகள் யாரென அறிய நினைப்பவர்களுக்கும் அவர்களது படைப்புலகம் மீதான கரிசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்நூல்கள் உதவும். ஆனால் விமர்சனம் எழுத எவ்வகையிலும் உதவியாயிராதவை. ஏனென்றால் இங்கு குறிப்பிட்டவர்களின் மூலநூல்களை  வாசித்த பிறகே அவற்றின் மீதான விமர்சனங்களை நியாயப்படி முன்வைக்கவேண்டும்.  அவற்றின் மதிப்புரைகளைக் கொண்டல்ல.

Comments

Popular Posts