சேரனும் கருணாகரனும்.


முறையே இருவரும் அரசர் மற்றும் படைத்தளபதிகள் என்று இந்த ஈழத்துக் கவிஞர்களைப் பற்றி அறியாதவர்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கான விளக்கத்தைப் பின்வருமாறு கூறலாம். அதாவது சேரர்கள் தமிழை விட்டுப் போன கேரளர்கள். கருணாகரன் இலங்கையைக் கைப்பற்றிய உரமான சோழப் படைத்தளபதி. அதைப்போல தான் கவிஞர் சேரனும் ஈழத்தை விட்டகர்ந்த மாகவிஞர். கருணாகரன் ஈழத்தில் மக்களின் யுத்தப் பிரத்தியட்சங்களை யதார்த்தமாக்கித் தன் கவிதைகளில் கனதியான மொழியுடன் இங்கிருந்தே தந்தவர்/தருபவர்.

இந்த இருவரையும் விட்டுவிட்டு  ஈழத்தின் யுத்தகாலக் கவிதைகளின்  விகாசங்களை ஆராயமுடியாது. சேரனின் கவிதைகளில் யான் முதலில் படித்தது, "மீண்டும் கடலுக்கு" என்ற தொகுப்பிலுள்ள 'மூன்று தெருக்கள்' என்பதாகும். அதேபோல கருணாகரனின் கவிதையில் "ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்" தொகுப்பில் அடங்கும் 'யாருடைய வீடு' என்ற கவிதையுமாகும்.

இரண்டின் பொதுப்பண்புமே நமது இருப்பு நிரந்தரமற்ற ஒன்றாக இருப்பதை மொழியினால் அடையாளப்படுத்தியதுதான்.

கவிதைகள் வருமாறு:

1. மூன்று தெருக்கள்- சேரன்.
=====
கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து புரிந்த
இனப்படுகொலையின்
ஒரு குருதித்துளி
பாலைப்பட்டினத்தின்
ஒதுக்குப் புறத்தில்
தெறித்து வீழ்ந்தது.

அந்தப் புள்ளியிலிருந்து
மூன்று தெருக்கள்
கிளை பிரிந்தன.

ஒன்று தெற்கே போயிற்று
எவரும்
திரும்பி வர முடியாத தெரு
அது எனப்
போனவர்க்குத் தெரியாது
அவர் சாம்பலையும் காணோம்.

இன்னொன்று மேற்கே போயிற்று
கடலும் காடுகளும் தாண்டி
இரவல் முகங்களுடன்
குளிர்காலத்து
ஆறுகளின் குறுக்கே நடந்து
எல்லைக் காவலர்களின்
கொள்ளிக் கண்களுக்கும் தப்பி
இரவுப் பயணங்களில்
புதிய நாடுளுக்குச் சென்றனர்.

கறுப்பு முகங்களில்
அவர்களுடைய வெள்ளை அநியாயம் படிந்தது.

திரும்பி வரும் கனவுகள்
தொலைந்து போக
வந்து சேர்ந்த வழியும்
மறந்து போய்த்
திசை கெட்டது உலகம்.

மூன்றாவது தெருகிழக்கே
கானகத்திற்குப் போயிற்று
போனவர்கள் போர்க் குரலுடன்
திரும்பி வந்தனர்.

மூன்று தெருக்களிலிருந்தும்
மூன்று உலகங்கள் பிறந்தன.
மூன்று உலகங்களிலிருந்தும்
முந்நூறு பார்வைகள் விரிந்தன.
முந்நூறு பார்வைகளிலிருந்தும்
மூன்று கோடி முகங்கள்.
====
யுத்தங்களால் ஈழ மண்ணிலிருந்து தமிழர்களின் இடப்பரம்பல் எங்ஙனம் குருதிதோய போய்ச்சேர்ந்தது என்று வார்தைகளின் பொருண்மையினால் (Purport) சுருங்கவும், உணர்வுகளின் உள்ளார்ந்த ஆழத்தினால் விரிவாகவும் கூறும் ஒரு கவிதை.
1.தெற்கு.
2.புலம்பெயர்வு.
3.வடக்கு-கிழக்கு.
என்று தீவின் முத்திசைகளை அடையாளப்படுத்தியது சேரனின் கவிதை.

2. யாருடைய வீடு- கருணாகரன்.
======
இந்தவீடு உன்னுடையதென்று சொல்லுவதற்கில்லை.
ஆனாலும் நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய் இது உன்னுடையதென்று.
பல்லிகள்
கரப்பான் பூச்சிகள்
எல்லாமே உன் வீட்டிலுள்ளன.
நீ வளர்க்கும் நாயும்
உன் பூமரங்களும்
உள்ளன இந்தவீட்டில்.
நீ சொல்கிறாய் இன்னும்
இந்தவீடு உன்னுடையதென்று.

உன்நாய் அதன் இன்னொன்றிடம் இதைத்தன் வீடென்று சொல்லுமே.
உன் வேலையாள் சொல்வான்
தன் சகாவிடம் இது தன்வீடென்று.
கரப்பான் பூச்சி நினைக்கும் இது தன் வீடென்று.
பல்லி யோசிக்கும் இது தானிருக்கும் வீடென்று.
சிலந்தியெண்ணும் இது தன் வீடிருக்கும் வீடென்று.
உன்னுடைய பெண் நினைக்கிறாள் இது தன்னுடைய வீடென்று.

இன்னும் நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
இந்தவீடு உன்னுடையதென்று.....
====

இரண்டு கவிதைகளின் பொதுவான கூறு நிரந்தரமின்மையின் அலைவு. தொண்ணூறுகளிலும், இரண்டாயிரங்களிலும் இதைவிட  ஒரு பாடுபொருள் இங்கு இருக்கவில்லை தான். இனவழிப்பின் சாட்சியங்களை தத்ரூபமான படகலைளில் காணல் ஒரு புலன் சார்ந்தது. சிலவேளைகளில் அவற்றைக் காணமுடியாதவர்களுக்கு இவர்களின் கவிதைகள் ஒரு இதயக் கனத்தை உண்டாக்கக்கூடும். ஆகவே இளகிய மனமுடையவர்கள் சேரன், மற்றும் கருணாகரனின் கவிதைகளைப் படிப்பது எச்சரிக்கைக்குரியதாகும்.....
இரத்தம், கண்ணீர், துரோகம், கனவு, ஆக்கிரமிப்பு எல்லாமே உங்களது நிம்மதியைச் சீர்குலைக்கக் கூடும்.....

Comments