நற்றிணையின் பிற்சேர்க்கைத் தவறுகள்
நானூறு பாடல்களின் தொகுப்பாகவுள்ள சங்க இலக்கிய நூலான நற்றிணையில், 234 ஆம் செய்யுளாக உள்ள பாடல் உண்மையில் அந்தக் காலத்துக்கு உரிய பாடலே அல்ல. அதனைப் பின்வந்த (ஏழாம் நூற்றாண்டு) இறையனார் அகப் பொருளுரையில் குறிப்பிடப்பட்ட மேற்கோளை ஆதாரமாகக் கொண்டு பல ஆய்வாளர்கள் நற்றிணைக்குள் இணைத்து வைத்துள்ளனர். (வாய்மொழி மரபாக இருந்த சங்க இலக்கியங்கள் நெடுங்காலம் கழிந்த பிறகே அச்சு வடிவம் பெற்றது. அரிய பல தமிழ் நூல்களை அச்சேற்றிய பங்கு தமிழ்ப் பிராமணர்களையே சாரும். உவேசா இதற்கு முழு முதலுதாரணம். உ.வே.சா போன்றோரின் பதிப்புப் பணிகளை மேற்கோளுடன் உள்வாங்கி இருந்தால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்காது)
களவியல் காரிகையின் பதிப்பு ஆசிரியரான எஸ்.வையாபுரிப்பிள்ளை நற்றிணையின் 234 ஆம் பாடலாக இறையனார் அகப்பொருள் உரையில் உள்ள பாடலாக இருக்கலாம் என்று சந்தேகத்துடன்தான் கூறுகிறார்.
நற்றிணைக்குள் பின்வந்த தமிழ் அறிஞர்களால் ஊகத்தின்படி புகுத்தப்பட்ட பாடல் இதுதான்.
"சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள்
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே"
அண்மையில் ஒரு புத்தக சாலைக்குச் சென்றபோது அங்கிருந்த சங்க நூல்களைப் புரட்டியபோது நற்றிணையின் பதிப்பில் இடம்பெற்ற தவறை அவதானிக்க முடிந்தது. நற்றிணை நூலின் அண்மைய பதிப்புக்கள் பலவற்றில் இந்தப் பாடல் பற்றிய எவ்வித பிற்குறிப்புமே இல்லாமல் பல பதிப்பாசிரியர்கள் இதனைச் (234ம் பாடல்) சங்ககாலப் பாடல் என்றே வகைக்குறித்துள்ளனர். சமகாலத் தமிழ்ப் பதிப்பாளர்கள் பலருக்குச் சங்க இலக்கியம் மற்றும் சங்ககாலம் என்றால் என்னவென்று அறிந்தவர்களுமல்ல. இந்தப் பாடலின் வார்த்தை மற்றும் காட்சி அந்நியத்தைக் கொண்டு இதனைச் சங்க இலக்கியப் பாடல் இல்லை என்று கூறலாம். இதனைப் பதிப்பவர்கள் அதிகபட்சம் இதற்கான அடிக்குறிப்பை என்றாலும் இடுவது பழந்தமிழை ஆராயும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.
இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம் யாதென்று பார்த்தால் தமிழ்நாட்டில் வேரூன்றிய திராவிடக் கட்சிகளின் மூடத்தனமான கட்சி அரசியலை ஒரு காரணமாகவும் கூறலாம். இவர்கள் கொள்கையை வகுத்த ஈ.வே.ராமசாமி தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ் நூல்களைப் பதிப்பித்தோரைச் சாதிய வெறியர்கள் என்றும், கம்பராமாயணத்தின் கவித்துவத்தை மதத்துடன் மட்டும் இணைத்துக்கொண்டும், திருக்குறளைத் தங்கத்தட்டிலே வைத்த மலம் என்றும் கூவித்திரிந்தனர். இவர்களது காலத்தில் எவ்விதமான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகள் அரச செலவிலோ அறிவு பூர்வமாகவோ மேற்கொள்ளப்படவில்லை. சுதத்திரமான ஆய்வாளர்களும் அந்தக் கொள்கைக்குள் தெரிந்தே வீழ்ந்தனர். அத்துடன் பிராமணர்களை அதிகாரத்தில் இருந்து துரத்துகிறோம் என்று இடைநிலைச் சாதிய மேலாண்மையை உள்வாங்கி பிராமணர்கள் விட்டுச்சென்ற அறிவுபூர்வமான இடைவெளியை இவர்கள் நிரப்ப முயற்சிக்கவில்லை. இவர்கள் நிரப்பியது ஈவேரா விட்டுச் சென்ற குப்பைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ததும், பிராமணனான இராவணனைத் திராவிடனாக்குவது எப்படி என்று சிந்தித்ததுமாகும்.
Comments
Post a Comment