பறவைகள்

பறவைகள் பறந்து போகின்ற திசையின் எதிர்முடிவில் நின்று கொண்டது சூரியன்.
வழியனுப்ப நிலவும், நட்சத்திரங்களும் இன்றியே தம் பயணத்தை ஆரம்பித்திருந்தன.

வானத்துக்குக் கீழாகவே தொடர்ந்து பறப்பது பறவைகளுக்கு இடையறாத ஒரு தளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். இல்லையேல்
தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்திருக்க வேண்டும்.
அவ்வேதனையின் களிம்பாக அவற்றின் சிறகுகள் அருகிலுள்ள சிறுபான்மையினரின் குக்கிராமத்தின் குளத்தின் மீது வீழுகின்றன.

தொடர்ந்து ஏதோவொரு "சிற்றினங்களின்" நீர்நிலைகள் மீது தம்சிறகுகளை வீசிவிட்டே செல்கின்றன.

கழுத்து நெரிக்கப்பட்ட இனங்களின் காயங்களை கண்மாயில் சொல்லிவிட்டு,
மீதமுள்ள தம் நிர்வாணம் மூலமே சூரியனை நெருங்க முனைகின்றன.

அதனால் தான் என்னவோ சூரியனின் ஆதித்தூரம் பறவையின் முடிவிலியற்ற பறத்தலால் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Comments