இலக்கிய மன்றங்களும் நெருடல்களும்.


மேடைப் பேச்சுக்கும் எழுத்துக்கும் வடதுருவம் தென்துருவம் என்ற இடைவெளி இருக்கிறது. இங்கு நான் துருவங்களை அடையாளப்படுத்தக் காரணம் ஒரு அபிப்பிராயம் மீதான மிகைக் கலப்பற்ற கருத்துக்களை முன்வைக்கும்போது பௌதிக உதாரணங்களை அவற்றுக்குத் துணைக்கழைத்தால், அடுத்து வரும் கடினமான விடயப் பரப்புக்களை இலகுவாகவே கவனக்குவிப்புச் செய்யலாம் என்பதற்கே.
மேடைப்பேச்சு எப்போதும் மனதைப் பதனப்படுத்தாத ஒரு பரபரப்பான தான் தோன்றித்தனமான சொற்களைக் கொண்டு அத்தருணத்துக்கென்று தயார்செய்யப்பட்ட அவசர வெளிப்படுத்துகை என்று கருதலாம். நீங்கள் நன்றாக உங்கள் ஒவ்வொருவரது அனுபவப்படி பார்த்தால் இதன் அர்த்தம் புரியும். உங்களது முதலாவது மேடைப்பேச்சின் அனுபவம் அல்லது அதற்கான தயார்படுத்துகை எவ்வளவு மனச்சிக்கல்பாடுகளை உண்டாக்கியிருந்தது என்று.
அங்கு அறிவின் தொழிற்பாடு எப்போதும் ஒரு பதற்றத்துக்கான முஸ்தீபுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும். மனம் தன்னாலியன்ற ஒப்புமைகளையும் உணர்ச்சிவயப்பட்ட கருத்துக்களையும் அள்ளி வீசும். அவை சிறிய வயதிலிருந்து வலிந்து நம் ஆழ்மன வெளிப்பாடுகளில் இருத்தி வைக்கப்பட்ட ஒரு செயற்பாடு. நமது அரசியல் வாதிகளிடம் இதனைக் காணலாம். இங்குதான் நாம் அதனைக் கற்றுக்கொண்டுள்ளோம்.  இங்கிருந்து வந்த தொடர்ச்சிதான்  பட்டிமன்றங்களும், உணர்ச்சிக் கவிதை வாசிப்புமுறைகளும். இதற்கு மாபெரும் வரலாறே உண்டு. இந்த மேடைப் பேச்சுக்களின் ஆரம்பம் திராவிடக் கட்சிகளின் பிரச்சார உந்துகைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒன்று. அவர்கள் அறுபதுகளில் ஆட்சிபீடம் ஏறியதும் அதுவே ஒரு Subculture ஆகிவிட்டது. நம்முடைய இலக்கிய வாசகர்கள் பலர் நிஜமான இலக்கியவாதிகளென்று நம்பும் கருணாநிதி, வைரமுத்து, லியோனி முதலியவர்கள் தி.மு.கவின் பிரச்சாரகர்கள். மிகச் சிறந்த பேச்சாளர்கள். இவர்களது இலட்சியவாதப் பேச்சுக்கள் வெகுஜன மனதைச் சுண்டி இழுக்கின்றது. இந்தக் கும்பல் மனநிலையைத் தாண்டாதவர்கள் இவர்கள்தான் இலக்கியத்தின் எல்லை என்று தம்மைக் குறுக்கிக் கொள்கிறார்கள். இவர்களை விட்டால் இலக்கியத்தை உய்விக்கமுடியாது என்று அவர்களின் பிரச்சார சப்தங்களை மீள்பதிவு செய்கிறார்கள்.
இங்கு கருணாநிதி சினிமா வசனகர்த்தா என்பதையோ அவரொரு ஆளுமைமிக்க அரசியல்வாதி என்பதையோ இவரின் இலக்கியம் சார்ந்த பேச்சுக்கள் ஆரம்ப இலக்கிய வாசகர்களுக்கு மறைத்து விடுகிறது. இலக்கியத்தை இவர்கள் வளர்ப்பதாகவே பலர் இன்றும் கருதுகின்றனர். அது ஒரு கற்பிதம். இலக்கியத்தில் பெருந்தேக்கம் உண்டாகக் காரணம் இம்மாதிரி மூன்றாந்தர வாயாடி எழுத்தாளர்களின் பிரச்சார ஒழுங்குகள்தான். இந்த மொன்னைத் தனமான ஒழுங்குகளால் பல நல்ல இலக்கியங்கள் வாசிக்கப்படுவதில்லை. அல்லது காலம் தாழ்த்தியே போற்றப்படுகின்றனர். உதாரணமாக ஜி.நாகராஜன், ப.சிங்காரம் இருவரையும் எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டுபேரும் தமிழின் மகத்தான எழுத்தாளர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால் இன்றைய சிற்றிதழ்களின் வளர்ச்சியாலும் அவர்களது அக்கால யதார்த்தப் படைப்புக்களாலும் இன்று அவை மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன. இதுவே மேற்சொன்ன பிரச்சாரகர்களின் பிரச்சாரமோ, எழுத்துக்களோ நம்மிடையே என்ன மாதிரியான பங்களிப்பை வழங்கும். பேசத் தெரிந்தவன்தான் பெரிய மேதாவி என்பது வெகுஜன மனநிலை. அதன் மீதான தகர்ப்புக்களை நிகழ்த்த பட்டிமன்றம், சொற்போர் இப்படியான உணர்ச்சிகரச் செயற்பாடுகள் ஒரு எல்லைக்குள் நின்றுவிடவேண்டும். அவை தம்மை இலக்கிய மையமாகக் கொள்ளாமல் விடவேண்டும்.
இங்கு பலருக்கு நவீன இலக்கியம் என்றால் புத்தகத்தைத் தின்பது, முழுநேர இலக்கியம் பேசுவது என்ற தவறான புரிதல் அதிகமுண்டு. நவீன இலக்கியம் என்பது தனிமனித மீட்சியை நோக்கிய, சமூகத் தொலைநோக்கம் கொண்ட, வழக்கமரபை அநேகமாகப் பின்பற்றாத எழுத்துச் செயற்பாடு. அல்லது சிந்தனை முறைமை என்று கூறலாம். நீங்கள் இதனை வாசிக்கும்போது மேற்கூறிய கருணாநிதி, வைரமுத்து போன்றவர்களின் இலக்கிய இடம் எதுவென்று புரிந்து கொண்டிருப்பீர்கள். இவர்கள் தமது எழுத்தைவிடப் பேச்சையே அதிகம் நம்பியவர்கள். அண்ணா வழியில் கருணாநிதியும், கருணாநிதியின் வழியில் வைரமுத்துவும், வைரமுத்துவின் வழியில் வவுனியா தமிழ் மா மன்றத்தின் பல இலக்கியச் செயற்பாடுகளும் நடப்பதைக் கூடவே இருந்து பார்ப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியும். இங்கு வைரமுத்துவின் வழி என்று நான் கூறியது அவரது பிரச்சார வழி. அதனை இங்குள்ள பல மன்றங்கள் பிரக்ஞை இன்றியே கையாள்கின்றது. வெகுஜனத்துக்கு என்ன வேண்டும் என்றெண்ணிக் கொடுப்பவன் எழுத்தாளன் அல்ல. அவன் ஒரு வியாபாரி. எழுத்தாளன் எதை எழுதுகிறானோ அதன் மீதான விமர்சனங்களை முன்வைத்து, அதில் ஏற்க வேண்டியவற்றை ஏற்று, இல்லாதவற்றை விமர்சன பூர்வமாக மறுத்துச் செல்வதுதான் ஆரோக்கியமான சமூக அடைவு. ஒரு தனி மனித செல்வாக்குக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே இதுதான் சரியான வழியென்று வழிகாட்டுவது தவறு அல்லவா?. பண்பாட்டை- மதத்தை விட்டு வெளியே வரமாட்டேன். அதன் மீதான விமர்சனங்களை ஏற்கமாட்டேன் என்பவர்கள்தான் சாதிய மறுப்புப் பற்றிய போலி விவாதங்களைச் செய்கின்றனர். இது எவ்வளவு ஒரு முரண்பாடான விடயம். நமது சாதிய- பிரிவின் அடுக்குகள் அனைத்துமே பிணைக்கப்பட்டிருப்பது மத பண்பாட்டின் அடிப்படையில். அதில் சிறிய மாறுதலைக் கொண்டுவருவதற்காக என்றாலும் நவீன இலக்கியம் பற்றிய அறிமுகம் வேண்டாமா. அதனைப் பிரக்ஞையற்ற ஆழ்மனம் குவியாத பேச்சுக்களால் தகர்த்துவிடமுடியுமா?. பத்து வருடம் கழித்தும் இதே பட்டிமன்றத்தைத்தான் நடத்துவார்கள். இதே தலைப்பைத்தான் வைப்பார்கள். இதே மாதிரிக் கைதட்டி விசிலடித்துவிட்டு மக்கள் கடந்து போவார்கள். அவர்களின் அறிவுச் சேகரம் என்ன. வெறும் Entertainment. இப்படியான மன்றங்களை நிகழ்த்தும்போது அதற்கென்று அச்சாகவோ இணைய இதழாகவோ காத்திரமான காரார் மிக்க இலக்கியப் பிரதியையும் ஒரு பங்கில் உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் மீதான வாசகக் குவிப்பு நான்கு பேர் என்றாலும் அது சிறிதளவான சமூகத் அறிவுத் தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கும். ஒன்றோ இரண்டோ படைப்பாளிகளை விமர்சகர்களையோ கொணர்ந்திருக்கலாம். ஆனால் இங்குள்ள மன்றத்தவர்களால் முடியவில்லை. அதற்கான காரணம் மன்றம் நடத்துகையின் பின்னுள்ள அந்தஸ்த்து, சாதிய, கௌரவ, அடக்குமுறைச் சிக்கல்கள்தான். இதனுடன் இணைந்த இன்னொரு அகத்தொழிற்பாடு பரிசோதனைக்குத் தயாராகாத இவர்களது வாசிப்பு முறைமை. தேர்ந்த இலக்கியத்தை எவ்வாறு கையாளவேண்டும் என்ற பிரக்ஞை இன்மை. ஒருவன் வெளியிலிருந்து ஒரு கருத்தைச் சொல்லும்போது நீ உள்ளே வந்து பார் என்பதும், இவனுக்குச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பதும், இவன் அந்நியன் என்ற மனநிலையில் அணுகுவதும் நமது சமூகத்தின் தொடர்ச்சியான புறக்கணிப்பு முறைமை. இதற்குத் துணையாக சமூக வலைத்தளங்களில் Troll என்பதை மட்டுமே குறியாகக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர். அதற்குக் காரணம் வெளியில் இருந்து அவதானித்தவனின் பார்வையை முழுவதும் உள்வாங்காமல், அதற்குள் அவனால் வைக்கப்பட்ட குறியீடுகளைப் பகடி மூலம் இல்லாமல் செய்து விடலாம் என்ற இணைய மனநிலை. இது மிகப் பெரிய தேக்கத்துக்கு வழிசெய்யும் நம்மை அறியாது நம்முடன் ஊர்ந்து செல்லும் செயற்பாடு.
பேச்சாளர்களைக் கொண்டாடி எழுத்தாளர்களை நிராகரிக்கும் இலக்கிய மன்றங்களின் தொலைநோக்கற்ற மந்தகதி நகர்வுக்கும், திராவிடப் பாணியினாலான பிரச்சாரகர்களின் துரிதகதி அடைவுகளை இங்கு பெற நினைக்கும் சுயமிழப்பு செயற்பாடுகளுக்கும் எக்காலமும் முடிவு கிடைக்கப்போவதில்லை. அதனை விமர்சிப்பதை இன்றும் பலர் அகௌரவமாகப் பார்க்கிறார்கள். உரத்த பேச்சு வெகுஜனம் சார்ந்தது. ஆத்மார்த்தமான எழுத்து தனிநபர் பூரணத்துவம் சார்ந்தது. மன்றம் நடத்துபவர்களால் மன்றங்களை மட்டுமே விலாசமாகக் கொண்டியக்கமுடியும். அவர்களை மையமாகக் கொண்டு இயங்கும் ஆழமான வாசக, எழுத்துப் பிரியர்கள் அவர்களுக்குள் அமிழ்ந்து போகாமல் இருக்கவேண்டியது அவரவர் சுயமுடிவு சார்ந்தது. அந்தச் சுயமுடிவின் சாதகமான பெறுபேறுகள் மொழிக்கான பரிசோதனைக் களங்களை எழுத்தின் வழி கொண்டு நகர்த்தட்டும்.

Comments

Popular Posts