குறும்பு

குறும்பு என்ற சொல் ஏதோ வடமொழி என்றுதான் இதுவரை நினைத்ததுண்டு. ஆனால் அது குறுநிலமன்னர்களைக் குறிப்பதாகவே இருந்துள்ள தமிழ்ச் சொல்லாகும். ஒரு நாட்டில் ஆளும் பேரரசர்களுக்கு இவர்கள் இடையூறாக இருந்ததால் இவர்கள் குறும்பு என அழைக்கப்படலாயினர். ஆக குறுநிலர் என்பதிலிருந்தே குறும்பு உற்பத்தியாகியிருக்க வேண்டும். குறும்பு என்பதற்கு அவர்கள் ஆளும் 'சிற்றூர்' எனவும்  ஒரு பொருளுண்டு. அல்லது சிறுகுற்றம் குறும்பு என்று படிந்திருக்கவேண்டும்.

ஆதாரமாகவுள்ள சில இலக்கியப்பாடல்கள்.

"நீட்ட நணி நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி"
-புறநானூறு.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு."
-திருக்குறள்.

""கொலைபுணர் வேலால் வெங்கோற் குறும்பெனும்
களைகடீர்த்து""
-திருவிளையாடற் புராணம்.

"ஒருகோல் ஒச்சி உலகாண்ட அரைசன் ஒதுங்கத் தலைஎடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்"
-பாலகாண்டப் பைம்பொழில்.

ஆங்கிலத்தில்கூட Mischief என்பது குறும்பாகவும், Chieftain என்பது குறுநிலத்தவராயும் பொருளுணர்வதுண்டு. கனடா, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, சுவீடன் போன்ற இடங்களில் இந்தக் குறும்புக்கான தண்டனைகள் அரசமைப்புச் சட்டப்படி இன்றும் வழங்கப்படுகின்றன. நமது பிராந்தியங்களில் பழங்காலத்தில் குறும்பு என்பது அரச தொந்தரவாக இருந்து, சமகாலத்தில் அது வேடிக்கை விடயமாக மட்டுமே முன்னேறியது என்பது அரசினதோ, மக்களதோ சகிப்புணர்வாகத்தான் இருக்கவேண்டும். குறும்புநிலையை நமக்கு வழங்கி பேரடையாளப்படுத்தியதில் பிராந்திய சினிமாவின் பங்கும் அளப்பரியது என்றே கூறவேண்டும்.

விஷ்ணுவர்தனின் 'குறும்பு' என்ற கேவலமான தமிழ்ப்படத்தைப் பார்த்தபின் குறும்பு என்ற சொல்லைப்பற்றிய தேடலுக்கு அடைந்தவை இவை.

Comments