தமிழ் மாருதம்: சில எதிர்வினைகள்.

வாய்ப் பேச்சுக்களை விட எழுத்தால் ஏற்படும் விளைவுகளை அதிகம் நம்புகிறவன் நான். கடந்து செல்லும் விடயங்களை நமக்குள் பிரயத்தனமிக்க உணர்வுகளாக மாற்றுவதற்கு, எழுதுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பது எனது அடிப்படையும் ஆழமுமான கருத்து. இங்கு அடிப்படை என்பதிலுள்ள எனது வாதம் அடிப்படைவாதமல்ல. நூல்களின் ஆழத்திலிருந்து நான் பெற்றுக்கொண்ட உந்துணர்வுகள்.
தமிழ் மன்றம் நடாத்திய தமிழ் மாருதம் என்ற பண்பாட்டு நிகழ்வு பற்றிய எனது எதிர்வினைக்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களால் நேரடியாக எதிர்வினையாற்றபட்டது. அதிலுள்ள ஜனநாயகத் தன்மையை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய அந்த நிலைப்பாட்டை எண்ணி மனநிறைவடைகிறேன். எதிர்ப்பினை வெளியிடுபவன் தன்னளவில் தன்னை எதிர்ப்பவர்களைக் கூர்ந்து கவனித்தாகவேண்டும். அத்தருணத்தில் அவர்களுக்கு பேசுவதற்கான அவகாசத்தை வழங்கவேண்டும். அவர்கள் தங்களது முற்றுமுழுதான விமர்சனத்தை என்மீது வைத்தனர். நான் செவி சாய்த்தேன். அதற்கான பதிலை எழுத்தில் வழங்குகிறேன். ஏனென்றால் எனது பணி பேச்சல்ல. எழுத்து மட்டும்தான்.
தமிழ் மாருதம் என்பது பண்பாட்டு நிகழ்வு சார்ந்தது தானே பிறகெதற்கு அதனை நவீன இலக்கியத்துடன் தொடர்புபடுத்தி விமர்சிக்கின்றீர்கள் என்ற கேள்வியை அநேகர் முன்வைத்தனர். நிச்சயமாக அது ஒரு பண்பாட்டு நிகழ்வு சார்ந்ததுதான். அதனை மறுக்கவில்லை. அதனை வெறுமனே நவீன இலக்கியத்துடன் ஊடறுத்து மட்டும் விமர்சித்திருக்கவில்லை. பழமைவாத எண்ணப்பாடுகளையும் இதுதான் பிரதேச இலக்கியத்தின் மையம் என்று சித்தரிக்கும் பலருடைய மனவியலாமைகளின் தோற்றப்பாடுகளையும் அங்கதமாகவும் ஆத்திரம் கொண்டதாகவும்தான் கூறியிருந்தேன். அதன் ஆழர்த்தம் உங்கள் மீது காழ்ப்புணர்வை வீசியது என்று கருதுவதைத்தான் இங்கு பழமைவாதமாகக் கருதுகிறேன். இந்த மன்றம் மீது மூன்று கட்டுரைக் குறிப்புகளை எழுதியிருந்தேன். அந்த மூன்றையும் முழுவதுமாக வாசித்திராது அதில் தங்களது தகுதிநிலைப்பாடுகளைக் குறைத்துக்கூறிய இடங்கள் என்று நீங்கள் கருதிய இடங்களை மட்டுமே எடுத்துப் பிடித்துக்கொண்டு, இந்தக் கருத்தை இருட்டடிப்புச் செய்வதனால் என்ன பயன் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் தாங்கள் பண்பாட்டு நிகழ்வு என்று கூறும் எந்த விடயங்களிலும் நவீன இலக்கியம் ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது?. அதனை அங்கு அறிமுகம் செய்வதில் என்ன பிழையுண்டு?. வாசிப்பனுபவம், சிற்றிதழ், விமர்சன அரங்கு என்று இன்னோரன்ன வழிகளின் மூலம் இதனைச் செய்திருக்கலாம் அல்லவா?. அதிகாரமோ, வெகுஜனச் செல்வாக்கோ இல்லாத ஒருவனால் இந்தக் கேள்விகள் உங்கள் மீது வைக்கப்பட்டவை. நான் ஏன் இப்படி எழுதினேன் என்பதைவிட, நான் எழுதுவதற்குக் காரணமாக அமைந்தவை எவையென்று நீங்கள் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் உங்களால் நவீன இலக்கியம் என்று செய்ய முடிந்தது புத்தகக் கண்காட்சி ஒன்றுதான். அதில் அய்ம்பது விழுக்காடு நல்ல நூல்கள் இருந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு பலர் வீடுகளில் வைத்து நித்திரையோ வேலைகளையோ செய்கின்றனர். இதனைத் தவிர்க்க ஆகக் குறைந்தது பத்துப் பேரையாவது இணைத்து வாசிப்பனுபவமாகவோ நூல்விமர்சனமாகவோ ஒரு ஒன்றுகூடுகையை நிகழ்த்தியிருக்கலாம். இதன் மூலம் தங்களது மன்றம் மீதுள்ள விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
தங்களில் ஒருவரைக்கூடச் சரியாகத் தெரிந்திராத ஒருவன் எப்படித் தங்களை விமர்சிக்கலாம் என்ற கேள்வியைக்கூட நான் ஆக்கபூர்வமாகக் கருதவில்லை. இது ஒற்றைப்படையானது. பன்முகப்படுத்தப்படாத பண்பாட்டு நெகிழ்வின்மைகளால் உண்டாகும் கேள்விகள்தான் இவ்வகையானது. ஒருவனது இலக்கியத் தரம் பற்றியும் ஒரு பண்பாட்டு மன்றத்தின் இலக்கிய இடம் பற்றியும் விமர்சிக்கும் போது அதனுள் குடிகொண்டிருக்கும் மேலாதிக்க சருகுகளை வழித்தெறிய யார் என்றாலும் துணிவார்கள். அதற்கான ஆதாரமாக அந்த மன்றம் சென்ற வருடம் என்ன செய்தது. இவ்வருடம் என்ன செய்தது என்ற உள்வினாக்களால் ஆகிது. இதன் தொலைநோக்கம் என்னவென்றால் அடுத்தவருடம் இதன் கட்டமைப்பு மீளமைப்புச் செய்தாகவேண்டும். புனரமைப்புச் செய்யவேண்டும் என்பதேதான்.  மற்றபடி தாங்கள் கருதுவது போன்ற நெடுநோக்கம் கொண்ட காழ்ப்புணர்வுகளை விதைப்பதல்ல.
உடனடியாக நவீன இலக்கியத்தை படிக்கமுடியாது.
அது இங்கு சாத்தியமில்லை.
அது புரிவதில்லை.
இதனைவிட்டால் இங்கு நிகழ்த்த யாருமில்லை. இதுமாதிரியான கேள்விகளுக்கான பதிலை எழுத நான் தயாரில்லை. ஏனென்றால் அவர்கள் இப்போதல்ல எப்போதுமே நவீன இலக்கியத்தினை அடைந்துவிடமாட்டார்கள். இலக்கியம் தெரிந்த சாமானியனின் கேள்விகளை ஒரு குழுவாதமாக இணைப்பது நழுவல் வாதமாகவே கருத்துகிறேன். இவ்வாதம் ஒன்றே போதும் ஒட்டுமொத்தமான அபிப்பிராயங்களை நிராகரிப்பதற்கு. அந்நிராகரிப்பினால் உருவாவது எதுவுமில்லை என்பது என் கருத்து.
வெகுஜனங்களுக்கான கூடுகையை தங்களது மன்றம் மூலம் நடாத்தியும், சிற்றிதழ்களின் மூலம் நவீன இலக்கியத்துக்கான தேடலையும் உரையாடல்களையும் அறிதல்களையும் செய்வதனால் இந்த மன்றத்தின் "ஹரிஸ்மா" அல்லது "தனித்தன்மை" என்பது இன்னொரு கட்டத்துக்குச் செல்லும். இதில் முதலாவதை மட்டும் நிகழ்த்துவதனால் கிடைத்துவிடாது. அதில் இருப்பது ஒரு களிப்பும் மகிழ்வும்தான். சமூகத்துக்கான சிந்தனை பிரயத்தனங்களல்ல. கராரான  சிற்றிதழ்களின் மூலம் ஒரு புரிதலையும், வாசிப்பரங்குகளை நிகழ்த்தி வேறொரு கட்டத்துக்குச் செல்லும் வரையும் இதனை நான் தவிர்த்தாலும் இன்னொருவன் விமர்சித்தபடிதான் இருப்பான். அத்தருணத்தில் நான் இங்கிருந்து இன்னொரு இடத்துக்கான பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பேன்.

Comments

Popular Posts