குளமும் பகிடிவதையும்.


நான் கம்பஸ்க்கு போன ஆரம்ப கால ராக்கிங்' இல் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்  ஒன்று எனக்கு ஞாபகம் உண்டு. அது இப்போது சுவாரஸ்யமாகவும், அப்போது மிகவும் களியாக்கியதாகவும் இருந்த விடயம். 'குளம்' பற்றிய நையாண்டிகள்.

"உங்கட ஊர் பேரச் சொல்லுங்கடா?" என்று சீனியர்கள் கேட்கும் போது வவுனியா மாவட்டத்திலிருந்து போகிற நம்மைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு அசௌகரியம் உண்டு. அதுதான் வவுனியாவிலுள்ள 90 வீதமான ஊர்களின் பெயர்கள் "குளம்" என்பதில் முடிவதாகும்.  உதாரணமாக புதுக்குளம், ஈச்சங்குளம், தரணிக்குளம், தாண்டிக்குளம், மகிழங்குளம், கனகராயன்குளம்,  கோயில்குளம், இப்படி நூற்றுக்கும் அதிகம்.

அதனைச் சொல்லும்போது சீனியர்களுடைய நகைப்புக்கு ஆளாக வேண்டி வரும்.
இது நிச்சயமாக அவர்களின் பிழையல்ல. அந்த நகைப்பினை மடக்குவதற்கான காரணத்தையும், நம்பிரதேசத்தின் முக்கியத்துவத்தையும், மூலத்தின் தாற்பரியத்தையும் அறிந்திருக்காமை எங்களது பிழையாகும். 
{குறிப்பு- குளம் என்று முடியாத ஊர்களும் இங்கு உண்டு. ஆனால் பேரில் குளம் இல்லையே தவிர ஊரில் ஒரு குளம் நிச்சயமாக இருக்கும்.}

"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்பது குளத்தையும் சேர்த்துக் கூறிய பழங்கருத்தாகும். மழைபெய்து வீணே ஓடும் நீரைச் சேர்த்து வைக்க எமது மூதாதையர் உண்டாக்கிய முதுசொம்தான் இந்தக் குளங்கள். சேர்த்து வைத்த நீரின் 90 வீதமான பகுதி முப்போக (சிறுபோகம்-இடைப்போகம்-பெரும்போகம்) வயலுக்கும், மிகுதி நீர் இதர பயன்பாட்டுக்கும் உபயோகமாகும். அத்துடன் கிணறுகளில் நீரூற்று வற்றாமல் இருப்பதற்கு இந்தக் குளங்களின் இருப்பு மிகமுக்கியமானதாகும்.

இது எல்லா மாவட்டத்துக்கும் சாத்தியப்படாத விடயம். அநேக மாவட்டங்கள் மழையை மாத்திரமே நம்பி இருப்பவை. ஆனால் இங்கு ஊருக்கு ஒரு குளம் என்பது மிகப்பெரிய விடயமாகும். சில மாவட்டங்களிலுள்ள ஒரு பெரிய வாவி(Reservoirs) அனைத்துப் பயிர்களுக்குமான நீரைக் கால்வாய் மூலம் வழங்குவதுண்டு. இவை குளத்திலிருந்து வேறுபட்டும், பரப்பில் பெரிதுமானவை. உதாரணமாக பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா போன்றவை. அதில் நீர் பங்கிடுகையில் பல வில்லங்கங்கள் ஏற்படலாம்.

ஆனால் குளம் என்பது ஊருக்குப் பொதுவானது. எமக்கே உரித்தானது. கட்டுப்பாடுகள், பங்கீட்டுப் பிரச்சனைகள் பெரியளவில் இல்லாதது.
ஊர்க் கிணறுகளில் நீரின் கையிருப்பைத் தீர்மானிக்கக் கூடியதும் ஆகும்.

ஆகவே இனி "குளத்தில்" இருந்து "கம்பஸ்க்கு" போகின்ற மாணவர்களே உங்களது குளங்களின் அருமையை சீனியர்களுக்குத் தெரிவியுங்கள்..
அது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் நையாண்டிப் பகிடிவதையாகவும் இருக்கலாம்... அல்லது சமயோசித விளக்கமாகவும் அமையலாம்.....

Comments

Popular Posts