நாட்டார் மரபும் மக்கள் திரளும்
கிராமியக்கலைகளை நாட்டார் கலைகள் என்றும் கூறுவார்கள். தமிழ் இலக்கியத்தின் நாட்டார் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வருகின்றது. நாட்டார் மரபுகளை இன்றைய காலத்தில் செவ்வியலுடன் கலந்த ஒன்றாக மாற்றும்போது அங்கே அழகியல் உச்சம் கொள்கிறது.
இதனை இங்கே எழுதும்போது எனக்கொரு பழைய சம்பவம் ஞாபகம் வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு பாடசாலையில் ஒரு கலை நிகழ்வு நடந்திருந்தது. அப்போது திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் மீது அதீத பிரயம் கொண்டிருந்தேன். அடிக்கடி அதன் சந்த நயத்துக்காகவும் வர்ணனைகளுக்காகவும் மீண்டும் மீண்டும் அதனைப் படிப்பதுண்டு. அப்பொழுது நிகழ்ந்த கலை நிகழ்வில் நாடக அரங்கேற்றம் ஒன்றை ஆசிரியர்களின் வழிகாட்டலின் பேரில் உயர்தர மாணவர்கள் நடாத்துவதற்குத் தயாராக இருந்தார்கள். அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் நாடகத்துக்குள் கவிதைகளைச் சேர்த்தால் நல்லது. அந்தக் கவிதை சந்த நயமுள்ளதாகவும் அதே நேரம் பொருள்படும் வகையிலும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் என்று கூறினார். அப்பொழுது கவிதை மற்றும் திறனாய்வுகளில் தேசிய மட்டத்தில் பரிசில்கள் பெற்றமையாலும் பத்திரிகைகள் சிலவற்றில் காதல் கவிதைகளும் எழுதி வந்தமையாலும் நாடகத்துக்கான கவிதையை எழுதுமாறு என்னிடம் கோரினார்கள். எனக்கு ஆரம்பத்தில் எப்படியாக எழுதுவது என்று புரிந்திருக்கவில்லை. அல்லது நாட்டார் மரபுகள் மீதான நாட்டங்கள் அப்பொழுது கற்றறிந்து ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தக் குற்றாலக் குறவஞ்சி கூட ஏதோ ஒரு உள்ளுணர்வால் உண்டான ஒன்றுதான். அப்பொழுது குற்றாலக் குறவஞ்சியில் பின்வரும் பாடலை அடிக்கடி மனதில் இருத்தி வைத்திருந்தேன்.
"நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
கழலக் காண்பது பூந்தளிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே"
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
கழலக் காண்பது பூந்தளிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே"
இதனை உந்துததலாகக் கொண்டு அப்பொழுது ஒரு கவிதையை கிராமிய வழக்குச் சொற்களை உபயோகித்து எழுதிக் கொடுத்தேன். அந்த நாடகம் முதல் பரிசினைப் பெற்றதாகவும் அதற்கு சிறியதொரு காரணம் அந்தக் கவிதை என்றும் கூறினார்கள். அதில் நாட்டார் பாடலின் தொனி இருந்ததாகவும் கூறினர். நான் அதனை ஏற்கவில்லை. ஏனெனில் அப்பொழுது அந்தக் கவிதைக்காக எனது உந்துதலாக இருந்தது குறவஞ்சிதான். நான் அப்பொழுது நாட்டர் வடிவிலான கவிதைகளை எழுதியிருக்கவில்லை. ஆசிரியர்கள் அப்பொழுது குறவஞ்சியில் வரும் இந்தப்பாடலை அறிந்திருக்கவில்லை. அதனால் அதன் மூலமான வடிவம் நான் எழுதியது என்று கருதினர். நான் இங்கிருந்தே எனது கவிதைக்கான கருவை எடுத்தேன். ஆகவே அந்தப் பாராட்டு குறவஞ்சி ஆசிரியர் திரிகூட ராசப்ப கவிராயரையே சாரும். எனது கவிதையை எழுதும்போது சந்தநயம் இங்கிருந்தும் கவிதையின் உள்ளடக்கம் நான் வாழ்ந்த கிராமிய நோக்கிலிருந்தும் எடுத்திருந்தேன். அதனால் அவர்களது பாராட்டு ஒருவகையில் இலக்கியம் மீதான உந்துதலாக இருந்தது. அப்பொழுது எழுதிய ஒருவரிகூட இன்று ஞாபகத்தில் இல்லை. அத்துடன் கவிதைகள் எழுதுவதை நிறுத்திப் பல வருடங்களாகிவிட்டது. இங்கே குற்றாலக் குறவஞ்சியின் சந்தநயத்தை நாட்டார் மரபுடன் இணைப்பதற்கான உள்ளுணர்வு நம்முடைய மரபிலிருந்து எனக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வதுண்டு.
தெருக்கூத்து |
இந்த நாட்டுப்புறக் கலைகள் ஒவ்வொருவருடைய வாழ்நிலம் சார்ந்து தொடர்ந்து ஆழ்மனதில் இருக்கும் ஒன்று என்றே எண்ணத்தலைப்படுகிறது. நாட்டார் கலைகள் வெறுமனே தமிழ் மரபில் மட்டுமே உள்ள ஒன்றல்ல. அதனை Folk Culture என்று ஆங்கிலத்தில் வரையறுப்பர். ஜெர்மனியில் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இதனை volk என்று அழைத்தனர். வோக் என்றால் பொதுவான மக்கள் கூட்டம் என்று பொருள்படும். அந்தப் பெயரில் அங்கே வாகனங்களையும் அறிமுகம் செய்தனர். இதனையே ஆங்கிலேயர்கள் folk என்றழைத்தனர்.
ஹிட்லர் அங்குள்ள மக்களை ஒன்றுதிரட்ட நாட்டுப்புறவியலை நாடினார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த நாட்டுப்புறவியலைத் தேசியவாதத்துடன் இணைத்தார். இதன்மூலம் தூய ஜெர்மனியவாதம் கட்டமைக்கப்பட்டது. இங்கிருந்தே யூத வெறுப்பு நிலைப்பாட்டையும் அவர் பன்முகப்படுத்தத் தொடங்கினார். இது அய்ரோப்பிய வரலாற்று வடிவில் இடம்பெற்ற ஒன்று.
நமக்கு ஏன் நாட்டுப்புறக் கலைகள் முக்கியம் என்றால், இங்கு அய்ரோப்பியக் காலனித்துவ மரபு பல நூற்றாண்டுகளாக இருந்தது. அதனால் நம் மரபுசார்ந்த விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன. அத்துடன் கிராமிய வாழ்விலிருந்து நகரைச் சேர்ந்ததும் அந்த நாட்டார்மரபினைப் பின்பற்ற நகர்ப்புறத்தவர்கள் மறந்துவிட்டனர். அல்லது போலிக் கௌரவம் கருதிப் புறக்கணித்தனர். அத்துடன் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ற போர்வையில் சிலர் இங்கிருந்த மரபுகளைக் கேலி செய்தனர். ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் பதியமிட்ட பல நாட்டார் கலைவடிவங்கள் பின்பற்றப்படாமலே போனது. அதனால் மேற்கின் இயந்திர கோட்பாட்டு வாழ்க்கையே மனித மீட்சி என்று பொய்யாக நம்பத் தொடங்கியுள்ளோம். இப்படி ஒரு புறம் நிகழ்ந்து வரும்போது Folk என்ற பெயரில் மேலைத்துவ மயமாக்கம் இல்லாமல் நாட்டார் மரபுகள் பேணப்பட்டு வருகின்றன. இங்கு ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சிலரின் வேடிக்கையான கருத்து என்னவெனில் சமஸ்கிருதம் என்பதை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு மேலைத்தேய மரபினை வழிமொழிவதுதான். இந்தப் போலிகளை அடையாளம் காணவேண்டியது தற்போதைய நாட்டார் மரபுகளை மேலைத்தேயத்தின் நேரடித் தாக்கம் இல்லாமல் தொடர்ந்து பேண உதவும். இதுபோன்ற நாட்டார் மரபு மீட்புக்குத்தான் folk என்பது உலகம் முழுமைக்கும் பாவிக்கப்படுகிறது. folk என்று சொல்லிக்கொண்டு இலங்கையில் ஒருசிலர் இணையம் மூலம் மேற்கொள்ளும் விடயங்கள் சிரிப்பூட்டவே செய்கின்றன. அது உண்மையில் folk அல்ல. முகநூலில் பரபரப்பை ஊட்டுவதற்காக எதையோ சொல்லி தம்மை நாட்டாரின் மீட்பராகக் காட்டுவதன்றி வேறில்லை.
நாட்டார் கலைகளைப் பாரிய சமூக மாற்றத்துக்கும் பலர் பயன்படுத்தியுள்ளனர். உதாரணமாக கர்னாடகாவில் யக்ஷகானாவை வைத்துத் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தனர். அத்துடன் இந்திய சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான திருவிதாங்கூரில் திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் அந்தச் சமஸ்தானத்தில் மஹாராஜா, ராணி ஆகியோரைவிட அதிகாரம் படைத்தவராக இருந்தார். அவரே அந்தச் சமஸ்தானத்தை ஆள்பவர் என்றும் மக்கள் பலர் கருதினர். திருவிதாங்கூரைத் தனிநாடு ஆக்குவதற்கு அவர் பிரகடனம் செய்தார். அப்பொழுது நேரு அரசு சுதேச சமஸ்தானங்களை இந்தியத் தேசியம் ஆக்கப் போராடி வந்தது. (ஹைதராபாத் நிஸாம் மற்றும் போபால் உள்ளிட்ட சமஸ்தானங்களுக்கு ராணுவத்தை அனுப்பியே வழிக்குக் கொண்டுவரப்பட்டன) அதற்கு இடையில் சி.பி.ராமாசாமி அய்யரை எதிர்ப்பதற்கு நாட்டார் மரபான கதக்களியை வைத்துக்கொண்டு அங்கிருந்த மக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். கதக்களி என்பது கம்சவதை நாடகமாகும். இதனையே அந்த எதிர்ப்புக்கு மூலதனமாகப் பயன்படுத்தினர். அதற்கு மக்களிடையே பலமான வரவேற்பு காணப்பட்டது. பின்னர் அய்யர் சோஸலிச கட்சிக்காரர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனது சுதந்திர பிரகடனத்தை கைவிடும் படி ஆகிவிட்டது. ஆக இங்குள்ள திவானை எதிர்க்க நாட்டார் மரபு எவ்வளவு பயன்பட்டுள்ளது என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. இன்றுகூட மலையாளப் படங்களில் ஒரு எதிர்ப்புக்கு முதல் நாள் இரவு நாடகம் போட்டு மக்களை ஒன்றுதிரட்டும் வழக்கம் காட்டப்படுவதுண்டு.
இலங்கையில் மக்களைக் கோயில்களில் ஒன்றிணைக்கக் காத்தவராயன் கூத்து என்று ஒரு நாடகம் இரண்டாயிரங்களில் நடாத்தப்பட்டது. இன்று அந்த நாடகமே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது. அதுபோல இலங்கையின் போராட்ட இயக்கங்களில் மக்களை இணைக்கத் தெருக்கூத்து நடாத்தப்பட்டது. இது ஒருவகை மூளைச்சலவை போல ஆகியது. ஏனெனில் இந்தவகைத் தெருக்கூத்துக்களில் சிறுவர் போராளிகள் பலர் இணைக்கப்பட்டனர். இதற்குக் காரணம் இது தெருக்கூத்து என்று அவசர தருணத்தை உசுப்பிவிட்டு இருந்ததே தவிர தமிழ் மரபின் எந்த ஒரு முக்கியமான விடயங்களையும் பேசவில்லை. திராவிட இயக்கம் தமிழகத்தில் வசன மரபை கவர்ச்சிகரமாகப் பேசி எப்படி மக்களைத் திரட்டியதோ அதுபோல இஙகிருந்த போராட்ட அமைப்பு பேரினவாத வெறுப்பை முன்வைத்து இளையோரிடம் தெருக்கூத்து மூலம் ஆட்களைத் திரட்டியது. இதில் இருந்தது முற்றிலுமான பாசிசத் தன்மைதான். ஒருவகையில் ஹிட்லர் நாட்டார் கலைகளைத் தேசியவாதத்துடன் இணைத்ததுபோல புலிகள் அமைப்பு தெருக்கூத்து என்பதை மையப்படுத்தி போருக்கு இளைஞர்களைத் திரட்டியது. சிறுவர் போராளிகள் பலர் உள்வாங்கப்பட்டனர். இதனைக் கிராமப் புறங்களில் வைத்தே இவர்கள் மேற்கொண்டிருந்தனர். கிராமிய மக்களை இலகுவில் உணர்வுவயப்படுத்திவிடலாம். இன்றைய காலகட்டத்தில் கல்ழி அனைவருக்குமாகச் சென்றுள்ளது. இனிவருங்காலங்களில் இதுபோன்ற வடிவங்களை மக்கள் அடையாளங்கண்டு புறக்கணிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும்கூட. இது எப்போதும் பாசிஸ வழிக்கே நம்மை இட்டுச் செல்லக்கூடியது.
கதக்களி |
கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட கதக்களியும் இங்கு கோயில்களில் இணைக்கப் பயன்பட்ட காத்தவராயன்கூத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றின் வேரைத் தேடிச் சென்று நாட்டார்கலைகளை நவீனமயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஜனநாயகமான ஒரு சமூகத்தைத் திரட்ட முடியும். இந்து மரபின் வழிவந்த நாட்டார் வழக்காறுகளை ஒன்றிணைத்து இளைஞர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்வதன் மூலமே ஒரு ஜனத்திரளை ஒன்றிணைக்க முடியும். போராட்ட இயக்க காலத்தில் தமிழ் என்ற ஒரு இடத்தில் நின்றுகொண்டு சைவ-இந்து மரபுகளை அவ்வியக்கத்தினர் புறக்கணித்தனர். அதற்கு கம்யூனிசம் மற்றும் திராவிடம் என்பன இவர்களுக்கு உதவின. இன்று போராட்ட இயக்கங்கள் இல்லாத, நாடு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ள இன்றைய அமைதியான காலகட்டத்தில் நாட்டார் மரபுகளும் பழைய கூத்துகளும் நவீன முறையில் மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்களை ஒன்றிணைக்க இதுவும் ஒரு வழிதான். மக்களைக் கோட்பாட்டாளர்களாக மாற்றுவதைவிட அழகியல்வாதிகளாக மாற்றுவதில்தான் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டு நிரந்தரமாகவே தீர்வுகள் கிடைக்கக்கூடும். மாறாக அழகியலைப் புறக்கணித்து கோட்பாட்டாளர்களாக ஆக்குவதன் மூலம் அவர்கள் மேலும் பிரச்சனைகளையே தேடுவர். இங்குள்ள மக்களை அழகியல்வாதிகளாக மாற்றமுடியும் என்றே பல ஆய்வு நோக்குகள் மூலமும் அனுபவம் மூலமும் அறியமுடிகிறது. ஏனெனில் அது ஒவ்வொருவரின் ஆழ்மனதில் உள்ள ஒரு விடயம்தான்.
Comments
Post a Comment