இலங்கையின் முஸ்லிம் அதிகாரமும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளும்.

இலங்கையில் தமிழ் இலக்கியம் பேசுபவர்கள் அரசியலால் ஆட்பட்டவர்கள் என்று எடுத்தால், விடுதலைப் புலிகள் பற்றிய ஆதரவு-எதிர் கருத்தில் இருந்துதான் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள். இதைப்பற்றிப் பேசாத ஒரு தொகுதியினரும் உண்டு. ஆனால் நடுவுநிலமை பேசுபவர்கள் என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பவாதிகள் என்றுதான் கூறவேண்டும். சமீபத்தைய உதாரணம்; இலங்கையிலுள்ள இஸ்லாமிய அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள் மனோ கணேசன் பதவி விலக வேண்டுமாம். ஐ.நா சபையில் முழு முஸ்லிம் தலைமைகளும் தமிழருக்கு எதிராகத் திரண்டபோது, இலங்கையில் யுத்தக் குற்றமே நடக்கவில்லை என்று கூறியபோதெல்லாம் எங்கே போனது இந்த முஸ்லிம் அறிவு ஜீவிகளின் நேர்மை.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது. ஈழத்துக்கு எதிரானது. தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரானது. அதே நேரம் முள்ளிவாய்க்கால் பேரழிவை எள்ளி நகையாடக்கூடிய மனநிலையில்தான் நேற்றுவரை இருந்தது. இருக்கிறது. அதற்குப் பின்புலமாகச் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அது அவர்களது நிலைப்பாடு.
ஆனால் திடீரென்று இலங்கை தேசியப்பற்றுக்கு உள்ளான தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் கருத்துக்களை முழுவதுமாக ஏற்கவேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. அது இஸ்லாமியன்களின் சுயலாப அரசியல் நிலைப்பாடு.  அதன் பின்னால் அவர்களுடன் இயங்குவது அவர்களுடைய மதநம்பிக்கை. அவர்கள் தமது சமூகத்துக்காகவும் தமது மத நம்பிக்கைக்காகவும் பாடுபடுகிறார்கள். புலி எதிர்ப்பை அவர்கள் கைக்கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன என்று கருதினாலும், அதில் மிகுதியாக இருப்பது சுயலாப அரசியல்தான்.
இலங்கையின் தமிழ்பேசும் இஸ்லாமிய சமூகத்தை, தமிழகத்திலிருப்பவர்கள் 'தமிழர்கள்' என்று கருதுவது அவர்களது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதுதான் கசப்பான உண்மை. அவர்கள் தமிழ் என்ற மொழியைப் பேசுவதால் ஒருசில புரிந்துணர்வுகள் இருதரப்பிலும் உண்டாகியிருக்கிறது. அதிலும் பல ஆழமான முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தம்மைத் தமிழராக இங்குள்ள இஸ்லாமியர்கள் கருதுவதில்லை. அதற்கான தேவைகள் இல்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்கள் இஸ்லாமியராகவே இருக்க வேண்டும். ஆனால் இன்னொரு இனத்தின் போராளியை, தலைவனை தமது சுயலாபங்களுக்காக தமது இனக்குழு சார்பில் நிராகரித்துவிட்டு, அதனை எதிர் இனக்குழுவினரும் நிராகரிக்க வேண்டும் என்று சொல்வதுதான் பச்சைப் பாசிசம். பிரபாகரன் இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களின் விரோதி என்றால், அவர் வெகுஜனத் தமிழர்களின் பெரும்வீரன். ஒரே நாடு என்ற கருத்துடன் நாம் இன்று கூட வாழ்ந்தாலும், பிரபாகரன் பல தமிழர்களின் ஆதர்சம். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அவரது மரணத்தை அறியாது திரும்பவும் அவர் வழியைப் பின்பற்ற நினைப்பது  மடமைத்தனம். அவரை தொன்மமாகக் கருதி வைத்திருப்பது தமிழர்களின் கடமை.
வாசு முருகவேலின் ஜப்னா பேக்கரி இலக்கியத் தரமில்லை என்றும், நாவல் இல்லை என்றும், சில தரவுகள் போலியானவை என்றும் கருத்தால் அவரது படைப்பை நிராகரிக்க முடியும். ஆனால் அதனை எழுநூறு பேர் கூட்டாகச் சேர்ந்து பெட்டிசன் போட்டு அசிங்கப்படுத்தவேண்டிய அவசியம் என்ன?. பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு இதே போன்ற பிரச்சனை சாதிய ரீதியில் உருவெடுத்தது. அது ஒரு அளவில் தணியக்கூடியது. அடையாள, அவமானப்படுத்தல்கள் குறைவாக இருப்பது. இங்கு ஒரு நூலை, கருத்தால் எழுதப்பட்ட நூலிற்கான விருதைக் கொடுக்க வேண்டாம் என்று பெட்டிசன் அனுப்பும் கேவலமான தாழ்வுமனப்பாங்கு கொண்ட எண்ணத்தின் விளைவு எவ்வளவுக்கு அந்நியப்பாடுகள் நிரம்பியது.
அந்நூலை நிராகரிக்க அதற்கு இணையாக ஒரு நாவலை உங்கள் சமூகத்திலிருந்து ஒருவர் எழுதியிருக்க வேண்டும்.  அதற்கான விருது கொடுக்கப்படக் கூடாது ஏன் என்ற அடிப்படைக் காரணங்களை விளக்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து அந்நூலுக்கு பெட்டிசன் அனுப்பி நிராகரிக்க முனைவது மகா அயோக்கியத்தனம்.
இலங்கைத் தமிழர்களின் மீதான தற்போதைய அடையாள அழிப்பு மிக மிக வேகமாக நடைபெறுகிறது. அதனை இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் இஸ்லாமிய அமைச்சரவை அமைச்சர்கள் வடகிழக்கில் மேற்கொள்கிறார்கள் என்பதுதான் இன்னொரு துன்பியல் விடயம். இந்த இரண்டு நாட்களில் நேரடியாகச் சில தமிழ்-முஸ்லிம் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று அவதானித்திருந்தேன். அடிப்படைவாதங்கள் உரமூட்டப்பட்டு தமிழ் அடையாளங்களும் பண்பாட்டு விடயங்களும் மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் சிதைக்கப்படுகின்றது.
1. வேப்பங்குளம்- நெளுக்குளம்- பாவற்குளம்.
2. பெரியமடு- இரணை இலுப்பைக்குளம்- காக்கையன் குளம்.
3. இதைவிட மன்னாரின் நகரத்தை அண்டிய சில பகுதிகள்.
இந்த இடங்களிலுள்ள இஸ்லாமியக் குடியிருப்புகளில் இதன் அடிப்படைகளைக் காணமுடிகிறது. இந்து மத அடையாளங்கள் இங்குள்ள சில இடங்களில் அழிக்கப்பட்டுள்ளன. அபகரிக்கப்படுகின்றன. சிலை வணக்கத்தைத் தாங்கள் எதிர்ப்பதால் பெரும்பான்மையாகத் தாம் இருக்கும் இடங்களில் இதனை ஏற்கமுடியாது என்று அவர்களால் பதில் சொல்லப்படுகிறது.  சிலையை ஒருவன் வணங்குகிறான் என்றால், அவன் வணங்காமல் இருப்பதற்கும் காரணமுண்டு. அதனைத் தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை. கேரளாவில் கம்யூனிஸ்டாக இருக்கும் ஒருவன் சபரிமலைக்குச் சென்று மாலை போடுகிறான். அங்கு ஜெயித்தது கம்யூனிசம் மட்டுமல்ல, தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல. மானுட நம்பிக்கையும்தான்.
இந்த இன அடையாள அழிப்பு என்பது தமிழ்-முஸ்லிம் என்ற மிகத் துரிதமான வன்முறைக்கு வழிசெய்யும் என்பதனை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன். அந்நேரத்தில் ஒரு இளம் எழுத்தாளருடன் பேசும்போது அவர் கூறியது இதுதான். 'என் சமூகத்தின் அடையாளம் அழியும்போது தொடர்ந்து முற்போக்குவாதியாகப் பதிவு செய்து கொண்டு இருக்கமாட்டேன். நிச்சயமாக வன்முறையின் பக்கம்தான் என்னைத் தயார்படுத்துவேன்'.
இலங்கைத் தமிழர்களில் ஒரு சிலர் இந்துத்துவர்களுடனும், ஆர்.எஸ்.எஸ் உடனும் தொடர்பு வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் நியாயங்கள் ஏற்புடையதாக இருக்கிறது. தமது இன, மத, கலாசார அடையாளத்தை எதிர்த்து வரும் அடிப்படைவாதத்துடன் உக்கிரமாக மோதிக்காக்க கடமையுள்ளதாக நம்புகிறார்கள். அதற்கு கருவியாக துணைக்கண்டத்தின் பெரும் சக்தியுடன் கூட்டுச் சேர்கிறார்கள். இவர்களை எக்காரணம் கொண்டும் தவறு செய்கிறீர்கள் என்று சொல்ல முடியாது. அதே நேரம் அதுதான் இதற்கான தீர்வு என்றும் கருதமுடியாது.
என்னை இஸ்லாமிய விரோதியாக எப்போதும் கருதியவனில்லை. இங்குள்ள அரச ஆதரவு இஸ்லாமிய அமைச்சர்களின் துணையுடன் தமிழ் அடையாள அழிப்பு நடைபெறுகிறது என்பதை மறுத்துச் செல்வதற்கு நாம் ஊமைகளல்ல. இதனை இவ்விடத்தில் பதிய வேண்டிய கடமை என்னுடையது. இங்குள்ள இஸ்லாமியர்களுடைய அரசியலுடன் இணைந்து செல்வது தமிழர்களுக்கும், தமிழர்களுடன் இணைவது இஸ்லாமியர்களுக்கும் இக்கட்டை உண்டாக்கும்.

Comments