எழுத்தின் காட்சிரூபம்.

தி.ஜானகிராமன்
ப.சிங்காரம்
மௌனி
கி.ராஜநாராயணன்
சுந்தரராமசாமி

மேற்குறித்த எழுத்தாளர்கள் தமது புனைவுகளில் இயற்கையை மிக அழகாகச் சித்தரித்திருப்பார்கள். தமிழ் எழுத்தாளர்களில் இயற்கையின் அழகைக் கண்முன் நிறுத்தும் காட்சியை ரசனைபூர்வமாகக் கொணர்ந்தவர்கள் என்றும் கூறலாம். உதாரணமாக சிங்காரம் கடலையும், தி.ஜா காவேரிக் கரைகளையும், கி.ரா கரிசல் காட்சிகளையும் சித்தரித்ததை ஆதாரமாக்கலாம்.

இதில் மௌனியின் இயற்கை பற்றிய சித்தரிப்புகள் மிக வித்தியாசமானது. அகவயமான உணர்வுகளைக் கவிதையில் ஏற்றிச் சொல்வது போன்றது. ஆனால் அவரெழுதிய கதைகளில்தான் கவிதை வடிவத்தில் இயற்கையை அணுகியிருப்பார். இதனை ஒரு ஜென்நிலை என்று கூடச் சொல்லலாம். இந்தவகையான வர்ணனைகளை மௌனிக்குப் பிறகு தமிழில் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதில் முன்னோடியானவர் மௌனிதான்.

மௌனியின் "கொஞ்ச தூரம்" என்ற கதையின் ஒரு பகுதியை வாசித்துக்கொண்டிருக்கும் போது இந்த உணர்வு ஏற்பட்டது. இதனை வாசிக்கும்போது தேவதச்சனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது. உலக சப்தங்கள் எல்லோருக்கும் அதி சப்தமாக இருக்கும்போது ஒருவனுக்கு மாத்திரம் அது நிசப்த உணர்வைக் கொடுக்கிறது என்றால் அது ஒரு ஜென் நிலையாகத்தான் இருக்கவேண்டும். இதனைத்தான் மௌனியின் கதையிலும் தேவதச்சனின் கவிதையிலும் நான் கண்டது. இந்த ரசனைப் பதிப்பை இதற்குமேல் எழுதவேண்டிய தேவையில்லை. கீழுள்ள இரண்டு சித்திரங்களும் உண்டாக்கும் பேருணர்வை வாசித்தால் புரியும்.

கீழே கதையின் பகுதியும், கவிதையும் இணைக்கப்பட்டுள்ளது.

1. ""மிக உஷ்ணமான பிற்பகல், உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றத்தைக் கொண்டது. வெப்பத்தைத் தாங்காது ஆலமரத்தடியில் மாடுகள் தங்கி இருந்தன. கண்களை மூடியவண்ணம் படுத்திருந்தன சில, கண்கள் மூடியே அசை போட்டுக்கொண்டு, அலுப்பில் சமாதானமின்றி, அலைவது போன்று அங்குமிங்கும் நிழலில், சில ஊர்ந்தன. நடு நடுவே, திடீரென்று வானம் கிழிய, ஒன்றிரண்டு மாடுகள் அலறிய சப்தமும், நிசப்தத்தில் மறைந்து போயிற்று. மேலே, மரக்கிளைகளில் பக்ஷிகள், ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று, அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின. அவைகளின் இரைச்சல் திடீரென்று நிற்கும்போது, இடையிடையே சீர் இல்லாமல் பொத்தென்று கீழே விழும் முதிர்ந்த ஆலம் பழங்களின் சப்தம். எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது. இவன் போய்க்கொண்டே இருந்தான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானல் சலனத் தோற்றம். வெகு தூரத்திலிருந்து ”ஹோ-ஹொ-ஹொ-ஹொய்-” என்று கேட்டது, மானிடக் குரல். பின்னிருந்து இடைப் பையன்களின் அர்த்தமற்ற கானம். எங்கும் நிசப்தம்தான். அமைதி. இவனுக்கு, மனத்திற்கு இசையாத சாந்தம்.""
-மௌனி.

2. "துணி துவைத்துக் கொண்டிருந்தேன்.
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்.
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்."
-தேவதச்சன்.

Comments

Popular Posts