ஜெயமோகனின் இந்திய ஞானம்


ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது.  படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.

இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுகங்கள், ஆய்வுகள், விவாதங்கள் என்று மூன்று பகுப்புக்களினை முன்னிறுத்திச் சொல்கின்றது. அறிமுகங்களிலுள்ள ஆறு கட்டுரைகள் நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் தரிசன மற்றும் ஆழ்மன காட்சிகளை மரபிலிருந்து தெளிவுபடுத்துகிறது. குறிப்பாகப் பண்டைய தமிழ் இலக்கியத்தை இன்றைய நவீன மத பிம்பங்களுடனும் தொடர்ந்து செல்லும் நடைமுறைகளுடனும் விளக்குகிறார். இன்றைய சந்ததிகள் பலருக்குள்ள குழப்பம் என்னவெனில் இந்து மதத்தை எங்கிருந்து புரிந்து கொள்ளலாம் என்பதுதான். எனது வாசிப்பில் சொல்கிறேன் ஆரம்பத்தில் இந்து மதம் என்பது சாதியை மட்டுமே மையப்படுத்திய மதம் என்றுதான் எண்ணியிருந்தேன். அதற்கான முஸ்தீபுகளைச் சுற்றியிருந்த மிஸனரி ஆதரவாளர்களும், இடதுசாரிகளும் முடுக்கி விட்டிருந்தனர். இதனை நம்ப வேண்டிய துர்ப்பாக்கித்துக்குத் தள்ளவும் பட்டேன். இன்றும் பலர் இதனையே கொண்டியங்கி வருகின்றனர். இந்த உதவாக்கரை நெறிமுறையை மாற்றிக்கொள்ள உதவியது ஜெயமோகனின் எழுத்துக்கள்தான் என்று வெளிப்படையாகவே கூறிக்கொள்வேன்.
இந்து ஞான மரபு பற்றிய ஜெயமோகனின் எழுத்துக்கள் எனது வாசிப்பினை இன்னொரு  கட்டத்துக்குக் கொண்டு சென்றது.  அதனைப் பின்தொடர்ந்து அந்த தத்துவ நூலுக்கு எழுதப்பட்ட தெளிவான விளக்கம் என்றே இந்திய ஞானம் என்ற நூலைக் கூறவேண்டும். இந்து மதத்தின் அறிவார்ந்த கூறுகளை ஒருவன் அறிந்து கொள்வதற்கான படிமுறைப் பாடத்திட்டங்களை ஜெயமோகன் பின்வருமாறு வகுக்கின்றார்.

1. வேதங்கள்.

2. மூன்று தத்துவங்கள்.
(பிரஸ்தான திரயம்) கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள். சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்.

4. ஆறு மதங்கள். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்.

இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்று எண்ணலாகாது. இவை மாறி மாறி ஒன்றுடன் ஒன்று விவாதம் செய்தே வளர்ந்துள்ளன. இந்த விவாதங்களால்தான் இந்துமதம் என்பது பன்மைத்துவத்தின் உச்சமாக இன்றும் விளங்கி வருகிறது. உதாரணமாக வேதக்கருத்துக்களை மறுக்கும் உபநிடத வரிகள் ஏராளமாக உள்ளன. இந்நூலிலுள்ள அறிமுகங்களைத் தெளிவுடன் வாசிக்கும் ஒருவரால் பின்னைய இருபெரும் பகுதிகளையும் விளங்கிக் கொள்ளலாம். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், நவீன கவிதை முதலியவற்றில் உள்ள இந்து ஞான மரபுகளை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். அதற்கு நாட்டார் மரபுகளையும் துணைக்கழைக்கிறார். இந்தப் பார்வையை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்து ஞான மரபு பற்றிய பிரக்ஞையை வளர்க்க வேண்டும்.

அடுத்துவருகின்ற ஆய்வுகளில் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. சங்க காலமும் இந்திய சிந்தனை மரபும்.
2. வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்.
3. ஒரு பொற்பட்டு நூல்.
4. இந்திய சிந்தனை மரபில் குறள்.

இதில் முதலிரு கட்டுரைகளும் மிக முக்கியமானவை. சங்ககாலத்தின் இலக்கியக்களிலுள்ள செவ்வியல் மற்றும் நாட்டார் மரபுகள் பற்றிய சிறிய விளக்கம் தரப்படுகிறது. அத்துடன் சங்ககாலத்தில் நிலையான ஒரு தத்துவப் பார்வைகொண்ட நூல்கள் உருவாகவில்லை. உதாரணமாக ஆரம்பகால இந்திய ஞானமரபில் தனித்தத்துவ நூல்களாக உருவாகியிருந்த பிரம்ம சூத்திரம், சாங்கிய காரிகை, வைஷேசிக ஙூத்திரம் போன்ற தனி நூல்கள் போல சங்ககாலத்தில் எந்தவொரு தத்துவ மரபும் உறுதிபெறவில்லை. அதனால்தான் அக்காலத்தில் காப்பியங்களும் உருவாகவில்லை என்பதை நாம் அக்கால தனிப்பாடல்களைக் கொண்டு தொகுத்து நோக்க வேண்டும். பின்வந்த சங்கமருவிய காலத்தில்  உருவான மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள் தமக்கென ஒரு தத்துவ நோக்குக் கொண்டுள்ளன. இதனை ஜெயமோகன் "சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்பது இன்னொரு விளக்கம்" என்று குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழில் உண்டான அடுத்தடுத்த காப்பியங்களுக்குச் சமண பௌத்த தத்துவங்களே உதவின என்று கூறவேண்டும்.

இங்கு ஒரு விடயத்தைக் கூறவேண்டும். சில நாட்களுக்கு முன்பு அரச பணிக்கான பயிற்சி நெறியில் பங்குபற்றியிருந்த போது எனது வலைத்தளப் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர் ஒருவர் கேட்டார். நீங்கள் ஏன் இந்து ஞான மரபையும் ஜெயமோகனையும் பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள் வேறு சித்தாந்தங்கள் எதுவுமே இல்லையா என்றார். அவர் நீண்டகாலமாகப் பல்கலைக்கழக யூனியன் மூலம் இயங்கிவரும் கம்யூனிச சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டவர். அதாவது கட்சியரசியலுக்காகக் கம்யூனிசத்தை எழுந்தமானமாகப் பின்பற்றுபவர். எளிமையாகவே அவருக்குப் பதிலைக் கூறினேன் இந்திய மற்றும் இந்து ஞான மரபு என்பது மிக விஸ்தீரணமான பரப்புக் கொண்ட பன்மைத்துவ வடிவம். அதற்கு பொருள்முதல்வாதம் மற்றும் கருத்து முதல்வாதம் என்ற இருவேறுபட்ட நோக்குகள் உள்ளன. வெறுமனே கட்சி அரசியலுக்காக இந்துஞான மரபு என்ற ஒன்றே இல்லை என்று மேம்போக்காக வாதிடும் உங்களையும் உங்கள் சித்தாந்தத்தையும் நிராகரிக்க எனக்கு இந்து ஞான மரபு எனும் சித்தாந்தமே போதுமானதாக உள்ளது. அத்துடன் அது ஒவ்வொரு இந்து மத எதிர்ப்புப் பேசுபவரின் ஆழ்மனதிலும்கூட பதிந்துள்ளது என்றும் கூறியிருந்தேன். அந்த ஞானமரபினை மிக எளிமையாகவும் ஆழமாகவும் தமிழில் தெளிவாக எழுதி வருபவர் ஜெயமோகன் தான். அவரைக் கொண்டாடுவதிலும், இந்து ஞான மரபினை ஒரு கருவியாக வைத்து எமது இலக்கியத்தையும் வாழ்வியலையும் அளவிடுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இருந்ததில்லை என்று மிக நீளமான ஒரு கருத்தைச் சொல்லியிருந்தேன். அவரது பதில்கள் முன்முடிபுகள் கொண்டது என்பதனாலும் கம்யூனிசம் பற்றியோ இந்துஞான மரபுகள் பற்றியோ தெளிவான புரிதல் அவரிடம் இல்லாமையாலும் தொடர்ந்து உரையாடுவதில் பெரும் இடர்பாடுகள் ஏற்பட்டது. விவாதங்களின் தளத்தைவிட்டு தொடர்ந்து விலகியபடியே சென்றார். இதுதான் நமது ஞான மரபுகளைக் கொச்சைப்படுத்துவோரின் நிலைப்பாடு. அவர்களுக்குத் தாம் சார்ந்த அல்லது தாம் எதிர்க்கும் சித்தாந்தம் பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லை. இது ஒரு சமூகத்தின் அறிவுப் பண்பாட்டைச் சீரழிக்கவல்லது. இன்று தமிழ்ச்சமூகத்தின் வியாதி என்றும் இதனைக் கூறலாம்.

இதனை இங்கு கூறக்காரணம் ஜெயமோகன் சங்ககாலம் பற்றியும் இந்தியச் சிந்தனை மரபு பற்றியும் இந்நூலில் கூறியிருந்த ஒரு விளக்கமாகும்.

"சங்கம் மருவிய காலகட்டத்தில் உருவான பெருங்காப்பியங்களில் மிக விரிவான தத்துவவிவாதங்கள் உள்ளன. அந்த தத்துவ விவாதங்கள் நிகழ்வதற்கான சபைகள் மற்றும் விவாதமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அது திடீரென்று நிகழ்ந்துவிடாது. ஆகவே சங்ககாலம் என நாம் வகுக்கும் ஐந்து நூற்றாண்டுக் காலகட்டத்தின் இறுதியில் பௌத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றி விரிவான தத்துவ விவாதங்களை உருவாக்கிவிட்டிருந்தன என்று ஊகிக்கலாம்.

இந்த நோக்கில் அணுகினால் சங்கப்பாடல்களில் உள்ள தத்துவக்கருத்துக்கள் சமண பௌத்த மதங்களின் ஆரம்பகால வடிவங்களால் உருவாக்கபப்ட்டவையாக இருக்கலாம். சமண மதத்தின் முன்னோடி வடிவமான ஆசீவகம் தமிழகத்தில் அழுத்தமாக வேரூன்றியிருந்தது என்று வலுவான ஆய்வுத்தரப்பு உண்டு. சங்ககால தத்துவ நோக்கின் உச்சம் என்று கருதப்படும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஒரு முழுமையான ஆசீவக கொள்கைவிளக்கம் என்பதைக் காணலாம்"

இதனை வைத்து நோக்கும்போது சங்ககாலம் என்பது ஆரம்பத்தில் பழங்குடி மரபில் தொடர்ந்து இருந்துள்ளது. அதற்குள் இந்தியச் சிந்தனை மரபின் தாக்கம் ஏற்படத் தொடங்கிய பிறகுதான் அடுத்துவந்த காலகட்டத்தில் தத்துவத்தின் பாய்ச்சல் நிகழ்கிறது. இங்கே வைதிகம் மற்றும் அவைதிகம் என்ற இரண்டு மதப் பிரிவுகளின் தீவிர மோதல் நடந்த களமாகவே பல ஆய்வாளர்கள் சங்க மற்றும் சங்கமருவிய காலத்தை அடுத்த காலப்பகுதியைச் சித்தரித்துள்ளனர். ஆக இந்த இரண்டு காலப்பகுதியில் தத்துவம் என்பது மிகத் தீவிரமாக உரையாடியுள்ளது. வைதிக அவைதிக மோதல்கள் நிகழவில்லை. தத்துவங்களின் வளர்ச்சியால்தான் சங்கமருவிய காலத்தில் காப்பியங்கள் தோற்றம் பெறுகின்றன. அந்தத் தத்துவங்களின் தோற்றம் சங்ககாலத்யில் முளைவிடத் தொடங்கியபோது சங்க இலக்கியத்தின் தனிப்பாடல்களில் தத்துவ சிந்தனைகள் ஆசீவக நோக்கில் உருக்கொள்கிறது. இந்த நோக்கு எங்கிருந்து வந்தது என்ற விவாதத்தை வைத்துப் பார்த்தால் தொன்மையான சமஸ்கிருத மரபுதான் நம்மிடையே ஆதாரமாக வரும். சொல்லாராய்ச்சி பற்றிய மீமாம்சையும், விவாதங்கள் பற்றிய நியாய சாஸ்திரமும் பழைய சமஸ்கிருத மரபில் இருந்துள்ளது. இந்த இரண்டு சிந்தனை மரபும் சங்ககாலத்தின் ஒரு சில இடங்களில் குறித்துக் காட்டப்படுகிறது. அதாவது புலவர்கள் கூடியிருந்து அறிவாய்வு செய்யும் இடங்கள் இருந்தமைக்கான குறிப்புப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாக ஜெமோ சுட்டிக்காட்டுகிறார்.  குறிப்பாக,
"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பன்" என்ற மதுரைக்காஞ்சி பாடலையும் இன்னும் சில புறநானூற்றுப் பாடல்களையும் சுட்டியுள்ளார்.

அத்துடன் தொன்மையான தமிழர்களின் இயற்கை வழிபாடுதான் பிற்காலத்தில் பெருங்கோயிலாகவும் உருமாறியுள்ளது. ஆரம்பத்தில் கல்லையும் மரங்களையும் வழிபட்டுள்ளார்கள். பின்பு பொருளாதாரம் மேலோங்க கோயில்களை எழுப்பியுள்ளனர். இதற்கு இன்றும் பின்பற்றப்படும் கோயில்களின் தலவிருட்சம் உதாரணமாகவுள்ளது. இந்த இயற்கை வழிபாட்டின் மையம் எங்குள்ளது என்று பார்த்தால் இந்து ஞான மரபிலுள்ள ஆறுதரிசனங்களில் ஒன்றான சாங்கியத்திலுள்ளது. சாங்கியம் என்பது வேதகாலம் தொட்டு காணப்பட்ட இயற்கையை வணங்கும் பொருள்முதல்வாத நோக்கினாலான ஒரு இந்துத் தரிசனமாகும். நிலத்தை இயற்கையாகவும் இயற்கையைப் பெரும் பிரம்மாண்ட வடிவில் பிரபஞ்சமாகவும் காண்பதாகும். இதனைச் சங்ககாலத்தில் பிரிக்கப்பட்ட அய்வகை நிலப்பிரிவுகளுடன் ஒப்பிட்டு நாம் ஆராயவும் வேண்டிய நிலையில் இன்று உள்ளோம். மேலும் இந்து மதத்திலுள்ள மூவகைப் புருடார்த்தங்கள் புறநானூற்றில் வலுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வைதிக நோக்கினால் ஆன பார்வைகள் புறநானூற்றிலுள்ளது. இது திருக்குறள் வழியாக அதி தீவிரமாகக் கட்டமைக்கப்பட்டது. செவ்வியல் படைப்புக்களான சங்க இலக்கியங்களின் மூலமான பண்பு யாதெனில் "பின்பு வரும் படைப்புகளுக்கு ஆதாரமாகத் திகழ்வது" இதனைத் திருக்குறளின் பல வரிகளுக்கு மூலமாகப் புறநானூற்றுப் பாடல்கள் பல ஆதாரமாயுள்ளன. அதனால்தான் இன்று பல கிறிஸ்த்தவ மதமாற்ற மிசனரி ஆட்கள் திருக்குறள் என்ற நூலை எப்படியாவது கிறிஸ்த்தவ நூல் ஆக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கின்றனர்.
ஜெயமோகன்
சமணமும் பௌத்தமும் வேதத்துடனும் தரிசன மரபுகளுடனும் விவாதம் செய்து வளர்ந்தவை. இவற்றை இந்தியச் சிந்தனை மரபில் உதித்த மிக முக்கியமான பொருள்முதல்வாத சிந்தனை மதங்கள் என்றும் கூறலாம். இவற்றுடன் பிற்கால வேதாந்தங்கள் விவாதம் செய்துள்ளன. இங்கே சங்ககாலம் மற்றும் சங்கமருவிய கால இலக்கியங்களையும் ஆழமாக வைத்துப் பார்க்கும் போது இந்திய மற்றும் இந்துத் தரிசனச் சிந்தனைகளின் அழுத்தமான பாகங்களை அவதானிக்கலாம். இது பற்றிய மேலதிக புரிதல்களுக்கு இந்து ஞான மரபு பற்றிய அடிப்படைத் தெளிவுகளும் பழந்தமிழிலக்கியப் பரிச்சயங்களும் இருக்க வேண்டும். மாறாக கம்யூனிசம், பின்நவீனத்துவம் என்று இந்தக் கோட்பாடுகளையே அரைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதுபவர்களுடன் பேசுபவர்களுன் பேசுவதால் அறிவார்ந்த ஒரு விவாதத்தை எதிர்பார்க்க முடியாது.

அடுத்த கட்டுரையான வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும் என்ற கட்டுரையைத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான இலக்கிய தத்துவ கட்டுரை என்றே கூற வேண்டும். இதனை வேதாந்தங்களின் சிந்தனையுடனும் நவீன மற்றும் பழந்தமிழ் இலக்கிய மரபுகளுடனும் ஒப்பிட்டு விரிவாக எழுதியுள்ளார் ஜெமோ. தமிழின் நவீனத்துவ படைப்பாளியான பாரதியாரின் எழுத்துக்களிலுள்ள வேதாந்தச் செல்வாக்கையும் அவரது வழியில் வந்த காநாசு, மௌனி, ந.பிச்சமூர்த்தி முதலியோரின் அத்வைத நோக்கையும் விரிவாக எழுதுகிறார். மணிமேகலை காப்பியத்திலுள்ள அளவை வாதத்தை வேதாந்த மரபுடன் இணைத்துப் பார்க்கும் ஜெயமோகன் மணிமேகலை காப்பியத்தைப் புத்தனுக்கு எதிரான கலவரம் என்றும் வகைப்படுத்துகிறார். இங்கே பௌத்தம் மற்றும் வேத வேதாந்தங்கள் பற்றிய பிரக்ஞை நமக்கு ஏற்பட்ட பிறகே இதனைப் புரிந்து கொள்ள முடியும். (பார்க்க: ஆரம்பத்தில் நான் எழுதிய பௌத்தமும் மணிமேகலையும் மற்றும் இந்து ஞான மரபு பற்றிய விமர்சனக் கட்டுரைகள்)  அத்துடன் நாராயணகுரு, ராமகிருஷ்ணரின் பார்வைகளையும் குறிப்பிட்டு வேதாந்திகளே ஆரம்ப காலத்தில் சமூகப் போராளிகளாக இருந்ததையும் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

இந்நூலில் அடுத்து வரும் மூன்றாவது பகுதி விவாதங்களை உள்ளடக்கியது. இது மிகப்பெரும் பகுப்புகளையும் ஜெயமோகன் தான் கற்றுணர்ந்த மெய்ஞ்ஞான விடயங்களையும் பரந்த நோக்கில் பகிர்ந்து கொள்வதாக உள்ளது.

"தமிழை ஆய்வுசெய்வதற்கு சமஸ்கிருதம் இன்றி இயலாது.  தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிஞர்களுக்கு இருக்கும் சமஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது"

மேலுள்ள பகுதி ஜோர்ஜ் எல்ஸ்ட் அவர்களின் கருத்தை வைத்து ஜெயமோகன் கூறிய அபிப்பிராயம். மொழி வெறுப்புப் பற்றிய மிக முக்கியமான விடயங்கள் வரலாற்றுத் துணையுடன் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். அத்துடன் தமிழிலுள்ள நாற்பது வீதமான சொற்கள் சமஸ்கிருதக் கலப்பால் ஆனவை. இன்றுகூட நாம் பெயர் வைப்பதற்கு சமஸ்கிருதப் பெயர்களைத்தான் தேடுகிறோம். இதனை வாசித்துக் கொண்டிருக்கும் பலருடைய பெயர் சமஸ்கிருதக் கலப்பால் ஆனவைதான். அத்துடன் இன்றைய தமிழைப் பாதுகாத்து இலக்கியங்களைப் பதிப்பித்தவர்களில் பிராமணர்களின் பங்கு மிக முக்கியமானது. உதாரணமாக உ.வே.சா தொடக்கம் கி.வா.ஜா வரையான பிராமணர்களை இங்கு நினைவுகூர வேண்டும். பிராமண எதிர்ப்பு என்பது வெறுமனே சாதியக் கொடுமைக்கான எதிர்ப்பு அல்ல. அது மொழியையும் பண்பாட்டையும் அழிப்பதற்கான எதிர்ப்புத்தான். சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்பது திரிக்கப்பட்ட கருத்தாகும். மஹாபாரதம் எழுதிய வியாசனோ ராமாயணம் எழுதிய வான்மீகியோ உபநிடதம் தந்தவர்களோ காளிதாசனோ பிராமணர்கள் அல்ல. அத்துடன் காலாகாலமாகப் பஞ்சாங்கம் எழுதுபவர்கள்கூட பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருசில மேலாண்மைகளுக்காக அனைத்துப் பழிகளும் அரசியலுக்காகப் பிராமணர்கள் மீது போடப்பட்டது. இதனால் சாதியொழிப்பு என்ற எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. மாறாக மதமாற்றங்களே நடந்தேறின என்று அந்தக் கட்டுரையின் சாராம்சத்தை வகுக்கலாம்.

இப்படி மகாபாரம் தொடக்கம் இந்தியச் சித்தர் மரபான சூஃபியிச வழி வரைக்கும் விரிவாக உரையாடப்படுகிறது. இந்த நூல் புதிய பல படைப்பாளிகளுக்கும் அறியாமையால் இந்திய மற்றும் இந்து ஞான மரபுகளைப் பற்றிய பிரக்ஞை அற்று கண்ட மேனிக்கு விமர்சிப்பவர்களுக்கும் பெரும் பொக்கிஷமாகவும் அறிவுத் தேடலுக்கு உதவியாகவும் அமையும் என்றும் கூறலாம்.


தொடர்புடைய பதிவுகள்.

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை

இந்நூலிலுள்ள ஜெயமோகனின் சில கட்டுரைகள்.

சமஸ்கிருதம் யாருடைய மொழி?

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-01

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-02

இந்திய சிந்தனை மரபில் குறள் 1

இந்திய சிந்தனை மரபில் குறள் 2

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

00

Comments

Popular Posts