பௌத்தமும் நானும்

புத்தரின் படத்தைக் கவரிலும், வீட்டுச் சுவரிலும் மாட்டியதற்காகச் சில அறிவுஜீவிகள் எப்போது பௌத்த மதம் மாறினீர்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள். இதற்கு நீண்ட பதிலாக மனதில் தோன்றியதை இங்கு பதிவுசெய்கிறேன். இது எனது சுயவிளக்கம்.
00
முதலில் பௌத்தம் என்பதனை நான் மதமாகக் கருதவில்லை. பரவலாக்கப்பட்ட தத்துவங்களின் தொகுப்பாகவே அதனை இன்றுவரையும் கருதிக்கொள்கிறேன். இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கிலிருந்து நமக்கு அறிமுகமான தத்துவங்களை விடவும் இங்கிருந்த பௌத்தம் அகவயமான மானுட மன மோட்சத்துக்கான தீர்வு என்று அதனுள் செல்லும் போது உணரமுடியும்.
வேதாந்த மரபுகளுடன் விவாதம் செய்தே பௌத்தம் தன்னைத் தத்துவமாக உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் தற்காலத்தில் தியானம், மாந்திரீகம் என்று மனதையும் உடலையும் வலியுறுத்திச் செய்யப்படும் இந்துக் காலாசாரம் சார்ந்த நிகழ்வுகளின் அநேக பாகங்களைத் தனக்குள் வைத்திருந்தது பௌத்தம்தான். இதனை இந்து பிராமணிய மேலாதிக்கர்கள் தமக்குரியதாக மட்டும் வைத்துக் கொண்டுள்ளனர். இதனால்தான் இந்திய தத்துவ மரபில் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சிகளும் உண்மைகளும் மறைக்கப்பட்டன. இந்து மதம்தான் தாய்மதம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது. பௌத்தம் இந்தியாவிலிருந்து தூக்கியெறியப்பட்டது. பௌத்த மதத்தைப் பின்பற்றியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிராமணர்களாலும் ஆதிக்க இந்துக்களாலும் சட்டகமிடப்பட்டது. இந்து ஆட்சியாளர்களால் அவர்களது நிலங்கள் பிடுங்கப்பட்டது. வரலாற்றைப் பார்த்தால் தெரியும் நிலமற்றவர்கள் எப்போதும் அடிமைகளாகவே நடாத்தப்படுவார்கள். மிக துல்லியமான உதாரணத்தை இதற்குள் இணைக்கலாம். அடிமைச்சாதி குடிமைச்சாதி என்பதில் நிலமுள்ளவர்கள் குடிமைச்சாதியாகவும், அதற்குள் வேலை செய்பவர்கள் அடிமைச் சாதிகளாகவும், தீண்டப்படாதவர்களாகவும் ஆக்கப்பட்டனர். இந்த நீட்சிதான் தற்போதும் பலர் அனுபவிக்கும் சாதிய உள்நோக்குகள். அவமானங்கள். பிற்படுத்தல் வசைகள்.
அறிவுக்கும் சுயவுணர்வுக்கும் அதிக முக்கியமளிக்கும் பௌத்தம் வெறுமனே துறவு என்பதை முன்னிலைப்படுத்துகிறது என்ற கட்டுக்கதையைச் சிலர் கிளப்பிவிட்டுள்ளனர். பௌத்தம் பற்றிய வரட்சியான எண்ணக்குவியல்கள்  என்றும் இதனைக் கூறலாம். பௌத்தம் துறவை மட்டும் வலியுறுத்தவில்லை. அதற்கென்று அழகியல், கலாசார, சமூக நோக்கு உள்ளது.
00
பலர் பௌத்தம் என்பதனைப் பலவாறு கருதுகின்றனர். அதனை இன்று நிறுவனமயமாக்கிக் கொண்டுள்ளனர் என்பது உண்மைதான். அதன் தேவை இரண்டாம் உலகப்போரின் பிறகு அதிகரித்துள்ளதாக பௌத்த ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தலித்துக்களின் எழுச்சி மதம் என்றும், சுதந்திரம்-சமத்துவம்- சமாதானம் ஆகிய கருத்துநிலைகளின் மூலத்துவம் என்றும் கருதுகின்றனர். அது உண்மையென்றாலும் நான் இந்த பச்சாதாப உக்கிரங்களுக்குள் புரள விரும்பவில்லை. பௌத்த அழகியலையும், சமூகம் பற்றிய மேலான சிந்தனைகளையும், அறநிலைப்பாடுகளையும் எடுத்துக்கொண்டு தூரம் செல்லவே பௌத்தத்தைப் பின்பற்றுகிறேன். அமைப்பு, நிறுவனம் பற்றிய உதாரணங்களை அது முன்வைக்கவில்லை. அதனை அவ்வாறு உருவாக்கியது பிற்கால  பௌத்த மேலாதிக்க அடிப்படைவாதிகள்தான்.
'தனிமனிதனை அங்கீகரிக்காத ஒரு மதம் என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல' என்று அம்பேத்கர் சொன்னார். அதற்காகவே தனிமனிதனை ஏற்றுக்கொள்ளும் மதம் பற்றிய ஆத்மார்த்தமான தேடலைப் பெற்று பௌத்தத்தை அவர் சென்றடைந்தார். மனம், சமூகம், சுயசிந்தனை, சுயஆற்றல், சுயமரியாதை வளரவேண்டும் என்றும், அதற்கு இந்துமதத்தின் வர்ணாச்சிரம நிலை பெருந்தடையாக இருக்கிறது என்று கருதியதால்தான் அவர் பௌத்தம் சேர்ந்தார். அவரது பௌத்த மதமாற்றம் ஒட்டுமொத்த சமூகத்துக்கான மாற்றம். அதில் இருப்பது அப்பட்டமான பொதுநலம். அவரைக் களங்கப்படுத்துவது தூய பௌத்த சிந்தனைகளையும், மனித மாண்புகளையும் அழிப்பது போலாகும்.
நான் பௌத்தத்தைப் பின்பற்றுவது/கற்பது என்னுடைய சுயநலத்துக்காக. சமூக நல்லிணக்கத்துக்காகவோ, சமூகத்திலுள்ளவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்காகவோ அல்ல. சமூகத்தைத் திருத்தும் அளவுக்கு என்னுடைய பொதுநலவெளி அவ்வளவுக்கு அகன்றதுமல்ல. நான் தலித்துக்களின் யுக புருஷனுமில்லை. அவர்களுக்கான குரலை அவர்களுக்குள் இருந்து வெளியில் வருபவர்கள்தான் முன்வைக்கவேண்டும். அதன் வலிகளை நான் அறிந்திருக்கவுமில்லை. அவர்களுக்காக்க குரல் கொடுத்து பகட்டுக்காக என்னை நிறுவனமயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை. பௌத்த அழகியலால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மட்டுமே அதனை உவந்து ஏற்றுள்ளேன். அதன் நிறுவனமயம் மீது எந்த நம்பிக்கையும் கொண்டவனில்லை. அந்த நிறுவனமயம் காழ்ப்புணர்வுகளாலும், சகமனிதனைக் கொல்வதாலும்தான் தற்காலத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டுள்ளது. எனக்கெதிரே உள்ள இந்த நாடு அதற்கு நல்ல உதாரணம். சுத்தமான பௌத்த அறவியல், அழகியல் தெரியாத பிக்குகளின் வன்முறையால் சூழ்ந்துள்ள இந்தநாட்டின் அடிப்படையற்ற பௌத்தத்தைப் பின்பற்றுபவனில்லை. இங்குள்ள பௌத்த அழகியலை உற்று நோக்குபவன். அதேநேரம் 'தமிழ்ப் பௌத்தம்' என்ற  மரபு சுய விடுதலைக்கு ஓரளவுக்கேனும் உதவும் என்ற நம்பிக்கையும் எனக்குள் உள்ளது.
அழகியல், அறவியல், சமூக மனம் சார்ந்த பார்வைகள் காலாகாலமாக இந்துக் கலாசாரம் முன்வைத்து வருகிறதுதான். ஆனால் அதன் மரபுகள் மனிதனைப் பிளவுபடுத்துவதாகவும், தொல்லினங்களையும், குலங்களையும் தீண்டாமையால் அருவருப்புக்களால் புறக்கணிப்பதாகவுமே இருந்து வருகிறது. ஒரு மதமே இப்படியென்றால் அதனைச் சீர்திருத்தங்களின்றிப் பின்பற்றும் மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடியும். இந்த இடைவெளியைப் பௌத்தம் நிரப்பிவிடுகிறது என்பது எனது நம்பிக்கை.
நிறுவனமயமான பௌத்தத்தை மட்டுமே அறிந்து வளர்ந்த பலர்  வெளியிலிருந்து பார்க்கும்போது பௌத்தத்தைப் பின்பற்றும் ஒருவனை வரண்ட பக்குவமற்ற மனதுடன்தான் அணுகுவார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த வகையான கேள்விகள். பௌத்தம் என்ற மதத்துக்கு மாறியவனில்லை நான்.  அதன் தத்துவத் தொகுப்புக்களையும், அழகியல் சாரங்களையும் சுயநலத்துக்காகவும், சுயவிடுதலைக்காகவும் பின்பற்றுபவன். அதனை அணுகும் எனது ஆழ் மனம் இந்து மரபு சார்ந்ததாகவே இருக்கிறது என்பதில் எனது பலத்தையும் பலவீனத்தையும் நிகரப்படுத்திக்கொள்கிறேன்.
"கேள்வி: புத்தரே உமக்குப் பின்னால் யார் உமது இடத்துக்கு உரியவர்?.
புத்தரின் பதில்: புத்தன் என்று யாரும் தனியாக இல்லை. புத்தரைப்போல் சிந்திப்பவர் யாரும் புத்தரே"
00

Comments

Popular Posts