சங்ககாலத்து இராமன்: சில குறிப்புகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் இந்துக் கடவுளரில் ஒருவரான ராமன் பற்றிய குறிப்புக்களை  கடுவன் மள்ளனார் என்றொரு புலவர் எழுதியுள்ளார். முதல் மூன்று நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட அகநானூற்றிலேயே இந்தக் குறிப்புகள் தெளிவாக உள்ளன.

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்கு இரும் பௌவம் இரங்கும் 
முன் துறை வெல்போர் இராமன் 
அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல 
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே"

இங்கே கவுரியர் என்பது பாண்டியரையும் கோடி என்பது தென்னகத்துத் தனுஷ் கோடியையும் குறிக்கிறது. இப்பாடலின் பொருளாக, ராமன் வெற்றிபெற்றுப் பாண்டியரின் தேசத்துக்கு வந்தடைந்து ஆலமரத்தடியில் அமர்ந்து மறைஞானப் பாடல்களை ஓதுகிறான். அம்மரத்தின் மேலிருந்த பறவைகள் தமது சப்தங்களை விட்டுவிட்டு ராமனின் மறையோதலைக் கேட்டபடியுள்ளன. இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மள்ளனார் பாடிய ஒரு பாடல்.

சமகாலத்தில் ஒருவர் தனது சுய கருத்தைக் கூறுவதற்கு இணையத்தின் செல்வாக்கை  அதிகமாக நம்பியுள்ளார். இந்த ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் எவ்வித வரலாற்று வாசிப்பு அறிவுமற்ற அதே வேளை தம்மை அறிவுஜீவிகள் என்று நம்பிக்கொள்கின்ற ஒருசிலர் தமிழர்கள் இந்துக்களல்ல என்றொரு கருத்தையும் இந்து மதம் வெறுமனே சாதியால் கட்டப்பட்ட பார்ப்பன மதம் என்ற கருத்தையும் கூறத் தொடங்கியுள்ளனர். இது தமிழ் அறிவுலகில் தொடர்ந்து நடந்துவரும் ஒரு மூடத்தனமான விவாதமேயாகும்.
(திருவானைக்கோவில் சிற்பம்: சிவனை வழிபடும் ராமன்)
இவர்கள் உள்ளுணர்வை நம்பி இயங்குபவர்கள் என்றால் அவர்களது மனதில் ஏதேனுமொரு தெளிதலையாவது கண்டடையலாம். அல்லது வரலாற்று வாசிப்பையாவது கைக்கொள்வார்கள் என்றால் உளப்பூர்வமான பிரக்ஞை இருக்கும். இந்த இரண்டுமே இல்லாமல் யாரோ ஒருவர் கூறும் வதந்திகளை வைத்துக்கொண்டு பல தசாப்தங்களாக அதுவே உண்மை என்று இயங்கி வருகின்றனர். அந்த இயக்கத்தின் ஒரு படியாகத்தான் தமிழர்கள் இந்துக்களல்ல என்ற கூற்றையும் நாம் பார்க்க வேண்டும். இது பற்றி எத்தனை முறை எழுதினாலும் அதற்கு ஒரு அரைகுறை விளக்கத்தோடு ஓடி வந்து விடுவார்கள்.

அண்மையில் ஒரு நண்பரிடம் பேசும்போது, வட இலங்கையில் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்க உள்ளதாகக் கூறினார். அதற்கு சோஷலிஸ இளைஞர் முன்னணி என்ற பெயரை வைத்துள்ளதாகவும், இளைஞர்களைத் திரட்டிவருவதாகவும் கூறினார்.  அந்த அமைப்புக்கான செயற்பாட்டாளராக விரும்பினால் செயற்படலாம் என்றும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அந்த அமைப்பின் முதன்மையான நோக்கமே இலங்கையிலுள்ள தமிழர்கள் இந்துக்களல்ல, சைவர்கள் என்று நிறுவுவதுதான் என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார். நீண்ட நேரம் சோஸலிச அஜென்டாக்கள் பற்றி ஒரு விளக்கம் தந்தார். அப்பொழுது நான் எளிய கருத்தொன்றைக் கூறினேன். தமிழர்கள் இந்துக்களல்ல சைவர்கள் என்கிறீர்களே சைவசித்தாந்தம் என்னும் கோட்பாட்டின் மூல நூலாகவுள்ள சிவஞானபோதம் என்ற நூல் வடமொழியைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதையாவது அடிப்படையில் அறிவீர்களா என்று கோரியதும் அவர் உடனே கூறினார் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தும் இந்து மத நூல்கள் ஆகவே அதைப்பற்றி தாம் கவனத்தில் கொள்ளவில்லை. தமக்கு மானிட விடுதலையே முக்கியம் ஆகவே தாம் கம்யூனிச நூல்களை மட்டுமே கற்று வருகிறார்களாம்.

இங்கு அடிப்படையிலேயே பெரும் பிரச்சனைகள் உள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சங்க  இலக்கியத்தில் ராமன் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன. அதே நேரம்  ஆறு தரிசனங்களை ஒட்டிய காப்பிய மற்றும் இலக்கிய வளர்ச்சியும் தமிழிலே நடந்தேறுகிறது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் வந்தடைந்ததும் அதனைக் களங்கப்படுத்தும் முயற்சிகள் கிறிஸ்த்தவத்தின் துணையுடன் நடந்தேறுகிறது. அதற்கு Indiology என்ற பெயரும் சூட்டப்படுகிறது. இங்கு மானிட விடுதலை என்று அந்த நண்பர் கூறிய கருத்து எவ்வகையிலும் பிரக்ஞையற்ற மேல்மனம் சார்ந்த கருத்து. அவரது தனிப்பட்ட கருத்துக்காக வளமான இலக்கிய மற்றும் பண்பாட்டு ஞான மரபுகளை விட்டு விடுவது என்பது மேலும் பிரச்சனைகளையே உண்டு பண்ணக்கூடியது.  அல்லது செழிப்பான இலக்கிய அடைதலை ஏற்படுத்தப் போவதுமில்லை.

தமிழர்கள் இந்துக்களல்ல, இந்து மரபே போலியானது என்று அதிகமாகக் கூறுவது கிறிஸ்த்தவ மிசனரிச் சார்புடையவர்கள்தான். சோஸலிச கட்சியை அமைக்கப் போகிறேன் என்று கூறிய அந்த நண்பர் மிக நீண்டகாலமாக கிறிஸ்த்தவ மிசனரிகளுடன்  இயங்கியவர். தற்போது அதனைவிட்டுத் தற்காலிகமாக நீங்கி அந்த மிசனரிகளுக்குப் பலம் சேர்க்கவே மக்கள் ஆதரவைத் தேடுகிறார். அதற்கு அவர் எடுக்கும் வாதம் தமிழர்கள் இந்துக்களல்ல என்பதாகும். அந்த வாதத்தை அவர்கள் முன்வைக்கும்போது தெளிவான ஆதாரங்களைப் பதிவிடவேண்டும். மாறாக "தமிழர்கள் சைவர்கள் என்று கூறிவிட்டு பின்னர் சைவ சித்தாந்தம் இந்து நூல் என்றும் கூறிக்கொண்டு இறுதியில் தமிழர்கள் இந்துக்களல்ல" என்று கூச்சலிடுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஒரு நண்பர் தான் கிறிஸ்த்தவ மிசனரி ஆட்களின் மூளைச்சலவைக்கு உள்ளான அனுபவத்தை அண்மையில் கூறியிருந்தார். அதில் தமது குலதெய்வக் கடவுளைத் தாம் வணங்கும் போது அதனைச் சாத்தான் என்றே மதமாற்றம் செய்ய வந்த பெண்கள் கூறியதாகவும், தமது தெய்வமே அனைத்துக்கும் தீர்வு என்றும் கூறினார்களாம். எவ்வளவு அருவருப்பான ஒரு சம்பவம் என்று என்னிடம் கூறி நொந்துபட்டார். அத்துடன் இதனை நீங்கள் ஏன் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் அவர்களது தெய்வ நம்பிக்கைகள் பற்றிக் கூறுவதில்லை என்று அந்தப் பெண்களிடம் கேட்டதாகவும் என்னிடம் கூறினார். உண்மையில் இதற்கான காரணத்தை ஆபிரிக்க நாடுகளில் சிறிய அளவில் பிரச்சனைகள் நிகழ்ந்த போது கிறிஸ்த்தவ பாதிரிமார் மேற்கொண்ட சம்பவங்களுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அங்கிருந்த பழங்குடி மரபுகளை இல்லாது செய்து அவர்களுக்குள் உள்ளக முரண்களைப் பெருமளவில் ஏற்படுத்தி மத்திய ஆபிரிக்கப் பிராந்தியத்தையே ரத்தக்காடு ஆக்கியது கிறிஸ்த்தவ மதமாற்றச் சபைகள்தான். இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவுபெற்ற பிறகு தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் அண்மைக்காலமாக ஒருசில அமைப்புக்கள் உள்நுழைந்துள்ளன. யுத்தப் பாதிப்புக்கு உள்ளான  முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இவற்றின் செயற்பாடுகள் கிராம மட்டத்தையொட்டி அதிகமாக நடைபெறுகிறது. இங்கு மிசனரிகள் மூலம் பெருந்தொகைப் பணம் பரிமாறப்படுகிறது. அதற்குத் தடையாகவுள்ள பூர்வீக மரபுகளைக் கொச்சைப்படுத்தி சாத்தான் என்று கூறவேண்டிய தேவை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மதமாற்றத்தை ஊக்குவிக்க அந்த இடத்தின் பூர்வீக மரபுகளைக் கொச்சைப்படுத்திக் கேலிக்குட்படுத்த வேண்டும். உதாரணமாக ராமசாமி நாயக்கர் ஆரம்பத்தில் கம்பராமாயணத்தைப் பற்றித் திட்டும் போது மௌனமாகப் பார்த்திருந்த தமிழர்கள் அவர் பெரிய புராணம் மீது தன் பார்வையைச் செலுத்தத் தொடங்கியதும் சீறிப்பாய்ந்தனர். ஈவேரா போன்றவர்கள் ஆங்கிலேயருக்கு சேவகம் செய்த இந்தியர்கள் தானேயொழிய ஆத்மார்த்தமான சமூகச்சீர்திருத்தவாதிகளல்ல. அவரது அந்தச் சேவையினால் இலாபமடைந்தது கிறிஸ்தவ மதமாற்ற மிசனரிகள்தான்.

ஒருவர் விரும்பி ஒரு மதத்தைப் பின்பற்றுவது அவரது உரிமை. ஆனால் இன்னொரு மரபைக் கொச்சைப்படுத்தி அம்மரபில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மூளைச்சலவைகள் மூலம் கட்டாய மதமாற்றங்களை ஊக்குவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இலங்கை தற்போதுதான் பெரும் இனப்போரில் இருந்து மீண்டு வழமைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் பரவலாக நடைபெறும் மதமாற்றச் செயற்பாடுகளால் மற்றுமொரு உள்ளக முரண்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அய்யம் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது.

ஜெயமோகன் தன்னுடைய விஷ்ணுபுரம் நாவலில் பறையர் வகுப்பினர் கோயில் பிரவேசம் மேற்கொண்டதாக எழுதியதற்கு அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஜெயமோகன் மீது சாதிய-மத அடிப்படைவாத முத்திரையைக் குத்தியிருந்தனர். அதாவது ஜெயமோகனை இந்து மலையாளி நாயர் என்று வசைபாடினர். அதற்கு எதிர்வினையாக ஜெயமோகன் அவர்கள் அ.மார்க்ஸை கிறிஸ்த்தவ நாடார் என்று கூறியதும் ஜெயமோகனைப் பாசிஸ்டு என்று வகைப்படுத்துகின்றனர். அ.மார்க்ஸ் போன்ற போலி அறிவுஜீவிகளின் அறுதியான முடிவு என்னவெனில் இந்து ஞான மரபினை யாரும் விஸ்தரிக்கக் கூடாது. இந்து மரபு என்ற ஒன்று தமிழர்களிடமோ இந்தியாவிலோ இருந்ததில்லை. மாறாக மதமாற்றங்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கும் துணை நிற்க வேண்டும்.  அதற்குப் பெயர்தான் அறிவுஜீவித்தனம் என்று போலியான அதே நேரம் ஆபத்தான ஒரு  சிந்தனை தற்காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

'வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த' என்ற சங்ககாலத்தின் அகநானூற்றுப் பாடல் வரிகள் தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுபவர்களையும், சிறுதெய்வம்-பெருந்தெய்வம் என்று ஆய்வு நிகழ்த்தும் ஒற்றைப்படையானவர்களையும்  மறுத்துரைக்கப் பயன்படும் ஆரம்பகாலத் தமிழிலக்கிய வரி என்றும் கூறலாம்.

வட இந்தியக் கவியான வான்மீகிக்கும் தமிழகக் கவியான கடுவன் மள்ளனாருக்கும் தொன்றுதொட்டே ராமன் ஒரு ஆதர்ச புருஷனாக இருந்துள்ளான். கவிகளுக்கு மட்டுமல்ல குகனுக்கும் அவன் சோதரனாயுள்ளான். இதனைக்கூட விமர்சிக்கும் பன்மைத்துவத்தை இந்து மரபு எமக்கு வழங்கியுள்ளது. இந்தப் பன்மைத்துவத்தின் பேரடையாளம்தான் கம்பன் தமிழின் உச்சகவியாகவும் ராமன் பாரதத்தின் தேசிய நாயகனாகவும்  இன்றுவரையும் இருப்பது என்று கூறலாம்.


தொடர்புடைய பதிவுகள்.

ஜெயமோகனின் இந்திய ஞானம்

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை

இலங்கையின் மதமாற்றங்களும் அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியாவும்

Comments

Popular Posts