உமையாழின் அரூபம்: இருத்தலின் நம்பிக்கையின் புனிதங்களின் உளவியல்.

இம்மாதம் கணையாழியில் வெளியான உமையாழின் "அரூபம்" கதையை படித்திருந்தேன். கதை என்பது பல தளங்களில் தனது போக்கை எடுத்து விரித்துச் செல்லக்கூடியது என்பதற்கு அரூபம் ஒரு உதாரணம். கதைகளின் அளவுகோல்கள் இதுதான் என்பதை யாராலும் நிர்ணயித்துவிட முடியாது. தற்காலத் தமிழ்ச் சிறுகதையின் அண்மித்த போக்குகளைக் கொண்டு கதையின் வடிவம், மொழி, களம் என்பனவற்றின் பரந்த உள்வாங்குகையில் உருவான கதையாகவே அரூபத்தைப் பார்க்கிறேன். இதன் பின்னணியாகத் தீவிர வாசிப்பை உருவகப்படுத்தலாம்.

ஒரு வாசகனின் ஆழ்மன  பிம்பங்களைத் தனது அனுபவச் சேகரங்களுடன் இணைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ழான் போல் சர்த்தர், வைக்கம் முகம்மது பஷீர், நகுலன், புகொவ்ஸ்கி இவர்களை வாசித்த வாசகன் ஒரு எல்லைக்கு மேல் தன்னைத் தகர்த்துக் கொண்டு செல்லமுடியாத இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான். இதனை நிவர்த்தி செய்யவோ புனிதம் தேடவோ அவன் எடுக்கும் வழிதான் வாசிப்புச் சார்ந்த அனுபவப் பகிர்வுகள்.

இக்கதையின் நகர்வைக் கொண்டு இதன் தளத்தை நான்கடுக்குகளாகப் பகுக்கலாம்.
1. ஆணா பெண்ணா என்பது தெரியாமல் இருவர் புதிதாகத் தம்மை ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்து கொள்ளுதல்.
2. அளவுக்கு மீறிய ரசனையை அல்லது இயல்பிலிருந்து தன் மாறுதலை ஆண்-பெண் முறுகலுடன் பிணைத்தல்.
3. மீளவும் சந்திக்கும் இரண்டு ஆண்களும் எண்ணங்களைத் திருடப்போவதாகக் கதைசொல்லியிடம் உமையாழ் என்பவர் ஆற்றுப்படுத்த முனைகின்றமை பற்றிய சித்திரம்
4. தன்னைவிட ரசனைகூடிய ஒருவன் கதைசொல்லியிடமிருந்து  எண்ணங்களைத் திருடிவிட்டான் எனவும், அவனுடைய எண்ணங்களைக் கதைசொல்லி காவிக்கொண்டுள்ளான் எனவும் கதை முடிக்கப்படுகிறது.

மேற்சொன்ன நான்கு பகுதிகளையும் புரிந்து கொள்வதற்கு அரூபம் என்ற இக்கதையின் சுருக்கத்தை அறிந்து கொள்ளுதல் நல்லது. பார்த்து அறிமுகமில்லாததனால் ஆணா பெண்ணா என்பது தெரியாமல் இரண்டு பேர் சந்தித்து ஆண்-ஆண் என்ற அறிமுகத்துக்கு வருகின்றனர். இதில் இவர்களது ரசனைப்படி கதைசொல்லி மீது உமையாழ் மேலாண்மையைப் பிரயோகிக்கிறார். கதைசொல்லியின் மனைவியான லிஸ்பத்தைப் பற்றி உமையாழ் கேட்கிறான். தான் அறிமுகப் படுத்தாமல், அவளை அவன் கண்டிராமல் எப்படி உமையாழுக்கு தன் மனைவி பற்றித் தெரிந்துள்ளது என்று வியப்படைகிறான் கதைசொல்லி. முந்தைய சந்திப்பில் உமையாழ் எண்ணத்திருட்டுப் பற்றிச் சொன்னதை ஞாபகப்படுத்துகின்றான். இதனால் உமையாழைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொள்கிறான் கதைசொல்லி. இருந்தும் கடைசியாக ஒரு சந்திப்பு இருவருக்கும் இடையில் நடக்கிறது. அந்தச் சந்திப்புடன் கதைசொல்லி உமையாழாகவும், உமையாழ் கதைசொல்லியாகவும் மாற்றமடைகின்றனர். மிக அந்தரங்கமாக அம்மாற்றம் நடக்கிறது. "அந்தரங்கத்தின் புனிதம்" என்ற சொல் இங்கு இந்த மாற்றத்துக்குகான தர்க்கத்துக்கு உதவிபுரிகிறது. இவற்றுக்கு இடையில்தான் சர்த்தர், பஷீர், புகொவ்ஸ்கி, ஜெயமோகன், நகுலன் முதலியோரின் எழுத்துக்கள் வந்து செல்கின்றது.

இக்கதையை வாசிக்க முன் நாம் Intimacy பற்றி அறிந்து கொள்வது இக்கதையின் பூரணத்துவத்துடன் மேலும் அணுக்கமாக வழிசெய்யும். இரண்டு பேருக்கு இடையிலான மிக நெருக்கமான ஆழமான உறவுமுறையாக இது இருப்பதுடன், இது உடலியல் மற்றும் உளவியல் உணர்வுகளுடன் அதிகம் தொடர்பாடல் கொண்டது. இந்த  Intimacy யைக் கொண்டு சர்த்தர் 1939 இல் ஒரு கதை எழுதியுள்ளார். யொங் லுலு என்ற பெண், சமூக வழக்கங்கள் பிடிக்காமல் தனது கணவன் ஹென்றியிடமிருந்து விலகி காதலனுடன் செல்ல முடிவெடுக்கிறாள். இந்த இடைவெளியில் இருத்தல் பற்றிய நிஜங்களை அறிந்து மீண்டும் கணவனுடன் சேர்கிறாள் லலு. இங்கு,
1. தன்னிலையில் இருத்தல்.
2. தனக்காக இருத்தல்.
3. பிறருக்காக இருத்தல்.
என்று வரிசையாக நமது இருத்தல் விடயங்கள் வலியுறுத்தப்படுகிறது. இதே இருத்தலியப் பிரச்சனைகளை மணிக்கொடி காலத்தில்(1930களில்) எழுதிய மௌனியின் கதைகளும் சித்தரிக்கின்றன. அவை வெறும் அக எழுச்சிக்குள் மட்டுமே நிற்பதுடன், புறவிடயங்களை அநேகமாகத் தவிர்த்து தன்னிலைசார்ந்து மட்டுமே கூறுவதாலும் Intimacy உடன் நட்புப்பாராட்டாதவை. ஆனால் இந்த 1930 களில் உலகம் பெருங்கலக்கத்தில் இருந்துள்ளது என்பதனை இவ்வகை எழுத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றது. இதன் தொடர்ச்சியைத் தற்காலத்தின் உறவுப் பிரச்சனைகளுடன் மிக நுணுக்கமான பார்வைப் பரப்பில் வைத்துப் பார்க்கலாம். அரூபம் என்ற கதை இவற்றின் குழுவினாலானது.  இதனைத் தனது சிக்கல்பாடுமிக்க வாசிப்புக்களுடனும், வெளிநாட்டுக் கண்ணாடி வாழ்க்கையுடனும் இணைத்து கதையாசிரியர் எழுதியுள்ளார்.

இக்கதையை வாசிக்கும்போது எனக்கெழுந்த சிக்கல் என்னவென்றால், கதைசொல்லி-உமையாழ் இருவருமே ஒருவர்தான் என்பதை வெளிப்படையாகவே நான் அறிந்து வைத்திருப்பதனால், வாசிக்கும்போது பல இடங்கள் கதைசொல்லியும் உமையாழும் இரட்டையர் என்ற பிரமையில் மூழ்கவேண்டி ஆனது.  ஆனால் அவர்களது இலக்கிய ரசனைப் பிரிகோடுகள் தடுப்பதனால் இதற்குச் சற்றே  ஆசுவாசமளித்தது.
உதாரணமாக,
1. Existentialism × Intimacy.
2. Intimacy× The Wall.
3. The Wall × பஷீர்.
இந்த எதிர்நிலை உரையாடல்களையும், கதைசொல்லியின் கூற்றையும் வாசித்தால் மேற்சொன்ன பிரிகோட்டை  ஊர்ஜிதம் செய்யலாம். இலக்கியமோ வாழ்க்கையோ ஏதேனுமொரு பிரிகோட்டை மையம் கொண்டிருக்கவேண்டும், இல்லையென்றால் சர்த்தருக்கும் சாதாரணருக்கும் வித்தியாசமற்றுப் போய்விடுமல்லவா?. இந்த வாசிப்பின்- ரசனையின் மேலாண்மையை இங்கு நன்றாக அவதானிக்கலாம்.

00
இந்தக் கதையின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் தன்வாசிப்பின் பண்டிதத் தன்மையை ஒரு திறனாய்வுக்கான யுக்திபோல் கதைக்குள் பிரயோகித்ததுதான். இது தனது அறிமுக ஆளுமைத் தன்மையைப் பிறரிடம் கொண்டுசெல்வதற்கான தனிநபர் உளவியல். அதனால் இந்த எழுத்தைப் பிரித்தெடுத்துப் பார்த்தால் இதில் கதை-திறனாய்வு என்ற இரண்டின் முகங்களும் வெளிப்பட்டுநிற்கும். தீவிர வாசிப்புக்குள்ளான ஒருவன் தனது பண்டிதத்தை வெளிப்படுத்த உச்சமான ஆளுமைகளைக் கொணர்ந்து மேற்கோள் காட்டுவான். அதற்கான அடித்தளத்தைக் இவ்வெழுத்து நெடுகிலும் காணலாம். கதை என்று மட்டும் எடுத்தால் இதன் பிரயோகம் பலவீனம்தான். இதன் கதைகூறுமுறையுடன் இந்தப் பண்டிதத் தன்மையை இணைத்துவிட்டால் கதைக்கான மிகப்பெரிய பலமும் இதுவாகவே இருக்கும். இந்தப் பலத்தையும் பலவீனத்தையும் கதையுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால் இதனை உதாசீனம் செய்ய முடியும். ஆனால் நான் இதனைக் கதையாக மட்டுமே கண்டிருக்கவில்லை என்பதனால் இதற்கு ஒரு பிரத்தியேக முக்கியத்துவம் உண்டென்றே நினைக்கிறேன்.
00
இக்கதையில் சிகரட், காப்பி கோப்பை, சர்த்தர், கண்ணாடி போன்றவை "அந்தரங்கத்தின் புனிதம்" மாறுவதற்கான குறியீடுகளாக ஆக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்மனம் மீது விதைப்பதில் கதைசொல்லியின் பங்கே அதிகமாக்கப்பட்டுள்ளது. எதிர்த்த கதாபாத்திரங்களின் பங்குபற்றுகை துணைக்குறியீடு போலவே தொடர்ந்து வருகிறது. அரூபம் என்பது உருவமின்மை. ஆங்கிலத்தில் Visibility என்பார்கள். இந்த இண்டிமேஷி, எண்ணத்திருட்டு யாவையும் அரூபமானவை. இந்த அகநிகழ்வுகள் புறநிகழ்ச்சிகள் மீது அதீதமான பாதிப்பை உண்டாக்குபவை. ஒரு கவர்ச்சி என்றுகூடச் சொல்லலாம். அவற்றின் எழுச்சிகள் அரூபம் கொள்ளும்போது கதையாக்கம் கொள்கின்றன. கதைகள் அந்தரங்கத்தின் புனிதங்களை மீள்பரிசோதனை செய்யவும் உதவக்கூடியவை. இது அமானுஷ்யமாக இருக்க வேண்டும் என்பதில் இக்கதையின் கதையாசிரியர் தனது கவனத்தைக் குவித்துள்ளார் என்பது அவரது ஆழ்மன நம்பிக்கையின் உளவியலாகவே அணுகமுடிகிறது.
00

Comments

Popular Posts