முஸ்லிம்களின் மீதான கண்டிக்கலவரம் பற்றிய இலக்கியப் பதிவு ஒன்று.

உமையாழ் என்கிற முகமட் எழுதிய f=ma என்ற கதையைப் போல வண்ணநிலவன் இஸ்லாமிய சமூகத்தின் உள்பிரச்சனைகள் பற்றி 1986 இல் "சமத்துவம் சகோதரத்துவம்" என்றெழுதிய கதை இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
முகமட்டின் இக்கதையைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசியுள்ளனர். இது வேறு ஒரு விதமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்த வருடம் மார்ச் தொடக்க நாட்களில் கண்டியில் பேரினவாதத்தின் வன்முறைத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது இஸ்லாமிய சமூகம். இப்ராஹீம் என்பவர் மலையக முஸ்லீம்களைப் பிரதிபலிப்பவராகவும், ஆதங்காக்கா கிழக்கு முஸ்லிம்களின் அனுபவ முகமாகவும் கதையில் கொண்டுவரப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமக்கான பிரதேச அலகுகளை அமைத்து அதிகாரம் மிக்கவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்குள்ள இளைஞர்களில் அநேகர் ஆக்ரோச மனோபாவம் கொண்டவர்கள். இது தம்மை எதிர் இனத்தவன் தாக்கும்போது எதிர்த்துத் தாக்க வேண்டும் என்ற அனைவருக்குமான இயல்பால் வந்தது. தனியியல்பு என்று மதிப்பிட முடியாது. ஒவ்வொரு இனத்தின் பொது இயல்பு அது.
கண்டி நகரம் அப்படிப்பட்டதல்ல. அங்கு சிங்களவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். முஸ்லிம்களின் ஊர்களைச் சுற்றி வளைத்தாற் போல சிங்கள கிராம-நகரங்கள் அமைந்திருக்கும். இதனால் இயல்பிலேயே இங்குள்ள முஸ்லிம் இனத்தவர்கள் சகிப்புணர்வுடன் வாழக் கற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அங்குள்ள தமிழர்களும் அப்படித்தான். அப்படி இருக்கும் போது, பெரும்பான்மை இனம் தனக்கான மமதையில் கால் ஊன்றி நடந்து கொண்டு இருக்கும் போது நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் குடிபோதையில் ஒரு சிங்கள மத்திய வயது இளைஞரை அடித்துக் கொன்று விட்டார்கள். ஆரம்பத்தில் கூறியிருந்தேன் இங்குள்ள முஸ்லிம்களும் தமிழர்களும் அநேகமாகச் சகிப்புணர்வு மிக்கவர்கள். இது போதையில் நிகழ்ந்த ஒரு கொலை. இதனை அதிகார போதையிலுள்ள சிங்களச் சமூகம் இனவெறியுடன் பின்னிப் பார்க்கிறது. அதற்கு ஊற்றாக பௌத்த மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்.  இந்தக் கொலையின் விளைவாக முஸ்லிம்- சிங்கள இன முறுகல் கண்டியில் முற்றி வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இங்குள்ள முஸ்லிம்கள் பாதுகாப்புத் தேடி மறைந்து கொள்கிறார்கள். சிலர் எதிர்க்கத் துணிகிறார்கள்.
இந்நிலை கிழக்கில் வேறு மாதிரிப் பார்க்கப்படுகிறது. அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டும். ஜிகாத் செய்ய வேண்டும் என்று இளைஞர் கூட்டம் சிந்திக்கின்றது. ஆனால் வயதானவரும் முப்பதாண்டுகால யுத்த அனுபவங்களின் விளைவுகளை அனுபவித்தவருமான ஆதங்காக்கா கண்டி மக்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார். கிழக்கிலுள்ள இளைஞர்களின் முனைப்பின் பேரிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் முகமாகவும் ஹர்த்தால் வைக்கப்படுகிறது. இதற்கு ஆதங்காக்கா ஒத்துழைக்காது கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார்.  தொழுகை நேரம் வர தொழுகைக்குப் போய்விட்டு வந்து கடையைப் பார்த்ததும் கடை நொருக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளது.
கண்டியில் முஸ்லிம்களின் கடைகளைச் சிங்களவர்கள் அழிக்கிறார்கள். கிழக்கில் முஸ்லிம் வியாபாரி ஒருவர் கடையைத் திறந்து அன்றாட வியாபாரம் செய்ததற்காக முஸ்லிம் சமூக இளைஞர்களே அதனை அடித்து நொருக்கிவிடுகிறார்கள். இங்கு கதைசொல்லி கடையை நொருக்கியது சக முஸ்லிம்கள்தான் என்று கூறாமல் வாசக அனுபவத்துக்கு விடுகிறார்.
சரி, இதற்கும் வண்ணநிலவன் கதைக்கும் என்ன தொடர்பு. ஜமாத் தலைவர் சலாம் மரைக்காயரிடம் குடும்ப விசயமாகப் பணம் பெறுவதற்காக அஸ்ரப் அலி நீண்ட காலமாக அவரை நாடிப் பணம் கேட்டபடி இருக்கிறார். அலியைப் பொருட்படுத்தாது மரைக்காயர் தட்டிக் கழிக்கிறார். சம அந்தஸ்த்து கூட வழங்காமல் அவமதிக்கிறார். அதேநேரம் வேறொரு ஊரிலிருந்து ஜாமாத் மூலமாக மதமாற்றம் வேண்டி வரும் சிலரை எதிரில் சமானமாக இருத்தி உபசரிக்கிறார். இதனால் விரக்தியடைந்த அஸ்ரப் அலி "இஸ்லாத்துல வந்து பொறந்ததுக்கு அந்த ஆளுகளோட பச்சேரியில பொறந்திருந்தா இப்ப இவ நிக்காவுக்குத் துட்டாவது கெடைச்சிருக்கும்" என்று கூறுவதுடன் வண்ணநிலவனின்  கதை முடிகிறது.
f=ma கதைக்கும் வண்ணநிலவன் கதைக்குமுள்ள தொடர்பு இதுதான். சக இனத்தவனைச் சக இனத்தவனே தள்ளிவீழ்த்தி விட்டு தன் இன மதப் பெருமை பேசி என்னவாகப் போகிறது. இரண்டு கதையிலும் தன் இனத்தவனின் மனிதாபிமானம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
கதையில் ஒரேயொரு இடம்தான் அழகுணர்வால் நிரம்பியுள்ளது என்று நினைக்கிறேன். ஏனையவை அரசியல் சமூக சிக்கல்களைச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சரளமான நடையில் கூறப்பட்டுள்ளது.
அழகியலாலான பகுதி கீழேயுள்ளது.
"ஹாறுனுக்கு அடுத்து மூன்று பொம்புள புள்ளையல். ஹப்சா(14), ஹப்தா(12), ஹபீபா(8). அடுத்து இரண்டு ஆம்புள பிள்ளைகள்; ஹம்சா(6), ஹகீம்(5). ஆதங்காக்காவிற்கு ‘ஹ’ எனும் அறபெழுத்தின் மீது அவ்வளவு வாஞ்சை இருந்தது. பிள்ளைகளை பெயர் சொல்லிக் கூப்பிடும் போது ‘ஹ’வை அழுத்தமாக உச்சரித்துத்தான் கூப்பிடுவார். இன்னும் இரண்டு ஆண்பிள்ளைகளைப் பெற்று ஹாதிம், ஹலீம் என பெயர் வைக்க வேண்டும் எனும் எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் சாலிஹா உம்மா ஹகீமைப் பெற்ற பிற்பாடு கர்ப்பப்பை கோளாறு ஏற்பட்டு அதை, அகற்ற வேண்டி இருந்ததால் ஆதங்காக்காவின் அந்தக் கனவு நிறைவேறாமலே போயிற்று. அல்ஹம்துலில்லாஹா, அல்லாஹ் தந்தது அம்பட்டுத்தான் என சொல்லி மனதைத் தேற்றிக்கொண்டார்."
இங்கு தமிழ்- முஸ்லிம் மோதல்கள் பற்றி ஆரம்பத்தில் முகமட் வரையறுக்கும் கோடு புலி எதிர்ப்பை முஸ்லிம்களிடத்தில் பற்றி வைத்திருக்க வேண்டும் என்பதனால் ஆனது. முஸ்லிம் சிங்கள மோதல்கள் வந்தாலும் புலிகளை முஸ்லிம்கள் ஏற்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார் என்பதை ஊகிக்க முடியும்.  அவருக்குள் இருக்கும் தமிழர் வெறுப்புக்கும் புலி எதிர்ப்புக்கும் இடையிலுள்ள இடைவெளியை முஸ்லிமாக நின்று வலியுறுத்துகிறார். அது அவருடைய கடமை. தமிழாலான அவரது படைப்பினைப் பாராட்டி அரசியலை நிராகரிப்பதை எனது கடமையாக ஏற்று இதனைப் பதிகிறேன்.
இங்கு குறிப்பிடப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் கதாபாத்திரங்கள்தான் கிழக்கு, மலையகம் என்று பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, கதைசொல்லியின் ஒருமித்த பார்வையும் "முஸல்மான்" என்ற கோணத்தில்தான் செல்கிறது. தன் இன ஒருமைப்பாட்டுடன்  கூறப்படும் கதையில் உட்பொதிந்துள்ள சுயவிமர்சனங்களுக்காக இதனை ஒருமுறை வாசிக்கலாம்.

Comments

Popular Posts