தமிழரின் குமரிக்கோடும் அறியாமையும்: சில குறிப்புகள்.

தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் அண்மையில்  பேசிக்கொண்டிருந்தபோது ஏதேச்சையாகத் திராவிடக் கட்சிகள் பற்றிய பேச்சு வந்தது. அவர் சொன்னார் வருகின்ற கிழமை (ஜீன் 3) மு. கருணாநிதியின் பிறந்தநாள், அத்துடன் கருணாநிதிதான் தமிழுக்கு எல்லாமும் ஆனவர். அவர் இல்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழே இல்லாமல் அழிந்திருக்கும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்த்து வாங்கித் தந்தவர், வட இந்தியர்களின் ராமனை அவமானப்படுத்தியவர் என்று ஏராளமான கதைகளை அளந்துவிட்டார். எனக்குக் குபீரென்று சிரிப்புத்தான் வந்தது.

ஆனால் அதனை அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஏற்கனவே இதுபோன்ற பலருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிட்டு அவர்களின் வணக்கத்துக்குரிய ஈ.வே.ராமசாமி முதல் எஸ்.வி.ராஜதுரை வரையானவர்களைப் பற்றி தங்களுக்குச் சலனத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்கள் கூறியதை ஒருசிலர் மனக்கசப்பாகவே காண்கின்றனர். அதனால் அதற்கான புரிதல் ஏற்படும் வரையும் அதனைக் கூறுவது விரயம் என்றே தவிர்த்து விட்டேன்.

ஆனால் அவரவர்க்கு வரலாற்று வாசிப்புப் பற்றிய ஒரு பிரக்ஞை இருக்கும். அதிலிருந்தே இந்தக் கட்சியரசியலை அணுக வேண்டும். கருணாநிதி ஒரு கவர்ச்சிகரமான மேடைப்பேச்சாளர், தான்சார்ந்த திராவிடக் கொள்கையை மக்களிடம் பரப்பிய பிரச்சாரகர், அத்துடன் அவர்களுடைய ஆரிய திராவிட வாதமே வெறுப்பரசியலை வைத்து உரையாடப்பட்ட ஒன்று. இல்லாத லெமூரியா-குமரிக்கண்ட ஆய்வுகளை 1930 &1940 களில் இந்தக் கொள்கைக்காகவே தீவிரமாக திராவிட தமிழ் இயக்கம் சார்ந்தவர்கள் மேற்கொண்டனர். மேலும் கருணாநிதியின் இலக்கிய எழுத்து உரைகள் தன்னை தமிழிலக்கிய உலகில் ஒரு ஆதர்ச புருஷனாக்க உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம்தான். அவரது திருக்குறள் உரை அவ்வளவுக்குச் சுவை மற்றும் பொருள் நிரம்பிய ஒன்றேயல்ல. அத்துடன் அதனைத் தமிழறிந்த யாருமே இலகுவாக எழுதிமுடிக்கலாம். அவர் அந்த உரையை எழுதும்போதே பலர் அதற்கான உரைகளை எழுதியுமுள்ளனர். (மு.வ போன்றவர்களின் உரை) அதனுடன் அல்லாமல் தமிழியக்கம் என்ற பெயரில் மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் மேற்கொண்ட பணிகளைத்தான் திராவிட இயக்கம் பிரதிசெய்து தாம்செய்த பணி என்று பீத்தி வருகின்றனர். இந்தப் புழுகின் ஒரு அம்சமாகத்தான் திராவிட இயக்கத்தினர் ராமாயணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் ராவணன் என்பவன் தமிழன் என்றும் (திராவிடன்) ராமன்  வடநாட்டுக்காரன் (ஆரியன்) என்றும் மக்களை வடக்கு தெற்கு எதிர்ப்புக்கு அரசியல் காய்நகர்த்தலுக்காகப் பிரிப்புச் செய்தனர். இதற்கு கிறிஸ்த்தவ மதச் சார்புடைய பாதிரியார்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தியவியல் (Indiology) ஆய்வுகள் இவர்களுக்குப் பின்னிருந்து பெருமளவில் உதவியுமுள்ளன. இதன் ஒரு படியாக எழுத்தாளர் ஷோபாசக்தி இலங்கையின் இந்துத்துவத்தை எதிர்ப்பது பற்றிக் கட்டுரை எழுதுகிறேன் என்று இலங்கை இராவண ஜென்ம பூமி அது இது என்று ராவணனைத் தமிழனாகவே சித்தரித்துவிட்டார். அவர் எழுதும்  புனைகதைகள் எனக்கு மிக நெருக்கமானவை. அதனை வாசிப்பதில் என்றும் நான் தயங்குவதில்லை. ஆனால் அல்புனைவுகளுக்கு வந்துவிட்டால் வெறுமனே அரசியல் புளுகுகளைக் காட்டித் தன்னுடைய அரசியலை மற்றவர்களுக்குள் திணிக்கலாம் என்று ஒரு முயற்சியை ஷோபா சக்தி மேற்கொள்வார். அவருக்கு உடனடியாகவே ஒரு எதிர்வினை எழுதியிருந்தேன் ராவணன் இலங்கையில் பிறக்கவில்லை. அத்துடன் அவர் தமிழருமல்ல. அவர் ஒரு வட இந்திய பிராமணர். அத்துடன் அவர் ஒரு சிவபக்தர். சைவம் என்பது காஷ்மீர் முதல் கன்யாகுமரி, கதிர்காமம் வரையும் உள்ள ஒன்று. பழைய டெல்லியில்தான் ராவணன் பிறந்தவர். அவரது மனைவியும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்தான். இலங்கை அவருக்குப் பரிசாக வழங்கப்பட்ட ஒரு நாடு. இது ராவண ஜென்ம பூமி என்று சொல்வது அவருடைய மடத்தனம் என்றும் எழுதினேன். இராவணன் பற்றிய திரிபுகள் பிற்காலத்தில் அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதே உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதனை மேற்கொண்டவர்களில் தலையாயவர்கள் கிறிஸ்த்தவ மதமாற்றப் பாதிரியார்கள். இந்து மதத்துக்குள் பிரிப்பினை நிகழ்த்தி இந்து மதம் என்பது வெறுமனே சாதியால் கட்டப்பட்டது என்றும் பொய்யைப் பரப்பினால் இந்துக்களின் சூத்திர வகுப்பினராக வெள்ளையர்கள் சித்தரித்தவர்கள் மதம்மாறுவர் என்று ஆங்கிலேயர் நம்பினர்.

வெள்ளையர்களால் இதனை நேரடியாகச் செய்யமுடியாது என்பதால்தான் திராவிடக் கொள்கையை கால்டுவெல் ஆரம்பித்து வைத்தார். அது பிற்காலத்தில் மக்களிடையே பரவி வலுவடைந்தது. அந்த வலு தமிழகத்துடன் நின்றது. திராவிடம் என்பது தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் குறிப்பது. ஆனால் அப்போது மெட்ராஸ் பிரசிடன்சியில் இருந்தபோதுகூட திராவிடக் கொள்கையைத் தமிழர்கள் மட்டுமே தூக்கிப்பிடித்தனர். மற்றைய மூன்று மொழிக்காரர்களும் இதனைவிட்டுத் தூரம் சென்றனர். ஒரு பேட்டியில் கேரளக் கவிஞர் கே.சச்சிதானந்தனிடம் திராவிடவாதம் பற்றிக் கேட்டபோது அவர் இதனை கேரளாவில் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை என்றும் தமிழகத்தவர்கள் இதுதொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும் என்ற நோக்கில் ஒரு பதிலைச் சொன்னார்.

இந்தத் திராவிட மூடக்கூச்சல்களின் பெறுபேறுதான் தமிழகத்தில் இன்று நிலவும் கோஷங்களும் அயல் வீட்டில் கோமணம் காணாமல் போனாலும் அதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம் என்பது போன்ற தற்குறித்தனமான ஆர்ப்பாட்டங்களும் என்றே கூறலாம்.

எதற்கு எடுத்தாலும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். அது என்னவெனில் தமிழகத்தில்  திராவிடக் கொள்கை மட்டும் இல்லையென்றால் இந்துத்துவம் பரவியிருக்கும் அது இது என்று. ஆனால் அங்கே கிறிஸ்த்தவ இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பரப்புரைகளில் அரசியல் சரிநிலையைத்தான் இவர்கள் பின்பற்றுவர். அத்துடன் பிழையான வாதம் மூலம் தமிழகத்தவர்களை அறிவிலியாக்க உண்டாக்கப்பட்ட வாதமே இந்தத் திராவிடவாதம். அத்துடன் திராவிடம் என்பதே திரி என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதிதான் திராவிடம். அது ஒரு இனப்பகுப்பு அல்ல. வெறுமனே புவியியல் பகுப்பு. இதனை இனப்பகுப்பாகவும் அரசியல் மையமாகவும் மாற்றியமை எவ்வளவு மூடத்தனமானது. இதற்கான விளக்கம் தெரிந்தவர்கள்கூட தெரியாதது போல் இருந்துவிடுவார்கள் என்பதுதான் வேடிக்கை.

இன்னும் சிலர் சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம் இருந்ததாகக் கூறுகின்றது என்று சொல்லுவர். எந்த இடம் என்றால் ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டுத் தமது நியாயங்கள் தான் அறுதியும் இறுதியுமானது என்றே வகுத்துவிடுவர்.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்பதிலுள்ள குமரிக்கோட்டை தனியொரு கண்டமாக உருவகித்தமை இவர்களது அறியாமை அன்றி வேறில்லை. வெறுமனே வார்த்தையில்தான் இதுவரையும் குமரிக்கண்டம் என்றொன்று இருந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மற்றும்படி சரியான ஆய்வுகள் இன்றுவரை நிகழவில்லை. வெறும் வார்த்தைகளாலும் கற்பனைகளாலும் தர்க்கங்கள் இன்றி இதை வைத்து உரையாடியுள்ளனர். குமரிமுனையில் இருந்த மலை இல்லாமல் போனபோதுதான் இமயமலை தோன்றியதாகச் சொன்னார்கள். ஆனால் இமையமலையின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் குமரிக்கண்டத்துடன் எவ்வகையிலும் தொடர்புறவில்லை. வெறுமனே இதுபோன்ற விடயங்களைப் புவியியலுக்குப் பயன்படுத்தி அதனை அரசியலுடனும் இணைத்துக்கொண்டமை எவ்வளவு அபத்தமானது. 2004 இல் சுனாமி வந்தபோது அது இலங்கையைத் தாக்கியது. இங்கே உயரமான கடற்கரைக் கோடுகளையும் அது தாக்கியது. அதற்காக இலங்கையின் கடற்கரைப்பகுதிகளைக் கண்டம் என்று கூறிவிட முடியுமா. அல்லது இலங்கையைத்தான் கண்டம் என்று பிற்காலங்களில் வரையறுத்துவிட முடியுமா?. குமரிக்கோடு என்பது தனிக்கண்டத்துக்கான குறியீடாக வகுக்கமுடியாது. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்பதை ஒன்றிணைந்த பாரத ஒற்றுமைக்கான குறியீடாக வகுப்பதற்கு ஆதாரமுள்ளது. அதற்கான ஆய்வுகளும் சாத்தியப்பாடுகளும் இன்றுவரை இடம்பெற்றுள்ளன. ஆனால் குமரிக்கண்டம் பற்றிய கருத்துக்கள் எவ்வகையிலும் சரியான தர்க்கம் இல்லாதவை. அடிப்படை அறிவியலே இல்லாதவை. அதற்கான ஆய்வுகள்கூட ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அதாவது கருணாநிதியை முத்தமிழறிஞர், கலைஞர் என்று சொல்பவர்களுக்கும் குமரிக்கோட்டை குமரிக்கண்டம்- லெமூரியா என்று வரையறுப்பவர்களுக்கும் இடையில்  வித்தியாசம் எதுவுமில்லை. இருவருமே அரைகுறையாக அவசர அவசரமாகத் தமிழ் என்றால் இதுதான் என்று மக்களை ஏமாற்றியவர்கள்தான். அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை. இது தொடர்பாக மிக விரிவாக எழுதவேண்டும் என்ற ஆவல் என் மனதில் நீண்டகாலமாக உள்ளது. ஆனால் தற்போது பணிநிமித்தமான பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதால் சிலகாலம் ஆய்வுகள் பற்றி விரிவாக எழுதுவதில் சற்றுத் தடங்கல் உள்ளது. ஆகவே மீண்டும் சில நாட்களில் இங்கு வந்து வாசிக்கும் அந்த பத்துப்
பேருக்காக வேண்டி மிகவிரிவாக எழுதுவேன். 

Comments

Popular Posts