இஸ்லாமியர்கள் மீதான வன்முறையும் பொருளாதார மேலாதிக்கமும்.


இலங்கையில் சிறுபான்மையினர் மீதான வன்முறைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்துக்கு முந்தைய சிங்கள-முஸ்லிம் கலவரமாகட்டும், சுதந்திரத்தின் பின்னரான தமிழ்-சிங்கள வன்முறைகளாகட்டும் அனைத்திலும் பெரும்பான்மையினரின் வகிபாகம் அதிகமானது. இதில் இரண்டாவது மூன்றாவது சிறுபான்மையினர் தமக்குள் தம்மைப் பகைத்துக்கொண்ட துன்பியல் வரலாறுகளும் உண்டு.
இந்த ஒட்டுமொத்தமான வரலாற்றின் வழி சமகாலப் பிரச்சனைகளை முழுவதுமாக அணுகமுடியாது. வரலாற்றைக் கடந்த ஐக்கியப் பார்வையின் தேவை சமகாலத்தின் இனத்துவ வன்முறைகளைக் கொண்டு நோக்கும் போது புலனாகிறது.
அண்மைய காலங்களில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய மக்கள் மீது இன-மத ரீதியான தாக்குதல்கள் நாடுமுழுவதிலும் அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம். அவை பரந்த ஒரு பூதாகரமான இன அழிப்பு நடவடிக்கையாக மாறிவிடுமோ என்ற ஐயத்தைத் தொடர்ந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றது. இதற்குப் பிரதான காரணமாக இனவெறி, மதவெறி போன்றவை அட்டவணைப்படுத்தப்பட்டாலும் அவற்றின் பின்னால் இருக்கும் பொருளாதார மேலாண்மை மீதான காழ்ப்புணர்வை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வெறுமனே இன மத வெறி என்று மொத்தமாகச் சாயம் பூசி பெரும்பான்மை இனத்தவர்களைப் பொது எதிரிகளாப் பார்க்கும் முறைமை தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஊறிப்போன ஒன்று. இங்கு நாம் பெரும்பான்மையினரை இனவாதிகள் மதவாதிகள் என்ற சட்டகத்துள் அடக்கும்போது அவர்களின் ஒட்டுமொத்தமானவர்களையும் அவ்வாறே கருதவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றோம். இதுதான் இடையறாத பிரச்சனைகளின் நீட்சிக்கு மூலகாரணம்.
இந்தப் பிரச்சனைகளுக்கான மூலமாகப் பொருளாதாரம் என்ற விடயம் முன்னிலைப்படுத்தப் படுகிறது. நான் இங்கு மூன்று சம்பவங்களை முன்வைக்கிறேன்.
1. அளுத்கமை வன்முறைகள்.
2. ஜின்தோட்டைக் கலவரம்.
3. அம்பாறை வன்முறைகள்.
இந்த அண்மைய மூன்று வன்முறைகளிலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் செய்த முதல் செயலாக இஸ்லாமியருக்குச் சொந்தமான கடைகள், பொருளாதார ஸ்தாபனங்கள், உணவகங்கள் முதலியவற்றை இலக்குவைத்து எரித்தழித்துவிடுகின்றனர். இரண்டாம் பட்சமாக அவர்களது பார்வை பள்ளிவாசல்கள் மீது வீழ்கிறது. இங்கு பொருளாதார அகதிகள் என்ற நிலைக்குச் சிறுபான்மையினரைத் தள்ளவேண்டும் என்ற போக்கே அதிகம் உள்ளது. இதில் முதன்மையான உளவியல் இனவெறி என்பதை விட பொருளாதார மேலாண்மையை விரும்பாமை என்பதே ஆழ்மனதில் தொழிற்படுகிறது. மேலோட்டமான எண்ணக்கருவாக இனவெறி மதவெறி என்பன இருக்கின்றன என்பதை மிக உற்றுநோக்கும்போது அண்மைய சம்பவங்களின் மீதான உளவியல் பார்வைகள் கூறும்.
1983 ஜீலைக் கலவரத்தின் போதுகூட தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து நிர்க்கதியாக்கி விட்டுத்தான் தமிழர் மீது நாடளாவிய ரீதியில் போர் தொடுக்கப்பட்டது உயிர்கள் காவுகொள்ளப்பட்டது என்பதை இங்கு  சுட்ட வேண்டும். 
தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த 1983- 2009 க்கும் இடையிலான காலத்தில் இஸ்லாமியர்கள் மீது பெரும்பான்மையினரின் வன்முறைகள் பேருவளை, காலி போன்ற இடங்களில் அய்ந்தாறு வருடங்களுக்கொருமுறை என்று நடந்தனவே தவிர சமகாலம் போன்று வருடத்தில் நான்கைந்து என்று நிகழவில்லை. இப்படியான இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளின் பிரதான  காரணங்கள் என்ன?
1. சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியரின் பொருளாதாரம், சனத்தொகை பற்றிய பகிரப்படும் வதந்திகள்/ தகவல்கள்.
2. இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற எண்ணக்கருவை இஸ்லாமியர்கள் பொருளாதாரம் மூலம் சிதைத்து விடுவார்கள் என்ற ஐயம்.
3. கடந்த தசாப்தங்களில் தமிழ்-சிங்களம் இந்த இரண்டு இனத்தவர்கள்தானே மோதிக்கொண்டார்கள். அச்சமயத்தில் இஸ்லாமியரின் ஒட்டுறவு சிங்களவர்களின் அழிவுகளை வேடிக்கை மட்டுமே பார்த்தது என்ற எண்ணப்பாடு.
4. பௌத்த மத மேலாண்மை வலியுறுத்தப்படும் நாட்டில் இஸ்லாம் என்பது அந்நியமானது என்று சில செல்வாக்கு மிக்க தேரர்களால் விதைத்து விடப்பட்ட கருத்துக்கள்.
5. சர்வதேச இஸ்லாமிய ஜிகாத் போராளி இயக்கங்களுடன் இங்குள்ள முஸ்லிம்களுக்குத் தொடர்பு உண்டென்றும் அவர்களால் சக சிங்களவர்களுக்கும் மரபுரிமைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற சில முன்முடிவற்ற தகவல்கள். (இதற்கு தலிபான்களின் பமியன் புத்தர் சிலையுடைப்பை அடிக்கடி கூறும் சிங்களவர்கள் உண்டு)
6. அரசாங்கத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களிலும், செல்வாக்கு மிக்க அமைச்சுப்பதவிகளிலும் முஸ்லிம்களின் இருக்கை மீதுண்டான அச்சவுணர்வுகள்.
இவ்வாறு பல போலியான காரணங்கள் பொதுத் தளத்தில் வைத்துச் சிங்களச் சமூத்தில் வைத்து உரையாடப்படுகிறது. இதன் விளைவாக ஆழமான சிந்தனையற்ற வெகுஜன மனம் உந்தப்பட்டு வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இங்கு அநேக பெரும்பான்மையினரின் ஆழ்மன வெளிப்பாடு இஸ்லாமியரின் பொருளாதாரத்தின் மீதான குறிதான். அதன் பின்னர்தான் மத இன அடையாளங்கள் தாக்கப்படுகின்றன. இதனை மேலோட்டமான பார்வையில் இனவெறி என்றும் ஆழமான பார்வையில் பொருளாதார அழிப்பு/ அச்சமேற்படுத்துகை என்றும் வரையறுக்கலாம்.
இதன் தீர்வுகள் என்பது மூவினங்களின் சமூக அடுக்குத் தளங்களுக்குத் தமது வெளிப்படையான சமூக- மத விடயங்களைக் கொண்டு செல்வது ஒன்றே இஸ்லாமிய கற்ற சமூகத்தின் மீதுள்ள பணி என்று நினைக்கிறேன். இங்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கட்டிறுக்கமான நியதிகள் சில பொதுவெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், தௌஹீத் ஜமாத்தின் விஷமப் பரப்புரைகளும் தமது செயற்பாடுகளைத் தளர்த்தி நாட்டின் அய்க்கியத்தின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டிய தருணம் இது என்றும் கருதலாம்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் போதே கண்டியின் தெல்தெனிய திகன அக்குறனை முதலிய இடங்களில் இஸ்லாமியர் மீதான வன்முறைகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர்களது வியாபாரக் கடைகளும் வணக்கஸ்தலங்களும் எரியூட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு இளைஞன் மரணமடைந்துள்ளார்.
இது பெரும்பான்மையினரின் கூட்டு மனச்சாட்சியின் வெளிப்பாடல்ல. இதில் இருப்பது ஒரு சிறு குழு. தனிநபர் பிரச்சனையை இனத்துடன் முடிச்சுப்போட்டு மொத்தப் பெரும்பான்மையினரையும் முன்னிறுத்தி இஸ்லாமியர் மீதான வெறுப்பைக் கட்டவிழ்ப்பதற்கான பெரும் தந்திரம் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது இருப்பினைத் தக்கவைக்க அம்மக்கள் மீது பச்சாதாபப் படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் இணையர்கள்தான் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும்.
ஆனால் இங்குள்ள முக்கிய விடயம் சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை மாற்றுநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் இரண்டு பக்கத்திலுமுள்ள ஜனநாயகவாதிகளுக்கே அதிகமுள்ளது. அவை சென்று சேர்வதிலுள்ள இடர்பாடுகளை அரசியல் மூலம் தீர்க்க வழிசெய்யவேண்டும். அதை விடுத்துப் பழிக்குப் பழி என்ற வக்கிர மனநிலை நம்மிடம் தோன்றுமாக இருந்தால் பெரும் இக்கட்டுக்களை இந்தச் சமூகம் சந்திக்கும் என்பது தெளிவு.
இலங்கையின் இனவாதமும் பொருளாதார அகதிகளும் என்ற கருத்துநிலைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. தமிழர்களின் ஜீலைக் கலவரம் எங்கள் முன்னுள்ள மிகச் சிறந்த உதாரணம். இதன் நிறைகுறைகள் தவறுகள் என்னவென்று அறிந்து நிதானமாகச் செயற்பட வேண்டிய கட்டாயம் இன்றைய முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு. இதில் இஸ்லாமியர்கள் தங்களது அடிப்படைவாத மனோநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்நியமானவர்கள் என்ற அர்த்தத்தில்தான் பிற சமூகங்கள் இஸ்லாமியச் சமூகத்தை நோக்கும்.
இன்றைய கண்டிச் சம்பவம் போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளை இச்சமூகம் எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லையென்று கருதுபவர்கள் வெளிப்படையாகவே அவரவர் சமூகத்தின் பிரச்சனைகளை முன்வையுங்கள். அச்சமூகத்தில் புரையோடிப்போன வக்கிர எண்ணங்களை அகற்ற முனையுங்கள். இது பெரும்பான்மையினரின் வெறிக்கு முன் மாற்றுநிலைப்படுத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு.
கு: 6/3/2017 எழுதியது. தாமதமாகப் பிரசுரிக்கப்படுகிறது. இது இன்னொரு பார்வையிலிருந்து நோக்கியதனால் பல விடயங்கள் விடுபட்டிருக்கலாம்.

Comments